Wednesday, April 8, 2015

இழப்பும் தோல்வியும்



அன்புள்ள ஜெ,

தான் விரும்பிய பெண்ணை அடைய முடியாமல் இழந்த ஒருவன் அவ்விழப்பாலேயே தான் அடையச் சாத்தியமான எல்லையை அடையாமல் தோற்கிறான். உண்மையில் பாரதப் போரில் ஆள் எண்ணிக்கை முதற்கொண்டு, திறமையுடையவர்கள் வரை அனைத்துமே துரியோதனன் வசம் சாதகமாக இருந்தும் அவன் தோற்கிறான். ஏன் என்றால் அவன் அணியில் இருப்பவர்கள் அனைவருமே அவர்கள் விரும்பியதை இழந்தவர்கள். அந்த இழப்பு தரும் நம்பிக்கையின்மையே அவர்களை எல்லைக் கோட்டிற்கு அருகில் விழ வைக்கிறது. கர்ணன் வில் பிழைத்தது ஓர் நிமித்தமே.

கர்ணனின் இழப்பு நாம் அறிந்ததே. துரியோதனனின் இழப்பு சாதாரணமானதல்ல. அதன் வீரியத்தை உணர்த்த, காதலன்றி, காமமன்றி ஓர் பெண்ணை அறிந்தவர்கள், அதற்கு அவர்கள் கொடுத்த விலை பற்றிய கடிதங்களே சாட்சி. இதோ பூரிசிரவஸ், தான் விரும்பிய அனைத்து இளவரசிகளையும் இழந்து நிற்கிறான். ஜயத்ரதன் தேவிகையை இழக்கிறான். சிசுபாலன் துச்சளையை இழக்கிறான். இளையவர்கள் தான் அப்படி என்றால் அவ்வணியில் உள்ள முதியவர்களும் ஒன்றும் வித்தியாசப்படவில்லை. பீஷ்மர் அனைத்தையுமே இழந்தவர். சல்லியனும் அவ்வாறே. 

அங்கே பாண்டவர் வசம் திரௌபதியை வென்றது என்பது அவர்களுக்கு அளித்திருக்கும் தன்னம்பிக்கை அவர்களின் அனைத்து செயல்களுக்கும் அடிப்படை ஆகிறது. அதனோடு இணைவது துவாரகை கிருஷ்ணனின் தடுமாற்றமில்லாத முடிவெடுக்கும் திறன். பாண்டவர்களின் கூட்டணிக்கு அடிப்படையே அத்திருமணம் தானே. ஒரே ஓர் திருமணம் ஒட்டுமொத்த பாரதவர்ஷத்தின் அரசியல் கணக்குகளையே தலைகீழாக்கி விடுகின்றது. இன்று திரிதர் சொல்லும், "அரசகுடிகளில் போரை உருவாக்கவும் போரைத்தவிர்க்கவும் திருமணமே ஒரே வழி" என்ற வார்த்தை பன்மடங்கு அழுத்தம் கொள்கிறது.

அன்புடன்,
மகராஜன் அருணாச்சலம்