Wednesday, April 8, 2015

திருதராஷ்டிரரின் மாற்றம்





வெண்முரசில் பல கதாபாத்திரங்களை ஜெயமோகன் வியாச பாரதத்தைத் தாண்டி அற்புதமாக சித்தரித்திருக்கிறார். என் கண்ணில் திருதராஷ்டிரனே இந்தப் பாத்திரப் படைப்புகளில் உச்சம். சிறுமை தீண்டாத மனம், truly noble, அவரே அடிக்கடி சொல்வது போல மாமத வேழம் என்று வடித்திருக்கிறார்/வடித்திருந்தார்.

குறிப்பாக அரக்கு மாளிகையைப் பற்றி அவர் அரசல் புரசலாக அறியும்போது தன் சொந்த மகன்கள், சகுனி, கணிகர் அனைவருக்கும் மரணதண்டனை என்று அவர் திட்டமிடுவது அந்தப் பாத்திரப் படைப்பின் உச்சம். காந்தாரி என் மகன் சகோதரர்களை எரிக்கத் திட்டமிட்டிருந்தால் நான் கற்பிழந்தவள் என்று சொல்லும்போது அவளை திருதராஷ்டிரனின் பிம்பமாகவே உணர்ந்தேன்.

இந்த திருதராஷ்டிரனையும் திரௌபதியின் துகில் உரியப்படும்போது அமைதி காக்கும் திருதராஷ்டிரனையும் எப்படி reconcile செய்யப் போகிறார் என்று ஒரு யோசனை ஓடிக் கொண்டிருந்தது.

ஆனால் துரியோதனன் வாளெடுத்து தன் கழுத்தை அறுத்துக் கொள்ளப் போகும் தருணத்தில் அவரது மனதை சிறுமை தீண்டிவிட்டது, பால் மோராகிவிட்டது என்று ஜெயமோகன் ரொம்ப சிம்பிளாக முடித்துவிட்டார். மாற்றத்துக்கான காரணம் அழுத்தமாக வரவில்லை என்றுதான் தோன்றுகிறது. சில பல மாதங்களுக்கு முன் தன் மனதிற்குள்ளாவது துரியோதனனுக்கு மரணதண்டனை விதித்திருக்கிறார். அப்போதெல்லாம் ஒரு சிறு உறுத்தல் கூட இருந்ததாகத் தெரியவில்லை. ஆனால் இப்போதோ தருமனின் கூற்றை நம்ப விரும்புகிறார்; அதை நம்புகிறேன், அதனால்தான் யாருக்கும் தண்டனை இல்லை என்று காட்ட விரும்புகிறார். தனக்குத் தானே பொய் சொல்ல ஆரம்பித்திருக்கிறார்.

இது சாதாரண மனிதர்களுக்கு நடக்கக் கூடியதுதான். ஆனால் திருதராஷ்டிரன் சாதாரண ஆளுமையாகக் காட்டப்பட்டிருந்தால் - நிறைகுறைகள் உள்ள ஒரு ஆளுமையாகக் காட்டப்பட்டிருந்தால் - முதலில் மரண தண்டனை என்னும்போதே இது ஒன்றும் சீரியஸாக சொல்லப்படவில்லை என்று அவருக்கு மட்டுமல்ல, அவருடன் நெருக்கமாக இருப்பவர்களுக்கும் தெரியும். குறிப்பாக விதுரன் போன்ற மதியூகிக்கு நிச்சயம் புரிந்திருக்கும். திருதராஷ்டிரன் ஒரு அசாதாரண மனிதராக - மாமத வேழமாக - சித்தரிக்கப்பட்டவர். அவரது வீழ்ச்சியின் ஆரம்பம் "அவர் விழ ஆரம்பித்துவிட்டார், பால் மோராகிவிட்டது" என்று முடிக்கப்பட்டது நெருடலாக இருக்கிறது.

நண்பர்கள் யாராவது இப்படி உணர்கிறீர்களா?

ஆர்வி