Thursday, April 2, 2015

காளிகை


கர்மவீரர் காமராஜர் உருவாக்கிய மதிய உணுவுத்திட்டத்தில் கிடைக்கும் கோதுமை சோற்றை,  திருநாரையூர்திருக்குளக்கரையில் முளைத்திருக்கும் கொட்டைவாழை இலையில் வைத்து சாப்பிடுவது வயிற்றுக்காக மட்டும் இல்லை எங்களையும் நம்பி வாழும் காக்காவிற்காவும்தான்.
ஊராட்சி ஒன்றிய தொடபள்ளி வரண்டாவில் வாசலைப்பார்த்து உட்கார்ந்து  பகுந்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை-என்னும் திருக்குறளை ஆளுக்கு ஒரு ராகத்தில்  சொல்லி முடித்து சோத்தில் கைவைக்கும்போது, ஆசிரியர் சத்தம்போடாமல் சாப்பிடுங்கள் என்று கூறிவிட்டு அவர் சாப்பிடச்சென்றதும், வாத்தியார் சென்றுவிட்டார் என்று தெரிந்துக்கொண்டு அங்காங்கே உட்கார்ந்து இருக்கும் காக்கா எல்லாம் வந்துவிடும். வராத காக்காவை வந்த காக்காவை அழைக்க ஆரம்பித்துவிடும்.
இலையில் இருக்கும் கோதுமை சோற்றை கோலிகுண்டு அளவுக்கு உருட்டி தூக்கிப்போட்டால் சோறு தரையில் விழும்முன்னமே காக்கா பிடித்துக்கொண்டுவிடும். ஆகா..அது ஒரு ஆனந்தம். அதற்கு பிறகு பசியாவது, வயிறாவது. வாத்தியார் வந்து பிரம்பால் தலையில் ஒன்று வைக்கும்வரைத அதுதான். ஆனந்தம் பெருசா? அடிபெருசா? அது ஓயாத விளையாட்டு.
காக்கா என்றதும் இந்த நினைவுகள் மட்டும் இல்லை, அவற்றின் ஒற்றுமையுதான் நினைவில் சேர்ந்தே வரும். இன்று காளிகை என்னும் தாய்காக்கை காட்டும் வாழ்க்கை பிம்பம் முற்றும் புதியது. இயற்கையின் உண்மையும் அதுதான். ஒற்றுமையாக வாழ்வதற்கு மட்டும் இல்லை, என்வீடு, என்மனைவி, என்மக்கள் என்று சுயநலமாய் வாழ்வதற்கும் காக்கா ஒரு உதாரணமோ? 

காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும்
அன்னநீ ரார்க்கே உள-திருக்குறள்.

காக்கை கரவா கரைந்து உண்ணும் என்னும் பிம்பத்தின் பின்னால் தன் குடும்பம் என்னும் சுயநலம் இருப்பதை நினைக்கையில் நாமும் அதுவன்றி வேறு இல்லை என்று சொல்லதோன்றுகின்றது. காக்கை தனது சுற்றத்தை அன்றி மற்றொரு சுற்றத்தை, தனது இனமாகிய காக்காவாஇருந்தாலும் விடாது என்பதை நினைக்கையில் மானிடன் இந்த கீழ்மையில் இன்னும் ஒருபடி மேலேபோகின்றான். தனது சுற்றத்தைகூட தனது குடும்பத்திற்காக விரட்டிவிடுகின்றான்.   
கண்ணன் பன்னிரண்டு காக்கைகள் கொண்ட காக்கை குடும்பத்தின் தாய் காக்கை காளிகையைப் பார்த்துவிட்டு காந்தாரியை பார்க்கும் இடத்தில், காந்தாரி இறகு மஞ்சத்தில் அமர்ந்திருக்கும் காட்சிதான் எத்தனை உருவகம் நிறைந்தது. காந்தாரியே உடம்பு முழுவதும் இறகு முளைத்து ஒரு தாய் காகமாகி தனது தங்கைகள் பத்தோடும், திருதராஸ்டிரன் சூதமனைவியோடு சேர்த்து பன்னிரண்டு காகங்களாய் அஸ்தினபுரி மரத்தில் அமர்ந்து இருக்கும் காட்சி வந்துபோனது. அங்கே திரௌபதி என்னும் புதிய காகம் வந்தால் தாங்குமா? வாழ்க்கையின் அனைத்து சிக்கும் சிடுக்கும் மனிதன் போடுவது இல்லை, இயற்கையின் விளையாட்டு என்று காட்டும் இந்த இடம் அற்புதம், மனிதன் அறியா மனிதன் குணம் என்று உணர்கின்றேன். அறத்தின் இருமுனைகள், அவற்றின் இருதலைகள், அவற்றின் இருமுகங்கள் தோன்றி மறைகின்றன. எது சரி? எது தவறு? அறம் படைத்தவனே சொல்லத்தகுமோ?  
  
அன்புடன்
ராமராஜன் மாணிக்கவேல்