Friday, April 3, 2015

பீஷ்மரை கனியவைத்தல்:


கண்ணன் திருதராஷ்டிரர், காந்தாரி போன்றவர்களிடம் அவர்களின் கருத்தை கேட்பவனாகமட்டுமே இருக்கிறான், ஆனால் பீஷ்மரின் மனதை கரைக்க வேண்டியுள்ளது.

  பீஷ்மரின் உள்ளம் தனிமையாலும், சலிப்பினாலும், தன்னை சார்ந்தவர்களின் நடத்தையின் காரணமாக ஏற்பட்டுள்ள விரக்தியினாலும், ஏமாற்றத்தினாலும், தான் விதியின் கைப்பாவையாகிவிடும் தன் இயலாமையினாலும், கடினப்பட்டு பாறையாய் இறுகி இருக்கிறது. கண்ணன் அதை மென்மையாக்கி ஈரப்படுத்தி தன்னுடைய நோக்கத்தை ஒரு இளஞ்செடிபோல்  வேர்களை செலுத்தி அந்த பாறை உள்ளத்தின்மேல் வளரவிடும் நிகழ்வு மிக அருமையாக சொல்லப்பட்டிருக்கிறது . 

    முதலில் பாண்டவர்களைப்பற்றிய செய்தி.  பீஷ்மர் உள்ளத்தில் ஆதரவற்ற சிறுவர்களாய் அலையும் பாண்டவர்களை அறிமுகப்படுத்தி அவருள் தந்தைமையை தூண்டுகிறது.

     முதியவர்கள் எப்போதும் இறந்த காலத்தின் விழுமியங்களை நெஞ்சில் சுமந்துகொண்டிருப்பதால் நிகழ்காலத்தின் மாறுதல்களை என்றுமே ஐயத்துடனே அணுகுவார்கள். அந்த ஐயத்தை களைந்து  நாட்டின் பிரிவுக்கு பீஷ்மரை இணங்கவைக்கவேண்டும்  ஒரு பெருமணல் குன்று ஒன்றுபோல் தோன்றினாலும் அது உறுதியற்றது. ஒரு பெருங்காற்றால் எந்நேரமும்  அழிந்துவிடக்கூடியது. ஆனால் அருகருகே இருக்கும் பாறைகள் தனித்திருந்தாலும்  நெடுநாட்கள் அழியாமல் நிலைத்திருக்கும் . உறுதியற்ற ஒற்றை நாடாக இருப்பதைவிட  நாடு பிரிக்கப்படுவதால் மேலும் வலிவடையும் என்பதை  அவனுடைய வார்த்தைகள் பீஷ்மருக்கு உணர்த்துகின்றன.

       அடுத்து நாட்டில் நடக்கும் சம்பவங்களுக்கு  பீஷ்மருக்கும் பொறுப்பிருக்கிறது. சகுனி வஞ்சிக்கப்பட்டவனாக இருப்பது பீஷ்மர் கொடுத்த வாக்கு காப்பாற்றமுடியாமல் போனதுதான். மேலும் சகுனி பீஷ்மரின் மாணவனைப்போன்றவன். அவனை  யாராலாவது கட்டுபடுத்தமுடியுமென்றால் அது அவர்தான் என்று பீஷ்மருக்கு கண்ணன் நினைவுபடுத்துகிறான்.

துரோணர் கிருபர் போன்றவரெல்லாம் நாட்டை வழிநடத்தும் நிலையில் இல்லை என்பதையும் தெரிவிக்கிறான்

     ஆனாலும் இவையெல்லாம் வெறும் முன்னுரைகளே. பின்னர் அவன் சொல்வதுதான் பீஷ்மரின் இறுகிய உள்ளத்தை பிளந்து அதில் தன் எண்ணத்தை புகுத்தும் பாறைவெடி. அவன் திரௌபதியை இன்னொரு அம்பையாக உருவகிக்கிறான்.  இன்னொரு அம்பை உருவாவதை பீஷ்மர் எப்படி பொறுப்பார்? கண்ணனின் இந்த யுத்தி முடிவில்  பீஷ்மரை அஸ்தினாபுரிக்கு விரைய வைக்கிறது.

தண்டபாணி துரைவேல்