Friday, April 3, 2015

உற்று நோக்குதல்:



  சாத்யகி கணிகரை உற்று நோக்குகிறான். அதில் அவன் அடையும் புரிதல் மிக முக்கியமானது. உண்மையில் நாம் மனிதர்களை பார்ப்பதில்லை. கரும்  இருளில்  சிறிய மெழுகுவர்த்தியின் ஒளியால் நமக்கு தேவையானதை பார்ப்பதைப்போல்தான் ஒவ்வொருவரிடம நாம் கவனிக்க விரும்புவதையே பார்க்கிறோம். அதைப்போல நாமும் பிறர் கண்களுக்கு நம்மில் எதைக்காட்ட விரும்புகிறோமோ அதை மட்டுமே காண்பிக்கிறோம்.

ஒருவனை முழுமையாக காண விருப்பு வெறுப்பில்லாத பார்வை வேண்டும். அவசரமில்லாமல் பொறுமையாக பார்க்க வேண்டும்  அப்படி பார்ர்க பார்க்க ஒருவனின் முழு உருவம் நமக்கு உண்மையில் தெளிவாகும்.  அப்போதுதான் முழுமையான புரிதல் கிடைக்கும்.    அவர்களின் உடல் தெளிவடைந்து மெல்ல மெல்ல பளிங்காக மாறி அவர்களின் மனம்  தெரிய ஆரம்பிக்கும்.

மனதில் யாரோ செலுத்தி என்றோ தைத்த அம்புகளை காணலாம். புலியின் காலில் குத்திய முள்ளம்பன்றியின் முள் அதை முடமாக்குவதுபோல அவர்களின் எண்ணங்களை  முடமாக்கி சிந்தனையை கோணலாக்கியிருப்பதை அறிந்துகொள்ள முடியும். பின்னர் புரியாத புதிராக இருந்த அவர்களின்  செயல்களின் நோக்கம் தெரியவரும். காயம்பட்டு நோயுற்று வலியில் தவிக்கும் சிறுவர்களாய் நமக்கு தோன்றுவர். அவர்களை அள்ளி அணைத்து ஆறுதல் சொல்லத்தோன்றும்.

 சாத்யகி கணிகர் மேல் கொள்ளும் இரக்கம் அத்தகையது.

தண்டபாணி துரைவேல்