அன்புள்ள ஜெ,
பூரிசிரவஸ் ஒவ்வொரு பெண்ணாக இழக்கிறான். மனது அவன் துயரை முழுவதுமாக உள்வாங்குகிறது. அது ஏன் காலங்காலமாக காதல் முறிவு மட்டும் மிக எளிதாக மனதை அடைகிறது? வெண்முரசின் வேறெந்த பாத்திரத்தை விடவும் பூரிசிரவஸ் மனதுக்கு அணுக்கமாக ஆகிவிட்டான். ஓர் தோழனைப் போல. அதனால் தான் அவன் ஒவ்வொன்றாக, ஒவ்வோர் காரணங்களால் இழக்கும் போதும் அவன் தோள் தொட்டு ஆறுதல் கூற மனம் விழைகிறது.
உண்மையில் பூரிசிரவஸ் போல் வெண்முரசில் கனவுகளைக் கண்ட பாத்திரம் வேறு இல்லை. தேவிகை, விஜயை, பிரேமை என மூன்று பெண்களோடு அவன் பழகும் வரையிலும் அவன் கனவுகள் வண்ணமாக, மகிழ்ச்சியாக, வாழ்வைப் பற்றியதாகவே இருக்கின்றன. ஆனால் என் மனது என்னவோ அவன் எப்போதுமே தன் மரணத்தை மட்டுமே காண்பவனாக உள்ளான் என்றே நம்பி வந்தது. நன்றாகப் பார்த்தால் அவன் தன் மரணத்தைக் கனவாகக் காண்பது மூன்றே முறை தான் வந்திருக்கிறது.
முதல் மரணக் கனவு: காம்பில்யப் போருக்கு முன்னால், படகில். துல்லியமாக அவன் இறந்து கிடக்கிறான். கை வெட்டுண்டு, கழுத்தும் வெட்டுண்டு. வேறு யாரோ அவனைப் பற்றி பேசுகிறார்கள்.
இரண்டாவது கனவு: மாத்ர நாட்டுக்குச் செல்ல வேண்டிய காலைப் பொழுதில். இக்கனவில் அவன் கால்கள் வெட்டப்பட்டிருக்கின்றன. அதன் பிறகே அவன் கால்களை வெட்டியவன் அவன் கழுத்தையும் வெட்டுகிறான்.
மூன்றாவது கனவு: சகல புரியில், விஜயையைத் தனியாக சந்திப்பதற்கு முன் வருகிறது. கனவில் தேவிகையும், துச்சளையும் வருகிறார்கள். இதிலும் அவன் கை வெட்டப்பட்டிருக்கிறது. துச்சளை அரசியல் நிகழ்வுகளைப் பற்றியும், தன்னை மணக்க அவன் செய்ய வேண்டியவற்றைப் பற்றியும் பேசுகிறாள், அவன் தலையோடு மட்டும். அவன் உடல் குளிர்ந்து நடுங்கிக் கொண்டிருப்பதை அவன் வெட்டப்பட்ட தலை பார்த்துக் கொண்டிருக்கிறது.
இக்கனவுகள் அவனுக்கு நடக்கவிருப்பதை அவன் ஆழ்மனம் உணர்ந்திருப்பதன் வெளிப்பாடே. முதல் கனவு அவன் இரண்டாம் முறையாக துச்சளையுடன் பேசிவிட்டு வந்த பிறகு வருகிறது. அந்த இரண்டாம் முறை பேச்சில் தான் துச்சளை மனதில் அவனுக்கு ஓர் இடம் இருப்பதை, அவளும் அவனை விரும்புவதை அவன் உணர்கிறான். ஆனால் அவளுடனான அவனது விருப்பமே மற்ற அனைத்து உறவுகளையும் அவனிடமிருந்து பிரித்துவிடப் போகிறது என்பதை அவன் மனம் உணர்ந்ததன் வெளிப்பாடே அந்த முழு மரணக் கனவு. கையாக தேவிகையும், தலையாக விஜயையும், உடலாக பிரேமையும் இருந்திருக்கலாம்.
இரண்டாவது கனவு அவன் தேவிகையின் மணத்தன்னேற்பு பற்றிய ஓலையைத் துழாவி அடையும் முன்பே வந்துவிடுகிறது. அக்கனவிலிருந்து விழித்த பிறகே அவன் அச்செய்தியை அறிகிறான். அவளுக்காக ஓடுகிறான். கால்கள் வெட்டப்பட்டவன் எவ்வளவு வேகமாக ஓடினால் தான் என்ன? செல்ல வேண்டிய இடத்தை அடையவா இயலும்!! அது போலவே, அவன் மணத்தன்னேற்புக்கு முன்பே தேவிகையை பீமனிடம் இழக்கிறான். கால்களை இழந்தவனின் கழுத்தையும் வெட்டுகிறார்கள்.
மூன்றாவது முறை விஜயை அவனைத் தனியே சந்தித்து அவனிடம் அவளை அவையில் வேட்கும் படி கோருவதற்கு முன்னால் வருகிறது. அக்கனவிலும் அவன் கைகளை இழக்கிறான், முண்டமான உடல் துடிப்பதைக் காண்கிறான். எனினும் துச்சளையிடம் அவளை கொள்ள அவனால் முடியும் என்று பேசிக்கொண்டிருக்கிறான். அரசியல் கணக்குகளைச் சரி செய்ய முடியும் என்கிறான். கனவில் வந்ததைப் போலவே அவன் விஜயையை இழக்கிறான், அரசியல் காரணங்களால். துச்சளையையும் இழக்கப் போகிறான், அதே அரசியல் கணக்குகளால்.
இக்கனவில் வரும் சிட்டுக்குருவி ஓர் முக்கியமான படிமம். அந்த சிட்டுக்குருவிகளைப் போன்றவர்கள் தான் பால்ஹிக நாடுகள். அவர்களுக்குள்ளேயே பூசலிட்டுக் கொள்ளும். வெயிலின் போது மட்டும் வெளியில் வந்து வாணிகம் செய்துவிட்டு குளிரில் ஒடுங்கிக் கொள்ளும். அந்த நாடுகளை பேரரசுகள் வெல்வதென்பது வெறும் களியாட்டம் அன்றி வேறொன்றும் இல்லை. அதைத்தான் சல்லியர், "கேள், பேரரசுகள் ஒருபோதும் தங்கள் சிற்றரசுகளின் பூசல்களில் தலையிடாது. அப்படி தலையிடத்தொடங்கினால் அவற்றின் படைகள் நாடெங்கும் சிதறிப்பரந்துவிடும். சிற்றரசுகள் தங்களுக்குள் மோதி அவற்றில் ஒன்று வல்லமை கொள்ளும் என்றால் அதையே அவை விரும்பும். ஏனென்றால் அதை மட்டும் வெல்வதும் கப்பம் கொள்வதும்தான் எளிது" என்கிறார். இன்னொரு வகையில் துச்சளைக்கு பூரிசிரவசைத் திருமணம் செய்து வைப்பது என்பது, அஸ்தினபுரி என்னும் ஓநாயின் சுவைக்காக விழுங்கப்பட்ட சிட்டுக்குருவி என்பதாகவே இருக்க முடியும். சிட்டுக்குருவிகள் சிங்கங்களை விரும்பினால் மரணம் மட்டுமே பரிசு. அதைத் தேவிகை வாயிலாக கேட்கிறான் அவன். அவளும் அத்தகைய ஓர் சிட்டுக்குருவி தானே!!!
ஒரு வகையில் பூரிசிரவசின் இத்தனை இழப்புகளும் ஏன் இவ்வளவு விரிவாக வரவேண்டும்? ஓர் போர் நிகழ்கிறது என்றால் அதில் திட்டமிடப்படாத, எதிர்பார்க்கப்படாத, சம்பந்தமே இல்லாத சேதாரங்களும் நிகழத்தானே செய்யும். ஆங்கிலத்தில் "Collatteral Damage" என்பார்கள். ஒருவகை இணைச் சேதங்கள். அரசியல் நாற்களத்தின் பெருவிசைகள் நிகர்நிலை நோக்கிச் செல்லும் போது சிட்டுக்குருவிகளின் சேதங்கள் தெரிவதில்லை. ஆனால் அத்தகைய சிறு சிறு சேதாரங்களே நிகர் நிலை என்பதன் ஆதாரம். ஒரு பானைக்கு பதமாக வந்தவன் தான் பூரிசிரவஸ். அவனுக்காக பரிதாபம் படுவதைத் தவிர வேறு ஒன்றுமே செய்ய இயலவில்லை. இன்றும் நம்முன் நாம் காணும் எத்தனையோ இணைச் சேதாரங்களைப் பரிதாபம் மட்டுமே கொண்டு நாம் தாண்டிச் சென்று கொண்டுதானே இருக்கிறோம். வெண்முரசு ஓர் காட்டின் கதை. அதில் யானைகள் மட்டுமல்ல, சிட்டுக்குருவிகளும் இருக்கத்தானே செய்யும். இதோ இந்த சிட்டுக்குருவிகளுக்காகத் தானே கிருஷ்ணன் பாடுபடுகிறான். வஜ்ரமுகிக்கு அவளின் இடத்தை உறுதி செய்து கொடுப்பவன் அவன்தானே.
அன்புடன்,
மகராஜன் அருணாச்சலம்.