Saturday, April 4, 2015

மாயம்



அன்புள்ள திரு ஜெயமோகன் அவர்களுக்கு,


வணக்கம்.புவனா எழுதிக்கொள்வது.வெண்முரசு மூன்றாம் பாகம் முடித்து விட்டேன்.மிகச் சரியாக சென்ற வண்டி சடன் பிரக் போட்டு நின்றதுபோல் வீரர்கள் களம் புகுந்ததும் முடிவடைந்து விட்டது. அடிக்கடி டிவிபார்க்கும் பாதிப்பு என்று நினைக்கிறேன்,நாளை தொடரும் என்று இழுத்து இழுத்து வெள்ளிகிழமை வரை ஒரு விஷயத்தை எதிர்பார்க்க வைத்து சட்டென்று ஒரு முடிவு வந்தால் மனம் ஏற்க சங்கடப் படுகிறது.

வெண்முரசு மறு ஆக்கம் அல்ல  என்று சொன்னீர்கள்.ஆனால் காந்தார அரசிகளின் பெயர்  எல்லாம் எவ்வாறு சான்றுகள் இல்லாமல் சொல்ல முடியும்?பார்க்க போனால் ஓரு இயல்பான வரலாற்று நாவலை போலவே உள்ளது.எல்லைப் பூசல்களை சொல்வதும்வணிகங்களை விவரிப்பதும் இதிகாசம் என்பதை விட வரலாற்று  நூல் என்றே எண்ண வைக்கிறது.அதனாலேயே படிக்கும் ஆர்வம் அதிகரிக்கிறது.

இதை ஏன் இன்னும் அனைவருக்கும் கிடைக்கும்படி செய்யக் கூடாது?அதாவது இணையத்தை பயன்படுத்தாத மக்களையும் இந்த நூலை படிக்க செய்யலாமே? உங்களிடம் மிகவும் பிடித்த ஓன்று உங்கள் சொல்லாட்சி(vocabulary  correct? ??) அன்னை விலங்கு,இளிவரல், அகம் விலகுதல்,அடுமணை என்று இன்னும் பல .

அன்னை என்ற சொல்லே தமிழில் மிகவும் பயன்படுத்த வில்லை என நினைக்கிறேன்.பெரும்பாலும் தாய் என்று தான் சொல்வார்கள்.அதைவிட அன்னையின் மனநிலை எப்படி இவ்வளவு துல்லியமாக சொல்ல முடிகிறது?எப்போதும் பயம் இருக்கும் குழந்தை ஓரு வருடம் வளரும் வரை.....மைந்தனை எவ்வளவு அணைத்தும் ஆசை அடங்காத அன்னை போல என்று ஒரு இடத்தில் சொல்லி இருப்பீர்கள்.....எப்படி அதை தெரிந்து கொண்டீர்கள்?.....இவ்வாறு பல விஷயங்கள் வெண்முரசை மேலும் மேலும் படிக்கும் ஆர்வத்தை தூண்டுகின்றன..

.எப்பொழுதும் சொல்வதை போல இந்த நாவலை என்னைப் போன்றவர்களுக்காகவும் எழுதியதற்கு மிக்க நன்றி.

புவனா.