Tuesday, April 7, 2015

அதுவா? இதுவா?



அருளை அடைய நினைப்பவனும், பொருளை அடைய நினைப்பவனும் ஒரே தளத்தில் 

தவத்தில்தான் இருக்கிறார்கள். அருள் அனைத்திலிருந்தும் விலக்கி வெளியோடு வெளியாக வைத்துவிடுகின்றது. பொருள் அனைத்தையும் இழுத்துவந்து மூடி மூடி பெரும் மலையாக்கிவிடுகிறது அல்லது சிக்கல்மேல் சிக்கலில் சிக்கவைத்து மூழ்கடித்துவிடுகிறது. 

அருள் தேடியவன் வெளியில் இருந்து வெளிப்பட முடியாமல்போவதுபோல, பொருள்தேடியவன் பொருளில் இருந்து வெளிப்பட முடியாமல் போய்விடும். அருள்தேடியவன் அகத்தில் ஒரு நிறைவும், பொருள்தேடியவன் அகத்தில் ஒரு வெற்றிடமும் உண்டாவது படைத்தவன் படைத்த விதியோ? இந்த முடிவு நிலைக்கு செல்வதற்கு முன்பு ஒருவன் நிலை என்ன?

எதிர் காலத்தில் நான் என்ன ஆவேன்? என்ற இந்த கேள்வி தனிமனிதன் தொடங்கி, வீடு, ஊர், நாடு, உலககம், அண்டம் என்று போய்க்கொண்டே இருக்கிறது. மண்ணில், மலை என்று தொடங்கி நிலவு, சூரியன் வரைக்கூட செல்கிறது.

எதிர் காலத்தை எதிர் கொள்ள ஒவ்வொரு அணுவும் விழையும் விழைவுதான் வாழ்க்கை என்றும் வளர்ச்சி என்றும் உலகாகி கிடக்கின்றதோ?
பூரிசிரவஸ் என்னும் ஒரு மனிதன் தொடர்ந்து இயங்கிக்கொண்டே இருக்கிறான், அதுதான் அவன் வாழ்க்கைபோலவும் உள்ளது. நாம் அவனை உற்றுநோக்கினால் இந்த வாழ்க்கையின் வழியாக அவன் ஒரு வாழ்க்கையை தேடிக்கொண்டே இருக்கிறான். அவன் தேடும் அந்த வாழ்க்கை அவனுக்கு கிடைக்கலாம், கிடைக்காமலும்போகலாம் ஆனால் அதுதான் அவன் வாழ்க்கை.

புறத்தேடலை நிலங்கலாகவும், அகத்தேடலை பெண்களாகவும் கண்டு கண்டு செல்கின்றான். இந்த நிலம், இந்த இடம் தனக்கு போதும் என்று அவன் அகம் அமைதிக்கொள்ளவில்லை அல்லது இந்த இடம், அந்த இடம் என்று அவன் அகம் விரிந்து கொண்டே செல்வதையும் காண்கின்றோம். இவை அனைத்தும் அவனின் புற இச்சைகளின் வெளிப்பாடு. திரௌபதித்தொடங்கி அவன் காணும் பெண்கள் அனைவரையும் அவள் வேண்டும், அவளும்வேண்டும், இவளும் வேண்டும் என்ற அக இச்சைகளின் வெளிப்பாடாய் வாழ்கின்றான். எந்த பெண் எல்லாம் வேண்டும் என்று நினைக்கின்றானோ அதற்கு எல்லாம் ஒரு காரணம் அவினிடம் இருக்கிறது. மண்ணாசை, பெண்ணாசை இப்படித்தான் அதற்கான ஒரு காரணத்தோடையே இயங்கிக்கொண்டு இருக்கும் என்பதற்கான குறியீடாய் இயங்கிக்கொண்டு இருக்கிறான். முழுக்க முழுக்க பொருளாளனாக ஆகவிழையும் விழைவு. அருள் என்ற ஒன்று அவன் தேடலில் இருக்கா என்ற நினைவு இல்லை. அப்படி ஒன்று வாழ்க்கைக்கு தேவைதானா? என்ற கேள்விகூட அவனிடம் இருப்பதாய் அவன் காட்டிக்கொள்ளவில்லை. முழுக்க முழுக்க மண்ணில் மனிதன். 

பூரிசிரவஸை தனியாக வைத்துப்பார்க்கும்போது அந்த பாத்திரத்தின் முன்முனை மட்டும்தான் தெரிகிறது, மறுமுனை நமக்கு தெரியவில்லை,  பூரிசிரவஜை சாத்யகி உடன் வைத்துப்பார்க்கும்போதுதான் அவனுக்கான எதிர்முனை கூர் இன்றி மழுங்கடிக்கப்பட்டு அல்லது கூர் தீட்டப்படாமல் இருப்பது தெரிகின்றது.

சாத்யகி பூரிசிரவஸ்போல்  சமமான பாத்திரம். இவர்களின் வாழ்க்கையும் ஒருவர் ஒருவர் முட்டிக்கொள்ளும் நாளில் முடிகின்றது. சாத்யகி துவாரகைக்கு செல்கின்றான். பூரிசிரவஸ் அஸ்தினபுரிக்கு செல்கின்றான். சாத்யகி துவாரகைக்கு சென்று அவன் இலக்காகிய கண்ணனை அடைகின்றான். பூரிசிரவஸ் அஸ்தினபுரி செல்வதற்கு முன்னமே துரியோதனைக்கண்டு, துச்சளையைக்கண்டு, தோல்வியில் முடியும் ஒரு போரிலும் ஈடுப்பட்டு புறப்பட்ட இடத்திற்கே திரும்பிவிட்டான். பார்வைக்கு உயர்ந்துவிட்டது போன்ற ஒரு மாய பெருமித அஸ்தினபுரி தூதன் என்ற அந்தஸ்து. இதை கண்ணனோடு வைத்து பார்க்கும்போது கிட்டத்தட்ட கண்ணனாகிவிட்ட மாயம். மனிதன் இறைவன் இடத்தை அடைந்துவிட்ட சாயல். முடிவாக அவன் வாழ்க்கை மீண்டும் தொடக்கபுள்ளியில் இருந்து எழும்விதத்திலேயே இருக்கிறது. அவன் பயணத்தால் அடைந்தது என்ன? என்பதற்கு பதிலாகா? தவறாக வழிநடத்தப்பட்டுவிட்டோம் என்ற குற்ற உணர்வை சுமக்கின்றான். எதையும் கற்றுக்கொள்ளாமல் புதிய தொழில் தொடங்கிய ஒரு வியபாரின் மனநிலையில் தள்ளப்படும் இடம் இது.

சாத்யகி கண்ணனை அடைந்து சிறுக சிறுக அக வளர்ச்சி அடைந்து வரும் சீடன் போல  குருவாகி வரும் கண்ணனால் முழுமைப்பெற்றுக்கொண்டு வருகின்றான். புறத்தை கட்டமைப்பதற்கு முன்பே அகத்தை கட்டமைத்துக்கொள்கின்றான். நாளை கண்ணால் பார்த்தனின் சீடனாவான். சாத்யகிக்கு குருவும் தெய்வமும் ஒன்றாக கிடைத்துவிட்டது. வாழ்க்கைியில்  பூரிசிரவஸுக்கு எல்லாம் இருப்பதுபோல் இருந்தது ஆனால் திரும்பிப்பார்த்தால் எதுவுமே இல்லை என்பதுபோல் உள்ளது.

அருளோடு கூடிய வாழ்க்கையும், பொருளோடு கூடிய வாழ்க்கையும் தேடும் ஒரு மானிட அகம் இரு கிளைகளாக பிரிந்து சாத்யகியும், பூரிசிரவஸும் ஆனதுபோல் இந்த பாத்திரங்கள் அமைக்கப்பட்டு இருப்பது அற்புதம்.

வாழ்க்கையில் ஒவ்வொரு மனித அகமும், அதுவா? இதுவா? என்ற புள்ளியைக்கடந்தே தனது பயணத்தை கண்டடைகின்றது. பயணத்தை தொடர்வது எத்தனை பெரிய சாதனையோ அதையும் தாண்டிய பெரிய சாதனை அதுவா? இதுவா? என்ற புள்ளியை முதலில் தாண்டுவது. வென்றவர்களுக்கு எல்லாம் அந்த புள்ளி வெறும் புன்னகையோடு மட்டும் தரவில்லை, கண்ணீரையும் கலந்தே தருகின்றது. தோற்றவர்களுக்கும் அப்படியே,  ஆனால் வென்றவரின் பக்கத்தில் கண்ணுக்கு தெரிந்தும்,தெரியாமலும் ஒரு இணைபாதம் கூடவே இருக்கிறது.  

நன்றி
அன்புடன்
ராமராஜன் மாணிக்கவேல்