இனிய ஜெயம்,
மிக சமீப நாட்களில் நான் இதுவரை கேள்விப்பட்டிராத மூன்று காய்கள் கண்டேன். ஒன்று சூரம் பழம், அடுத்து பழுவக்காய், மற்றது பன்னிர்ப் பழம். ஒவ்வொன்றும் அது விளையும் குறுகிய எல்லை கொண்ட, குறிப்பிட்ட மண்ணுக்கு மட்டுமே சொந்தமான பழங்கள். இவை எல்லாம் எங்குதான் போயின? சிறுவயதில் மாப்பிளையுடன் கோவில்பட்டி புறத்தில் திரியும் போது, தரையில் கண்டெடுத்து பொறுக்கித் தின்ற கொடுக்காப்புளி இன்று அதே கோவில்பட்டி சந்தையில் கால் கிலோ எண்பது ரூபாய். ஒப்பு நோக்க தமிழ் நாட்டில் எல்லா சந்தையிலும் ஒரே பொருள் ,ஒரே மாதிரிதான் கிடைக்கின்றன. அங்காடி காய் கனி,மற்றும் உணவில் இருக்கும் பண்பாட்டு வேற்றுமையை நாம் இழந்து வருகிறோம் என்று தோன்றுகிறது.
உங்கள் சூரிய திசை பயணத்தில், ஒரு சந்தையில் ருசி மிக்க தவளைகள் சமையலுக்காக காத்திருப்பதைக் கண்டு மிகுந்த உவகையாக இருந்தது. இந்தப் பின்னணியில் வெண் முரசு நாவலில் வரும் சந்தைகளில் கிடைக்கும் உணவுப் பொருட்களை , வாசனை பிடிக்கும்போது எத்தனை வளம் வந்து குவிந்த தேசம் இது என்று குதூகலம் பொங்குகிறது.
குறிப்பாக கிருஷ்ணன் வந்து நின்று பார்க்கும் அதே சந்தையில் பீமன் ஒரு பக்கம் முன்பே வந்து நின்று ருசித்துக் கொண்டிருப்பது. இந்த வெண் முகில் நகரம் நாவலில் மட்டும் எத்தனை விதமான உணவுகள், சமைக்கும் முறைகள். கிருஷ்ணன் கற்றுத் தருபவனாக இருக்கும் அதே தருணம் கற்றுக் கொள்பவனாகவும் இருக்கிறான். நெருக்கமான சந்தை சிறு வணிகர்களுக்கும், அதன் வாடிக்கயாளர்களுக்கும் எத்தனை வசதி கொண்டது, அதன் பின்னுள்ள சமூக உளவியலை கிருஷ்ணன் கணிக்கும் இடம் அதில் ஒன்று.
கூல வாணிக அங்காடியை, முற்றத்தில் உப்பை தூவி காக்கும் வணிகனை கிருஷ்ணன் கண்டடைவது இதில் சிகரம். ஆம் சிறந்ததில் சிறந்தவற்றைக் கொண்டே கிருஷ்ணன் துவாரகையை உருவாக்குகிறான்.
பூரி சிரவராஸ் பார்வையில் கிடைக்கும் சிபி நாடு துவங்கி, சாத்யகி பார்வையில் விரியும் துவாரகை தொடர்ந்து, மரங்களால் உருவான மந்திர நாட்டு கோட்டை வரை எத்தனை எத்தனை பிரமிக்க வைக்கும் நகர வர்ணனை.
அனைத்தையும் மிஞ்சும் நகரம் ஒன்றினை திரௌபதி வடிவமைத்து வைத்திருக்கிறாள். இந்திரன் பரிபாலிக்கும் நகரம். இங்கே கிருஷ்ணனுக்கும் த்ரௌபதிக்குமான கண்ணாமூச்சி மற்றொரு அழகிய வடிவம் கொண்டு வெளிப்படுகிறது. திரௌபதி வினாவுக்கு கிருஷ்ணன் பதில். ''துவாரகையில் இந்திரன் வெறும் திசை தெய்வம் மட்டுமே.'' [கெடந்து ஷாவு என்று மனத்துக்குள் நினைத்துக் கொண்டேன்].
கிருஷ்ணன் தூது மட்டுமே தனித்துவம் கொண்ட குறுநாவல்.
கண்ணன் எத்தனை கண்ணன். கண்ணன் கேட்டவர்க்கு கேட்டபடி வரும் கண்ணன். நீலத்தில் பிள்ளயற்றவள் ஸ்தானத்தைக் கூடஅமுதம் பொங்கும் வண்ணம் கனிய வைத்து, அவளுக்கு குழந்தையாகும் கண்ணன், உனக்கு முலையூட்டவில்லையே என்று காந்தாரியை ஏங்க வைக்கும் கண்ணன், சேடியின் கனவில் கன்னம் வைத்து நுழைந்து கள்ளம் புரியும் கண்ணன், சம்படையின் தவம் கனிய , சொல்லற்ற அவள் அகத்தை, சொற்களால் வருடி, உப்பரிகைக்கு வெளியே விரிந்த விரி வானை அவளுக்கு அருளி, முக்தி அளிக்கும் கண்ணன். ஆம் பீஷ்மர் தன் பாரத்தை சுமக்க நகர் நுழைய வேண்டி, கிருஷ்ணன் சம்படையின் பாரம் தீர்த்து அனுப்புகிறான். பீஷ்மர் கிருஷ்ணனுக்கு சுட்டிக்காட்டிய பறவை சம்படை தான்.
தலை சுற்ற வைக்கும் பங்கீட்டு குழப்பங்கள். பூரி சிரவராஸ் போலவே நானும் திகைத்து நிற்கிறேன். அதிகார, பொருளாதார, ராணுவ சமநிலையே, என்றும் நாடுகளுக்கு இடையே பல விஷயங்களை தீர்மானிக்கிறது. இங்கே இலங்கையில் கூட பிரபாகரன் தலைமை, இலங்கை தலைமை விட ராணுவ சமநிலை சற்றே குறைந்த வுடன் இறுதிப் போர் துவங்கி விட்டது. ஆக வெண் முரசின் அத்தனை இறுக்கமும் இறுதிப் போரை நோக்கியே செல்கிறது. குறிப்பாக துரியன் தரப்பு மீண்டும் மீண்டும் போரில் இறங்க என்ன காரணம்? காரணம் கர்ணன் ஒவ்வொரு முறையும் மயிர் இழை எல்லையில்தான் வெற்றியை தவற விடுகிறான். இந்த இழை அளவு எண்பது ஒரு போதும் தரிக்க விடாது. அடுத்து கர்ணனுக்கு தன் மீது உள்ள ஐயமே இல்லாத நம்ம்பிக்கை. இவை போக சகுனி.
கோட்டை குறித்த கனவில் சிரவரசும் சகுனியும் ஒரே நிறை. பகடையில் கிருஷ்ணனுக்கு எதிராக சகுனி அமைப்பது அவரது வருங்கால புறக் கோட்டையின் மாதிரி தானே.
தியானத்தில் பயிற்சி கொண்டவர்கள் எல்லாம் அடையும் சிக்கல் ஒன்று உண்டு. [விஷ்ணுபுரத்தில் இந்த இடர் விரிவாகவே வருகிறது] எதோ ஒரு கணம் மெய்மையை அகம் தீண்டும். பின் அந்த கணம் பின் வாங்கி விட, அக் கனத்தை மீண்டும் எட்ட சாதகன் தவித்து தளர்வான். இவ்வுலகின் மானிடன் அடையும் துயர்களில் எல்லாம் உச்ச பட்ச துயர் இதுவே. சகுனி கிருஷ்ணனுடன் சதுரங்கம் ஆடி அடைவது. அந்த முதல் மெய் தீண்டலே. இனி சகுனி மீண்டும் மீண்டும் சதுரங்கம் ஆடப் போவது, மன்னுக்காகவோ, சூதுக்காகவோ இல்லை, கிருஷ்ணன் உடன் ஆடுகையில் 'எதை' சகுனி எய்தினாரோ அதை மீண்டும் அடைவதற்கே. பாவம் சகுனி இனி ஒரு போதும் மீண்டும் அதை அடையப் போவதில்லை.
பாரத மாந்தர்கள் யாருக்கும் அளிக்காத மாபெரும் தண்டனை ஒன்றை கிருஷ்ணன் சகுனிக்கு அளிக்கிறான்.
ஆம் ஒரு எல்லையில் நாகங்களில் ராஜ நாகம் கொண்ட நஞ்சு , நச்சு மலர்களில் உறையும் நஞ்சின் சாரம் இந்த நீல வண்ணக் கண்ணன்.
கடலூர் சீனு