அன்புள்ள திரு.ஜெ வணக்கம்.
அம்பை என்னும் பெரும் பெண்சிங்கத்தின் வாலைப்பிடித்துக்கொண்டே ஓடிக்கொண்டு இருந்த என்னை அதன் வாலை விட்டுவிட்டு அது பாயும் வேகத்தை, நடனத்தை, குழைவை, தீரத்தை மென்மையை, காதலை,காமத்தை, வேட்கையை, வேண்டாமையை காணவைத்துவிட்டீர்கள்.
கண்ணன் பீஷ்மரை கலைக்க அல்லது குவிக்க அம்பை என்ற வார்த்தையை பயன்படுத்தினா? அதற்குதான் அவன் பயன்படுத்தினான், அவன் விரும்பியது நிகழ்ந்தது அதுதான் என்று சாத்யகி புரிந்துக்கொள்கின்றான். நல்லது அது நடக்கட்டும்.
அம்பைகள் யார்?
அம்பைகள் மாவீரர்களை காதலி்க்கவில்லை, தன்னை தொழும், தன்மீது காமம் கொல்லும் மானிடர்களை தேர்ந்து எடுக்கிறார்கள். தனக்கு நிகரான ஆணை அவர்கள் காதலும், காமமும் இல்லாத தளத்தில் வைத்து விளையாடுகின்றார்கள். அந்த விளையாட்டில் பீஷ்மன் போன்ற ஆண் விழுந்துவிடுகின்றான். கண்ணன் போன்ற ஆண் விழுவதில்லை.
கண்ணன் திரௌபதியை வெல்லமுடியும் ஆனால் வெல்லவில்லை என்பதற்கான பதில் இன்று கிடைத்தது. கண்ணன் திரௌபதியை வென்று இருந்தால் என்ன நடந்திருக்கும்? அம்பையின் கருப்பை பீஷ்மனை கண்டுக்கொண்டது போல் திரௌபதியின் கருப்பை கண்ணனை கண்டு கொண்டு இருக்கும். அம்பையின் காதலும், காமமும் சால்வமன்னமீது இருந்ததுபோல் திரௌபதியின் காதலும், காமமும் பாண்டவர்கள்மீது இருந்து இருக்கும். கண்ணன் பீஷ்மரில் இருந்து இந்த இடத்தில் உயர்ந்து நிற்கின்றான். கண்ணன் அறத்தின் தளத்தில் சென்று நிற்கும் இந்த இடத்தை நோக்கும்போது கண்ணனின் பாத்திரம் உயர்ந்து நிற்கும் விந்தை கண்டு மகிழ்கின்றேன்.
பீஷ்மர் அம்பையை சிறை எடுத்த அளவுக்கு கண்ணனுக்கு நிற்பந்தம் இல்லை என்பதால் கண்ணனால் எளிதில் அறத்தில்கால் பதிக்க முடிந்ததா? இந்த வினாவுடன் பீஷ்மரை அணுகினால், உடல்நலம் இல்லாத விசித்திரவீரியனுக்கு ஒரு காசிநாட்டு பெண்ணை சிறை எடுத்து வந்து மணம்முடித்திருந்தால்கூட போதுமே, பீஷ்மர் மூன்று பெண்களை ஏன் தூக்கிவந்தார்? அறம் மீறுதல் எத்தனை எளிதாக இருக்கின்றது. அறம் மீறியபின்பு எத்தனை பாடுபட்டாலும் அந்த இடத்தை தொடமுடியவில்லையே. பீஷ்மருக்கு, திரௌபதி என்பவள் மீண்டும் ஒரு அம்பையன்னை என்று அறிமுகப்படுத்தும் கண்ணன் எளிதாக சொன்னதுபோல் இருந்தாலும் அதுதான் எத்தனை பெரிய புள்ளியை இன்று விளக்குகின்றது.
பீஷ்மரில் இருந்து கண்ணனையும், அம்பையில் இருந்து திரௌபதியையும் விளங்கிக்கொள்ளமுடிகின்றது.
கண்ணன் வில்போட்டியில் வெல்லமல் இருந்தபோது திரௌபதி சலனமே இல்லாமல் இருந்து இடைக்காலை நெகிழவிடுவாள் அது அவள் பெண்மை வென்றதின் அறிகுறி என்று இன்று உணர்கின்றேன். மண்ணில் இறங்கும் விண்விசைகள் பெண்ணுருகொள்வதையே விரும்புகின்றன என்று சொல்லும் கண்ணன் பெண்களின் முன்னும் பின்னும் அறிந்து அறத்தையும் அறிந்தே இருக்கின்றான்.
ஒரு பெண்ணை வெல்வதையே வெற்றி என்று என்னும் மானிடர் மத்தியில் ஒரு பெண்ணை வெல்லும் இடத்தில் வெல்லாமல் செல்லும் கண்ணன் காட்டுவது அறம் வெல்லப்படவேண்டும் என்பதை. பெண்மை வாழ்விக்கப்படவேண்டும் என்பதை. வாழ்விக்கப்டும் பெண்ணையே பேரறம்கொண்ட ஆடவன் வெல்கின்றான், உடம்பால் அல்ல உள்ளத்தால், கடவுளின் இடத்தில் இருந்துஎன்று சொன்னாலும் பொருந்தும்.
கண்ணன் திரௌபதி, பீஷ்மர், அம்பை எதிர் எதிராக உட்கார்ந்து விளையாடும் தாயத்தில் பீஷ்மரும், அம்பையும் காய்களை வெட்டாமல் தங்களை தாங்களே வெட்டிக்கொண்டதை நினைத்துப்பார்க்கின்றேன். இது விதி. கண்ணனும், திரௌபதியும் தங்களை தாங்கள் நோக்கி புன்னகைத்து காய்களை வெட்டுவதை நினைத்துப்பார்க்கிறேன் அது அறம். எளிதாக ஒரு மாபெரும் திறப்பில் ஆழ்த்தும் இந்த மீண்டும் ஒரு அம்பை, அனலுருக்கொண்ட அம்பையின் ஆழிவடிவம் என்னும் சொல் அற்புதம் நிறைந்தது.
நன்றி
அன்புடன்
ராமராஜன் மாணிக்கவேல்