சிறுகுழந்தையில்
“ந்த” என்று ஆண்குழந்தைகள் பெண்குழந்தைகளை அழைக்கும் சொற்றொடர்களை கேட்டதுண்டு. சொல்லு
என்பதை “சொல்லுந்த” என்பார்கள். ஆண்பெண் நட்பில் அது ஒரு வசிகரம். இந்த சொற்களை சுத்தமாக
மறந்துவிட்ட பின்பு ஒருநாள் ஐம்பத்தைந்து வயது இருக்கும் நண்பர் ஒருவர் அண்ணியுடன்
வார்த்தைக்கு வார்த்தை “ந்த” போட்டு பேசிக்கொண்டு இருந்தார் இல்லை கொஞ்சிக்கொண்டு இருந்தார்.
போலிஸ் ஆகவேண்டும்
என்று செதுக்கிய உடலும், கன்னிக் கண்கள் நீந்தும் வடிவும் கொண்ட நண்பரின் திருமணக்கால
நிகழ்வுகளை முன்னமே சொல்லி இருந்தார். அவர் காதலித்த, அவரைக்காதலித்த பெண்களை,அத்தை
மகள்களை, மாமன் மகள்களை எல்லாம் காலம் பூவிசிரசிஸின் கையில் இருந்து பறித்துக்கொண்டு
போனதுபோல் போக, சொந்த பந்தம் கூடி அவருக்கு கட்டி வைத்த பெண்ணை மறுவழி வந்து பெண்வீட்டடில் விட்டுப்போனவர்
திரும்பிப் பாக்கவே இல்லை.
சும்மாவே
ஒரு பானைக்கள்ளை
ஒண்டியாக குடிப்பவர் அந்த பெண்ணைப்பற்றி பேசினால் ஒரு மரத்து கள்ளையும்
ஒண்டியா குடித்துவிடுவார்.
காலம் சிலநேரம் தேக்குமரத்திற்கும் கத்தறிச்செடிக்கும் திருமணம் செய்து
வைத்துவிடுகின்றது. சௌதியில் மண்ணுக்குத்தவேண்டும் என்பதற்காக ஒரு
போலிஸ்காரனை போலிஸ் ஆகவிடாமலும் செய்துவிடுகின்றது.
சொந்த பந்தம் ஓதாத வேதம் இல்லை. நண்பரின் அம்மா
அவர் காலைபிடிக்காத குறையாக கண்ணீரோடு என்னன்னம்மோ சொல்லியும் கேட்கவில்லை அவர். ஒருநாள் “தம்பி!
அம்மா அழகில்லன்னு அப்பா என்ன விட்டிருந்தா நீங்கலெ்லாம் ஏதுப்பா? தாலிகட்டிய பொண்ண தவிக்கவிடக்கூடாது, பொண்பாவம்
சும்மாவிடாது, அவள உன்னோட அம்மாவ நினைக்சி, கூட்டி வந்து வச்சி கஞ்சி ஊத்து” அதற்கும்மேல் அம்மாவிடமும் வார்த்தை இல்லை.
சில சொற்கள் பாறைகளை உடைத்து ஊற்றெடுக்க வைத்துவிடுகின்றது. “அன்றைக்கே போய்
அழைத்துவந்துவிட்டேன்” என்றார்.
மூன்றுக்குழந்தைகள்.
அழகான பெண்களை எல்லாம் தொலைத்துவந்தவர் என்பதால் தனது மனைவி அழகில்லை என்ற எண்ணம் அவர்
மனதில் ஆழமாகவே இருக்கிறது. இறைவன் கருணை உள்ளன், அவர் விழைந்த அழகை எல்லாம் அவரின்
பெண்கொண்டு வந்து பிறந்து அவளும் புருஷன் வீடுபோக காத்திருக்கிறாள்.
ஐம்பத்தைந்து வயதில்
“ந்த” “ந்த” என்று அவர் மனைவியிடம் காதலில் கொஞ்சும்போது அன்னையின் சக்தியை எண்ணி வியந்தேன்.
பெண்ணை காலிப்பதாக சொல்லும் வயதில் காதலிக்கவில்லை என்பதுதான் உண்மை.
பெண்ணை ஏன் காதலிக்கின்றோம்?
தெரியவில்லை ஆனால் ஏதோ ஒரு கணத்தில் தன்னை அன்னையின் நகல், தெய்வத்தின் விதை, மகளின்
வனம் என்று காட்டும் காதலி தெய்வத்தின் கொடை. இந்த கொடையால் வாழ்த்தப்பட்டு உள்ளது
ஆண்வர்க்கம்.
கண்ணில்லாத
தந்தைக்கும்,
கண்ணிருந்தும் பார்வை இல்லாத தாயிக்கும் மகனாக வாழும் துரியோதனனுக்கு
பானுமதியின் கண்
கருணையின் வடிவாக இருக்கும் என்பதைவிட, அந்த கண்ணில் துரியன்
கட்டுண்டுக்கிடப்பான்
என்று சொன்ன இடத்தில் நெகிழ்ந்தேன். உலகில் எத்தனை விழிகள் இருந்தால் என்ன?
துரியனுக்கு விழியென்று ஒன்று இருக்கும் என்றால் அது பானுமதியின்
விழியன்றி வேறு ஒன்று உண்டா? ஜெ இ்நத இடத்தில் கவிதையின் ஆழம். கொஞ்சம்
பேசினாலும் கிருபையின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் கவிதை. கவிதைபோல்
வாழ்க்கையின் ஆழத்தை, மனதின் உயரத்தை சொல்ல கலை வேறு ஒன்று இல்லை.
//இளமையில் சிலநாட்கள் மட்டுமே பெண்ணின் உடலழகும் சொல்லழகும் ஆணை கவர்கிறது. பின்னர் வாழ்நாளெல்லாம் அவனை காமம் கொள்ளச்செய்வது அவள் கண்களில் உள்ள கருணைதான்” என்றார். துரியோதனன் நிமிர்ந்து அவரை நோக்கினான். அவர் மெல்லிய கடற்பஞ்சால் அவன் உடலை தேய்த்தபடி “ஆம், என்னை நீங்கள் நம்பலாம். உங்கள் வாழ்நாளெல்லாம் நீங்கள் அவர் விழிகளைக் கண்டு மட்டுமே காமம் கொள்ளப்போகிறீர்கள். மைந்தருக்கு அன்னையாகி அவர் உடல் தளர்ந்தபின் மேலும் காமம் கொள்வீர்கள். ஒருபோதும் அவரது விழிகளிடமிருந்து விடுபட மாட்டீர்கள்” என்றார்//
அன்புள்ள ஜெ, எத்தனையோ
உயர்குணங்களால் துரியன் வளர்ந்து வளர்ந்து வருகின்றான் அற்புதமாக இருக்கின்றது. இந்த
இடத்தில் துரியனும் பானுமதியும் ஒரு அசைக்கமுடியாத அற்புதமான மானிட உணர்வின் உச்சத்தில்
இணைந்து நிற்பதை கண்டு மகிழ்கின்றேன்.
காதல் உடல்சார்ந்துதான்
வெளிப்படுகின்றது ஆனால் அது உடல்சார்ந்தது இல்லை என்று காட்டிப்போகும் இன்றைய பகுதி
மனைவியின் முன் கணவனை குழந்தையாக்கி செல்கிறது அதுகூட தெய்வத்தின் கொடைதான்.
நன்றி
அன்புடன்
ராமராஜன் மாணிக்கவேல்.