உயிர்கள் எல்லாம் பிறந்து வளர்ந்து இறந்துபோகும் வாழ்வைக்கொண்டிருக்கின்றன. அதில் எவ்வித கேள்விகள் ஏதும் இல்லாமல், வாழ்வது ஒன்றே இலக்கு என அனைத்து உயிர்களும் இருக்கையில் மனிதர்களில் சிலர் இத்தகைய வாழ்வின் அர்த்தமின்மையை உணர்ந்து தம் வாழ்வை அர்த்தப்படுத்திக்கொள்ள பார்க்கிறார்கள். வாழ்வுக்கு இலக்கு என பொருள், புகழ், பதவி, என எதையாவது கொண்டு தம் வாழ்வைவுக்கு பொருள் தேட முற்படுகிறார்கள். ஆனால் அவ்வாறு அடையும் இலக்குகளிலும் மீண்டும் அவன் பொருளின்மையையே காண்கிறான்.
மனிதர்களில் சிலர் வாழ்வின் உண்மையான பொருளை அறிவதே இலக்கெனக் கண்டு அதை தேடி அடைய முற்படுகின்றனர். அதை தேடிச் செல்லும் வழி ஒன்றும் அவ்வளவு எளிதல்ல. நீண்ட நெடுந்தொலைவு பயணத்தை பக்தி என்ற வாகனம் ஏறி செல்ல ஆரம்பிக்கின்றான்.
ஆனால் அந்த வாகனத்தினால் மட்டும் பாசம் பந்தம் போன்ற பெருமரங்கள் அடர்ந்த பெரு வனத்தைத் தாண்டிச் செல்ல முடியாது. துறவு என்ற வாளினை கைக்கொண்டு அவ்வனம் தரும் தடைகளையெல்லாம வெட்டி வழியேற்படுத்திக்கொண்டு முன்செல்ல ஒரு சிலரால் மட்டுமே முடிகிறது.
பின்னர் அறியாமை
என்ற பெரு மலைத்தொடர் அவன்
எதிரே நிற்கின்றது. அவற்றை ஞானம்
என்ற ஊன்றுகோலின் துணைகொண்டு மேலேறி கடக்கவேண்டும்.
அடுத்து திசையறிய
இயலா பெரும்பாலையில் அந்த பயணம் தொடர்கிறது. அதற்கு கரம் பிடித்து திசைகாட்டி அழைத்துச்செல்ல, ஒரு
குரு என்ற வழிகாட்டி அவனுக்கு
தேவைப்படுகிறார்.
ஒரு கட்டத்தில் குருகூட அல்லாமல் ஒருவர் மட்டுமே செல்லக்கூடிய மிக மிகச் சிரமமான இருபக்கமும் பெரும்பள்ளமென இருக்கும் ஒற்றையடிப்பாதையில் செல்லவேண்டியிருக்கும். அதுவரை அவனுக்கு உதவிய
ஞானத்தையெல்லாம் வேண்டாச்சுமையென உதறிச் செல்லவேண்டிய நிலை. அந்த ஒற்றைப்பாதையில் எங்கும் விழுந்து விடாமல் யோகத்தில் தன்னை சமன்செய்து முன்னேறிச்செல்ல வேண்டும்.
அதையெல்லாம் கடந்து
வரும் ஒருவன் முன் வழிமறித்து இலக்கை
மறைத்து நிற்கிறது யோகஇருள் எனும் மதகரி. அந்த
மதகரியை சுற்றி வளைத்து விலகி செல்ல முடியாது. அதை பணிந்து கெஞ்சி இணங்க
வைக்க முடியாது. ஒரேவழி அந்த மதகரியை பிளந்தெழுந்து முன்செல்லல் மட்டுமே.
அப்படி கரிபிளந்தெழுந்து ஒருவன்
தன் இலக்கையடைகையில், எங்கும் நிறைந்து பரவியிருக்கும் ஈசன் என தன்னை அறிந்து நிற்கிறான்.
தண்டபாணி துரைவேல்