அன்புள்ள ஜெ,
வெண்முரசு வாசிப்பதன் ஒரே இடர் இதுதான். அது அளிக்கும் மேன்மையின் உச்சங்களையும் உன்னதங்களையும் அனுபவிக்கும் அதேவேளையில் இருளின் தருணங்களையும் கடுந்துயரையும் அவ்வபோது கடந்து சென்றாக வேண்டியிருக்கிறது.
நீலனை மூத்தவள் ஆட்கொண்டிருக்கும் இந்நாட்கள் அவ்வாறானவை. அத்தனை உன்னதங்களையும் விளையாட்டென அளித்த கிருஷ்ணனால் மட்டுமே இத்தனை துயர்மிகு கசப்பையும் வஞ்சத்தையும் கக்க முடியும் எனத் தோன்றுகிறது. ஆனால் இது தற்காலிகமானதே என்பதும் கீதை உரைக்கப் போகும் கிருஷ்ணன் இதையும் கடந்தவனாகவே இருக்க முடியும் என்பதே ஒரே ஆறுதல்.
நீலன் இருளுக்குள் புகுந்து கொண்டதற்கான காரணமாய் உலகு சொல்வது மூத்தவர் பலராமரின் விலகலும் யாதவ குடி பூசலும். தன் துயருக்கு காரணமாய் அவரே உரைப்பது, அவரது வேதம் குறைபட்டதாய் உணர்வதால். எனக்குத் தோன்றும் இன்னொரு காரணம், கிருஷ்ணன் தன் ஆசிரியரின் ஆன்மாவைக் கொன்ற தருணம். இந்த மாயவனும் மனிதன்தான் என மண்ணில் கால்பட்ட தருணம் அது. அன்றுமுதல் அவனுள் வளர்ந்துவருகிறது அந்தக் கேள்வியின் நச்சு பாம்பு. ஆம் அறிவு விழைவின் பொருட்டல்லாது வஞ்சத்தின் பொருட்டு கேட்கப்பட்ட அக்கேள்வியின் பிழையிலிருந்து கிருஷ்ணனுக்கு என்றும் விடுதலை இல்லை என்றே நினைக்கிறேன். குடிபூசல்களுக்குபின் பாண்டவர்களை காண அவன் சாந்தீபினிக்கு வந்தபோது அவனது ஆழத்தில் விழுதிருந்த இந்த துயரின் விதை கிளரிவிடப்பட்டிருக்கலாம்.
நீலன் பார்த்தனிடம் நஞ்சை கக்கும் காட்சியும் அவன் உரைக்கும் நுட்பமான குத்தல்களும் கொடுங்கனவிலும் நினைத்துப் பார்த்திராதவை. நீலனும் பார்த்தனும் பிரிக்கமுடியாதவர்கள். அவ்வகையில் கிருஷ்ணன் துன்புறுத்திக் கொள்வது தன்னையேதான். நீலன் உண்மையிலேயே வெறுப்பைதான் உமிழ்கிறான் அல்லது அதற்கு முயல்கிறான் என தெரிந்திருந்தாலும் இந்த துயராடலும் அவனது ’லீலை’களில் ஒன்றாக இருக்க வாய்ப்பிருக்குமா என மனம் அசட்டுத்தனமாக யோசிக்கிறது. இல்லை இது உண்மைதான். தன் குருதியைபோல் சுவையளிப்பது பிறிதில்லை என்பதை நீலன் உணர்ந்திருப்பான். நீலனுக்கு தன் குருதியைவிட பார்த்தனின் குருதியே மேலும் துயரளிப்பது. அதனாலேயே மேலும் சுவையளிப்பதும்கூட.
உலகால் இருள்வடிவங்கெளென சித்தரிக்கப்பட்ட மாவீரர்களின் சிறை ஒன்றுண்டு. எத்தனை உளவிரிவுகொண்டவராய் இருப்பினும் அந்த இருள்பிம்பத்தின் சிறையிலிருந்து வெளிவரமுடிவதில்லை. துரியனும் ஜராசந்தனும் சிசுபாலனும் அவ்வரிசையில் வந்தவர்கள். இவர்களின் இருள்பிம்பத்தைத் தாண்டி அவர்களின் உளவிரிவையும் துயரையும் முழுமையாக காணக் கூடியவர்கள் இருவர் மட்டுமே. நீலனும் பார்த்தனும்.
அன்றொருநாள் அஸ்தினபுரியில், தன் குருநாதருக்கு அளித்த வாக்கின் பொருட்டு படை இறைஞ்சி நின்றான் துரியன். தருமனும் மூத்தோரும் படையளிக்க மறுத்தனர். அன்று துரியனின் துயர்தாங்காது அவன்பொருட்டு வில்லேந்தவும் துணிந்தான் பார்த்தன். அந்த பார்த்தனே ஜராசந்தன் பொருட்டும் சிசுபாலன் பொருட்டும் நீலனிடம் வில்லேந்துவதற்கு சரியான ஆள். கிருஷ்ணன் குந்தி குறித்து பேசுவது பார்த்தனின் நரம்பு முடிச்சென்றால், ஜராசந்தன், சிசுபாலன் பொருட்டு பார்த்தன் வில்லேந்துவது கிருஷ்ணனின் நரம்பு முடிச்சு.
அன்புக்குரியவர்களை உண்மையாகவே வெறுப்பதுபோல் அவர்களுக்கு வேறு துரோகம் இழைக்க முடியாது. அவ்வகையில் ஒருகணமேனும் முழுமையாக நீலன் வெறுக்குமிடத்தில் பார்த்தன் வெல்கிறான்.
இந்த நாட்களில் கிருஷ்ணனில் இழந்ததை ஒருவகையில் பார்த்தனே ஈடுசெய்கிறான். அவன் துறந்து துறந்து சென்று இந்திரகீலத்தில் அடைவதும் பின் மீண்டுவருகையில் துறந்த ஒவ்வொன்றையும் பெற்றுக்கொள்கையில் உயிர் கொள்ளும் உவகையும் நம்பிக்கையளிக்கின்றன.
அன்புடன்,
தே.அ.பாரி