வெண்முரசில்
திருக்குறள்கள் வருவது ஒன்றும் புதிதல்ல. ஆனால் ஒவ்வொரு முறை வருகையிலும் அது
சுட்டும் திருக்குறளை முற்றிலும் ஒரு புதிய திசையில் திறந்து விரிவாக்கம் செய்வது
அதன் இயல்பு. கிராதம் 32
– ல் அப்படி ஒரு குறள் வந்துள்ளது.
“பீலிபெய் சாகாடும்
அச்சிறும் அப்பண்டஞ்
சால மிகுத்துப்
பெயின்”
இதன் பொதுவான பொருள் மயிற்பீலி
போன்ற எடை குறைந்த பொருளானாலும் அளவுக்கு மீறி ஏற்றினால் ஏற்றப்பட்ட வண்டியின்
அச்சு இயல்பாகவே முறிந்துவிடும். இளமையில் பள்ளியில் இக்குறள் வேற்றுப் பொருள்
வைப்பணிக்கு உவமையாகச் சொல்லப்படுவது. இதற்கு ஒரு அபாரமான பொருளை கிராதம்
பின்வருமாறு நல்கியுள்ளது.
“காலமென வந்து படிவனவற்றை முற்றாக உதிர்த்துவிட்டு கடந்து செல்பவருக்கு
இறப்பில்லை. ஏனெனில் இறப்பென்பது அணுவணுவாக வந்து படியும் துயரத்தின்
பெருந்தொகையே. இந்தத் துலாத்தட்டில் மேலும் மேலும் என வைக்கப்படும் துயரத்தின் எடை
அச்சிறுந்து போகுமளவு மிகுவதற்குப் பெயர் இறப்பு. வைத்தவற்றை முற்றிலுமாக
அவ்வப்போது எடுப்பவனை இறப்பு அணுகுவதே இல்லை. எழுவினா ஒன்றே. வாழ்வதா, இருப்பதா? வாழ்பவன் வாழ்வை
சுமந்தாக வேண்டும். எடை முதிர்ந்து அச்சிறுந்து சகடம் சரிந்தாகவேண்டும். இருப்பவன்
இந்த மலைகளைப்போல. இவை நேற்றற்றவை. எனவே முடிவற்ற நாளை கொண்டவை” – ஒரு குறளை ஒட்டுமொத்த வாழ்வுக்கும் விரித்துப் பார்த்த அனுபவம்
அலாதியானது.
அன்புடன்,
அருணாச்சலம் மகராஜன்