Saturday, November 12, 2016

அறப்போராட்டம்




அன்புள்ள ஜெ. வணக்கம்

இன்று பெருவாழ்வை சிறுகதை என்று காட்டும் ஒரு அத்தியாயம். நகராத அறத்தை எண்திசையிலும் இழுத்து நகர்த்திப்பார்க்கும் ஒரு அறப்போராட்டம். அறம் நகர்கின்றதா? . வென்றவனை வெல்லவிடுகின்றதா அறம்என்பதான் கேள்வி.

இந்திரிகீலமலைக்கு சென்று திரும்பும் அர்ஜுனன் கிராததன்மையை முதலில் துறந்து இறுதியில் அதை அணிகின்றான். ஜடரையை இறுதியில் துறந்து முதலில் அணிகின்றான். மையத்தில் நிற்கின்றாள் வாக்தேவி. அணியும்போது காமம் இரண்டாவது இடத்திலும் துறக்கும்போது காமம் நான்காவது இடத்திலும் இருக்கிறது. அணியும்போது ஐஸ்வரியம் நான்காவது இடத்திலும் துறக்கும்போது இரண்டாவது இடத்திலும் இருக்கிறது. ஊழகத்தில் ஆறுமலை கடந்து ஏழுமலை செல்லும் ஒருவன் நிலை எனக்காட்டுகின்றான் அர்ஜுனன். இந்த அணிதலும் துறத்தலும் நிலைகளே நம்மை வெகு வேகத்தில் வெகுதூரத்தில் இழுத்து நம்மை ஆய்வு செய்யச்சொல்கின்றன ஊழகத்தில் அமரும் மனநிலையை. . 

அணிதலும் துறத்தலும் வழியாக தனது கன்மமலத்தை தாண்டக்கற்றுக்கொள்ளும் அர்ஜுனனை மாயமலம் கீழே இழுத்து வருகின்றது. மாயமலத்தின் வழியாக துறந்துச்சென்ற கன்மமலத்தை எடுத்து மீண்டும் அணிந்துக்கொள்கின்றான். நட்பெனும் மாயமலத்தின் ஒரு சொல் வழியாக ஏழாவது மலையில் இருந்து சறுக்கிவிழுகின்றான். மாயையில் இருக்கும் நம்மனத்திற்கு அர்ஜுனன் நட்பெனும் அதிமதுர உள்ளம் இனிக்கிறது.ஆனால் கன்ம மலத்தை தாண்டிய நேமிநாதருக்கும் எத்தனை வலிக்கும் அர்ஜுனன் நிலை. நேமிநாதர் தாண்டிப்போகும் இடம்  கன்மமலம்.  அர்ஜுனன் தாண்ட விரும்பாத இடம் கன்மமலம்

ஊடும் பாவுமென பின்னி கீழே புடவிப்பெருக்கை நெய்துள்ளன விசையிருமைகள்இருளும்ஒளியும்கருணையும் கொலையும்நன்றும் தீதும்அறமும் மறமும்இருத்தலும் இன்மையுமெனஇருபால் திரிபால் ஆனது அப்புவிஇங்கு அவற்றில் ஒன்று மட்டுமே உள்ளதுஒளிகருணை,நன்றுஅறம்அன்பு ஆதல்இங்கு நீ எதையும் வெல்வதற்கும் கொள்வதற்கும் இல்லைஇங்குஉனக்கு எதிர்நிலையே இல்லை.”  
கன்மத்தைவிடாததால் அர்ஜுனன் அத்வைதநிலையில் இருந்து துவைதநிலைக்கு இருமையின் உலகுக்கு செல்கின்றான். இருமையின் உலகுக்கு செல்லும் அர்ஜுனன் விட்டக்குறையோ தொட்டக்குறையோ முன்ஜென்ம பயனோ இந்த ஜென்மபயனோ அதன் காரணமாக மாயாமலத்தை கடக்கும் விதி வந்து வாய்க்கிறது. இந்திரகீல மலை ஏறி இறங்கியவன் தென்திசை என்னும் யமபுரிக்கு மாயா உலகுக்கு மாய்ந்தும் மாயாதார் உலகுக்கு பயணிக்கிறான்

கன்மமலத்தை தொடும் அர்ஜுனனை அவனின் ஆணவமலம் இமபுரிக்கு அழைக்கிறது. ஆணவத்தின் உச்சத்தில் பெரும் நதியின் நீர்சுழியில் விழுந்து இமபுரிக்கு சென்று காலதேவனை காண்கின்றான். மனமாகிய நதியில் தோன்றும் பெரும் ஊழகச்சுழியில் அச்சத்தை வென்றுவிழும் அர்ஜுனனுக்கு அது வாய்க்கிறது. அர்ஜுனன் ஆணவம் கொண்டு சென்று சேர்க்கும் இடம் அது. இந்த ஆணவம் இல்லாவிட்டால் அந்த ஊழகச்சுழியில் யாராலும் விழமுடியாது. அந்த சுழியின் எதிர் வந்து மறைக்கும் எண்ண அலை அச்சம் தரக்கூடியது அதை தாண்டி அச்சத்தை தாண்டி அர்ஜுனன் அந்த சுழியில் அஞ்சாமல் குதிக்கிறான் அல்லது அந்த சுழி அவன் அச்சமின்மையாலேயே உள்ளே இழுத்துக்கொள்கிறது

சுவாமி விவேகானந்தர்துருப்பிடித்து அழிவதைவிட தேய்ந்து அழிவது மேல்என்று சொல்வார். நோய்பிடித்து அழிவதைவிட வீரனாக இலட்சியத்தில் குதித்து அழிவது மேல் என்று அர்ஜுனன் காட்டுகின்றான்
இந்திரகீலமலையில் கன்மத்தை தாண்டி சென்றவன், இங்கு ஜாதவேதன் மகனை மீட்டுவருதல் என்ற ஒற்றை கன்மத்தை மட்டும் பற்றி செல்லும் அர்ஜுனனுக்கு  அச்சத்தை வெல்ல அல்லது அவனை அச்சப்படுத்த மாயைக் காட்டும் ஜாலம்தான் எத்தனை எத்தனை

காலதேவன் முன் போடப்படும் இருக்கை குழந்தைகளை கொண்டு பின்னியது என்பது பெரும் கற்பனையாக தெரிந்தாலும் மாயையின் வன்மையை என்பது எத்தனை மென்மையாக வன்மையாக மனிதனை தன்வசப்படுத்துகின்றது என்பதைக் காட்டுகின்றது இந்த காட்சி. உண்மையில் பெரும் வீரர்களை மென்மை தோற்கடித்துவிடும். அர்ஜுனனுக்கு இந்த இருக்கையே பெரும் மாயையைக்கடக்க முதல் படியாக வந்து அமைகிறது

//கணத்தோர் இருவர் நிழல் புடைத்து எழுந்து அமைத்துச் சென்ற பீடம் மழலைக் குழந்தைகளைகைகளையும் கால்களையும் ஒன்றுடன் ஒன்று பின்னி முடைந்து அமைத்ததாக இருந்தது.இளமார்புகள் மூச்சில் எழுந்தமைந்தனகுழைந்த வயிறுகள்தொப்புள்கள்பால்திரை மாறாகண்கள்சுவைதேடும் சிற்றுதடுகள்அர்ஜுனன் கையால் தொட்டு அவற்றின் மென்மையைஉணர்ந்தபின் அமர்ந்து கைகளை பக்கவாட்டில் வைத்து நன்கு சாய்ந்து கொண்டான்//


அர்ஜுனன் தனக்கு பீடமாக அமைந்த குழந்தை இருக்கையில் அமர்ந்து கையூன்றி சாயும்போதே மாயை கடந்துச்செல்கின்றான்.  காலதேவன் என்பதால் முதல் மாயையை மென்மையாக வீசி பெரும் வலியை அங்கேயே ஏற்படுத்துகின்றான். அதைத்தாண்டி செல்லும் அர்ஜுனன் அடுத்தவர் குழந்தைகளை கொல்பவரில் கம்சனைக்கண்டு, , காமத்தின் பொருட்டு தனது குழந்தையை கொல்ல அனுமதித்த சந்தனுவைக்கண்டு, வஞ்சகம் கொண்டவரின் முகமாக தேவயானியைக்கண்டு, கொன்று மகிழ்ந்வர் உலகம், கொல்லவிழைந்தவர் உலகம், உண்டு கொழுத்தவர் உகலம் நஞ்சு ஊட்டியவர் உலகம் என்று நீண்டு காமம் அணையாதவர் உலகத்திற்கு வந்து யயாதியைக்கண்டு, இறுதியாக தன்னலம்பேணியவர் வாழும் தவளை உலகத்தையும் தாண்டுகின்றான். தன்னலம்  பேணுபவர் தவளையாக இருக்கிறார் என்றபோது  உள்ளம் வெடித்து ஒட்டிக்கொண்டது


தன்நலத்தையும் தாண்டு ஒருவனுக்கு 

தன்நெஞ்சு அறிவது பொய்யற்க பொய்த்தபின்
தன்நெஞ்சு தன்னைச் சுடும்-என்னும் குறள்காட்டும் தர்மசங்கடமான நிலைவந்து சிக்குகின்றது. அது ஆடிக்கொண்டே இருப்பதால் அது உளம் குழம்ப வைக்கிறது. நடக்கமுடியாமல் செய்யும் என்பதால் சொல்மாறச்சொல்கிறது. அது துலாக்கோலின் முட்களின் மீது நடப்பது. அது துணிந்தவனை நடக்கவிடாமல் வழிந்து நழவி அதலபாதளத்தில் விழச் செய்வது. அதில் நடக்கும்போது கால்கிழியும் குருதிவடியும். சில நேரத்தில் அந்த துலாமுள்ளே கழுமுள்ளாக குதத்தில் குத்தி உடலை இரண்டாகக்கிழித்து தலையை உடைக்கும். அதில் தன்னை  பலியிடும் வீரனுக்கு அறமாகிய அன்னை கைக்கொடுத்து காப்பாற்றுகின்றாள். தனது பால்தனத்தில் ஒன்றை இடமுலையை திருகித்தந்து அதை கதாயுதமாக பயன்படுத்த வைக்கிறாள் அதாவது  தனது அபரஞானதனத்தை தருகின்றாள். அதன் மூலம் காலத்தை காலனை வெல்லலாம்


கருத்தன எந்தைதன் கண்ணன வண்ணக் கனகவெற்பின்
பெருத்தன பாலழும் பிள்ளைக்கு நல்கின பேரருள்கூர்
திருத்தன பாரமும் ஆரமும் செங்கைச் சிலையும் அம்பும் 
முருத்தன மூரலும நீயும் அம்மே வந்து என்முன் நிற்கவே-அபிராமி அந்தாதி 

மாயை வெல்பவனுக்கு பரஞானம் அபரஞானம் என்னும் தனங்களோடு அன்னை முன்வந்து அழும்போது கைக்கொடுக்கிறாள். அதில் உலகத்தைப்பற்றிய அபரஞானத்தை பிய்த்து தந்து காலத்தை வெல்லச்சொல்கிறாள். இந்த அத்தியாயத்தை எழுதிய உங்களை எத்தனை பாராட்டினாலும் தகும்

கருமத்தால் மாயையில் சிக்குண்டு மனிதன் தனக்குதானே உண்டாக்கிக்கொள்ளும் நரகலோகம் அனைத்திற்கும் தாழ்ப்பால் பொன்னால்தான்  ஆகி இருக்கிறது என்ற இடத்தில் உள்ளம் சுடுகின்றது ஜெ

அர்ஜுனன் கண்ட நரகம் முழுவதும் உலகத்தில் உள்ளதுதான் ஊழகத்தில் அமர்ந்து அர்ஜுனன் அதை நெருங்கிக்காணும்போது அதன் கொடூரம் தீவிரமாக இருக்கிறது. மனிதன் பிரக்ஞையில் இல்லாமல் இந்த நரகலோகத்தை கடந்துக்கொண்டே இருக்கிறான். பிரக்ஞைவரும்போது அது அவனை படாதப்பாடு படுத்தும் நரகமாகின்றது. அதை அச்சம் இன்மையின் மூலமாகவே வீரன் வெல்கிறான். தருமன்போன்ற சொல் அறிந்த ஞானிகள் சொற்களின் வழியாக அறிந்து வெல்கிறார்கள்

கன்மமலம் மாயமலம் என்று இந்திரகீலத்தையும் யமலோகத்தையும் வைத்துப்பார்க்கும்போதுதான் இந்த அந்தியாயத்தை எத்தனை அழகாக செதுக்கி ஞானத்தில் ஒளிரவைக்கின்றீர்கள் என்பது புரிகின்றது. நன்றி




என்னதான் மாயையை வென்றாலும் ஜாதவேதன் குழந்தையை துலாத்தட்டில் இருந்து எடுக்கும் அர்ஜுனன் இடம் காலபூதம் இதற்கு நிகர் வை என்றதும்என் குருதி, என் ஊன்என்றான் என்று எழுதிய இடம் காலம் செய்த கோலம். இந்த அத்தியாயம் கவிதையாகும் தருணம். சிறுகதையாகும் பெருவாழ்வு.   அர்ஜுனன் அத்தனை வென்றது இதற்காகத்தானா? எத்தனை வென்று எவ்வளவு தூரம் அறத்தை இழுத்து சென்றாலும் அறம் மண்ணில் தான் நின்ற அந்த இடத்திலேயேதான் நிற்குமா.?


ஆயிரம் ஆயிரம் திசைகளில் ஆயிரம் ஆயிரம் முகம் கொண்டு ஆயிரம் ஆயிரம் கைகளால் நாம் இழுத்துப்பார்ப்பது எல்லாம் அந்த நகராத அறத்தைதானா?  

அன்புடன் 

ராமராஜன் மாணிக்கவேல்