Friday, November 25, 2016

வாருணம்



அன்புநிறை ஜெ,

நலம் விழைகிறேன்.

பார்த்தன் வாருணம் பகுதியில் செய்யும் பயணம் நான் சென்ற ஒரு விமானப் பயணத்தை நினைவூட்டியது.  துபாயிலிருந்து இரான்-துருக்கி-கருங்கடல்-பல்கேரியா வழியாக ஐரோப்பாவைத் தாண்டி போஸ்டன் பயணம்.  துபாயிலிருந்து எழுந்ததுமே பெரும்பாலை நிலங்களைக் கடந்து கருங்கடல் தாண்டிச் சென்றது விமானம். மணற்பாலை, பின்னர் மணலும் அற்றது போல ஒரு பாழ்வெளி, பின் ஐரோப்பா தாண்டியதும் பனிப்பாலை என அது ஒரு தொடர்பாலைப் பயணம். அங்கும் லாஸ் வேகாஸ் சென்றதனால் Death Valley என்றழைக்கப்படும் கடும் வெளி. நீள நெடுக வளைந்து கிடக்கும் நாகமெனப் அப்பாதை கானலில் நடுங்கி விரிந்திருந்தது. பல்லாயிரம் அடிகள் மேலே விமானத்திலும், பின்னர் சொகுசுகாகக் குளிரூட்டப்பட்ட காரிலும் கடந்த பாலைகள் -  முடிவிலியின் ஒரு துளியென விரியும் அப்பெருவெளியின் உக்கிரமும் அதனுள்ளும் நிகழும் வாழ்வின் தரிசனமும் இப்போது கிராதத்தில் வாசிக்கும்போதுதான் அம்மண்ணை நெருங்கி உணர வைக்கிறது.

அந்நிலப்பரப்பின் சில புகைப்படங்கள்:

பொதுவாக பாலை நிலங்களின் இசை, நமது திரைப்படங்களில் அரேபிய நாடுகளை மனதுள் கொண்டுவர வாசிக்கும் பிண்ணனி இசை வகுளாபரணம் என்னும் கர்நாடக ராகத்தை ஒத்தது. அது கர்நாடக இசை மரபில் 'அக்னி' சக்கரம் என்னும் சக்கரத்தை சேர்ந்தது. எங்கோ ஒரு கண்ணி அனைத்தையும் இணைக்கிறது. இசையில் உறையும் அக்னிக் கொழுந்து தழலாடுவது போன்ற ராகம். எனக்குப் பொதுவாக ஸ்வரஸ்தானங்கள் பிடிபடுவதில்லை. எனில் ஒவ்வொரு ராகமும் ஒவ்வொரு உணர்ச்சியைத் தொட்டெழுப்பும். நெருப்பையும் விடாயையும் நினைவுறுத்தும் பாலைநில ராகங்கள்.

பாலையின் தெய்வம் வருணன் என்பதை ஏதேனும் மரபில் அனுபவத்தில் பார்த்திருக்கிறீர்களா? எப்படி இணைகிறது இப்புள்ளிகள் என்று வியப்பாக இருக்கிறது.
விடாய் விடாய் என விடமுடியாது தவித்தலையும் விடாய்க்குப் பிறகே -  ஒற்றைத் துளிக்கு கணம் கணமும் தவிக்கும் வேள்விக்குப் பிறகே -  தரிசனம் தருவான் என்பது மிக அழகாக உணர்த்தப்பட்டிருக்கிறது.

விஜயனின் ஒவ்வொரு திசையின் பயணமும் உள்ளே புதிய திசைக்கதவுகளைத் திறந்து விடுகின்றன.

எனது பாலை கடந்த பயணம் பற்றிய பதிவிலிருந்து ஒரு பகுதி:

//பூகோள அறிவை நன்கு சோதித்தது விமானம் கடந்த பாதை. துபாயிலிருந்து  இரான்-துருக்கி-கருங்கடல்-பல்கேரியா- ருமேனியா-ஹங்கேரி-போலான்ட்-ஸ்வீடன்-நார்வே-சமுத்திரம்-போஸ்டன். இவை அனைத்துக்கும் தலைநகரம் என்ன - நாணயம் என்ன - ஆயிரம் கேள்விகள்.. விமானமே கவலையின்றி இழுத்துப் போர்த்திக் கொண்டு உறங்க, என்னுள் கேள்விகள்.. கூகுள் கிட்டாத கையறு நிலையில் பல பெயர் தெரியாத மலைகளையும் ஆறுகளையும் கேமராவில் புகைப்படமெடுத்துத் தாகம் தீர்த்துக் கொள்ள வேண்டியிருந்தது.
துபாயிலிருந்து 3-4 மணிநேரம் பெரும்பாலை நிலம் - பார்த்தால் மட்டுமே புரிகிறது இயற்கையின் இந்த முகம். முடிவே இல்லாத துயர் போன்ற வறண்ட பாலை மலைமடிப்புகள்; நம்பிக்கைகளைத் தளரச் செய்யும் நீண்ட இரவு போன்ற மலைத்தொடர்கள். வரலாறு காட்டும் பாலைநில மனிதர்களை புரிந்து கொள்ள இந்த முகத்தின் தரிசனம் அவசியம். இங்கே வாழ்வை வாழ கள்ளியின் வெளிப்புறம் போல் ஒட்டகத்தின் உட்புறம் போல் இயற்கை customize செய்த வரங்கள் தேவை.

'வால்காவிலிருந்து கங்கை வரை' சொல்லும் ஆதி மனிதன் உலவியதாய் கருதப்படும் டைக்ரிஸ் சற்று தெற்கே வரைபடத்தில். நம் அனைவருக்கும் ஏதோ ஒரு ஜீனில் வாழும் பாட்டன் பாட்டி வாழ்ந்திருக்கக் கூடும் இப்பகுதிகளில்..

இரான் துருக்கி எல்லையில் ஊர்மியா என்றொரு அழகிய ஏரி. இறைவன் ஓவிய ரூபன் - என்னென்ன வண்ணங்கள் குழைத்து தீட்டுகிறான். பின்னர் துருக்கியில் நுழைந்து  'வான்' என்றொரு மாபெரும் ஏரி - இது பாலை நெற்றியில் நீல வண்ணத் திலகம் போலிருந்தது. மேலும் வடமேற்காய் பறந்து கருங்கடலின் தென்கரையோரம் பறந்து சற்றே கருங்கடல் மீது பறந்து பல்கேரியாவுள் நுழைந்தது. பின்னர்தான்  ருமேனியா-ஹங்கேரி-போலாண்ட்-ஸ்வீடன்-நார்வே-சமுத்திரம்-போஸ்டன்.

இந்தக் கருங்கடல் நீல வண்ணக்கடல், என்னே ஒரு ஏமாற்றம்.
திரையில் ஓடிய வரைபடத்தின் ஊர்களும் என்றோ பயின்ற geographyயும் சற்றே கைகொடுத்தது. நாடுகளின் அரசியல் கோடுகள் மேலிருந்து நோக்கத் தெரிவதில்லை. அனுமானம்தானே எல்லைகள் அனைத்தும்.//
மிக்க அன்புடன்,
சுபா