Wednesday, November 16, 2016

நத்தை



அன்புள்ள ஜெ வணக்கம்.

நத்தை தனது உடல்முழுவதையும் உள்ளிழுத்து வெறும் ஓடே தான் என்று ஆகிவிடும், ஓட்டில் இருந்து வெளியே வந்து உடலே உலகென்று ஓட்டை வெறும் சுமை என்று இழுத்துச்செல்லும். மானிட வாழ்க்கை நத்தைப்போன்றது. எப்போது ஓடென்றும் எப்போது ஓடுசுமையாய் உடலென்றும் வாழும் என்பதுதான் கேள்வி.

குழந்தை பிறந்தாலும் தங்காது என்று ஜாதவேதன் வாழ்க்கை குறுகும்போது அவனும் அவன் மனைவியும் நத்தை என்று ஐம்புலன்களும் உள்ளமும் ஒடுங்கி குழந்தையே உலகென்று வாழ்வென்று வாழ்கின்றார்கள். இறந்த குழந்தை மீண்டு புலன்களும் மனமும் நிறைந்து உலகைக்காணும்போது புலன்களே உலகென்று குழந்தையே சுமையென்று  ஏங்கி நிற்கிறார்கள்.

இந்த கதையின் வழியாக மானிட மனம் அகத்திற்கும் புறத்திற்கும் தாவி நடிக்கும் நடிப்பை இழைத்து இழைத்து காட்டி உயிரோவியம் செய்கின்றீர்கள் ஜெ.

மனித தேவைகென உலகம் நான்கு திசைக்கொண்டது. மனிதன் அதனை இன்னும் எளிமையாக்கிப்பயன் படுத்த எட்டாக வகுத்தான்.  மானிட மனம் தான் பயணிக்கும் திசையில் முரண்வரம்போது மற்ற ஏழுதிசைகளை பயன்படுத்த அறிந்து இருப்பதைவிட தான் பயணப்பட்ட திசையில் முன்னும் பின்னும் ஊசலாட கற்று இருக்கிறது. இந்த ஊசல் ஆட்டமே மனிதன் வாழ்வை ஊசலாட வைக்கிறது.   வடதிசையில் இருந்து தென்திசை வந்த அர்ஜுனன் தென்திசையில் இருந்து வடதிசைக்கு திரும்ப அகத்தின் ஊசாட்டம் ஊழகத்தின் ஊசலாட்டம் என்று உணர்ந்து இருக்கிறான். இந்த உசலாட்டமே ஒரு வாழ்வாக அமையும் தருணத்தை ஜாதவேதன் இல்லத்தில் அவன் மனைவியும் அவனும் பொன்னுக்கு ஏங்கும் தருணத்தில் அறிகின்றான். 

குழந்ததைக்காக இருள் உலகமாகிய தென்திசையை நோக்கி ஏங்கிய அவர்கள் அந்த கவலை நீங்கியதும் அதே குழந்தையின் காரணமாக பொன்னுலகமாகிய வடதிசையை நோக்கி ஏங்குகிறார்கள். ஊழகத்தில் அமரும் ஒருவனுக்கு இருள் ஒளி என்று ஊசலில் உள்ளம் ஆடுவதுபோல வாழ்வகத்தில் அமரும் ஒருவருக்கு வாழ்க்கை புறத்தில் இறப்பு செல்வம் என்ற நிலையில் உள்ளத்தை ஆட்டிப்படைக்கிறது. இருள் ஓளி என்ற சொல் வாக்குதேவியிடம் இருந்து அகத்தில் தோன்றும் போது அதுவே நிகர்வாழ்க்கையாகவும் இங்கு மண்ணில் ஆக்கப்பட்டு உள்ளது. 

அகக்கண்ணும் புறக்கண்ணும் காணும் மாபெரும் ஊசலில் ஆடிய தருணம் ஜாதவேதன் வாழ்க்கை. வெளிவேடத்திற்கு புறவுலக ஊசலின் ஆட்டம் கட்டற்றதுபோல் மிகையாக இருந்தாலும் அகக்கண் ஆட்டமும் எல்லை அற்றது. ஜாதவேதனும் அவன் மனைவியும் வேளியே ஆடுகின்றார்கள். அவர்களின் வழியாக அர்ஜுனன் அகத்தில் ஆடுகின்றான். ஜாதவேதனை நக்கல் செய்து அனுப்பிய கண்ணன் இந்த ஊசலில் சிக்காமல் தப்பிக்கின்றான். அர்ஜுனன் கண்ணனின் நக்கலில் உள்ள இருளைக்கண்டு ஒளியில் வரும் இருளை மறக்கிறான். இன்று ஒளியில் வரும் இருளில் ஊசலில் தவிக்கிறான். 

மாணிக்கவாசக சுவாமிகளை திருப்பெரும்துறையில் குருந்தமரத்தடியில் குருநாதனாக வந்து அட்கொண்ட சிவபெருமான் “தில்லைக்கு வா“ என கட்டளை இட்டு ஜோதியாக்கி ஜோதியாகி மற்ற அடியார்கள் உடன் மறைந்துவிட்டார்.

நாயி னேனை நலமலி தில்லையுட்
கோல மார்தரு பொதுவினில் வருகென
ஏல என்னை யீங்கொழித் தருளி
அன்றுடன் சென்ற அருள்பெறும் அடியவர்
ஒன்ற வொன்ற உடன்கலந் தருளியும்-திருவாசகம் கீர்த்தி திருவகவல்.

மாணிக்கவாசகர் என்ன செய்து இருக்கவேண்டும் திருப்பெரும்துறை தஞ்சாவூர் கும்பகோணம் சேத்தியாதோப்பு தில்லை என்று வந்திருக்கவேண்டும் அல்லது திருப்பெரும்துறை நாகப்பட்டிணம் காரைக்கால் சீர்காழி சிதம்பரம் என்று வந்திருக்கவேண்டும் ஆனால் மாணிக்கவாசக சுவாமிகள் திருப்பெறும்துறையில் இருந்து திருவண்ணாமலை சென்று இருக்கிறார். திருவண்ணமலையில் இருந்து சீர்காழி சென்று இருக்கிறார். சீர்காழியில் இருந்து பக்கத்தில் இருக்கும் தில்லைக்கு செல்லாமல் திருக்கழுகுன்றம் சென்று இருக்கிறார். அங்க இங்க, இங்க அங்க என்று ஊசலாடி தில்லையில் வந்த அமர்ந்து இருக்கிறார். இதை விளக்கியவர் சிவக்குமார் ஐயா. அவருக்கு நன்றி.

பித்தர்கள்போல சான்றோர்கள் அலைவது எல்லாம் உண்மையை கண்கொண்டும் சொல்கொண்டும் அறிந்து தெளியத்தானா? தெளிந்தபின்பு அவர்களின் ஊசல்நின்று துலாமுள் அசைவின்மை அடைந்துவிடுகிறது.

//“இரண்டாவது திசை எது?” என்று ஜைமினி கேட்டான். சூதன் திரும்பி நோக்க மேலும் அணுகியபடி “கிழக்கா மேற்கா?” என்றான். “வடக்கு” என்று சண்டன் சொன்னான். “அதெப்படி தெற்கிலிருந்து கிழக்கு அல்லது மேற்குக்குத்தானே செல்ல முடியும்?” என்று ஜைமினி அவனருகே வந்து நின்றபடி கேட்டான். “அது தொட்டுத் தொடரும் பாதை. இது ஊசலின் மறு எல்லை. இப்பயணம் இவ்வாறே அமைய முடியும்” என்றான் சூதன்.//

சொல் வாழ்வாகியும், வாழ்வு சொல்லாகியும் ஆடும் ஊசலின் ஆட்டத்தை நெருங்கி நின்று கண்ட தருணம் ஜெ. நன்றி.

அன்புடன்
ராமராஜன் மாணிக்கவேல்