Friday, November 11, 2016

அர்ச்சுனனின் பய உருவம்



யமியை சந்திக்கும் முன் அர்ச்சுனன் பயை தேவதையைச் சந்திக்கிறான். ஒவ்வொருவரின் ஆழ்மன அச்சமே அவளின் தோற்றமாக இருக்கும் என அவன் சந்தித்த இருளெதிர்வர் (காளாமுகர் காளம் : இருள் இருளுக்கு முகம் காட்டியவர், இருளுக்கு எதிர் நின்றவர் என்ற பொருள் படும் படி இருளெதிர்வர் என மாற்றியது அபாரம்) கூறுகிறார். இங்கே அவளின் தோற்றமாக அவன் காண்பது மோகினி. விஷ்ணுவின் பெண் வடிவு. ஒரு வகையில் கிருஷ்ணனின் பெண் வடிவு. மீண்டும் மீண்டும் அவன் சுபத்ரையிடம் சென்று சேர்வதும் இதனால் தான். அவளையே அஞ்சுகிறான், அவளையே மீள மீள அடையவும் செய்கிறான். இந்த மோகினியைக் காண்பதற்கு முன் அவன் உடல் இரண்டாகக் கிழிகிறது. ஒரு பகுதியில் இருந்து வெளியேறும் குருதியை மறு பாகத்தான் ருசிக்கிறான். தன்னைத் தான் உண்ணும் அனுபவம் அவனுக்கு சித்திக்கிறது.

பிறிதொரு வகையில் இதை கர்ணனை உண்ணும் அர்ச்சுனன் என்று கூட பார்க்கலாம். அவ்வாறு அவனைச் செய்யத் தூண்டுவது கிருஷ்ணன் தானே!! அதன் காரணம் குந்தி!! அந்த அச்சம் அவனுக்குள் ஒரு ஆதி அச்சமாகக் குடியேறி இருக்கலாம். அவை இணைந்த ஒரு உருவமாக அந்த மோகினி இருக்கலாம். ஒரு வகையில் குந்தி, கிருஷ்ணன் இருவரின் இணைவே சுபத்திரை. கர்ணனை அர்ச்சுனன் கொல்ல ஒரு முக்கியமான காரணம் இவளே. அபிமன்யுவின் மரணம் அவளை அவ்வாறு ஆக்குகிறது. இங்கே ஒரு அன்னையின் வேண்டுதலுக்காக தன் மகனை நிகர் வைத்து அர்ச்சுனன் வெல்கிறான். அபிமன்யு, ஜெயத்ரதன் இருவரின் மரணமும் பாசுபதத்தின் ஞானமும் எவ்விதத்திலோ தொடர்புள்ளவை. அதை நாவல் எவ்விதம் விரித்தெடுத்து விளைவிக்கப் போகிறது என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.


அருணாச்சலம் மகராஜன்