அன்புள்ள ஜெ சார்
எல்லாத் தண்டனையும் உடலைச்சார்ந்தவை என்று அர்ஜுனன் நினைக்கிறான்.
உடலென்பதே வலியை அளிப்பதற்கான ஒரு வாகனம் என அவன் நினைக்குமிடம் எனக்கு பெரிய பதற்றத்தை
அளித்தது. எனக்கு 20 வயது வாக்கில் எலும்புக்குள் ஒரு நோய் வந்தது. புற்றுநோய் என்று
நினைத்தார்கள். ஆனால் இல்லை என்று பிறகு சொன்னார்கள். வலி வலி வலி. ஏழுவருடம் வலியிலேயே
வாழ்ந்தேன்.
தற்கொலை செய்துகொள்வதைப்பற்றி பலமுறை நினைத்தேன். ஏன் சாகவில்லை
என்பது இன்றைக்கும் எனக்குத் தெரியவில்லை. தற்கொலைசெய்துகொள்பவர்கள் பெரும்பாலும் நல்ல
உடல்நிலை உள்ளவர்கள். நோயில் இருந்தால் தற்கொலை செய்துகொள்ளமுடியாது. மனசுவராது.
அந்த வலியை நினைத்துப்பார்க்கையில்
வலி என்பதை நமக்கு அளிப்பதுதான் உடலின் வேலையோ என்ற எண்ணம் எனக்கு வருகிறது. உடலின்
எல்லா சுகங்களும் ஒருவகை வலிகள்தானா என்றும் தோன்றுகிறது. பசி, குளிர்.சூடு எல்லாமே
வலியாக ஆகிவிடும் இல்லையா?
தியாகராஜன்