கிராதத்தின் 2௦ மற்றும் 21 ஆம் பகுதிகள் மிக முக்கியத்துவம் வாய்ந்தவை. இப்பகுதிகளைப் படிக்கையில் கூடவே இவையெல்லாம் அர்ச்சுனனின் ஆழ்மன வெளிப்பாடுகள்,
அவன் உணரந்தவையாக ஒரு கவிஞர் எழுதிய நூலைப் பாடிக் கொண்டிருக்கும் ஒரு சூதனின் கூற்றுகள் என்ற இரு வழித்துணைகள் ஒரு வாசகருக்குத் தேவை. ஒரு வகையில் இவ்விருள் காவியத்தின் வழிகாட்டும் இரு நிலவுகள் என இவற்றைச் சொல்லலாம் – வாசகர் அறியும் இருளில் இரு நிலவுகள்....:-)
அவ்வகையில் அர்ச்சுனனை இன்னும் அறிய ஒரு வாய்ப்பாக அமைபவை இவ்வத்தியாயங்கள். அவன் அறிந்து,
கடந்து செல்கிறவன். அனைத்தையும் கடக்கிறான். அவன் குலம், உடன்பிறந்தோர்,
மைந்தர், புகழ், நற்பெயர், மூதாதையர், அவன் அடையச் சாத்தியமான விண்ணகங்கள் என அனைத்தையும் கடக்கிறான், அவன் இலக்கை நோக்கிச் செல்வதற்காக. இந்த கடக்கும் பயணங்களில் அவன் சந்திப்பவர்கள் மூலம் அர்ச்சுனனையும்,
இது வரை வந்திருக்கும் சில வாசக இடைவெளிகளுக்கு வெண்முரசு அளிக்கும் பதில்களையும் அறியலாம்.
திரௌபதி:
திரௌபதிக்கும் அர்ச்சுனனுக்குமான உறவின் விசித்திரம் ஒரு வாசகருக்கு வியப்பளிக்கக் கூடியதே. சாதாரணமான பாரத அறிமுகம் உள்ளவர்களுக்கே திரௌபதிக்கு பிடித்த கணவன் அர்ச்சுனன் தான் என்பது தெரியும். அப்படியிருக்க அவர்களுக்கிடையே ஒரு கொந்தளிப்பான உறவு சற்றே அதிர்ச்சியளிக்கத் தான் செய்யும். அவ்வுறவின் அடிப்படையை கிராதம் சொல்கிறது – “நான் அளிக்க விழைந்தேன். வெல்லப்படுவதை அல்ல” என்று அவளும், “வெல்லாது ஒன்றைக் கொள்வது எனக்குப் பழக்கமில்லை.” என அவனும் சொல்கின்றனர். முத்தாய்ப்பாக – “கரியநதி யமுனை. அது இந்திரன் நகரைச் சூழ்ந்தோடுகிறது.” என என்றென்றைக்கும் அவர்களிடையே இருக்கும் விலக்கத்தை பாஞ்சாலி வாயிலாகச் சொல்கிறது. இப்பகுதியில் திரௌபதியைப் பற்றி வரும் ‘ஒரு குளிர்ந்த நீர்த்துளி என இருளின் ஒளி சூடி நின்றாள்’ என்ற வரி அபாரமானது. பலவகையிலும் பிராயாகையின் முதல் பகுதியை நினைவூட்டிய வரிகள். துருவனின் பிம்பம் கங்கையில் விழுந்திருப்பதை திரௌபதியின் மண்நிகழ்விற்கான அறிகுறியாக பிரயாகை சொல்லும்.
மாலினி:
இங்கே அவன் நரகத்தில் இருக்கையில் அவன் கனவின் கனவில் மாலினி அன்னை அவனை ஆற்றுப்படுத்துகிறாள். ஏன் மாலினி?
அவன் இயல்பாகத் தேர்ந்தெடுக்கும், அவன் தேர்ந்தெடுப்பான் என முன்னதாகவே முடிவு செய்யப்பட்ட நரக வாயில் – தாமிஸ்ரம் : பிறர் குழந்தைகளைக் கொன்றவர்க்குரியது. ஆம், மாலினி அன்னை திருமணமே செய்து கொள்ளவில்லை. அர்ச்சுனனுக்காகவே தன் வாழ்வை அளித்தவள். இருப்பினும் அர்ச்சுனன் அவள் வாயிலாக இம்மண்ணிற்கு வர வேண்டிய குழந்தைகளை வர விடாமலேயே செய்து விடுகிறான். ஒரு வகையில் அவள் குழந்தைகளைக் கொன்று விடுகிறான். இதுவும் மாலினி அன்னையின் மீதான அர்ச்சுனனின் பாசத்திற்கு காரணம். இது தான் அவன் அஸ்தினபுரியில் இருக்கையில் எல்லாம் வாரத்திற்கு ஒரு முறை அவளைச் சென்று பார்க்க வைக்கிறது. அவன் அக ஆழத்தில் அவன் மாலினி அன்னைக்கு இழைத்ததை தான் செய்தவற்றிலேயே மிகப் பெரிய தவறு என எண்ணியிருந்திருக்கிறான். எனவே தான் இயல்பாகவே அவ்வாயிலைத் தேர்வு செய்கிறான். உண்மையில் வெண்முரசு சாமானியருக்கு அளித்த கௌரவங்களில் இது நிருதனுக்கு இணையான ஒன்று என்றே சொல்வேன். மேலும் இவ்வாயிலில் தான் பீஷ்மர் இருக்கிறார். ஆம் அவரும் அம்பையின் குழந்தைகளைக் கொன்றவர் தானே.
அன்புடன்,
அருணாச்சலம்
மகராஜன்