Sunday, November 27, 2016

மூன்றுமுகன்




வெளிநாட்டில் இருந்து வீட்டுக்கு வரவேண்டும் என்றால் முதலில் இந்தியாவுக்கு வரவேண்டும், இந்தியாவில் நமது மாநிலத்திற்கு வரவேண்டும், நமது மாநிலத்தில் இருந்து நமது வீட்டுக்கு வரவேண்டும். வீட்டில் இருந்துதான் ஒருவான் வெளிநாட்டிற்கு செல்கின்றான், வீட்டிற்கு வரும்போது அந்த பயணம் எதிர்திசையில் மேலிருந்து கீழாக ஆழத்திற்கு கொண்டு சென்றுவிடுகின்றது.

அர்ஜுனன் வருணனை வெல்லசெல்லும் பயணத்தில் அறத்தில் கட்டுப்படுவதைப் பற்றி, வல்லமையில் கட்டுப்படுவதைப்பற்றி தெரிந்து அறிந்த பெறப்போகின்றான். அறம் உண்மையில் குடியில் இருந்து நாட்டிற்கு நாட்டில் இருந்து உலகிற்கு என்று படர்ந்து விரிந்து உள்ளது. படர்ந்து விரிந்து உள்ள அறத்தை வெகுதொலைவில் பாலைவணத்திற்கு அப்பால் சென்று தேடித்திறிந்து நாவறண்டு செத்துவிழ போராடிக்கண்டுக்கொள்ளவேண்டி உள்ளது என்று அர்ஜுனன் காட்டுகின்றான்.

வாழ்க்கைதான் பெரும் பாலைவனமாக இருக்கிறது, குடிப்பிறந்த ஒருவனை வாழ்க்கை அலைகடலுக்கு அப்பால் நீரில்லாப்பெரும்பாலையின் அப்பால்தள்ளிவிடுகிறது அதாவது வாழ்க்கைக்கு என்று இருக்கும் அறத்திற்கும் மெய்மைக்கு என்று இருக்கும் அறத்திற்கும் இடையில் பெரும்பாலை இருக்கிறது. இந்தபாலையை கடந்தால்தான் மெய்மை அறத்தை அடையமுடியும். அந்த பாலையைக்கண்டு பயந்து அதை தாண்டி வாழ்க்கை அறத்தோடு வியபாரியாய் உலகம் பயணித்துக்கொண்டு இருக்கிறது. அர்ஜுனன்போன்ற பெரும்வீரர்கள் வாழ்க்கை அறத்தைவிட்டுபிரிந்து மெய்யறத்தை அடைய செத்துவிழுந்தாலும் சரியே என்று துணிந்து களம்காண புறப்படுகின்றார்கள். அவர்கள் வழியில் சந்திக்கும் அனைத்து துன்பங்களும் உடல்சார்ந்து உள்ளத்தை நோகச்செய்பவைத்தான் அதையும் தாண்டும் வீரன் உள்ளம் உசாவும் மெய்யறத்தை காண்கின்றான்.

ஒவ்வொரு குடியிலும் கல்லென்று இருந்த அறம், நாட்டில் அலையென்று புரண்டு, உலகில் நீரென்று சூழ்ந்து உள்ளது. நீரென்று நிறைந்து இருக்கும் அறம் காணும் பெரியோர் அதன் அலை என்ன, அதன் முதல் என்ன என்று ஆய்கிறார்கள். மூன்றையும் அறியாமல் நெளியும் அறமாகிய வருண அறத்தை முழுதாக கண்டுக்கொள்ளமுடியாது. வருண அறம் கல்லென்று கொப்பளித்தாலும், அலையென்று புரண்டாலும் நீரென்று நிறைந்தாலும் அதன் குணம் ஒன்றுதான் அது கரைத்தாண்டாமல் கட்டுப்படுவது. அழிக்கும் வல்லமை இருந்தாலும் காக்கும் கனிவுக்கொண்டது.

வருணத்தேவன் ஒருவன்தான் அவனை மூன்று என்று உலகம் கண்டுக்கொள்கிறது, அவன் உருவத்தால் மூன்றாக உள்ளான் ஆனால் உள்ளத்தால் ஒன்றே ஆனவன். பெரும் வேதத்தில் நின்று உலகை ப்ரமசொருபம் என்று காணும் கலைவாணியின் வடிவாகிய வஸிஸ்டன் போன்றோர் கண்களுக்கு அவன் வெண்ணிற அரியணையில் பொன்னிறமேனியுடன் திகழ்கின்றான். துர்க்கை வடிவான ராமன்போன்ற மாமன்னர்கள்  சூழ்ந்த அவையில் அவன் குருதிநிற அரியணையில் வெண்தாடியும் வெண்குழலும் சூடிய அனுபவசாளியாக திகழ்கின்றான். திருமகள் வடிவான முதுதந்தையர் உலகத்தில் அவன் கல்லென இருக்கிறான் ஆனால் குளிர்ந்து ஊறி பெரும்தந்தையென என்றும் மட்டும் இருக்கிறான்.

பெரும்வேதம் கற்றவன் அறியும் வருணனின் முகத்தை மன்னர்கள் அறியமுடியாது. மன்னர்கள் அறியும் முகத்தை குடும்பத்தலைவன் அறியமுடியாது. பெரும் வேதம் கற்றவனாகி மன்னனாகி குடும்பத்தின் குழவியாகும் அர்ஜுனன் மூன்று முகத்தை அறிந்து, அறிந்த மூன்று முகத்தின் உள்ளம் ஒன்று என்பதை உணர்ந்து தெளிந்து மூவரையும் ஒரே மந்திரத்தால் கட்டுகின்றான் வெல்கின்றான்.

வருணனே,  இறைவடிவோனே உன்னை வணங்குகிறேன்
நாங்கள் எளிய மானுடர்
நாள்தோறும் உன் நெறிகளை மீறிக்கொண்டிருக்கிறோம்
எங்களை இறப்புக்கு இரையாக்காது அருள்க!
ஒவ்வாதன கண்டு நீ கொள்ளும் பெருஞ்சினத்தால்
எங்களை அழிக்கலாகாது எந்தையே.
உன் அளிதேடி இதோ வந்துள்ளோம்.
உன் நெஞ்சத்தை வேதச்சொல்லால் கட்டுகிறோம்
கடிவாளமிட்ட புரவிகளால் தேரை என

அழகால்  ஆற்றலால் குழந்தையாக இருக்கும் ஒருவன் தன்வீரத்தால் மன்னன் அகின்றான், மன்னாக இருக்கும் ஒருவன் தான் கற்ற கல்வியால் மெய்மையால் வேதவித்தாகின்றான். அழகு ஆற்றல் வீரம் ஞானம் அனைத்தும் மனிதனுக்கு பரந்துவிரிந்த கடலென வல்லமையைத்தருகின்றது அதை அவன் எப்படிப்பயன் படுத்துகின்றான்? என்ற கேள்வி வரும்போது அவன் மெய்மை அறிந்தவனா? இல்லையா என்பது கேள்வியாகிறது. கட்டுப்படுகின்றானா? கட்டுப்படவில்லையா? கட்டுப்பட்டால் மெய்மை அறிந்தவன்  என்று பதில் கிடைக்கிறது.
//“கேள்தந்தை உனக்களிக்கவேண்டியதென்ன?” அர்ஜுனன் “உங்கள் மிகச்சிறந்த சொல்லை” என்றான்.
ஆம்அதுவே முறை” என்றார் “இதுவே அது. வல்லமை எதுவும் கட்டுண்டாகவேண்டும்” என்று சொல்லி அவன் நெற்றிமேல் கையை வைத்தார்அர்ஜுனன்  கைகூப்பி அதை ஏற்றான். மும்முறை அந்த அழியாச்சொல்லை தன்னுள் சொல்லி பதித்துக்கொண்டான்.//

எதை  செய்தாலும் எதை கற்றாலும் எதை பெற்றாலும் அதன் மூலம் உனக்கு ஒரு வல்லமை வந்துவிடும் எனவே தன்னை குத்தியடக்கும் அங்குசத்தையும், தன்னை கட்டிப்போடும் கயிற்றையும் ஏந்தி நிற்கும் விநாயகனை எதற்கும் முன் வணங்கு என்று சொன்ன பெரியோர் திருவடி போற்றி!

அன்புடன்
ராமராஜன் மாணிக்கவேல்.