Monday, November 21, 2016

பொன்னென்றும் நீரென்றும்




மெய்மை தத்துவங்களாக  கனிகின்றன,  கனிந்த தத்துவங்களை கொய்து சடங்குகளாக பயன் படுத்துகின்றனர். பயன்படுத்தப்படும் சடங்குகள் தத்துவங்களை விட்டுவிட்டு வெறும் சடங்குகளாகிவிடாமல் இருக்க புராணங்கள் மலர்கின்றன. மலர்ந்த புராணங்களில் இருந்து தத்துவங்கள் கனிந்து மெய்மை அமுதாகிறது. மெய்மை என்னும் அமுதம்தான் சக்தியளிக்கிறது அதை அடைவதுதான் நோக்கம் ஆனால் மெய்மையை நேராக பயன்பாட்டுக்கு கொண்டுவரமுடியாமல் போகும்போது மெய்மையில் இருந்து தோன்றும் தத்துவம் சடங்கு புரணாம் என்று ஒரு சுற்றி சுற்றி மெய்மையை அடைகின்றோம்.

இருளென்றும் பொன்னென்றும் நீரென்றும் வைரமென்றும் வடிவம் கொண்ட உலகங்களுக்கு பாதைகளாகும் திசைகள் இருக்கின்றன. ஒரு உயிர் இந்த உலகங்களை விரும்பி அடைய திசைகளைத்தேர்ந்து எடுக்கும்போது அந்த உயிர் அந்த உலகமாகவே மாறிவிடுகிறது என்பதுதான் மெய்மை. “நீ எதுவாக ஆக நினைக்கிறாயோ அதுவாகவே ஆகின்றாய்” என்று வேதம் இந்த தத்துவத்தின்வழியாக சொல்வது அந்த மெய்மையைத்தான். இந்த மெய்யை தத்துவமாக்கி புராணமாக நடித்து அர்ஜுனன் காண்கின்றான். நான் வில்லாளி என்று அவன் அமர்ந்து இருந்தால் இந்த புரணாம் இல்லை, இந்த புராணம் இல்லை என்றால் அவனை இழுக்கும் தத்துவம் இல்லை தத்துவம் இல்லை என்றால் அவனுக்கு மெய்மை இல்லை. தான் கண்ட அந்த மெய்மையை தனது புராணத்தின் வழியாக அர்ஜுனன் இப்படி வைக்கின்றான்.

//ஒவ்வொரு திசைக்கும் ஒரு மெய்மைஎன்றான் அர்ஜுனன். “இருண்ட ஆழத்தின் மெய்மை யமனிடம். ஒளிரும் துயரங்களின் மெய்மை குபேரனிடம். நெளியும் உண்மை வருணனிடம். உடையாத வைரத்தின் உண்மை இந்திரனிடம். மெய்மை என்பது இந்நான்கும் கலந்த ஐந்தாவது ஒன்றாகவே இருக்க முடியும். நான்கையும் கடக்காது ஐந்தாவதற்கு செல்ல முடியாது என்று தோன்றுகிறது.”//

இந்த புராணத்தின் வழியாக மெய்மை வந்து அடையப்படுகின்றதா? ஆம் என்று ஒருசொல் சொல்வதற்கு முன்னால் இல்லை இல்லை என்று ஓராயிரம் சொற்கள் சொல்லவேண்டிய நிலையில் இருக்கிறது மானிட வாழ்க்கை. 

மெய்மை அருகில் இருக்கும் தொலைதூரபாதையால் ஆனது. தொலைதூரப்பாதையைக் கடக்காமல் மெய்மையை தொடமுடியவில்லை. தொலைத்தூரப்பாதையின் தடுப்புச்சுவர்கள்தான் மெய்மையின் படிகளும்.

காமமென்றும் குரோதமென்றும் வஞ்சமென்றும் சுயநலமென்றும் மிருத்யூவென்றும், நித்ராவென்றும்,வியாதியென்றும்,அந்தர்த்தானை  என்றும் இன்னும் இன்னும் நூறு நூறு கவர்ந்து இழுத்து ஆழத்தில் அழுத்திவிடும்   உலகங்கள் அதுவே தடுப்புச்சுவர்கள் அதுவே அதன்படிகளும். 
தடுப்புச்சுவர்களில் தடுக்கிக்கொள்ளலாம் அதையே மிதித்து ஏறலாம். ஹம்சனென்றும் சந்தனுவென்றும் தேவயானியென்றும் துஷ்யந்தன் என்றும் கிடக்கும் ஜீவன்கள் யாரோ அல்ல இந்த பயணத்தில் இருக்கும் ஜீவனின் முற்காலாத்தோற்றங்கள் அதுவே அந்த ஜீவனுக்கு தடைகல்லும் படிக்கல்லும்.பயணத்தின் முன்னே இருக்கும் சுவரை தடைக்கல் என்று நினைக்கும் ஜீவனுக்கு மெய்மை இல்லை என்று ஆகின்றது ஆனால் அதற்குள் ஒரு வாழ்க்கை இருக்கிறது. முன்னே இருக்கும் சுவரை படிக்கட்டு என்று நினைக்கும் ஜீவனுக்கு மெய்மை கையில் இருக்கிறது இதற்குள்ளும் ஒருவாழ்க்கை இருக்கிறது. இரண்டு வாழ்க்கை ஒரு வாழ்க்கைபோல் தோன்றினாலும் இரண்டும் ஒன்று அல்ல
.
அர்ஜுனனாகி பயணிக்கும் ஒவ்வொரு ஜீவனும் தன்னைத்தான் அந்த புராணத்தில் கண்டு தத்துவத்தை அள்ளிப்பார்க்கையில் அதற்குள் மெய்மை சுடர்விடுகின்றது என்பதை அறிகின்றது.
அர்ஜுனன் போன்ற மாபெரும் வீரன் வெறும் வீரனாக மட்டும்வாழ்ந்துவிட்டால் அவன் உலகுக்கு உடல்சார்ந்த உலகத்தையும் உடலின்வழியாக பயன்பெரும் புலன்களின் இன்ப உலகத்தையும் மட்டுமே சந்ததிக்கு கடத்தியவனாக இருப்பான். உடலைத்தாண்டி புலனைத்தாண்டி தடைச்சுவர்களை படிகளாக்கும்போது புலன்தொடாத மாறாத மெய்மையை உலகுக்கு வழங்கியவன் ஆகின்றான். அர்ஜுனன் இந்த கிராதம் வழியாக உடலைத்தாண்டி புலன்களைத்தாண்டி செல்லும் உலகத்தை கண்டடைய பயணிக்கின்றான். இதுவே கிராம் எழுதுவதன் நோக்கமாகவும் அமைகிறது. சும்மா உட்கார்ந்து இருக்கும் ஒரு ஜீவனால் போர்க்களம் செல்லமுடியுமே அன்றி போர்க்களத்தில் நின்று கீதைக்கேட்க முடியாது. அர்ஜுனன் கீதைக்கேட்பதற்காக பயணிக்கும் பயணத்தில் கிராதம் பாதையாக இருக்கிறது. 

மகாத்மாகாந்தி தென்னாப்பிரக்காவில் புகைவண்டியில் இருந்து தூக்கி எறியப்படும்வரை பயணித்த உலகத்தில் இருந்து வேறு ஒருபுதிய உலகத்தில் பயணிக்கிறார் அந்த பயணத்தின் மூலம் அவர் உலகுக்கு காட்டியது விழியால் மட்டும் கண்டுக்கொள்ளமுடியாத உலகம். கிராதத்தில் அர்ஜுனன்  பயணிப்பதும் விழியால் மட்டும் கண்டுக்கொள்ளமுடியாத உலகமே.  

பொன்னகரத்தைவிட்டு அர்ஜுனன் கிளம்ப ஒரு மாபெரும் சம்பவம் நடக்கவில்லை மாறாக ஒரு எறும்பு அந்த மாற்றத்தை அர்ஜுனன் இடம் ஏற்படுத்துகின்றது. ஒரு எறும்பு ஒரு சிறிய நீர்குட்டையில் கிடக்கிறது. அது தனது கால்களை ஆட்டித்தவிக்கிறது. உயிர் பிழைக்க தவிக்கும் அந்த எறும்பின் இணைந்த இருமுன்கால்களை காணும் கணம் அர்ஜுனனுக்கு இந்த உலகமே மாறிவிடுகின்றது. அந்த எறும்பின் உடலும் தனது உடலும் அழிந்து எறும்பின் உயிரும் தனது உயிரும் ஒன்றென ஒன்றி ஒரு மெய்மையை அறிகின்றான். இதில் இருந்து தப்பித்தல் என்ற மெய்மை. அந்த மெய்மை அப்படியே ஓரு கல்லாக இல்லாமல் தத்துவமாகி புராணமாகி நம்முன் பேசும்கற்சிலையென வருகின்றது. இந்த மெய்மையை அடைய அர்ஜுனன் குபேரன் மகள் மீனாட்சியுடன் நூற்றியெட்டு ஆண்டுகள் பயணித்து பழகவேண்டி உள்ளது.

//இருகைகளையும் கூப்பி எறும்பு கூவியதுபேராழிகளின் தலைவனாகிய வருணனே, இக்கடலை நான் கடக்க எனக்கு உதவுக!” திகைப்புடன் அவன் சுட்டுவிரலால் ஒற்றி அந்த எறும்பை மேலெடுத்தான். அதன் விழிகளை தன் விழிகளால் தொட்டுநீ சென்றுகொண்டிருந்தது கடலென எவர் சொன்னது?” என்றான். “என் மூதாதையரின் அறிதல், என் விழிகளின் காட்சி இரண்டையும் என் நுண்ணறிவின் வழியாக இணைத்துக்கொண்டேன்என்று எறும்பு சொன்னது. “அலையடிப்பது, திசைகள் அற்ற எல்லைகொண்டது, சென்றடையமுடியாத ஆழம் கொண்டது.”//

மனிதன் சென்றுக்கொண்டு இருக்கும் அனைத்தும் கடல்தான்,கடலாக இருப்பதால்தான் அதில் அவன் பயணப்பட்டுக்கொண்டே இருக்கிறான். அந்த பயணத்தில் அவன் அலையடிப்புகளைக்காண்கின்றான். திசைகள் அற்று இருப்பதை அறிகின்றான். சென்று அடையமுடியாத ஆழம் என்பதை கற்கின்றான். அந்த மெய்மை வந்ததும் அந்த கடலில் இருந்து கரையேற தன்னால் மட்டும் முடியாது என்று உணருபவன் இறைவனை நாடுகின்றான். தன்னால் முடியும் என்று நினைப்பவன் அடுத்த பயணத்திற்கு தயாராகின்றான்.

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவனடி சேரா தார்-என்கிறார் வள்ளுவர்.

பிறவிப்பெருங்கடலில் ஒவ்வொரு பிறவியின் ஒவ்வொரு தளையும் ஒரு பெருங்கடல். சூரபத்மனுக்கு ஆணவம், இராவணனுக்கு காமம், ஹம்சனுக்கு பயம், தேவயானிக்கு வஞ்சம், சந்தனுக்கு மோகம், துஷ்யந்தனுக்கு சுயநலம்.  இதைத்தாண்டினால்தான் இவர்கள் மெய்மையை அடையமுடியம்.  இவர்களின் வழியாக இதை எல்லாம் அர்ஜுனன் தாண்டிச்செல்கிறான் என்பதை அறியவைத்து நம்மை தாண்டச்சொல்கிறான்.

அருகில் இருக்கும் மெய்மையை   காலத்தை கடந்த தொலைதூரபாதையில் பயணித்தே அடையமுடியும் என்பதை கிராதம் மிகமிக அழகாக காட்டுகின்றது