Sunday, September 1, 2019

முதல் பாவம்




அன்புள்ள ஜெ,

திருஷ்டதுய்ம்னனை மிதித்தே கொல்லும் காட்சி அருவருப்பும் கசப்பும் அளித்தது. மொத்த மகாபாரதத்திலும் மிகமிக மோசமான சாவு அதுதான். அதுவும் அவன் கெஞ்சிக்கொண்டே இருக்கிறான். அந்தச் சாவுக்கு அவன் செய்த தப்புதான் காரணம். ஆசிரியனைக் கொலைசெய்தது. ஆசிரியனை கொலைசெய்தவன் அர்ஜுனன். அவனுக்கு தண்டனை இல்லை. ஏனென்றால் அது போர் வெற்றி. அவன் அதில் ஆணவம் கொள்ளவில்லை. அதைக் கொண்டாடவில்லை. அதை அவன் தன் வெற்றியாகவே நினைக்கவுமில்லை. ஆனால் திருஷ்டதுய்ம்னன் கொண்டாடுகிறான். அவரை அவமதிக்கிறான். ஆகவே அவனுடைய அந்தச்சாவு நியாயமானதுதான். அப்படி பார்த்தால் மகாபாரதம் மிகமிக மோசமான பாவமாகச் சொல்வது இந்த விஷயத்தைத்தான் என நினைக்கிறேன். அது குருநிந்தனையைத்தான் முதல்நிலையிலான பாவமாகச் சொல்கிறது. சிகண்டியும் அடுத்தபடியாகக் கொல்லப்படுகிறான். ஆனால் சிகண்டிக்கு அவமரியாதை இல்லை. ஏனென்றால் அவன் பிதாமகனைக் கொன்றாலும் அவமரியாதை செய்யவில்லை. ஆகவே மரியாதையான சாவு. இந்த முடிவு ஒருவகையான நிறைவுதான்

மகேந்திரன்