Thursday, August 17, 2017

உள்ளமெனும் கரவுக்காடு (நீர்க்கோலம் - 51,52,53)ஒரு காட்டை தூரத்தில் இருந்து பார்க்கையில் அல்லது விமானத்தில் இருந்து பார்க்கையில் மிக அழகாக இருக்கும். ஏன் கற்பனையில் கூட காடு என்றவுடன் பச்சைப் பசேலென்ற பெரு வெளியாக வண்ண மலர்கள் பூத்துக்குலுங்கும் மரம் செடி கொடிகள் நிறைந்து இனிய கனிகள் தேன் போன்ற கானக அரும்பொருட்கள் நிறையக் இடைக்கும் ஒரு இனிய இடமென்றே தோற்றமளிக்கிறது. மயிலகள் தோகை விரித்தாட, குயில்கள் பாட்டிசைத்துக்கொண்டிருக்க புள்ளி மான்கள், முயல்கள் துள்ளியோட ஒரு இனிய காட்சி நமக்குத் தோன்றும். ஆனால் காட்டின் உள் நுழைந்து பார்த்தால், எதிர்பார்த்தபடி எதுவும் இருக்காது. செடிகொடிகள் மரங்கள் நிறைந்து இருந்தாலும் நம் பசிக்கு கனியோ காயோ தரும் ஒரு தாவரம் அரிதாக எங்காவதுதான் இருக்கும். பசுமை நிறைந்திருந்தாலும் நாம் குடிப்பதற்கான சிறிதளவு நீரைக்கூட பாடுபட்டு தேடவேண்டியிருக்கும். ஒவ்வொரு அடிக்கும் என்ன ஆபத்து இருக்கும் என்பதைக் கணிக்கமுடியாத அபாய சூழல் நிலவும். ஒவ்வொரு விலங்கும் நம்மைத் தாக்க தயங்காதவை என்பதை நாம் அறிவோம். கோயில்களில் சில்லறைக்காசு வாங்கி ஆசியளிக்கும் யானை அங்கு நம்மைக் விரட்டி விரட்டி கொல்ல முயலும் ஒரு முரட்டு விலங்கென இருக்கும். நச்சுயிர்கள் ஒவ்வொரு புதரடியிலும் ஒளிந்திருக்கும். காடு தன்னுள் கரந்து வைத்திருப்பதை நாம் அறிகையில் அச்சத்தில் சொல்லிழந்து நிற்போம். நாம் கானகத்தை ஒரு பூங்கா என கற்பனை செய்திருந்தது எவ்வளவு தவறு என தெரியவரும்.
இதைப்போன்று ஒரு மனிதரை நாம் பார்க்கும்போது அவர் உள்ளம் கண்ணியம் நிறைந்ததாக, தெளிவான சிந்தனை கொண்டவராக, இனிய குணங்கள் கொண்டவராக தென்படுவார்.

 ஆனால் அவர் உள்ளத்தில் எழும் சிந்தனைகள் எல்லாம் நமக்கு தெரிய வந்தால் நாம் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாவோம். ஏன், இன்னொருவர் உள்ளத்தைப்பார்க்கவேண்டும். நம்முள்ளத்திலேயே எப்படியான சிந்தனைகள் எழுகின்றன என்று கவனித்து பார்ப்போமே. நாம் பகைகொண்ட ஒருவரைக் காண்கையில், நமக்கு தெரிந்தவர் நம்மைவிட பெரிதாக முன்னேறுகையில், ஒரு பெண் அழகென எதிரில் தோன்றுகையில், ஒருவேளையும் இல்லாமல் சோம்பி இருக்கையில், சாலையில் நம் பயணிக்கையில் ஒருவர் சற்றே இடர் தருகையில் எழும் கோபத்தில் எத்தகைய எண்ணங்கள் தோன்றுகின்றன என கவனித்து நினைவில் நிறுத்தி பின்னர் பார்த்தால் நாம் பெரும் அதிர்ச்சிக்குள்ளாவோம். நம் மனதில் எண்ணங்கள் அடர்ந்து எழுந்த வண்ணம் இருக்கின்றன. உள்ளம் எண்ணங்கள் அடர்ந்த காடு. அதில் நல்லெண்ணங்கள் எழுவதை விட பலமடங்கு தேவையற்ற எண்ணங்களும் தீய எண்ணங்களும்தான் அதிகம் தோன்றுகின்றன.


இப்படி பல எண்ணங்கள் நல்லவையாக மட்டுமல்லாமல் கெட்டவைளாக, தேவையற்றவைகளாக, அபத்தமானவைகளாக என தோன்றிக்கொண்டே இருந்தாலும் அதனால் நாம் அனைவரும் கெட்டவர்களாக ஆகிவிடுவதில்லை. எண்ணங்கள்தான் செயல்களாக உருமாறுகின்றன என்பது உண்மைதான். இருந்தாலும் நாம் தீய எண்ணங்களை வளர விடுவதில்லை. தேவையற்ற எண்ணங்களை களைகளெனக் கருதி நீக்கிக்கொண்டே இருக்கிறோம். சில எண்ணங்களை சிறிதளவுக்கு மேல் வளரவிடாமல் வெட்டி விடுகிறோம். இப்படி நம் உள்ளத்தை நன்கு பராமரிக்கப்பட்ட ஒரு பூங்காவைப்போல் வைத்திருக்கையில் நம் சொற்கள், செயல்கள், நமக்கும் மற்றவருக்கும் நன்மை அளிப்பவையாக இருக்கின்றன. ஒவ்வொருவரும் அவரவர்களுக்கு இயன்ற வகையில் தம் உள்ளத்தை பராமரிக் கின்றனர்.
மற்றொன்று, நாம் ஐம்புலன்கள் வழி அடையும் அனுபவங்கள் அனைத்தையும் எண்ணங்களாக ஆகி பின்னரே நினைவுகளாக சிந்தையில் சேகரிக்கப்படுகிறது. கற்பனையால் உருவாக்கப்பட்டவையும் உண்மை அனுபவங்களால் உருவாகியவையும் எண்ணங்களே. இவை சிந்தையில் சேகரிக்கப்படும்போது இது உண்மையானது இது வெறும் கற்பனை என்ற ஒரு எளிய குறியீடே இரண்டுக்குமான வேறுபாட்டை உருவாக்குகிறது. கனவில் நாம் எண்ணும் எண்ணங்கள் அனுபவம் என்ற குறியீட்டுடனே சேகரிக்கப்படுகின்றன. எனவே கனவு காணும் நிலையில் அவை உண்மை அனுபவங்களாக நமக்குத் தோன்றுகின்றன. பின்னர் நாம் விழித்தெழுந்ததும் அதன் குறியீட்டை வெறும் கற்பனை என மாற்றிக்கொள்கிறோம்.

எண்ணங்களை கட்டுப்படுத்தாமல் விடப்படும் மனம் என்ன ஆகும் என்பதை நம்மால் யூகிக்க முடியவில்லை. நம் பெருகி எழும் எண்ணங்களை கட்டுப்படுத்தி ஒரு ஒழுங்கில் வைத்திருக்கும் வேலையை நாம் ஓயாமல் செய்துகொண்டிருக்கிறோம். அதன் காரணமான மன அழுத்தம் எப்போதும் நமக்கு இருந்துகொண்டு இருக்கிறது. மது போன்ற போதைதரும் பொருட்கள் நம் உள்ளத்தில் நாம் கொண்டிருக்கும் இந்தக் கட்டுப்பாட்டை தளர்த்துகின்றன. அதன் காரணமாக நம் மனம் அழுத்தம் குறைக்கப்படுகிறது. அது நமக்கு ஒரு சுகமான உணர்வைத் தருகிறது. மதுவைவிட அதிக போதை தரும் பொருட்கள் இன்னும் அதிகமாக மனதை தளர்த்துகின்றன. மனதில் எண்ணங்கள் வெளிப்படுவதில் கொண்டிருக்கும் கட்டுப்பாடுகள் பெரிதளவு அப்போது குறைந்துபோகிறது. நாம் கற்பனையில் அடையும் அனுபவங்களுக்கும் உண்மை நிகழ்வுகளின் அனுபவங்களுக்குமான வேறுபடுத்தும் எல்லை தெளிவற்று போகிறது. அதீத போதையில் சில சமயம் அவ்வேறுபாடு முற்றிலும் இல்லாமல் போய்விடுகிறது. இதுவரை கட்டுப்படுத்தி வைக்கப்பட்டிருந்த நம்முடைய அடிமன ஆசைகள், அச்சங்கள், எதிர்பார்ப்புக்கள், எல்லாம் கட்டவிழ்ந்து பெருகி அதற்கான கற்பனைகளை உருவாக்கி அவற்றை உண்மையெனக் கண்டு வேறு உலகில் அதில் திளைக்கிறது. இப்படி மனதின் கட்டவிழ்ப்பு தரும் சுகத்தை அனுபவிக்கும் நம் சித்தம் சிறிதுகாலத்திலேயே அப்போதைக்கு அடிமைப்படுகிறது.


வெண்முரசு மனதின் இந்தக் கட்டவிழ்ப்பை கரவுக்காட்டின் சித்தரிப்பு வழியாக நமக்கு விரித்துரைக்கிறது. மதுவின் போதை, மரப்பூஞ்சனத்தின் வழி கிடைக்கும் போதை, அகிபீனா தரும் போதை என பலவித போதைகளால் கரவுக்காட்டில் மாந்தர்கள் தன் மனதை கட்டவிழித்துக்கொள்கிறார்கள். சுபாஷினி மதுவின் போதை, கஜன் மரப் பூசனத்திலிருந்து அடையப்பெற்ற நஸ்யம் , சம்பவன் மது, முக்தன் அகிபீனா ஆகியவற்றால் மன எழுச்சிகளை அடைகிறார்கள். அவர்கள் பார்வையில் கரவுக்காட்டின் நிகழ்வுகள் கூறப்படுகின்றன. ஆனால் அவர்கள் காண்பதையும் அனுபவிப்பதையும் அவர்கள் மனம் பெருக்கிக்கொள்கிறது, உருமாற்றிக்கொள்கிறது, அத்துடன் அவர்கள் அடிமன ஆசைகள், ஐயங்கள், அச்சங்கள் எதிர்பார்ப்புகளுக்கேற்ப தான் காண்பனவற்றையும் கற்பனைசெய்வதையும் சேர்த்து மாயநிகழ்வுகளை கண்டும் உணர்ந்தும் அனுபவிக்கிறார்கள். எது உண்மை எது கற்பனை என்ற எல்லைக்கொடு அழிந்துபோன நிலையில் அவர்கள் ஒரு மாய உலகை கற்பித்துக்கொள்கிறார்கள். அது உண்மைகளும் புனைவுகளும் உருவகங்களும் அடிமனதிலிருந்து எழும்பும் ஆசைகள் எல்லாம கலந்து உருவானது. மனதின் ஆழத்தில் புதைக்கப்பட்டு வெளிவராமால் அடக்கப்பட்டிருப்பதில் பெரும்பாலானவை காமஎண்ணங்களே. அவர்களின் மனம் கட்டவிழ்கையில் அவையே மேலெழும்பிவருவது இயல்பாக இருக்கிறது. கட்டவிழ்ந்த மனம் காட்டும் காட்சிகளில் போரும் புணர்வும் ஒன்றென ஆகின்றன, கூடுதலும் கொல்லுதலும் வேறுபாடிழக்கின்றன, பகைமையும் காமமும் ஒன்றிணைகின்றன. உடலிணைதலும் உடலழிவதும் சமமெனத் தெரிகின்றன. ஒரே உடற்கூட்டில் ஆண்மையும் பெண்மையும் மாறி மாறி வசிக்கின்றன. பிறப்பும் இறப்புமன்றி பின்வேறில்லை இவ்வுலகில் பெரிதென என்ற பித்தினுள் திளைக்கின்றது மனம்.
வெண்முரசில் கூறப்படும் இந்தக் கரவுக்காட்டின் நிகழ்வுகளுக்கு தத்துவ விளக்கங்களை நாம் பலவாறு கற்பித்துக்கொள்ளாலாம் என்ற போதிலும் தர்க்கத்துக்கு உட்பட்டு நான் இவ்வாறு பொருள் கொள்கிறேன்.

தண்டபாணி துரைவேல்