Tuesday, August 22, 2017

இந்திர நீலம்அனபுள்ள ஆசானுக்கு, \

நலம் தானே ? . இந்திர நீலம் வாசித்து முடித்தேன். மிக இனிமையான ஒரு கனவில் இருந்து மீண்ட அனுபவத்தை தந்தது ,கிருஷ்ணனின் உள்ளத்தில் அமர்ந்த எட்டு மனைவியரின் காதலை , காதலின் ஏக்கத்தை , துயரத்தை, காமத்தை , மிக ஆழமாக காட்டியது நாவல். நீலம் நாவலில் இருந்த கிருஷ்ணனை இது வளர்த்து எடுத்து அவனை அடுத்தக்கட்ட இறை ஆக்கி கதை வளர்வதாக எனக்கு தோன்றியது . நீலத்தில் இருந்து அவன் இந்திர நீலன் ஆகிறான் .

திருஷ்டத்யுமனனின் ஆழத்தில் அமைந்த கேள்வியில் தொடங்கிய அவன் ஆழத்திற்கே சென்றடையும் விடையில் முடிகிறது . அவனின் தேடல்கள் வழியாக கிருஷ்ணனின் மணங்களை சூதர் பாடல்களில் காட்டி செல்கிறீர்கள். அதன் மூலம் அவன் விடையை கண்டடைகிறான் . பின் சாத்யகிக்கும் அவனுக்கும் ஆன உறவு, நட்பை தாண்டி ஒரு இடத்தில் இது நிற்கிறது. இந்த நாவலின் மையத்தில் சியமந்தகமணியால் ஈர்க்ப்பட்ட கிருதவர்மனை திருஷ்டத்யுமனன் வஞ்சிக்கும் காட்சி மிக பெரும் ஒரு உச்சம் . " வெற்றி என்பது ஒரு உச்சம் என்றால் இந்த அவல நிலையும், கீழ்மையும் பிறிதொரு உச்சம்’’ என்று அவன் கூறி திருஷ்டத்யுமனனை எதன் பொருட்டும் வஞ்சிப்பேன் எந்த நெறியையும் அதன் பொருட்டு கடப்பேன் என்ற அவன் நிலை, இது பாரத போர் இறுதியில் அவனை அறம் மீறி கொல்லும் கனத்தில் முடிகிறது . இதை படிக்கும் கனம் துருபதனுக்கும் துரோணருக்கும் நடந்த வன்மன் , அம்பைக்கும் பீஷ்மருக்கும் நடந்த வன்மன் எல்லாம் உள்ளத்தில் எழுகிறது.

பின் சியமந்தகமணி மூலம் எண்மரும் மாறி மாறி ஆடும் ஆட்டம் மிக முக்கிய மானது. சியமந்தகமணியால் அக்ருரர், சாத்யகி , திருஷ்டத்யுமனன் , கிருதவர்மன் இவர்களின் வாழ்வில் ஏற்படும் மாற்றமும் நாவலை வளர்த்தெடுப்பதோடு , அவர்களின் ஆழத்தையும் அது காட்டுகிறது. மனித மனதின் ஆழக்களையும் , அவர்களின் எல்லைகள் , கீழ்மைகள் , உள்ளத்தின் விலைவுகள் எல்லா வற்றையும் திறம்பட காட்டி செல்கிறீர்கள்.
எட்டு மனைவியரையும் கிருஷ்ணன் மணம் புரியும் விதம் மிக அழகாக விவரித்து இருந்தீர்கள். சியமந்தகமணி வழியாக அவர்களிடம் நடத்தப்படும் பூசல் அந்த மணிக்காக இல்லாமல் அந்த மணிவழியாக கிருஷ்ணனின் இதயத்துக்கு அருகில் இருக்க முடியும் என்றே எல்லாரும் அந்த ஆடலில் பங்கு பெற்றார்கள் . அதில் காளந்தியே வென்றால் . அவள் அவனை அற்றி பிறிது எதையும் எண்ணாதவல் , யோகி யாகி அவனை அடைந்தவள்.
இதை பற்றி உங்களுக்கு எழுதும் போது தேவதேவன் அவர்களின் ஒரு காதல் கவிதை ஞாபகம் வருகிறது. ( நான் கவிதைகளில் இன்னும் அதிகம் வாசிப்பு இல்லாதவன் தவறு இருப்பின் மன்னிக்கவும் .)

"நான் உன்னை எவ்வளவு காதலிக்கிறேன் தெரியுமா?
உலகிலுள்ள எல்லாவற்றையும்விட
உன்னையே நான் அதிகம் காதலிக்கிறேன்’
’அப்படியானால் உன் பிரக்ஞையில் என்னோடுகூட
எல்லாப் பொருள்களும் இருக்கின்றனவே’
அவளுக்காய் எல்லாவற்றையும் விட்டுவிட்டு வந்தேன்
’நான் உன்னைக் காதலிப்பது மட்டுமே அறிவேன்’
’அப்படியானால் நல்லது, வா’
’……………………………………’
’வா. ஏன் அப்படியே நின்றுவிட்டாய்?’
’இல்லை. இப்பொழுது
என்னால் உன்பின் வரமுடியாது’
’ஏன்? அதற்குள் என்னாயிற்று உனக்கு?’
’இப்பொழுது
காதல் மட்டுமே என்னிடமுள்ளது.
வெறும் காதல்' " .

ஏனோ தெரியவில்லை இவ்வரிகள் நினைவில் எழுந்தன. மற்றவர்களை விட காளந்தி இப்படி தான் தனித்து நிற்கிறாள் என்று நான் புரிந்து கொள்கிறேன். அவள் பிரக்ஞையில் கிருஷ்ணன் அன்றி பிறிது எதுவும் இல்லை அதனால் தான் சியமந்தகம் வெறும் கல்லாக அவள் கையில் இருந்தது போலும் .

சிசுபாலனையும் , சுபத்திரையையும் நான் இது வரை படித்த கதைகள் வழியாகவும் , பார்த்த தொடர்கள் வழியாகவும் கட்டி எழுப்பிய சித்திரத்தை உடைத்து விட்டீர்கள். அவர்களின் ஆளுமையை புதிதாக பார்க்கிறேன் .

கிராதம் செம்பதிப்பு நேற்று முன் தினம் வந்து சேர்ந்தது , உங்கள் கையெழுத்துடன் . மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன். புது பொம்மையை கண்டடையும் குழந்தையுடைய துள்ளல் என்னிடம் இருந்தது . அடுத்து மாமலர் புத்தகத்திற்காக காத்திருக்கிறேன்.
இப்படிக்கு ,
பா.சுகதேவ் ,
மேட்டூர்.