Thursday, August 24, 2017

வெய்யோன் கிரகணம்

 
 
அன்புள்ள ஜெ

கிருஷ்ணன் பிறந்தநாளன்று நீலத்தை படித்ததாக சிலர் எழுதியிருந்தனர். இன்று அமெரிக்காவில் நல்ல சூரியகிரகணம் வரப்போகிறது. அதனால் வெய்யோன் பாராயணம் ஒன்றிரண்டு அத்தியாயங்கள் படிக்கலாம் என்று நினைத்தேன் !

வெய்யோன் பதிப்பு முன்னுரையில் பதிவில் நீங்கள் இதை ”பிறநாவல்களுக்கு மாறாக நுண்மையான அன்றாடத்தருணங்கள் நிறைந்த படைப்பு” என்றும் குறிப்பாக ”அர்ஜுனன் நாகர்குலக்குழவியை விட்டுவிடும் தருணமும் அதன் மறுபக்கமாக வரும் கர்ணன் அதை கையிலேந்தும் தருணமும் அந்த அன்றாடத்தருணங்களால்தான் ஒளிகொள்கின்றன” என்று சொல்லிவிட்டீர்கள்.

இதனால் இந்த நாவலின் கவித்துவமும் உருவகத்தன்மையும் முற்றிலும் கவனிக்கப்படாமலேயே போய்விட்டதோ, அந்த நாகர்குழவியை பல வாசகர்கள் லிட்டரலாக மட்டுமே எடுத்துக்கொண்டுவிட்டார்களோ என்ற சந்தேகம் வருகிறது.  (பதிவான வாசகர் கடிதங்களை வைத்து சொல்கிறேன்). வெய்யோனின் கிளைமாக்சிலும் அதன் மற்ற உச்சத்தருணங்களிலும் வரும் விவரிப்புகள் வேறு எந்த வெண்முரசு நாவலுக்கும் குறைந்தவை அல்ல. காண்டீபத்தையும் வெய்யோனையும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள் எனலாம்.

உதாரணத்திற்கு இந்த பகுதி. படகில் கர்ணன் முன்னிலையில் துரியோதனனும் ஜராசந்தனும் மல்யுத்தம் செய்கிறார்கள்.

<”இரு உடல்கள் மட்டும் அங்கிருந்தன. பிணைந்து ஒன்றாகி ஒற்றை தசைத்திரளாயின. ஒவ்வொரு தசையும் தன்னை இருப்பின் உச்சத்தில் உணர்ந்தது. நான் நான் என விதிர்த்தது. ஒவ்வொரு மயிர்க்காலும் உயிர்நிறைந்து நின்றது. குருதி அழுத்தி பிதுங்கிய விழிகள் நோக்கிழந்து சிலைத்தன. மூச்சு இருசீறல்களாக ஒலிக்க, கால்கள் தரையை உந்திப் பதிந்து நிலைக்க, அக்கணம் மறுகணம் அதுவே காலம் என்று நின்றது. இறைஞ்சும் குரலில் “போதும் மூத்தவரே! போதும்” என்றான் துச்சாதனன். “மூத்தவரே, போதும். தங்களால் மட்டுமே அவரை நிறுத்த முடியும்” என்றான் சுபாகு.

கர்ணன் இரு கைகளையும் இடையில் வைத்து பாதி மூடிய கண்களுடன் காத்து நின்றான். படகின் மறுமுனையில் பாய்த்தொகுதிக்கு அப்பால் இருந்து பறந்தெழுந்த வெண்பறவை ஒன்று ‘வாக்!’ என்று கத்தியபடி அவர்களின் தலைக்குமேல் பறந்து சென்றது.”>

ஒரு உக்கிரமான மல்யுத்தக்காட்சி. அதன் கடைசிவரியில் சட்டென்று வேறொரு தளத்திற்கு சென்றுவிடுகிறது. மீண்டும் முதலிலிருந்து இன்னொரு கோணத்தில் படிக்கச்செய்கிறது
 
.மதுசூதனன் சம்பத்

அன்புள்ள மது

ஒருவகையில் அது உண்மை. வாசிப்புக்கு ஒருவழிகாட்டல் இருந்தால் எல்லா வாசிப்புகளுமே அவ்வகையில் நடந்துவிடுகின்றன
ஜெ