Monday, November 11, 2019

நீர்ச்சுடர் - 43 இறப்பென்னும் அன்னைமடி




    திருதராஷ்டிரர் உலகின் பெருந்தந்தையருள் ஒருவர். இத்தனை பிள்ளைகளைக்கொண்ட வேறொரு மனிதர் உலகில் மிக அரிதாகவே இருந்திருப்பார்கள்.  அவர் பெற்றிருந்த இன்பம் பெரிது. ஒரு மனிதன் இப்புவியுலக வாழ்வில் பெரும் இன்பங்களில் பெரிதானதுதான் தந்தையென்றோ தாயென்றோ ஆகித் திளைக்கும் இன்பம். இது ஒன்றே ஒருவர்  தம் குருதியால் உணரும் இன்பம். மற்றபடி ஐம்புலன்களால் உணரும் இன்பமெல்லாம் மிகத் தற்காலிகமானவை. அகங்காரத்தினால் அகம்  அடையும்  செல்வம், புகழ், பதவி, போன்றவை அளிக்கும் இன்பங்கள்  பொருளற்றவைநிலையற்றவை ஐயத்திற்கு இடமானவை.  ஆனால் பிள்ளையின்பம் தான் உயிருடன்  இருக்கும் காலம்வரை மட்டுமல்லாது  தான் இறந்த பின்னும் நீடிக்கும் என்று உணரவைப்பது.  

பிள்ளைகள்  புகழிலும் திறனிலும்  உயர்ச்சிகொண்டவரானால் அந்த இன்பம் மேலும் கூடுமென்றாலும்,    பிள்ளைகளின் இருப்பொன்றே  போதுமான இன்பத்தை அளிக்கக் கூடியது.  ஒருவன் பிறந்து வாழும் உலகிற்கு அவன் ஆற்றவேண்டிய ஒரே உண்மையான கடன்  பிள்ளைகளைப்பெற்று வளர்த்து  வாரிசுத் தொடரை அறுபடாமல் இருக்கச் செய்வது.  இது ஒன்றே அவன் வாழ்வுக்கு பொருளளிப்பது. இப்படி பிள்ளைச்செல்வத்தை பெற இயலாமல் போனவர்கள்மக்களுக்கு இயற்கைக்கு தொண்டாற்றி தம் வாழ்வுக்கு பொருள் கண்டடைகிறார்கள். அல்லது உலகியல் இன்பங்களில் ஆழ்ந்து தன்னைத்தானே ஏமாற்றி  நிறைவின்றி வாழ்ந்து மறைகிறார்கள்.

           திருதராஷ்டிரர், அவன் மனைவியர்,   நூறு பிள்ளைகளால் அருளப்பெற்றவர்கள். நூறு மடங்கு இன்பத்தை அவர்கள் இது நாள் வரை அனுபவித்து வந்திருக்கின்றனர். அது இன்னும் ஆயிரம் மடங்கு பெயர் மைந்தர்களாகப் பெருகி இருந்தது.     இப்படி அவர்கள் அடைந்திருந்த பேரின்பம் குருஷேத்திரப் போரினால் அவர்களிடமிருந்து  மொத்தமாக பறிக்கப்பட்டிருக்கிறது.  அதனால் ஏற்பட்ட  கொடுந்துன்பத்தை அவர்கள் மனங்களில் மட்டுமல்ல  குருதியிலும்  உணர்கின்றனர்.   நூறு மடங்கு என பெருகி நிறைந்திருந்த வாழ்வு இப்போது வெற்று பாலைநிலமென  ஆகிவிட்டது.   தம் வாழ்வுக்கு நூறு பொருள் கொண்டு இருந்தவர், இப்போது வாழ்வதன்  பொருள் விளங்காமல் நிற்கிறார். 


பிள்ளைகளால் பெருகி இருந்த மகிழ்வுபோர் எழுவது உறுதியான பிறகு அச்சமென மாறியது. இப்போது அவர்கள அனைவரையும் மொத்தமாக இழந்தபிற்கு பெரும் துயரமென ஆகி நிற்கிறது.   துக்கத்தை வஞ்சமென மாற்றி மனதைக் காத்துக்கொள்ள அவர் பேருள்ளம் இடம் தரவில்லை.  இறைவனிடம் கதறி நியாயம் கேட்டு முறையிட அவர் அறத்தின் பக்கம் நின்றிருக்கவில்லை.  அவர் சினம் கொள்ள  வேண்டிய  பாண்டவர்களும் போரில் இழப்பினைச் சந்தித்து இருக்கிறார்கள்.   யாராவது ஒருவர் இவ்வளவுக்கும் நீ காரணமில்லையா என எப்போது வேண்டுமானாலும் கேட்டுவிடலாம் என்னும் நிலை.   அவர்களின் இறப்பை தவிர்ப்பதற்கான சந்தர்ப்பங்களை நாம் தவறவிட்டுவிட்டோமோ என்ற குற்றவுணர்வு அவரை மேலும் கடுந்துயருக்கு உள்ளாக்கி இருக்கும்.  இதைபோன்ற துயரிலிருந்து  ஒருவர் விடுபட   தம்மை வேறு உலகியல் கடமைகளில் மூழ்கடித்துக்கொள்ள வேண்டும்.  வாழ்வதற்கான ஏதாவது நோக்கத்தை கண்டுகொள்ளவேண்டும்.  அல்லது இருத்தல் என்பதையே வாழ்வின்  பொருள் எனக்கொண்டு  யோகியென இருக்கவெண்டும்.   இத்துயரிலிருந்து  தான் விடுபடுவதற்கான இதைப்போன்ற வாய்ப்பு தனக்கு ஏதாவது இருக்கிறதா என திருதராஷ்டிரர் விதுரரிடம் கேட்கிறார் 

இல்லை! ஓய்வு? ஓய்வென ஒன்று எனக்குண்டா? இனி என் உள்ளம் அமையும் தருணம் அமையுமா?” என்றார் திருதராஷ்டிரர். விதுரர் ஒன்றும் கூறவில்லை. இளையோனே, சொல்! என் நெஞ்சு ஆறுமா? துயர் மீண்டு ஒருநாளேனும் இனி நான் உயிருடன் இருப்பேனா?” என்றார்.   “சொல்! ஒருகணமேனும் இனி எனக்கு இயல்பு வாழ்க்கை உண்டா? இருத்தலில் இன்பத்தை இனி எப்போதேனும் நான் அறிவேனா?” என்றார்.    விதுரர் மெய் சொல்வதென்றால், இல்லைஎன்றார்.
 திருதராஷ்டிரருக்கு இருக்கும் ஒரே வழி தம் வாழ்வுக்கு புதிய பொருளைத் தேடிக்கொள்வது.  ஆனால் அவர் வாழ்வில் இப்போது ஒரே பொருளென இருப்பது அவர்களின்  பெருந்துயர் மட்டுமே.

 ஏனென்றால் துயரிலேயே உங்கள் இருத்தல் பொருள்கொள்கிறது. துயரின்மையில் நீங்கள் நின்றிருக்க நிலமே இல்லைஎன விதுரர் தொடர்ந்தார். இந்த ஊசலில் இருந்து இனி ஒருகணமும் வெளியேற இயலாது.பெருமூச்சுடன் ஆம்!என்று திருதராஷ்டிரர் கூறினார்.

 ஆனால் உலகில் எதுவும் நிரந்தரமானவை அல்ல. அனைத்தையும் காலம்  கரைத்து அழித்துவிடும்.  அவ்வாறே  துயரும் காலத்தினால் ஆற்றுப்படுத்தப்படும் அல்லவா என்று அவர் வினவுகிறார்.

திருதராஷ்டிரர் இளையோனே, மானுடர் அனைவரும் காலத்தில் ஒழுகிக்கொண்டிருப்பதாக சொல்கிறார்களே? ஆகவே இங்குள்ள எதையும் நம்மால் உறுதியாக பற்றிக்கொள்ள முடியாதென்றும் இங்குள்ள எதுவும் நிலையாக நம்முடன் இருக்கப்போவதில்லை என்றும் சொல்லப்பட்டுள்ளதேஎன்றார். ஒவ்வொன்றும் அகன்று செல்லும் இந்த வெளியில் நான் மட்டும் இங்கே இவ்வுணர்வு வெளியில் அசையாமல் நின்றிருப்பேனா என்ன?” விதுரர் ஆம், மூழ்கியவை இடம்பெயர்வதில்லைஎன்றார் விதுரர்.

துயரிலிருந்து வெளிவர ஏதாவது ஒரு பற்றினைப் பிடித்து மேலே வரவேண்டும் அப்படி பற்றிக்கொள்வதற்கு ஏதுமற்ற மனநிலையில்  திருதராஷ்டிரர் இருக்கிறார் என விதுரர் கூறுகிறார்.  ஆகவே காலம் அவர் துயரினை ஆற்றாது.  அவர் இறப்பு ஒன்றே அவரை விடுவிக்க முடியும் என்று விதுரர் மறைமுகமாக கூறுகிறார்.

இனி உங்களுக்கு காலம் என்பதும் இல்லை. இங்கு இவ்வண்ணமே இனி எப்போதும் இருப்பீர்கள்.திருதராஷ்டிரர் எப்போதும் என்றால்?” என்று கேட்டார். நெடுநாட்களா? இன்னும் எத்தனை நாட்கள்?”  விதுரர் அதை நான் எவ்வண்ணம் சொல்லமுடியும்?” என்றார்.

  ஆக அவர் எதிர்கொள்ளவிருக்கும் நாட்கள் எல்லாம் இனி பொருளற்றவையாகமன அமைதி இழந்தவையாகதுயர் நிறைந்தவையாக இருக்கப்போகின்றன.  தன்னை சிறைபைடித்து வைத்திருக்கும் இந்தப் பெருந்துயரிலிருந்து மீளும் நாள்தாம் இந்த உலகைத் துறக்கும் நாள் மட்டுமே என அவர் உறுதிகொள்கிறார். அந்நாளை கணிக்கும்படி சகதேவனைப் பணிக்கிறார்.  சகதேவன் இன்னும் ஒராண்டு கழித்து என்கிறான்.  தான் மீட்சியடைய இன்னும் ஒராண்டுதான் என்பது அவருக்கு மன ஆறுதலைத் தருகிறது.   சிறைபட்டு துயருற்று இருக்கும் ஒருவனுக்குக விரைவில்  விடுதலை என்ற செய்தி எப்படி இனிக்குமோ அப்படி திருதராஷ்டிரரை அது உவகைகொள்ள  வைக்கிறது. அம்மகிழ்வில் அவர் துணைவியரும் கலந்துகொள்கின்றனர்.

சகதேவன் காந்தாரியின் முகம் மலர்வதை பார்த்தான். அவளுக்குப் பின்னால் நின்றிருந்த இளைய அரசியர் அனைவரின் முகங்களும் மலர்ந்தன. அவர்கள் அடையும் உணர்வென்ன என்று அவனால் உணரமுடியவில்லை. அனைத்திலிருந்தும் விடுதலை பெற்றவர்கள்போல், இழந்த அனைத்தையும் மீளப் பெற்றவர்கள் போல் அவர்கள் உவகை கொண்டனர். ஒருவரை ஒருவர் கைகளை பற்றிக்கொண்டனர்.

   அன்னை மடி விட்டு எழுந்து பிள்ளைகள் விளையாட  ஓடுகின்றன.  கூடியும் களித்தும் போட்டியிட்டும் விளையாடுகின்றன.  பின்னர்  அவர்கள் களைத்துப் போகையில், ஏதோ ஒரு போட்டியில் தோற்று மனம் கலங்குகையில், அல்லது விழுந்து அடிபட்டு  வலிகொண்டதில்,   அழுது  ஓடி  அன்னையைத் தேடி வருகிறார்கள்.  அன்னை அவர்களை வாரி அணைத்து தம் மடியில் மீண்டும் இருத்திக்கொள்கிறாள்.   அச்சிறு பிள்ளைகள் வேறெங்கு ஆறுதல் அடைவார்கள்?

தண்டபாணி துரைவேல்