Monday, November 4, 2019

நீர்ச்சுடர் - கண்ணன் மீதான கடும்கோபம்

நீர்ச்சுடர் -  கண்ணன் மீதான கடும்கோபம்

     குருஷேத்திரப் போரின் பேரழிவுக்கு கிருஷ்ணனே பொறுப்பு என அஸ்தினாபுர அரசியர், மக்கள் கருதுகிறார்கள். உண்மையில் அவன் போரை நிறுத்துவதற்காக அனைத்து முயற்சிகளையும் செய்தான்.  மூன்று  முறை அஸ்தினாபுரத்திற்கு தூது வந்தான். அவை எதுவும் போலிப் பாவனையல்ல. அப்படி ஒரு போலியான செயலைச் செய்பவன் இல்லை கண்ணன். ஐந்து ஊர்கள் அல்லது ஐந்து குடில்களையாவது கொடு என்று இறங்கி விடுத்த வேண்டுகோளும் புறக்கணிக்கப்பட்டது. அதாவது துரியோதனன் பாண்டவர்களுக்கு இந்திரப்பிரஸ்தததையும் உள்ளடக்கிய அஸ்தினாபுர அரசில்  இம்மியளவும் உரிமையில்லை என்ற நிலையிலிருந்து சற்றும் இறங்கி வரவில்லை.    மேலும் கண்ணன்  எதிர்த் தரப்புக்கு ஆதரவாக போரில் நின்றாலும், ஒரு வீரனைக்கூட அவன் கையால் கொன்றதில்லை.  பீமன் அனைத்து கௌரவர்களையும் கொல்வேன் என்று சபதமிட்ட மற்றும்  திரௌபதி துச்சாதனன், துரியோதனன் குருதி பூசி குழல் முடிப்பேன் என்று சூளுரைத்த எந்த நிகழ்வுக்கும் அவன் பொறுப்பானவன் அல்ல. 

     பின்னர் ஏன் இந்த கடும் கோபம்? உயிரினும் மேலாக நினைத்து ஒரு தெய்வமாக வழிபடப்பட்டவனை, தம்  வீட்டு பிள்ளையென கருதப்பட்டு அனைவராலும் நேசிக்கப்பட்டவனை ஏன் அவர்கள் வெறுத்து அவன் மேல் தீச்சொல்லிடுகிறார்கள்?  துரியோதனனுக்கும் பாண்டவர்க்கும் இடையிலான போரில் ஏற்பட்ட பேரழிவுக்கு ஏன் அவனைப்  பொறுப்பாக்குகிறார்கள்?      கண்ணன் பூமியின்  பாரம் குறைக்க  வந்தவன் என்ற  புராணிகக் கதை அவர்களுக்கு ஒரு பொருட்டல்ல.   நாராயண வேதத்தை நிலைநிறுத்துவதென்பது இப்போரின் வெறும்  பக்க விளைவு.   பின்னர் ஏன் அவன் அவர்களின் சீற்றத்துக்கு ஆளாகிறான்  என நாம் சிந்திக்க வேண்டியிருக்கிறது.  

    கண்ணன், அவர்கள் நேசத்திற்குரியவன்.  தம்மை கிருஷ்ணனுக்கு அடைக்கலமெனக் கொண்டவர்கள் அவர்கள். அவர்களுக்கு நேரும் இன்ப துன்பமெல்லாம் அவனுக்கே சமர்ப்பிப்பவர்கள். அவன் குழந்தையாக இருக்கும்போதே பாலுடன் நஞ்சு கலந்து புகட்டி  குழந்தைகளைக் கொல்ல வந்த பூதகியைக் கொன்றவன், சீற்றம் கொண்டு இந்திரன் பொழிந்த பெரு மழையை ஒற்றை சுண்டு விரலில் தூக்கி நிறுத்திய மலையின் கீழ் மக்களைக்காத்தவன் என்பதை நினைவில்  கொண்டவர்கள்.  கொடுங்கோலன் கம்சனின் கொடும் ஆட்சியிலிருந்து மக்களை விடுவித்தவன். தமக்கென இருந்த  நாட்டை இழந்து தவித்த மக்களுக்கு துவாரகை என்ற நகரை உருவாக்கி வாழத் தந்தவன் என்ற வரலாறு  கொண்டவன்.  எளியவர்களுக்கான  தோழன்  அவன்,  அரசன் அவன், தெய்வம் அவன், அவன் எங்கிருந்தாலும் அருகிலிருப்பதாக உணரச் செய்பவன்.  அவன் இருக்கையில் நமக்கு எப்போதும் துன்பம் அண்டாதுஎன்றிருந்தவர்கள்.  அவர்கள் கணவர்களை, தம் பிள்ளைகளை அவனை நம்பியே போருக்கு அனுப்பினார்கள். ஏனென்றால் இப்போர்க்களத்தில் தங்களுடைய கண்ணன் இருக்கிறான்.  போர் யாருக்கும் யாருக்கும் இடையில் நடந்தாலும் கண்ணன் அவர்களைக் காப்பான் என்று கருத்தில் கொண்டிருந்தார்கள்.

      ஆனால்  கண்ணன் அவர்களை முற்றிலுமாக கைவிட்டுவிட்டான்.    இவ்வளவு நெருக்கமாக மனதில் கொண்டிருந்த அவன் இன்று வேற்று மனிதனாக ஆகி அவர்களுக்கு நேர்ந்த பெருந் துயரத்தை வெறும் சாட்சியாக மட்டும் காண்பவனாக   அவர்களை உதாசீனம் செய்துவிட்டான்.     அவனால் சாதிக்க முடியாதது என எதுவும் இல்லை என அவர்கள் உ றுதியாய் நம்பியவர்கள். அவன் இப்பேரழிவை  எவ்வித மனக்கலக்கமும்  இல்லாமல் அவன் கண் முன் நிகழ்வதை அனுமதித்து இருக்கிறான்.   அவன் இப்போரின் அழிவுகளை தடுக்கக்கூடிய ஒருவனாக கருதியிருக்கையில் அவன் ஒன்றுமே செய்யாமல் விட்டுவிட்டது, அவனே இந்த அழிவுகளை  நிகழ்த்தியதற்கு சமமானதாகும்.  கண்ணெதிரில் நீரில்  மூழ்கும் குழந்தையை காப்பாற்றாமல்  வேடிக்கை  பார்க்கும் ஒருவன் அந்தக் குழந்தையைக் கொன்றவனாக அல்லவா கருதப்படுவான்? 

    போரில் இரு தரப்பினரும் தம் திறனில் மற்றும்  தம்மைச் சார்ந்தவர் திறனில் அதீத நம்பிக்கை கொண்டிருந்ததால் இப்பேரழிவை எதிர்பார்க்காமல் விட்டிருந்தனர். கண்ணனுக்கு தெரியும் இப்படித்தான் இப்போர் நடந்து முடியும் என்று.   கண்ணன் நினைத்திருந்தால் இப்போரைத் தவிர்த்திருக்கலாம். அதற்கு ஒரே வழி பாண்டவர்களை காட்டிற்கு திரும்ப அனுப்புவது. அது அவனால் செயல்படுத்தக்கூடியதுதான்.  அப்படி நடந்திருந்தால் பாண்டவர்கள் மட்டும்தான் இழப்புக்கு உள்ளாகி இருப்பார்கள். அதில்  எவ்வித உயிரிழப்பும் இருக்காது.  ஒரு சிலரின் நன்மைக்காக, ஒரு சிலரின் வஞ்சத்தைத் தீர்த்துக்கொள்வதற்காக,  இப்பேரழிவு தேவையானதா  என்ற கேள்வி பொருளுடையதாகத்தான்  தெரிகிறது.    அவன் பாண்டவருக்கு துணை நின்றதால்தான், பாண்டவருக்கு போரிடும் துணிவு வந்தது. பாண்டவர் பெரும் படை ஒன்றை திரட்டமுடிந்தது.  போரில் பாண்டவர்கள் தம்  உறவினர்களை எதிர்ப்பதன் தயக்கத்தை அவனே போக்கினான்.   இப்போரை நடத்தத்தான் வேண்டுமா என்ற தயக்கம் தருமனுக்கு வரும்போதெல்லாம் கண்ணனின் அருகாமையே அதை தீர்த்து வைத்தது.  கண்ணன் இக்களத்தில் இல்லையென்றால் ஒன்று இப்போர் நிகழ்ந்திருக்காது. அல்லது போரின் துவக்கத்திலேயே பாண்டவர்கள் தம் குலப் பெரியவர்களை,  குருமார்களை எதிர்க்கத் துணியாமல் விரைவில் பின்வாங்கியிருப்பர்கள். தோற்றுப்போன பாண்டவர்களை கண்டு துரியோதனனின் அகந்தை நிறைவுற்று, ஒருவேளை அவர்களுக்கு இந்திரப்பிரஸ்தத்தை திருப்பிக்கூட தந்திருக்கலாம்.  அனேகமாக அனைத்து அஸ்தினாபுர வீரர்களும் வெற்றிவாகை சூடியவர்களாக  பெருமிதத்துடன் வீடு சேர்ந்து தம் குடும்பத்தினருடன் மகிழ்ந்து வாழ்ந்திருக்கலாம்.   இவை அனைத்தையும் நிகழவிடாமல் கெடுத்தவன் கண்ணன் என்பது உண்மையான கூற்றெனவே தெரிகிறது.    இப்படியிருக்கையில் அஸ்தினாபுர அரசியர், மக்கள் கண்ணனிடம் சீற்றம் கொள்வது இயல்பானதென்றே தோன்றுகிறது. 

தண்டபாணி துரைவேல்