Friday, November 1, 2019

பகுதி 3 வெண்முரசு - குருஷேத்திரப் போர் - தர்மனும் அறமும்.




8.  போர்க்களத்தில் தருமனின் தடுமாற்றங்கள்.

      தருமன் போர்க்களத்தில் சொல்பவை செய்பவை எதுவும் அவனுக்கு பெருமை சேர்ப்பதாக இல்லை  என்பதை அனைவரும் அறிவோம்.   தருமன் போர்க்களத்தில் திறனற்றவனாக, அறத்தில் தவறுபவனாக, பாசம் குறைந்தவனாக, பொறுமையற்று சிடுசிடுப்பவனாக தென்படுகிறான்.    போர் தருமன் பொருட்டு என்றே நடக்கிறது.  அதே நேரத்தில் இப்போர்க்களத்தில் இப்போரை விரும்பாத ஒரே மனிதன் அவன்தான்.  தன் நல்லெண்ணத்தால், மதி சூழ்கையால், தியாகத்தால் இவ்வளவு நாட்கள் இப்போரைத் தவிர்த்து வந்தவன் அவன்.  இப்போர் அவனை  மீறி நடக்கிறது. இப்போர் ஏற்படுத்தப்போகும்  அழிவுகளைப்பற்றி முன்னரே சிந்தித்து கவலைப்பட்டுக்கொண்டிருக்கிறான்.  எதிர் தரப்பில் இருக்கும் கர்ணன், பீஷ்மர், துரோணர், கிருபர், அஸ்வத்தாமன், துரியோதனன் போன்றவர்கள் அர்ச்சுனனுக்கும், பீமனுக்கும் சற்றும் குறைந்தவர்கள் இல்லை. படைப்பலம் அவர்களைவிட மிகக்குறைவு.  எந்தத் தர்க்கத்தின்படியும் தோற்கடிக்கமுடியாத படையை எதிர்கொண்டிருக்கிறான் தருமன்.  அவன் போரில் வெல்லுவான் என நம்பி அவனுடன் கூட்டு சேர்ந்திருக்கின்றனர் அவனுடன் இருக்கும் மன்னர்களும், வீரர்களும்.   அவர்கள் நலன்களுக்கெல்லாம் பொறுப்பேற்றுக்கொள்ளவேண்டியவன் அவன்.  இப்போரை நடத்தலாம் என அவனுக்கு நம்பிக்கை அளித்தவர்கள் அர்ச்சுனனும் பீமனும். அவர்களை நம்பியதைவிட கிருஷ்ணனின் மதி சூழ்கையை பெரிதாக நம்பியே தருமன் இப்போரை துவக்கியிருக்கிறான்.  ஆனால் போர் ஆரம்பித்த நாளிலிருந்தே பேரழிவு துவங்கிவிடுகிறது.  இதை தருமன் எதிர்பார்த்திருக்கவில்லை.   அவனுக்கு அர்ச்சுனன் மற்றும் பீமன் வெற்றியை தேடித்தருவார்களா என்ற ஐயம் தோன்றுகிறது.  அர்ச்சுனனும் பீமனும்  பெரும்பாலும் தற்காப்பு போரையே நடத்துகிறார்கள். அல்லது நெறி மீறி எதிரிகளை வீழ்த்துகிறார்கள். இவ்வாறுதான் போர் நடக்கும் என்று அவன் முன்னரே கணித்திருக்க மாட்டான். போரின் அழிவுகள், நெறி மீறல்கள், வெற்றி கிடைப்பதன் கடினம்அவன் மனதினை பாதிக்கிறது.  அர்ச்சுனன் மற்றும்  பீமன் ஆகியோரின் செயல்களோ சொற்களோ அவனுக்கு ஊக்கமளிப்பதாக இல்லை. கிருஷ்ணன் தன் மனதில் என்ன எண்ணுகிறான் என்ன திட்டம் வைத்திருக்கிறான் என்று எதுவும் தெரிவதில்லை.  இது தருமரின் சமநிலையை குலைக்கிறது அது அவர் சொற்களில் செயல்களில் தடுமாற்றத்தை விளைவிக்கிறது.
   

      ஆனால் துரியோதனன் அப்படியல்ல. அவன் சமநிலை குலைவது அரிதாக சில பேரிழப்புகளில் மட்டும்தான். அவன் குறைவாக பேசுகிறான். அவன் பேசாமலேயே அவன் துணைவர் தம்பியர் அவன் எண்ணத்தை புரிந்துகொண்டு அதற்கேற்ப நடந்துகொள்கிறார்கள்.   அவன்  சகோதரர்கள் அவனிடம் மாறுபட்டோ கடிந்தோ  இப்படி ஒரு வார்த்தை பேசியதில்லை. மனதில் கூட எண்ணுவது இல்லை.  அவர்கள் தாங்களாகவே தமக்கு அந்த உரிமையோ தகுதியோ இல்லை எனக் கொண்டவர்கள். விதி விலக்காக குண்டாசி விகர்ணன் போன்ற ஓரிருவர் மட்டுமே இருக்கின்றனர். தமக்கென தனி சிந்தனையென ஒன்றில்லாமல் தன் தமையன் சிந்திப்பதையே தன் சிந்தனை என்று ஆதியிலிருந்தே கொண்டிருப்பவர்கள்.   அதனால் அவர்கள் இறுதிவரை துரியோதனனை கைவிடாமல் இருப்பது வியப்பான ஒன்றல்ல. அத்தகையோரை துரியோதனன் பாசம் காட்டுவது இயல்பானதென ஆகிவிடுகிறது. 

          ஒன்றைப்பற்றி நம் மனதில் தோன்றும்  எண்ணத்தை நாம் அப்படியே சொல்லிவிடுவதில்லை.   நன்மை தீமைகளை சிந்தித்து சொல்வதா வேண்டாமா  என  முடிவு செய்து பின்னர் போதிய அணிகளை அணிவித்து நாம் சொற்களை வெளிவிடுகிறோம். ஆனால் நாம் கோபத்திலோ துயரத்திலோபெருங்குழப்பத்திலோ  மனம் கலங்கி இருக்கும்போது நாம்  எண்ணுபவை இத்தகைய எந்த வடிகட்டிகளின்  வழியே செல்லாமல்  அப்படியே வெளிவந்துவிடுவது நிகழ்ந்துவிடும்.    குருஷேத்ர போர்க்களத்தில்  தோல்விகளும் இழப்புகளும் அவமானங்களும் தொடர்ந்து அனைவரின் மனதை அலைகழித்துக்கொண்டே இருக்கின்றன.  ஆகவே ஒவ்வொரு வார்த்தையும் எழுத்தெண்ணி பேசுபவர்கள் எல்லாம்   இச்சமயத்தில் அவர்கள்  மனக்கலக்கத்தினால் தோன்றும் வார்த்தைகளை அப்படியே வெளியில் இறைத்து விடுகின்றனர்.அதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.  ஒருவன் மனதில் எண்ணுபவை, அவன் சொல்பவை  போன்றவற்றைவிட அவன் செய்பவையே அவனை சித்தரிக்கின்றன.  பீமனும் அர்ச்சுனனனும் சில சமயம் தருமனிடம் கசப்பான வார்த்தைகளைப் பேசினாலும்  அவனை அவர்கள் கைவிட்டுவிடுவதில்லை.  அதனால் போர்க்களத்தில் தருமனின் சொற்கள் தடுமாற்றங்கள், மற்றும் அவன் தம்பியர் அவனைக் கடிந்துகொள்ளுதல் எவற்றையும்  கடும் அழுத்தத்தில் வந்த வெளிப்பாடுகள் என்று மட்டுமே கருதி அவற்றின் பாதிப்பு அந்த நேரத்தோடு முடிந்துவிடுகிறது என்று நான் மனதில் கொள்கிறேன். ஆனால் தர்மனின் தம்பியர் நால்வரும் தமக்கான தனிச் சிந்தனைதனித் தேடல்கள் கொண்டவர்கள். ஒவ்வொருவரும் தமக்கான பேராளுமையைக் கொண்டிருப்பவர்கள். தனித் திறன்களைக் கொண்டிருப்பவர்கள்.  அவர்கள் தருமன் மேல் கொண்டிருக்கும் அன்பு வெறும் அண்ணன் என்பதற்காக  மட்டுமல்ல.  தருமனின் பண்பினால் அறத்தினால் அவனை தலைவனெனக் கொண்டவர்கள். அதே நேரத்தில் தருமனின் செயல் தமக்கு சரியெனப் படவில்லையெனில் அதை கேட்கும் குணமும் உரிமையும்  கொண்டவர்கள்.  அவர்கள் தருமனை எப்போதும் மனதில் உயரத்தில் வைத்திருப்பவர்கள். இதன்படிப் பார்த்தால் பான்டவர்களின் சகோதரப் பாசமே பொருள் மிகுந்ததாகப்படுகிறது.            


9. போர்க்களத்தில் பாண்டவர்களின் நெறி மீறல்    

   
      துரியோதனன் தரப்பில் பெரு வீரர்கள்  அனைவரும் போர் நெறிகளை மீறியே பாண்டவர்களால் கொல்லப்படுகின்றனர். அதை யாராலும் மறுக்க முடியாது.  ஆனால் இந்த நெறிமீறல்கள் இல்லையென்றால் பாண்டவர்கள் தோற்று  அழிந்து போய் இருப்பார்கள். அப்படி நேறி மீறலை செய்து ஒர் போர் வெற்றியைப் பெறுதல் எந்த விதத்தில் சரியாகும்.  துரியோதனன் போரில் தன் நண்பர்கள் சகோதரர்கள், பிள்ளைகள் என அனைவரைம் இழந்தான் என்றால் பாண்டவர்கள் இவற்றுடன் தாம் கொண்டிருந்த சொல்லறம்வில்லறம், மற்ற போர் அறங்கள் அனைத்தையும் இழந்திருக்கிறார்கள்.  பாண்டவர்கள் இப்போர் வெற்றிக்கு அளித்த அரவானின் பலியைப்போன்றதே இவையும். இப்படி ஒரு வெற்றி பெற்றிருக்க வேண்டுமா என்பதற்கான பதிலை பின்னர் சிந்திக்கலாம்.     அதற்கு முன் இந்தப் பெருவீரர்கள் இப்படி வீழ்த்தப்பட்டது அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியா என காண்போம்.
   
பீஷ்மர் சிறப்பாக போர் புரிந்தார். ஆனால் அவர் எதற்காக போர் புரிந்தார். அவர் தருமனுக்கு நாட்டை திரும்பியளிக்க தேவையில்லை என நினைத்தாரா? பாண்டவர்கள் ஷத்திரியர் இல்லை என ஒத்துக்கொள்கிறாரா? பாண்டவர் பாண்டுவின் பிள்ளைகளாக மாட்டார்கள் என்ற கருத்துடையவரா? அல்லது திரௌபதி அவையில் அவமதிக்கப்படது சரியெனக் கொள்பவரா? இவை அனைத்துக்கும் மாறான கருத்துடையவர் அவர்.  தன்னிச்சைப்படி முடிவெடுக்கும் சுதந்திரம் அவருக்கிருந்தால அவர் பாண்டவர் தரப்பில் இருந்து போரிட்டிருப்பார். ஆனால் அவர் தன்னை அஸ்தினாபுரத்தின் அரியணைக்கு அடிமைப்படுத்திக்கொண்டவர். திருதராஷ்டிரன் மேல் கொண்ட  பாசத்திற்கும் , அவனுக்கு தான் மனதளவில் அளித்த வாக்குறுத்திக்கும் கட்டுண்டவர்.     பாண்டவருக்கு எதிராக விடும் ஒவ்வொரு அம்பும் அவர் உள்ளத்தை கிழித்துக்கொண்டே அவரிடமிருந்து சென்றிருக்கும்.  பாண்டவர் படையினர்மீது  எய்யப்பட்ட அம்புகள் அவை தைத்தவர்களைவிட பீஷ்மருக்கே அதிக வலியைத் தந்திருக்கும்.    அந்த வேதனையில் இருந்து அவருக்கு மீட்சி யளித்தது அவரின் வீழ்ச்சி என்று நாம் உறுதியாகக் கூற முடியும். தாம் எப்போது வீழ்த்தப்படுவோம் என்று அவர் எதிர்பார்த்துக் கொண்டிருந்திருப்பார். சிகண்டியை காரணம் காட்டி அவர் சுயபலி செய்துகொண்டார் என்றுதான் நான் சொல்லுவேன். 

     துரோணருக்கும் பீஷ்மரை போன்ற கருத்தைக்கொண்டவர் என்பது நமக்குத் தெரியும். அவர் துரியோதனனுடன் இருப்பதற்கு கூடுதல் காரணம்  அவன் மகன்மேல் கொண்ட பாசமும் ஆகும். சாதாரண போர் வீரர்களையெல்லாம் தம் தெய்வீக  அம்புகளால்  எரித்தழித்தவர் அவர். இது எவ்வகையில் போர் அறமாகும் என்று தெரியவில்லை.  அதிசக்திகொண்ட அம்புகள் பேரழிவுக்கான தடுப்பு நடவடிக்கைக்காகத்தான் செலுத்தப்பட வேண்டும். ஆனால் சாதாரண போர் வீரர்களை ஒட்டுமொத்தமாக எரித்தழிக்கும் அம்புகளை முதலில் அவர்தான் பயன்படுத்துகிறார். பின்னர் கர்ணன் அஸ்வத்தாமன் ஆகியோரும் இவ்வாறு தெய்வீக அம்புகளைச் செலுத்துகிறார்கள்.  எந்தப்  பேரறம் அழியக்கூடாது என்று இந்த அம்புகளை அவர் செலுத்தினார்தம் தரப்பு வெற்றியடையவேண்டும் என்று, அதனால் துரியோதனன் மகிழவேண்டும் என்று, தன் நன்றிக்கடன் தீர வேண்டும் என்று தம் மகனுக்கு மதிப்பு கிட்ட வேண்டும் என்று சுயலாபத்திற்காக இத்தகைய பேரழிவை ஏற்படுத்துபவர் எவ்வித அறத்தின்படியும் தவறிழைத்தவராகவே நான் கருதுகிறேன். அத்தகைய அவர் எப்படியாவது வீழ்த்தப்படுதல் தேவையான ஒன்று.  ஆனால் அவரை கொன்ற  முறை முற்றிலும் அற மீறல்தான்.  அவரைக் கொல்வதில் தருமன் சொல்லறத்தையும் அர்ச்சுனன் வில்லறத்தையும்  திருஷ்டத்துய்மன் மனித அறத்தையும் மீறுகிறார்கள். இது துரோணரின்  வில் வல்லமைக்கு புகழ் சேர்க்கும். ஆனாலும்  அவர் வீழ்த்தப்படவேண்டியவர் என்பது  தவறாகிவிடாது.   

         துரியோதனனின் தம்பியர் பீமனின் எளிய இலக்குக்கு ஆளாகக்கூடியவர்கள். அவர்களை பீமன் முன் கொண்டு நிறுத்திய துரியோதனனைத்தான் நாம் முதலில் தவறிழைத்தவனாகச் சொல்ல வேண்டும். பீமன் அவர்களைத் தன் சொந்த சகோதரர்கள் எனப் பாவித்தவன்.  அவர்களைக் கொல்வதாக சூளுரைத்திருக்கிறான் என்ற போதிலும்  அதற்கான வஞ்சம் எதுவும் அவன் மனதில் இல்லை.  வஞ்சமும் கோபமும் இல்லாமல் அதற்கு மாறாக தம் நேசத்துக்குரியவரை  கொல்ல நேருதல் அதுவும் கையால் அடித்து கொல்வது என்பது அவனுக்கு அளிக்கப்பட்ட தண்டனை.  ஒருநாளாவது இத்தனை தம்பியரைக்கொன்றேன்  என அவனால் பெருமிதப்பட்டுக்கொள்ள முடியுமாஇப்போரில் தம்மை ஒரு கொல்லும் இயந்திரமாக ஆக்கிக்கொள்கிறான்.   நான் மனிதனில்லை மிருகம் என்று காண்பித்துக்கொள்கிறான். துச்சாதனன் குருதியை அள்ளிப்பருகுகிறான். இது அவன் தன்னைத்தானே தண்டித்துக்கொள்கிறான்  என்று நாம் கருதவைக்கிறது.
   

அர்ச்சுனன் முற்றிலும் தன் வில்லறத்தை துறந்தே கர்ணனைக் கொல்கிறான்.  வெண்முரசு வாசகர்களின் பேரன்பைப் பெற்றவன் கர்ணன். அவன் கொல்லப்படுதல்  இப்படி நெறி மீறலால்தான் என்பது அவனுக்கு பெருமை சேர்ப்பதுதான்.    இதைப்போன்றே துரியோதனனும் நெறி மீறல் வழியாக கொல்லப்படுகிறான். இவர்கள்  கொல்லப்படவேண்டியவர்களா  என்பது மற்றொரு கேள்வி. ஆனால் இப்படி இவர்களை  வீழ்த்தியது போர் அறத்தை மீறியதுதான்.  தருமன் சொல்லறத்தை  அர்ச்சுனன் வில்லறத்தை, பீமன் கதைப்போரின் அறத்தை, நகுலன் சகாதேவன் தம் அறங்களை மீறி இருக்கிறார்கள்.  இதற்காக அவர்கள் அறத்தின்வழி நடக்கவில்லை என ஆவார்களா  என்பதை நாம் பின்னர் காண்போம்.

தண்டபாணி துரைவேல்