12. தருமர் இந்தப் பேரழிவுப் போரால் என்ன பலனை அடைந்தார்? கிருஷ்ணன் ஏன் இந்த போரை முன்னின்று நடத்தினான்?
தருமர் இந்தப் போரில் ஆர்வமற்று இருந்தார்.
திருதராஷ்டிரர் நாடு கோராதே திரும்பி வனம் செல் என்றவுடன் சரியெனச் சொன்னவர்.
திரௌபதைகூட தன் வஞ்சம் மறந்து இருக்கிறாள். போர் தவிர்க்கமுடியாது என்ற போதுதான்
அவள் தம் வஞ்சத்தை மீட்டெடுத்துக்கொள்கிறாள். பீமனும் அர்ச்சுனனும் அப்படியே. தருமர் போரின் அழிவுகளை எதிர்பார்த்தே இருக்கிறார். போருக்கு அணிவகுத்து
இளமைந்தர்கள் வருவதைக்கண்டு மனங்கலங்குகிறார். மேலும் பாண்டவர்களுக்கு
போரின் வெற்றி அவ்வளவு எளிதல்ல என்பது அறிந்திருப்பார்கள். துரியோதனன்
அமைத்திருந்த படைக்கூட்டு பல மடங்கு இவர்களுடையதைவிட பெரியது. இவர்களுக்கு ஈடான போர்த்திறன் வாய்ந்த பல
பெரு வீரர்கள் எதிர்ப்பக்கம் இருக்கிறார்கள். போரில் வெற்றி என்பது மிகவும்
அரிதானது என்று தெரிந்த பின்னும் ஏன் போரில் இறங்கினார்கள் ? தருமர் தன் நாட்டின் மீது
கொண்டிருந்த உரிமையை தியாகம் செய்திருந்தால் இப்பேரழிவு தடுக்கப்பட்டிருக்கலாம்
அல்லவா? அனைத்து மைந்தர்களையும் இழந்து தருமர் வெற்றி பெற வேண்டியது தேவைதானா என்ற
வினா எழுகிறது. பின்னர் ஏன் பாண்டவர்கள் போரைத் தவிர்க்கவில்லை. தம் வஞ்சத்தை
போக்கிக்கொண்டு நாட்டின்மீது தாம்கொண்டிருந்த உரிமையை விட்டுத்தந்து
கானேகியிருந்தால் இந்தப் பேரழிவு தவிர்க்கப்பட்டிருக்கும் அல்லவா?
பேரறம்
மனிதன் தன்னை மற்ற விலங்குகளிலிருந்து தன்னை
வேறுபடுத்திக்கொண்டவன். அந்த வேறுபாடு எதனால் எனப் பார்க்க வேண்டும். மனிதன்
கோட்டைகளைக் கட்டுகிறான். ஆனால் சிதல்கள் கட்டும் கோட்டைகளுக்கு முன் மனிதனின் கோட்டைகள் சிறியவை. மனிதன் பல்வேறு திறன்களை வளர்த்துக்கொண்டவன். ஆனால்
உலகின் ஒவ்வொரு உயிரும் ஏதாவது திறனில் மனிதனை விட மேன்மை கொண்டிருக்கிறது. மனிதன் கூட்டாக சமுதாயமாக வாழ்பவன். ஆனால் தேனீக்கள் போன்றவை இதை விட சிறந்த
சமுதாய கட்டமைப்பைக் கொண்டவை.
ஆகவே மனிதன் எந்த வகையில் மற்ற உயிர்களிடமிருந்து
வேறுபடுகிறான்?
உலகின் அனைத்து உயிர்களுக்கும், தன் உயிரைப் பேணுதலும் தன் சந்ததி தன்னால் தடைபடாமல் தொடர வைப்பதுமான இரு
அடிப்படைக் கடமைகள் உள்ளன. விலங்குகளின் அனைத்து செயல்களும் அதன் பொருட்டே நடை பெறுகின்றன. அந்த செய்கைகளுக்கான உந்துதல்களை தம் குருதியில் இருந்தே அவை பெறுகின்றன. அதன் காரணமாக அவை செய்யும் செயல்களுக்கு பாவ புண்ணிய கணக்கு கிடையாது. அதாவது
அந்தச் செய்கைகளை நன்மை தீமை என எடைபோட்டு கணக்கிடுவது பொருளற்றது. ஆகவே பொதுவாக உயிர்களுக்கு அறம் என எதுவும் இல்லை.
மனிதன் தனக்குத்தானே கற்பித்துக்கொண்ட அறம் ஒன்று
இருக்கிறது. அதுவே அவனை விலங்குகளிலிருந்து உயர்த்துகிறது. மனிதன் மற்ற
விலங்கினங்களைவிட அதிக அளவில் அறிவில் கலைகளில் முன்னேற்றம் கண்டிருப்பதற்கு
காரணமாக விளங்குவது அந்த அறமேயாகும். அது தன்னுடைய நலனுக்காக மற்றொரு மனிதனின் நலத்திற்கு
தீங்கு விளைவிக்காமல் இருப்பது.
இந்த அறத்தை கைக்கொண்ட பின்னரே மனிதன் தன்
குருதியுறவைத் தவிர்த்து மற்ற மனிதர்களுடன் கூடி வாழ வழி வகுத்தது. விலங்குகள்
தாம் உயிர் காப்புக்காகவென, இரை தேடி வேட்டையாடுவதற்கென சில எண்ணிக்கைகளில் கூடி வாழ்வதுண்டு, என்ற போதும் அவை உணவுக்காக இருப்பிடத்திற்காக, அல்லது இணை சேர்வதற்கான போட்டிக்காகவென ஒன்றுக்கொன்று தீங்கு செய்யத்
தயங்குவதில்லை. ஆனால் மனிதன்
இந்த அறத்தைக் கைக்கொண்டிருப்பதால்தான் அவன் குழுவாக இனமாக, ஒரு நாட்டின் குடிமக்களாக
சேர்ந்து வாழ இயல்கிறது. இப்படி மனிதன் கூடி வாழ்வதால்தான். அவனால்
தம் அறிவை தலைமுறை தலைமுறையாக பெருக்கிக்கொள்ள முடிகிறது. மனிதன் பெருங் கோயில்களை
கோட்டைகளை கட்டுவதிலிருந்து விண்ணில் பாய்ந்து நிலவை தொடுவது போன்ற அனைத்து
பெருஞ்செயல்களுக்கும் காரணமாக இருப்பது தன் நலன்பொருட்டு பிறர்க்கின்னாமை
செய்யதிருக்கும் அந்த அறத்தைக் கைக்கொண்டிருப்பதால் தான். இந்த அறத்தை சிலர் ஒரு வட்டத்துக்குள் பயன்படுத்துவார்கள் இந்த வட்டத்துக்கு
வெளியே இருக்கும் நபருக்கு தீங்கு விளைவிக்க தயங்காதவர்கள் இருப்பார்கள். ஆனால்
இந்த வட்டத்தை விரித்து விரித்து அதிகரித்துக்கொள்பவர்கள் இதை பேரறமாக ஆக்கிக்கொள்கிறார்கள்.
இந்த அறத்தை அடிப்படையாகக்கொண்டே மற்ற அனைத்து
அறங்களும் உருவாக்கப்படுகின்றன.
ஒருவனின் நலமோடு இருப்பது மற்றவர்களால் பாதிக்கப்படுவது அடிக்கடி நிகழ்கிறது. நம் நலனுக்காக நாம்
அறிந்தோ அறியாமலோ மற்றவருக்கு தீங்கு விளைவிக்காமல் இருப்பதற்கு பலவிதமான நெறிகளை ஒரு சமூகம் தமக்குத்தானே விதித்துக்கொள்கிறது. இந்நெறிகளைப்
பேணுவது பல்வேறு அறங்களென ஆகின்றன. ஒரு சமூகம் வளர்ந்து பெருகி அதில் பல்வேறு
தொழில்கள் தோன்றி வளர்ந்து அதை தம் நலனுக்காக பயன்படுத்திக்கொள்ளும்போது அது
மற்றவர் நலனை பாதிக்காமல் இருப்பதற்கு மேலும் மேலும் நெறிகள் பிறந்த வண்ணம் இருக்கின்றன. இந்த நெறிகளைப் பேணுவது பல்வேறு அறங்களென ஆகி சமூகத்தில் நிறைந்துள்ளது.
ஒரு அறத்தைப் பேணுவது மற்றொரு அறத்தை மீறுவதாக இருக்கும் முரண்கள் பலசமயம் அதிகம் எழுகின்றன. அப்போது மனிதன் என்ன செய்ய வேண்டும் எனக் குழப்பம்
அடைகிறான். அந்நேரத்தில் எது மனித குலத்தின் முன்னேற்றத்துக்கு உறுதுணை செய்யமோ அந்த அறத்தை பின்பற்றி, எது அதற்கு தடையாக இருக்கிறதோ அந்த அறத்தை கைவிடுதலே சரியானது. தன் சுயநலம் பொருட்டு, தனக்கு துன்பம் செய்யாத ஒருவருக்கு தீங்கு செய்தல் எந்தவகையிலும் அறத்தை மீறியததாகும். வேறொருவர் செய்யும் அத்தகைய செயலுக்கு ஆதரவு அளிப்பதும், அவ்வாறு நிகழ்த்தப்படும் அச்செயலை தடுக்காமல் இருப்பதும் அறமீறல்களாகவே
கருத்தப்படும். அறத்தை காப்பது என்பது உலகில் அனைவருக்கும் கூட்டுபொறுப்பு இருக்கிறது.
தனிப்பட்ட ஒருவனுக்கு இழைக்கப்படும் தீங்கு பொது மனித சமுதாயத்திற்கு
இழைக்கப்படும் தீங்கு என்றே கருத்தப்படும். இப்படி ஒரு தீங்கு நிகழாமல் தடுக்கும் பொறுப்பு மனித
சமூகத்தின் ஒவ்வொரு உறுப்பினருக்கும் இருக்கிறது. ஒருவருக்கு இப்படி தீங்கு இழைத்தவருக்கு எதிராக
எழுதல் ஒவ்வொரு மனிதனின் அறமாகும். இப்படி ஒரு அநீதி எதிர்க்கப்பட்டு
வெற்றிகொள்ளப்படுதல் உலக வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்டு எப்போதும்
நினைவில் அழியாமல் நிறுத்தப்படுகிறது.
இராகவ இராமனின் மனைவி சீதை இராவணனால் கடத்தப்பட்டு
இலங்கையில் சிறை வைக்கப்படுவது அந்த இருவருக்கு மட்டுமே நிகழ்ந்த தீங்கு. ஆனால்
அதன் காரணமாக ஒரு பெரும் போர் நிகழ்ந்தது. கடத்திச்சென்ற இராவணன் கொல்லப்பட்டான்.
அவனுடன் பல வீரரர்கள் கொல்லப்பட்டனர். அதில் கும்பகர்ணன் போன்ற நல்ல மனம்
கொண்டவர்களும் இருந்தனர். அது காவியம் என்று புகழப்படுகிறது. ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக அக்கதை மக்களால்
வாசிக்கப்படுகிறது. அதற்கு காரணம் இராமன் வெற்றியடைந்தான் என்பதால் அல்ல. அங்கு
அறம் வெற்றி பெற்றது என்பதால். அது மனித குலத்தின் வெற்றி. அந்த அறத்தின் வெற்றியின் நாயகன் இராமன் என்பதாலேயே அவன் கடவுளாக உயர்த்தப்பட்டான்
என ஒருவர் கூறினால் அதை நான் ஐயமின்றி ஏற்றுக்கொள்வேன்.
அநீதிக்கு எதிராக எழுந்து அதை வெல்வதே அறம். அதற்கு இடையூறாக ஆகும் மற்ற எந்த அறத்தையும் ஒருவன் மீறுதல் தவறென ஆகாது. சுக்ரீவன் மனைவியை வாலி
கவர்ந்தது அநீதி. அவனை இராமன் மறைந்திருந்து கொன்றான். அது இராமன்
கொண்டிருந்த வில்லறத்திற்கு மாறானது. வில்லறத்தைக் காப்பதற்காக வாலி
தண்டிக்கப்படாமல் போயிருந்தால் அது மனித அறத்திற்கு மாறானதாகும். பேரறத்திற்காக
மற்ற அறங்களை துறக்க நேரிடுதல் அந்தப் பேரறத்திற்கு நாம் தரும் காணிக்கை என்றே
கொள்ளவேண்டும்.
பாண்டவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டது. இது இரு பகை மன்னர்களுக்கிடையிலான நாட்டுப் பிரச்சினையல்ல. ஒரு குடும்பத்தைச்
சேர்ந்த சகோதரர்களில் ஒருவனான துரியோதனன் மற்றொரு சகோதரனான தருமனை வஞ்சித்து அவன் நாட்டை கவர்ந்தது மற்றும் அவன் மனைவியை அவை நடுவே ஆடை களையச்சொல்லி அவமதித்தது
பெரும் அநீதி. இதை வெறும் பாண்டவருக்கு நேர்ந்த அநீதி என்றாலும் இது மனித சமூகத்திற்கு நிகழ்ந்த அநீதியாகவும் கருதவேண்டும். இந்த அநீதிக்கு
துரியோதனனை, அவனுக்கு துணையென வருபவரைத் தண்டித்தல் சமூகத்திற்கு ஆற்றவேண்டிய அறம். இப்போது துரியோதனனை தருமர் மன்னித்துவிட்டால், அல்லது போருக்கு இணங்காமல் போயிருந்தால் அது அறத்துக்கு மாறானதாகும். அவரோ, மற்ற பாண்டவர்களோ, துரியோதனன், அவனுக்கு துணை நின்ற பீஷ்மர், துரோணர், கர்ணன் முதலியவர்களை வில்லறம், சொல்லறம் போர் அறமென எதையாவது காரணம் காட்டி அவர்களைக்
கொல்லாமல் அவர்களிடமிருந்து தோல்வியுற்று இருந்தால் தம் வெற்று அகங்காரத்திற்காக பேரறத்தை மீறினார்கள்
என்றே பொருள்கொள்ளப்படும். பாண்டவர்கள் அதை தம்முடைய போர் எனக்
கருதுவதால்தான் அவர்கள் மனக்கலக்கத்திற்கு ஆளானார்கள். கிருஷ்ணன் இது பாண்டவர்களுக்கான போர் எனக் கருதவில்லை. இது பேரறத்தை காப்பதற்கான போர் என்று கொள்வதனால்தான் கௌரவர்களை எப்படி வெற்றிபெற்றாலும்
சரியே என்ற நிலையை எடுக்கிறான்.
ஆம் பாண்டவர்கள் பல
நேரங்களில் போர் நெறிகளை மீறியே இவ்வெற்றியை அடைய முடிந்தது. அது அவர்கள்
பெருமையைக் குறைக்கலாம். அவர்களவர்களுக்கென்று கொண்டிருந்த அறத்தை தவற
விட்டிருக்கிறார்கள். அவர்கள் பிள்ளைகளையெல்லாம் இழந்திருக்கிறார்கள். ஆனால் அவர்கள் பேரறத்தைக் வெற்றி பெறவைக்க கொடுத்த காணிக்கைதான் இவையெல்லாம்
என்று நாம் கருதவேண்டும். இவ்வெற்றி பாண்டவர்களின் வெற்றிமட்டுமல்ல. மனிதசமூகத்தை கட்டிக்காத்துவரும்
பேரறத்தின் வெற்றி. அது பாரதகண்டத்தின் வரலாற்றில் முக்கியமான வெற்றி. அதை பாரத மக்கள் மறக்கவில்லை., மறக்கவிழையவும் இல்லை. அவ்வெற்றியின் நாயகியான திரௌபதி தெய்வமென உயர்த்தப்பட்டாள். அவ்வெற்றியை
நிலைநாட்டிய கிருஷ்ணன் தெய்வமென ஆனான். பாண்டவர்கள் பாரத வரலற்றின் நாயகர்களென ஆனார்கள். வட தமிழகக்
கிராமங்களில் மகாபாரதம் ஒவ்வொரு ஆண்டும் மீண்டும் மீண்டும் கதையாடல் தெருக்கூத்து
என நிகழ்த்தப்பட்டு நினைவுகூறப்படுகிறது. அந்த மகாகாவியம் இப்போது
வெண்முரசு என்று புத்தாக்கம் செய்யப்பட்டு மெலும் ஒளிர்கிறது.
தண்டபாணி துரைவேல்