Saturday, September 5, 2015

விழியின் ஆழி









ஜெ,

சென்ற வாரம்  ஆழியின் விழி அத்தியாயம் ஓன்று படித்து முடித்தவுடன் உங்களுக்கு ஒரு மின்னஞ்சல்  அனுப்பினேன். வழக்கம் போல காலையில் வெண்முரசை துவங்கி இருந்தேன்,  அத்தியாம் என்ன செய்தது என்பதை விளக்கத் தெரியவில்லை. உங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பிய பின்பு பத்து முறைக்கும் மேலாக அந்த அத்தியாயத்தையே படித்துக் கொண்டிருந்தேன். மதியம் வரை. பின்பு தலை வலிக்கும் அளவுக்கு அதிலிருந்து மீளவே முடியவில்லை. வேறு எதையும் படிக்கவும் பிடிக்கவில்லை.

உங்கள் எடிட்டிங் சென்ஸ் எப்பொழுதும் அபாரமான துல்லியம் கொண்டது.உச்சமான இடங்கள் வரும்பொழுது எத்தனை ஷாட் எத்தனை பிரேம் கத்தரிக்க வேண்டுமோ அத்தனை முன்பாகவே கத்தரித்து விடுவீர்கள். எனவே ஒவ்வொரு உச்சமும் சரியாக துவங்கி சரியாகவே சென்று முடியும். அந்த அத்தியாயத்தில் அங்கேயே அந்த உச்சம் பற்றிக் கொண்டது. எனவே மறு நாள் எப்படி இருக்குமென்று ஒரு பதட்டம் இருந்து கொண்டே இருந்தது. எனவே அதற்குப் பிறகு அத்தியாயங்களை படிக்கவே இல்லை. அது வரை இந்த நூலை மையக் கதாபாத்திரத்தின் அச்சை விவரிப்பது என்றே கொண்டிருந்தேன்.

அனாகதத்தில் நிகழும் தடுமாற்றம் என்று அதை  உணர்ந்த பொழுது கள்ளின் களியாட்டம் என்று உணர்ந்த பொழுது அந்த மின்னஞ்சலில் கள்ளே வேறு பொருளில் வருகிறது என்று எழுதி இருந்தேன். அது எங்கோ கிருஷ்ண மதுரம் என்று வந்து அறைந்தது. அப்படியெனில் அது வெள்ளித் தட்டில் வைக்கப்படும் என உள்ளுணர்வில் அதை உணர்ந்தேன், பாற்கடல் போல.

இப்பொழுது அதை ஒரு யோசனை போல, வாசிப்பு போல சொல்கிறேன், ஆனால் அது ஒரு அலை போல என வந்து அறைந்தது. ஆழ்படிமமென்று சொல்லலாமா எனத் தெரியவில்லை. அதற்கு பிறகு ( முதல் அத்தியாயத்திற்குப் பிறகு ) நான் படிக்கவே இல்லை இன்று மதியம் வரை.எதையோ அஞ்சி தவிர்த்துக் கொண்டிருந்தேன் போல,  ஒரு வகையில் அது ஒரு தரிசனம்தான், அதைத்தான் முந்தைய மின்னஞ்சலில்  குறிப்பிட விழைந்தேன் அது தவறாக வந்து விழுந்து விட்டது. கிருஷ்ணன் உங்களுக்கு காட்சி தருகிறான், உங்கள் தோள்களில் அமர்ந்து இருப்பதால் வெண்முரசு வழியாக நாங்களும் அதைக் காணுகிறோம் என.  

இன்று "மலையுச்சியில்" படித்தபின்பு அந்த அதிர்ச்சி அதிகமானது. உண்மையில் பாற்கடலில்தான் முடிந்திருகிறது போல என.இடைப்பட்ட காலத்தில்  காய்ச்சல் கண்டு விழுந்திருக்கின்றேன். இப்பொழுதுதான் மீதி அத்தியாயங்களையும் படித்து முடித்தேன். 

துவாரகையின் அப்பகுதி முழுக்க யானைக் கூட்டங்களென, எருமை மந்தைகளென, பன்றி நிரைகளென கரிய பாறைகள் பெருகிக்கிடந்தன. இந்த வார்த்தைகளுக்கிடையே கிடக்கிறது நான் கண்டது. கரியது, அந்தரங்கமானது, என்னாலும் அதை தெளிவாக இதுதான் என சொல்லி விட முடியாத ஒரு இமேஜ் ஆக மட்டுமே உணர முடிகிறது, ஆனாலும் கடத்தப் படக் கூடியது போல, இல்லையெனில் இதனை துல்லியமாக நீங்கள் எழுதி எனக்கு அது நிகழ்ந்திருக்காது. அல்லது எனக்கு நிகழ்ந்ததை உங்கள் எழுத்தில் கண்டிருக்க முடியாது. இப்பொழுதும் ஒரு தயக்கம் இருக்கிறது, ஏதோ பக்தி பரவசம் போல என் அனுபவம் புரிந்து கொள்ளப்படுமோ என.

இப்பொழுதும்அந்த அனுபவத்தை எப்படி எழுதினாலும் உங்களிடம் கொண்டு வந்து சேர்க்க முடியமா எனத் தெரியவில்லை. ஆனால் இதை உணர்ந்தேதான் நீங்கள் எழுதி இருகிறீர்கள் எனும் பொழுது அதை புரிந்து கொள்ள முடியும் என்ற நம்பிக்கையிலேயே இந்தகடிதம். என்னுடைய அந்தரங்கமான அனுபவத்தை நீங்கள் எழுதி விட்டீர்களோ என ஒரு கணம் தோன்றியது, அவரவர் கை நீரில் உங்களுடைய நதியென்றும் என்னுடைய நதியென்றும் ஓன்று உண்டா என மறு கணம் தோன்றுகிறது.   

அச்சுறுத்துவது என்றாலும் வழிமயக்குவதென்றாலும் அறிவு பிறிதொன்று இல்லாத பாதை. அதனால்தான் ஒருவரின் அனுபவம் இன்னொருவருக்கு புரிந்து விடுகிறது போல அதுதான் இந்த மின்னஞ்சலை உங்களுக்கு அனுப்ப ஒரே காரணம்.இதை எழுதி முடித்த பின்பு எல்லாம் பொருள் மயக்கமோ எனவும் தோன்றுகிறது.

சென்ற வருடம் பாதாமியில் இருந்த பொழுது, நடனம் புரியும் சிவனின் சிலைக்குப் பின் சூரியன் அஸ்தமிக்கும் கணத்தில் இதே போன்ற ஒரு அனுபவம் நிகழ்ந்தது.  அந்த புகைப்படத்தை இங்கே உங்களுக்கு அனுப்புகிறேன் ஒரு வேளை அது சொல்லக்கூடும். 

இப்பொழுதும் கூட இந்த மினஞ்சலை அழித்து விட வேண்டும் என ஏனோ தோன்றுகிறது. எனவே கண்ணை மூடிக் கொண்டு அனுப்பி வைத்து விடுகிறேன். தவறாக இருப்பின் மன்னிக்கவும் ஜெ. 

*
நீங்கள் குறிப்பிட்டிருக்கும் மலையுச்சியில் இருந்து குதிக்கும் உவமை எழுத்தை விளையாட்டாக கொள்பவர்களுக்கு உரியது. நீங்கள் ஒவ்வொரு  விளிம்புக்கு வரும்பொழுதும் இன்னும் இன்னும் மேலே பறக்கின்றீர்கள். அதைச் சாத்தியமாக்கும் வெண்சிறகுகள் உங்களுக்கு இருக்கின்றன. நீங்கள் குதித்தாலும் நடந்தாலும் இன்னும் இன்னும் மேலேதான் போக முடியும். அது சிறகுகளின், அதைத் தந்த தெய்வங்களின் விதி. எனவே நாகர்கோவில் நெடுஞ்சாலையிலிருந்து ஈரோடு போகும் வழியில் என்று அடுத்த நூலை எழுதத் துவங்கினாலும் அது சரியாகவே சென்று சேர முடியும். 

 ஏ.வி,மணிகண்டன்
*

நீலநகர்

அன்புள்ள ஜெயமோஹன் அவர்களுக்கு,

தங்களுடைய வெண்முரசு தொடர், முதல் புத்தகத்தில் இருந்து தங்கள் கைசாத்திட்ட செம் பதிப்புப் பிரதிகள் வாங்கி வருகிறேன்.

இந்தப் புத்தகங்களை ‘கிண்டில்’ கருவியில் தரவிறக்கம் செய்யும் வகையில் மின் நூலாகவும்  வெளியிட முடியுமா? பணி நிமித்தம் அடிக்கடி பயணத்தில் இருக்கும் எங்களைப் போன்றவர்களுக்கு, மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.அயல் நாடுகளில் வசிக்கும் உங்கள் வாசகர்களுக்கும் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

ஏற்கனவே வலைத் தளத்தில் தட்டச்சு செய்து ஏற்றப்பட்டுள்ளதால், புதிதாக தட்டச்சு செய்ய வேண்டியதில்லை. தொழில் நுட்ப ரீதியாக இது சாத்தியமா? எனக்கு தெரியவில்லை. கிழக்கு பதிப்பகம் பத்ரிக்கு தெரிந்திருக்கலாம்.

ஐம்பத்தி ஆறு வயதில் தான் மன சமநிலை, மன அமைதி என்றால் என்ன என்று லேசாக புரிவது போல் தெரிகிறது.  இதில் உங்கள் எழுத்துக்களின் பங்கு மிகவும் அளப்பரியது. தங்கள் வலைத்தளத்தில் மூலம் நல்ல புத்தகங்களின், எழுத்தாளர்களின் அறிமுகம் கிடைக்கிறது. மிகவும் நன்றி.

வெண்முரசு தொடரைப் பற்றி வித விதமான வாசகர்கள் கடிதம் வருகிறது. எனக்கு ஒரு ஆச்சரியம். மிகவும் தெரிந்த இந்தக் கதையை, அடுத்த நாளைய இடுகையை ஆவலுடன் எதிர்பார்க்கும் வண்ணம் செய்யும் உங்கள் எழுத்தாற்றலுக்கு எனது வணக்கங்கள். ஹிட்ச்காக் படத்தில் கொலையாளி யார் என்பதை முதல் காட்சியிலேயே சொல்லி விட்டு, படம் முழுவதும் நம்மை இருக்கையின் விளிம்பில் உட்கார வைப்பதைப் போல.

நச்சுப் பொய்கையில் நீர் எடுக்கச் சென்ற யுதிஷ்டிரனுக்கும் யட்சனுக்கும் நடக்கும் உரையாடல், நீலனின் கீதோபதசம் (நீலம் போல் இது மட்டும் தனி புத்தகமாக வருமா?)  , விதுர நீதி உரை - இவைகளை நீங்கள் கையாளப் போகும் விதத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். இது பற்றிய பலவிதமான கற்பனைகள் எனக்கு உண்டு. 

விஷ்ணு புரம் விருது விழாவில் இந்த வருடமாவது பங்கேற்கும் வாய்ப்பு உருவாக வேண்டும்.

அன்புடன்

சு. செல்லப்பா


அன்புள்ள செல்லப்பா

நலம்தானே/

நீங்கள் சொல்லும் இடமெல்லாம் நாவலில் வர இன்னும் பலநூறு பக்கங்கள் செல்லவேண்டியிருக்கிறது. பார்ப்போம்

விஷ்ணுபுரம் நிகழ்ச்சிக்கு வருக பார்ப்போம்

ஜெ

வைரம்

நமஸ்காரம் ஜெ அண்ணா,


தங்களது "இந்திர நீலம் " மஹாபாரதத்தில் கிருஷ்ணர் பற்றி சொல்லி இருந்ததை விட பல சாளரங்களை புதிதாக எனக்குள் திறந்தது. ஒரு ஞானமடைந்த யோகியுடன் வாழ்ந்து கொண்டிருப்பதில், எனது அன்றாட வாழ்நாள் அனுபவம் போல் இருந்தது.. தினமும் அதனுள் மூழ்கி அதாகவே வாழ்ந்தேன்.

ஒரு எழுத்து வாசகனை அதனூடே ஆழ்த்தி அதில் வாழும் அனுபவத்தை பெற வைக்க வேண்டும். அதில் உங்களின் சொல்லாடலும், வார்த்தை கோர்வையும் உங்களின் தெய்வங்கள் உங்களுக்கு செய்தது. அதன் மூலம் அவைகளே இச் சமூகத்தில் தர்மத்தையும், தன் இருப்பையும் வெளிப்படுத்திக் கொள்கின்றன.. உங்கள் மூலம் பிரம்மம் மேற்கொள்ளும் இவ்வாட்டம் தங்கள் நல்லூழ்..


ஒரு வைர கல்லில் ஆரம்பித்து நடுவில் யார் கைகளில் தவழ்ந்ததோ அவர்களால் அணிகளாக பார்க்கப்பட்டு ,திரும்ப தெய்வத்தின் (முற் றுணர்ந்தவனின்)முன்னிலையில் வெறும் கல்லாகவே பார்க்கப்பட்டு, எங்களாலும் உணரப்பட்டு வீசப்பட்டது.. இதன் நடுவே அனைத்து கதைகளும் நிகழ்ந்து முடிந்துள்ளன..அது இலக்கிய நயமாகவும், அந்தாதி போலும் இருந்தது.

காங்கோ மகேஷிடம் தாங்கள் பேசிய போது 10 நாட்களில் முடிந்துவிடும் என சொல்லியிருந்தீர்கள்.. நாங்கள் கூட எவ்வாறு முடியும் என விவாதித்தோம். சற்று வித்தியாசமாக முடிந்து இருந்தது.

மொத்தத்தில் தினமும் இந்து ஞான மரபை சற்று பிழிந்து எங்களை மகாபாரதம் மூலம் அவ்வுலகுக்கே அழைத்து சென்றீர், தங்களது வெறும் நாவல் அல்ல, "காவியம்' இது.ஒவ்வாெரு இளைய தலைமுறைக்கும் சென்று சேர்ப்பது நம் பொறுப்புன்னு கருதுகிறேன்.தமிழ் புதுவார்த்தைகளின் சொல்லாடலும் பிரமாதம், தமிழ் மீது புது உன்மத்தமே பிறந்து விட்டது.
அடிக்கடி, அடிக்கடி அலைபேசியில் பேசி அனுபவங்களை பகிர்ந்து கொள்ள அவா.. ஆனால் உங்களை போல பல தளங்களில் இயக்கும் மக்களுக்கு தொல்லை தராமல் இருந்தாலே பெரும் புண்ணியமாகும் என நினைப்பவன் நான். ஆனாலும் இதை எழுதாமல் இருக்க முடியவில்லை ..



இதற்கு மேலும் எதையோ சொல்ல விழைகிறேன் ஆனால் அதை வார்த்தையால் சொல்ல இயலாது. இத்தனை நேரம் தந்ததற்கு நன்றிகள் பல உரித்தாக்குகிறேன். !
கண்ணீர் கசிவுடன்,
ஸ்வாமி ருமதா

கிருஷ்ணன் எனும் மர்மம்

மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு....
.
உங்களின் வெண்முரசு நாவலின் தீவிர ரசிகன் என்பதில் பெருமைக் கொள்கிறேன்.ஒரு நாவலை கட்டாயப்படுத்தி ஒருவரிடம் படிக்கவைக்க விரும்பினால் நிச்சயமாக அது வெண்முரசாகத்தான் இருக்கும்.அவ்வளவு அற்புதமான ஆக்கம் .அதுவும் உங்கள் எண்ணங்களினால் மிளிர்கிறது.இப்போது இந்திரநீலம் நிறைவடைந்திருக்கிறது.அதை நினைக்கையிலேயே பெரு மகிழ்ச்சி உண்டாகிறது.செப்டம்பர் பதிநைந்திற்காக காத்துக்கொண்டிருக்கிறேன்.வெண்
முரசு நாவல் வரிசையிலேயே வேண்டாவெறுப்பாக படித்த இருப்பகுதிகள் நீலமும் இந்திரநீலமும்தான்.அதுவும் நீலத்தில் சுமார் பத்து நாட்களை படிக்காமலே கடந்துவிட்டேன்.அதற்கு காரணம் கண்ணன் துதிதான்.ஓரளவுக்கு யாதார்த்தமாக கதை பொய்கொண்டிருக்கையில் கண்ணனின் கதைகள்தான் சலிப்பை ஏற்படுத்திவிட்டது.அவர் கடவுள் என்பதை நிறுவுவதற்காகவே இந்த முன்னுரிமை என்றே எண்ணத்தோன்றுகிறது.பீஷ்மர்,துரோணர் போன்றோரின் தர்ப்பை புல் வித்தைகளை ஓரளவுக்கு என்னால் ரசிக்க முடிந்தது. ஆனால் கண்ணனின் கழுத்தை வெட்டும் படையாளியைதான் என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.மற்றபடி வேறெந்த குறையும் என்னடமில்லை.


வெண்முரசில் என் நாயகர்கள் என்றால் அது திருதாஷ்டிரரும்,துரியோதனும்,துச்சோதனும்தான்.இவர்கள் வஞ்சிக்கப்பட்டவர்கள் என்பதற்காக மட்டுமல்ல அவர்களின் பாத்திரத்தை வெளிப்படுத்திய உங்களின் விதத்தாலே அவர்கள் கவர்கிறார்கள்.மேலும் சமீபத்திய என்னுடைய சின்ன லட்சியங்களில் ஒன்று வெண்முரசு நாவல் வரிசைகள் அத்தனையும் வாங்கிவிட வேண்டுமென்பதுதான்.ஏழையான என்னால் சிறிது தாமதத்தின் பேரிலேயே வாங்கமுடியும் ஆனால் வாங்கிவிடுவேன்.என் மிக நெருங்கிய நண்பருக்கோ அல்லது உறவினருக்கோ ஏதேனும் பரிசு கொடுக்கும் சூழ்நிலை வந்தால் வெண்முரசு நாவலைத்தான் கொடுக்கவேண்டுமேன நினைத்திருக்கிறேன் .அனைவர் வீட்டிலும் இருக்கவேண்டிய பொக்கிசம்தான் வெண்முரசு.எங்களுக்கு நீங்கள் அளித்தப் பரிசுக்கும் நன்றி.மஹாபாரதத்தை நீங்கள் வெண்முரசாக இணயத்தில் எழுதாமலிருந்தால் என்னைப்போன்ற ஆயிரக்கணக்கான எளியவர்களுக்கு மஹாபாரதத்தின் சுவை தெரியாமலே சென்றிருக்கும் .உங்கள் உழைப்புக்கு கோடி நன்றிகள்...
.
.
பிறின்ஸ்


அன்புள்ள பிரின்ஸ்

வெண்முரசில் நாயகர்கள் என எவருமில்லை. அந்தந்த தருணங்களில் அதற்குரிய நாயகர்கள் உருவாகிறார்கள், அவ்வளவுதான். அவர்களின் சிக்கல்களைச் சொல்ல முற்படுகிறேன்

ஆனால் இந்நாவல் யதார்த்தவாத நாவல் அல்ல. புராணம். அல்லது நவீன ஃபேண்டசி வகை நாவல். இத்தகைய நாவல்களுக்குரிய அழகியலே இதில் உள்ளது. ஒரு பகுதி கறாரான வரலாற்றுக்குள் இருக்கும். இன்னொரு பகுதி கற்பனையான குழந்தையுலகுக்குள் இருக்கும். ஒருபகுதி துல்லியமனா மானுட உளவியலுக்குள் இருக்கும். இன்னொரு பகுதி குறியீடுகளால் ஆனதாக இருக்கும். இந்தக்கலவையே இதன் அழகியல்

கிருஷ்ணன் இந்தியப்பண்பாடு உருவாக்கிய ஒரு பெரிய மர்மம். வரலாற்று மர்மம் . அந்த மர்மத்தை எல்லா கோணத்திலும் சென்று தொடுவதற்கான முயற்சி வெண்முரசு. மர்மத்தை அவிழ்க்க, அல்லது சமகாலச்சூழலில் வைத்து விளக்க நான் முயலவில்லை. அந்த மர்மம் எப்படி உருவாகியிருக்குமென காட்ட மட்டுமே முயல்கிறேன்

ஜெ

Friday, September 4, 2015

இந்திரம்

திரு. ஜெயமோகன் அவர்களுக்கு,

இந்திரநீலம் மிக அருமையாக இருந்த்து. 20 நாட்கள் விடுமுறையில் இந்தியா வந்த்தால் தொடர்ந்து வாசிக்க முடியவில்லை. 28ம் தேதி இங்கு வந்தவுடன் தொடர்ந்து வாசித்து இன்று காலைதான் முடித்தேன்.

“மலையுச்சியில்” குறிப்பு வாசித்தேன். நீங்கள் உங்கள் உச்சத்தில் இருக்கிறீர்கள். ஆகையால் இந்த இடைவெளி என்பது சிறு மயக்கமே. புதிய எழுச்சியுடன் வர இறைவன் மற்றும் அனைத்து வாச்கர் வாழ்த்தும் துணை நிற்க்கும்.

செப்டம்பர் 15க்குள் போன மாதம் தொடங்கிய விஷ்ணுபுரத்தை முடிக்க வேண்டும்.

மீண்டும் ஒரு விருந்துக்கு காத்து நிற்கும் அன்பு வாசகன்.

மூர்த்தி

சுருள்பாதை

இனிய ஜெயம்,

நேற்று இரவு நாவல் வாசித்தேன்.  இரவு மையம் கொள்ளும் சில உளவியல் புள்ளிகளும்  இந்திரநீலம் மையம் கொள்ளும் புள்ளியும்  அதற்க்கு இடையே எத்தனை இசைவு?

உயிர்கள் உறங்குகையில் விழித்திருப்பவன் யோகி. இந்த சொற்றொடர் கிளர்த்திய படைப்பே இரவு.   நாவலின் இறுதி அத்யாத்தில் மேனன் சரவணன் வசம்  சரவணனின் ஆழ்மனம்  கமலாவுக்கும் நீலிமாவுக்கும் இடையே நிகழ்த்தும் இணைப்பை சுட்டுகிறார்.

இங்கே சாத்யகி வசம் கிருஷ்ணர்  ''நானாக நீ நடித்ததையும் அறிவேன்'' என்கிறார்.  

இரவில் இறுதி அத்யாத்தில் சரவணன் '' நான் வெறும் சாலையில் கால்கள் ஊன்றி நடக்க விரும்ப வில்லை. இழுத்துக்கட்டிய கம்பி மேல் ஒவ்வொரு கணமும் பிரக்ஞ்சயால் அடி எடுத்து வைத்து நடக்க விரும்புகிறேன்'' என்கிறான்.

இங்கே த்ரிஸ்ட்யுத்தும்னன் செய்வதும் அதேதான்.  சரவணனும் இவனும் தேர்ந்தெடுப்பது யோகியின் பாதையைத்தான்.

அஞ்சித் திரும்புபவனை உலகியலான் என்கிறோம். என்கிறான் நீலன். மேனன் உலகியிலான்.

கடக்கத் துணிபவனே யோகி.

சரவணனும், த்ரிஷ்ட்யுத்தும்ணனும்  யோகிகள்.

சுருக்கமாக இரவு வீசப்பட்ட கல். இந்திரநீலத் தருணங்கள் கூர்மைப்படுத்தி வீசப்பட்ட கல்.

நாவலை தொடர்ந்து வாசிக்கையில் ஏதேதோ சம்பந்தமே அற்ற கற்பனைகள். நான் மனதுக்குள் எழுதிக் கொண்டிருக்கும் இந்திர நீலத்தில், திருமகள்கள் அனைவரும் கூடி நீலனுக்கு சியமந்தகத்தை அணிவிக்கிறார்கள். மரபார்ந்த நீலனுக்கு மயிர்ப்பீலி. வென்முரசின் நீலனுக்கு உபரியாகவும் உச்சமாகவும் மார்பின் மையத்தில் சியமந்தகம். சிசுபாலன் சிரம் இற்று விழுமுன் அவன் காண்பது வைரத்தின் புன்னகை மேல் நீலனின் புன்னகை. இப்படி ஏதேதோ.
சிவாத்மா வசம் விசனத்துடன் சொன்னேன். இப்டி அத வெறும் கல்லா மாத்தி ஜெயம் அத கடலுக்குள் எரிஞ்சுட்டாரே ?
சிவாத்மா ''கவலைப்படாதீங்க வெண் முரசு முடியும்போது பெரிய பிரளயம் வரும். பாறையில் அமைந்திருக்கும் கிருஷ்ணனின் மாளிகை காணாமல் போகும். அந்த இடத்தில் இந்தக் கல் மட்டும் அமர்ந்திருக்கும். மீண்டும் வைரமாக ஒளி சிதறவிட்டபடி. ஜெயம் எழுதிக்கிடுதானே இருக்கார்  அப்டி கூட ஆகலாம்.'' என்று ஆறுதல் சொன்னார். 

நண்பர்கள் இருவரும் துவாரகைக்குள் முதன்முதலாக நுழையும்போது ,அவர்கள் குதிரைகளில்  சுருள் பாதையின் சிகரம் நோக்கி உயரும் சித்திரம் காட்சிகளால் ஆன ஆரோகணம். மலைக்கழுகு விரித்த சிறகுளில் இலங்கும் உயர்வு.

நண்பர்கள் துவாரகை நீங்குகையில் வரும் சித்திரங்கள் அவரோகணம். உறங்கத் துவங்கும் குழந்தையின் கீழிறங்கி சரியும் இமைகளின் இறக்கம். 

கடலூர் சீனு