அன்புள்ள ஜெயமோஹன் அவர்களுக்கு,
தங்களுடைய வெண்முரசு தொடர், முதல் புத்தகத்தில் இருந்து தங்கள் கைசாத்திட்ட செம் பதிப்புப் பிரதிகள் வாங்கி வருகிறேன்.
இந்தப்
புத்தகங்களை ‘கிண்டில்’ கருவியில் தரவிறக்கம் செய்யும் வகையில் மின்
நூலாகவும் வெளியிட முடியுமா? பணி நிமித்தம் அடிக்கடி பயணத்தில் இருக்கும்
எங்களைப் போன்றவர்களுக்கு, மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.அயல் நாடுகளில்
வசிக்கும் உங்கள் வாசகர்களுக்கும் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
ஏற்கனவே
வலைத் தளத்தில் தட்டச்சு செய்து ஏற்றப்பட்டுள்ளதால், புதிதாக தட்டச்சு
செய்ய வேண்டியதில்லை. தொழில் நுட்ப ரீதியாக இது சாத்தியமா? எனக்கு
தெரியவில்லை. கிழக்கு பதிப்பகம் பத்ரிக்கு தெரிந்திருக்கலாம்.
ஐம்பத்தி
ஆறு வயதில் தான் மன சமநிலை, மன அமைதி என்றால் என்ன என்று லேசாக புரிவது
போல் தெரிகிறது. இதில் உங்கள் எழுத்துக்களின் பங்கு மிகவும் அளப்பரியது.
தங்கள் வலைத்தளத்தில் மூலம் நல்ல புத்தகங்களின், எழுத்தாளர்களின் அறிமுகம்
கிடைக்கிறது. மிகவும் நன்றி.
வெண்முரசு
தொடரைப் பற்றி வித விதமான வாசகர்கள் கடிதம் வருகிறது. எனக்கு ஒரு
ஆச்சரியம். மிகவும் தெரிந்த இந்தக் கதையை, அடுத்த நாளைய இடுகையை ஆவலுடன்
எதிர்பார்க்கும் வண்ணம் செய்யும் உங்கள் எழுத்தாற்றலுக்கு எனது வணக்கங்கள்.
ஹிட்ச்காக் படத்தில் கொலையாளி யார் என்பதை முதல் காட்சியிலேயே சொல்லி
விட்டு, படம் முழுவதும் நம்மை இருக்கையின் விளிம்பில் உட்கார வைப்பதைப்
போல.
நச்சுப்
பொய்கையில் நீர் எடுக்கச் சென்ற யுதிஷ்டிரனுக்கும் யட்சனுக்கும் நடக்கும்
உரையாடல், நீலனின் கீதோபதசம் (நீலம் போல் இது மட்டும் தனி புத்தகமாக
வருமா?) , விதுர நீதி உரை - இவைகளை நீங்கள் கையாளப் போகும் விதத்தை
ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். இது பற்றிய பலவிதமான கற்பனைகள் எனக்கு உண்டு.
விஷ்ணு புரம் விருது விழாவில் இந்த வருடமாவது பங்கேற்கும் வாய்ப்பு உருவாக வேண்டும்.
அன்புடன்
அன்புள்ள செல்லப்பா
நலம்தானே/
நீங்கள் சொல்லும் இடமெல்லாம் நாவலில் வர இன்னும் பலநூறு பக்கங்கள் செல்லவேண்டியிருக்கிறது. பார்ப்போம்
விஷ்ணுபுரம் நிகழ்ச்சிக்கு வருக பார்ப்போம்
ஜெ