Friday, September 1, 2017

பித்ருக்களுக்கும்-மூதாதையர்களுக்கும் வழங்கும் இடம்



பெருமதிப்பிற்குரிய ஜெமோ.அவர்களுக்கு,

வணக்கம். 

உங்களின் எழுத்துக்களில் தாய்,தந்தை மற்றும் மக்களுக்கிடையே உள்ள உறவும்,பாசமும்,மதிப்பும்  வெளிப்படும் விதம் எப்போதுமே அனாயாசமாகவே இருக்கிறது.அது "தேர்வு" போன்ற தங்கள் கட்டுரையானாலும் சரி  ,"வெண்முரசு" போன்ற காவியமானாலும் சரி ஒன்றை ஓன்று விஞ்சும் விதத்திலேயே உள்ளது.நீங்கள் வெண்முரசு முழுவதிலும் பித்ருக்களுக்கும்-மூதாதையர்களுக்கும் - வழங்கும் இடம் படித்து படித்து போற்றத்தக்கதாகவே உள்ளது.நீர்க்கோலத்தின் இறுதிப்பகுதியில் வரும் சுதீரன்,அவர் தந்தைக்கும் இடையே நடக்கும் உரையாடல், நளன்,தமயந்தி அவர் தம் மக்கள் இடையே நடக்கும் உரையாடல் இதற்கு சிறந்ததோர் எடுத்துக்காட்டு!.
 
 தந்தையே, எதன்பொருட்டு ஒருவன் தந்தையின் ஆணையை மீறலாம்?” என்றான். அவர்எதன்பொருட்டும் அல்லஎன்றார்.
அவன் நெஞ்சு திடுக்கிட்டு பின் ஓசையுடன் உருண்டு சென்றது. மூச்சைத் திரட்டிஅதனால் பழி சேர்ந்தால்?” என்றான். “அது ஊழ். அப்பழியை தானே முழுதேற்றுக்கொள்ளவேண்டும். துறந்து கானேகி தவம்செய்து அதை வெல்லவேண்டும். அல்லது பிறந்து பிறந்து கரைக்கவேண்டும் 
தந்தை என்ன செய்தார் என்று உசாவுதல் மைந்தனின் பணி அல்ல. தன் செவிமுன் தந்தையைப் பழிப்பதை கேட்டிருப்பது அவன் நெறியும் அல்ல. அவர் அடைந்ததில் எஞ்சுவதை மட்டும் முன்னோர்கொடையெனக் கொள்வதே மைந்தரின் வழி. செல்வமும் புகழும் அறிவும் அவ்வாறே வந்தடையவேண்டும். கடனும் பழியும் இழிவும்கூட தந்தைக்கொடையென்றால் தலைவணங்கி ஏற்றாகவேண்டும்.”
பாகுகன் விம்மியழுதபடி இரு கைகளையும் விரித்தான். “தன் இடம் ஏதென்று தேடியவன் இப்போது கண்டடைந்தான்தந்தையரின் நீங்கா உறைவிடம் மைந்தர் நெஞ்சமேஎன்றான். நெஞ்சு வெடித்தெழுந்த குரலில்என் குழந்தைகளே, பாகுகனாகிய நானே நளன். 
அன்புடன்,
அ .சேஷகிரி.


தேவயானிக்கும் புலிகளுக்குமான உறவு



ஜெ

நான் மாமலர் நாவலை இப்போதுதான் முடித்தேன். தேவயானிக்கும் புலிகளுக்குமான உறவு பல படிகளாகச் சுருளவிழ்ந்தபடியே இருந்தது வாசிக்க வாசிக்க விரிந்தது. காதலனாகவும் பின்னர் அவளுடைய அகந்தையாகவும் புலிகள் மாறின. அவளே புலி என்றும் தோன்றியது. புலி என்ற வரியிலிருந்து வாசிக்க கூடிய பல இடங்கள் அழகானவை. உதாரணமாக அவள் புலியால் ஆட்டுவிக்கப்படுகிறாள். அந்தப்புலியைத்தான் வாலைப்பிடித்துச்  சுழற்றி வீசுகிறான் பீமன். அந்தப்புலியை கையிலிருந்த பூ நலுங்காமல் காப்பாற்றிக்கொண்டு அடித்து வீழ்த்துகிறான் கச்சன்

அருமையான நாவல். காவியத்தன்மை என்பதே இதுதான்

பாலசுப்ரமணியம்

கலி


ஜெ
வெண்முரசில் முக்கியமான ஒரு மாற்றம் கலி பிடிப்பது நளனை மட்டும் அல்ல என்பதுதான். நளனை கலி பிடிக்கிறது. கலியை அவன் வெல்கிறான். தமயந்தியையும்  பிடிக்கிறது. அதேபோல புஷ்கரனையும் அந்த நாட்டையும் அத்தனைபேரையும் கலி பிடிக்கிறது. கலி அவ்வாறுதான் பிடிக்கமுடியும். ப்சுஹ்கரனைத்தான் அது உண்மையில் ஆட்டிப்படைக்கிறது. அவன் அதை மீறி எழுகிறான். கலி அவனைப் பிடிக்கும் காட்சி போலவே அவனைவிட்டு விலகும் காட்சியும் முக்கியமானது. அவனைப்பிடிக்கும் காட்சியில் அவன் கலியை காண்கிறான். விலகும் காட்சியில் அங்கே நிக்ழவதை சுதீரன் காண்கிறான்.

ஜெயராமன்

காரகன்





ஜெ,
காரகன் என்னும் புரவியினூடாகவே புஷ்கரனும் உத்தரனும் ‘முட்டிக்கொள்கிறார்கள்’ ரெண்டு கோடுகளும் சந்திக்கும் புள்ளி அதுதான். காரகன் புஷ்கரனை ஏற்ற்க்கொள்ளவே இல்லை. ஆனால் உத்தரனை ஏற்றுக்கொள்கிறது

ஆனால் புஷ்கரன் அதை ஒரு பொருட்டாக நினைக்கவில்லை. அது அவன் மனமாக ஆகிவிடுகிறது. அது மனம்தான். அதை ஜெயிக்க நினைத்தால் தோற்போம். கடந்துவிட்டால் நமக்கு அது ஊர்தியாக ஆகிவிடுகிறது

மனோகரன்.

தெரியாமல் சொல்வதா






அன்புள்ள ஜெ

ஒரு வாசகர் அர்ஜுனன் சொல்லக்கூடாததைச் சொல்லிவிட்டான் என்று எழுதியிருந்தார். அது அவன் தெரியாமல் சொல்வதா இல்லை அவனுக்குள் இருக்கும் ஆண்மையின் ஈகோவால் சொல்வதா? அவன் ஏன் சொல்கிறான். அவனுடன் இருக்கையில் என்னை நினை என்றா. அவன் நான் என்றால் என்ன அர்த்தம்? அவளிடம் அவ்வாறு சொல்லி அவள் என்ன சொல்கிறாள் என்று பார்ப்பதற்கான ஆர்வமா? அர்ஜுனன் தெரியாமல் பேசுபவன் என நான் நினைக்கவில்லை

அருண்

Thursday, August 31, 2017

கைவிட்டவரா





கைவிடப்பட்டோரிடம் காட்டும் கருணையின் வழியாகவே தெய்வம் தன் இருப்பை அறிவிக்கிறது

முற்றிழந்து கைவிரிப்பவனே அக்கொடையை பெறமுடியும் போலும்


என்ற இரண்டு வரிகளும் முக்கியமானவை. ஆனால் கைவிடப்பட்டவரா கைவிட்டவரா என்பது அடுத்த பகுதியிலேயே வந்துவிடுகிறது. புஷ்கரன் அனைத்தையும் கைவிட்டுவிட்டுச் செல்பவன் அல்லவா?

ராஜன் ஆறுமுகம்