Thursday, September 24, 2015

காண்டீபம் வாசகனிடமிருந்து

காண்டீபம் வெண்முரசு நாவல் தொடரின் எட்டாவது நாவல். ஒரு நாவல் எழுதி முற்றிலும் வாசிக்கப்பட்ட பின்னர் அதற்கான மதிப்பீடுகளை எழுதுவது வழக்கம். ஆனால் வெண்முரசு நாவல் தினமும் அத்தியாயங்களாக வெளியாவதால் ஒரு பகுதி முடிந்ததும் அதன் மீதான பார்வையை எழுதுவது நலம் என்று எனக்கு எண்ணம் தோன்றியது. அதனை அடுத்து இந்த எட்டாவது நாவல் காண்டீபத்தின் முதல் பகுதியான கனவுத்திரையின் மீதான என் பார்வையை புதிய வாசகர்களுக்கான அறிமுக நோக்கோடு எழுத முனைகிறேன் இவ்விடத்தில்.

காண்டீபம் ஒரு பார்வை

ஆண்களின் உலகம்



புறந்தூய்மை நீரா னமையும் அகந்தூய்மை
வாய்மையால் காணப் படும்-திருக்குறள்.

நீரை ஊற்றி ஊற்றி உடலைக்கழுவுவதுபோல, எண்ணங்களை ஊற்றி ஊற்றி அகத்தைக்கழுவலாம் என்று மாலினிச்சொல்கிறாள். கழுவுவதற்கு எடுத்துக்கொள்ளும் நீரும் எண்ணமும் தூய்மையாக இருக்கும்படி பார்த்துக்கொள்வதுதான் தூய்மையை நாடுபவன் முதற்கடமை.

மானிட உடலும், உள்ளமும் இயற்கையில் புனிதம் நிறைந்தது  அல்ல, அதை செயற்கையால் புனிதப்படுத்தத்தான் இந்த நீராடால் எல்லாம். நீராடிவிடுவதாலேயே புனிதம் அடைந்துவிடுவதில்லை, நீராட நீராட புனிதம்.

ஐயவருக்கு மனைவியாகிவிட்ட பாஞ்சாலிக்கு ஒரு புனிதத்தை புறத்தில் அமைத்துவிட்டு செல்லும் நாரதர் அறிவார் மானிட அகத்தின் ஆடலை. அந்த ஆடல் ஒன்றுடன் ஒன்று சிக்கி சிடுக்காகி நடனத்தை அழித்து ஊழிப்பெரும் அழையாக மட்டும் மாறும் என்றால் வாழ்வு என்ன ஆகும்? புனிதப்படுத்தவேண்டிய நீரே உயிரையும் எடுக்கும் காலனாகிவிடும். அதனால்தான் நடனத்தில் இருக்கும் அலைகளை அதன் அதன் எல்லைக்குள் நீர் ஊற்றென ஆடவைக்கின்றார். ஆண்டுக்கு ஒரு பிறப்பு, ஆண்டுக்கு ஒரு கணவன், ஆண்டுக்கு இறப்பு அதன் எல்லைகளை வகுத்துக்கொள்ளும்போது அதன் ஊழித்தாண்டவத்தின் உக்கிரம் குறைக்கப்படுகிறது.

உடல் இந்த எல்லைக்குள் நிற்கிறது, எல்லை எற்ற மனம் அந்த எல்லைக்குள் நிற்கின்றதா? எல்லை அற்றதை எல்லைக்குள் வைக்கும்போது, எல்லைக்கு எல்லை வகுக்குத்தால் எல்லையற்றதும் எல்லைக்குள் நிற்கிறது. எல்லைக்குள் நின்றாலும் அதன் அசைவுகள் நிற்பதில்லை. பெரும் அணைக்கட்டில் மேல்மட்டத்தில் சலனமற்று நிற்கும் நீர், கீழ்மட்டத்தில் அந்த அணையை தள்ளிக்கொண்டே நிற்கிறது. எத்தனை முறை பிறந்தால் என்ன? எத்தனை முறை இறந்தால் என்ன? எத்தனை முறை மணந்தால் என்ன? எல்லாம் உடலுக்குதான். உள்ளம் அதே வண்ணத்தில் வடிவத்தில் இயங்கி்க்கொண்டே இருக்கிறது. காதல் தோல்வி உள்ளத்தில் அறைந்து அறைந்து அதிர்வுறச்செய்துக்கொண்டேதான் இருக்கிறது. சுபகையும், பாஞ்சாலியும் இந்த இடத்தில் ஒருவரேதான். சுபகை தனது கால்தோல்வியை சொல்லும் இடத்தில் மலையின் காதல்தோல்வியை எண்ணி தனது காதல்தோல்வியை தாண்டுவாள்.

எத்தனை எண்ணங்கள்! ஓரிரவு துயில்நீப்பதென்றால் ஒரு முழுவாழ்க்கையை ஒரு முறை வாழ்ந்து முடிப்பதென்றல்லவா பொருள்? ஒவ்வொரு கணமாக காலத்தை அறிந்தேன். அப்போது மலைகளை எண்ணி இரக்கம் கொண்டேன். அவை அறியும் காலத்தின் பெருஞ்சுமையை மானுடர் அறிவதில்லை. எவ்வண்ணமேனும் சில ஆண்டுகளை உந்தி உருட்டினால் இறந்து மண்ணில் மறைந்துவிட முடியும். மலைகள் காதல் கொண்டு புறக்கணிக்கப்படுமென்றால் அவை என்ன செய்யும்?”-காண்டீபம்.-2.

சுபகையுடன் ஒப்பிடும்போது மலையென வந்து நிற்குபம் பாஞ்சாலியின் காதல்தோல்விதான் எத்தனை பெரியது. மலை உள்ளும் புறமும் உலர்ந்து கல்லாகி நிற்கும்போதும் அதற்கு வெளியில் எத்தனை எத்தனை உயிர்குலங்களின் வாழ்க்கையின் தாயகமாக இருந்து பசுமை செய்யவேண்டும். மலைமீது பசுமையாகி பூத்து காய்த்து கனிந்து தேன் வடிக்கும் விருட்சங்கள் அறியுமா இந்த மலைக்கு என்று ஒரு பசுமையும் இனிமையும் இல்லையே என்பதை?.

பள்ளியறையில் இருந்து முன்னால் எழுந்துவரும் பாஞ்சாலி அகம் பள்ளியறையின் கதவென்றே நிற்கிறாள். அவள் உடல் மட்டும்தான் தருமனுடன் கிடக்கிறது. போருக்கு சென்ற தலைவன் இரவில் வந்து கதவை தட்டினால் எழுந்துவந்து திறக்க நேரம் ஆகும் என்று கதவாகவே இருந்தால் தலைவி என்று ஒரு கவிஞன் வடிக்கிறான். பாஞ்சாலியின் உடல் கட்டிலி்ல் உள்ளம் கதவில் என்ன ஒரு வெறுமை வாழ்க்கை. உள்ளதை உடலில் வைக்கும் தெய்வம் அதன் சித்திரவதையை புன்னைகையோடு ரசிக்கும் கொடூரக்கலைஞன்.
நிமித்திகர் நூல் ஆராய்ந்து முறைமீறிய குற்றத்திற்கு தண்டனையாக ஓராண்டு அர்ஜுனன் நகர் நீங்க வேண்டும் என்பர்கள், அர்ஜுனனின் ஆண்டை தருமனுக்கே தருகிறார்கள். தருமன் முகம் மலர்கின்றான். பாஞ்சாலி விழி கூர்க்கொள்கிறாள். அர்ஜுனன் அந்த பார்வையில் அஞ்சி அன்றே நகர்நீங்குகிறான்.

பகவான் ராமகிருஷ்ணபரமஹம்சர் சொல்கிறார். “வாழ்க்கை வெறுத்துவிட்டது என்று குடும்பத்தை விட்டு வெளியேறுவான். போய்சேர்ந்த இடத்தில் ஒரு உத்தியோகம் சம்பாதித்துக்கொள்வான், கையில் கொஞ்சம் பணம்வரும், பின்பு மனைவி, அதன்பிறகு பிள்ளை, அதே குடும்பவாழ்க்கை. முதலில் மனதில் துறக்கக்கற்றுக்கெள்”  

ஆண்களுக்கு எந்த தண்டனைக்கொடுத்தாலும் தப்பித்துக்கொள்கிறார்கள். அவர்களுக்கு தண்டனை என்பது எல்லாம் வெறும் வார்த்தைகள் மட்டும்தான். பெண்கள் குற்றவாளிக்கூண்டில் ஏற்றப்படாமலே இருவழியில் தண்டிக்கப்படுகிறார்கள். ஒருவழியில் உடலால், மறுவழியில் உள்ளத்தாள். இது ஆண்களின் உலகமப்பா.

நன்றி
அன்புடன்
ராமராஜன்மாணிக்கவேல். 

Wednesday, September 23, 2015

சததன்வா கொல்லப்பட்டவிதத்தில் கண்ணன் அறம்மீறினானா?


.
ராஜராஜசோழன் தனது அண்ணன் ஆதித்தகரிகாலனைக் கொன்ற ரவிதாசன் குடும்பத்தை அவனது உறவுப்பந்தலை  தண்டித்தவிதத்தைப்பார்க்கும்போது துரோகிகள் எப்படி தண்டிக்கப்படவேண்டும் என்பதை அறியும்போது அதிர்ச்சி அளிக்கிறது. மானிட அறம் என்பது எல்லாம் அங்கு இல்லை. அரசியல் அறம்மட்டும்தான் இருக்கிறது. ராஜராஜசோழன் அதற்காக ஒன்பது ஆண்டுகள் காத்திருந்தான் என்பதுதான் அற்புதம். 

 சததன்வா யார்? கண்ணன் யார்? சததன்வா பாமாவை திருமணம்செய்துக்கொண்டு யாதவகுலத்தின் தலைவனாக இருக்க நினைக்கிறான். இதில் தவறு இல்லை. அவனுக்கு அந்த நினைப்பு எப்படி ஏற்படுகிறது. கம்சன் அழிந்ததால் ஏற்படுகிறது. சிங்கம் இல்லா காட்டில் நரி நாட்டாமை கேட்டதுபோல் இது உள்ளது.

கம்சனை அழித்தவன் கண்ணன், கம்சன் அழியாமல் இருந்தால் யாதவருக்கு என்று ஒரு அரசு ஏற்பட்டு இருக்குமா? இதை ஜெ இப்படி பாமாவின் வார்த்தையாக அழகாக சொல்கிறார். ஓர் ஆலமரம் உருவாவதேஅரிதென்றால் காடு ஒன்று எழுவது எத்தனை அரிதுஅகந்தையாலோ ச்சத்தாலோ நாம் ஆற்றும் இச்செயலுக்காகஎன்றோ ஒருநாள் நம் மூதன்னையருக்கு நாம் மறுமொழி சொல்லவேண்டியிருக்கும் என நினைவுறுங்கள்.”-இந்திரநீலம்-12..


சததன்வா குறுக்குவழியல் தலைவனாக, மகதத்தின் கைப்பாவையாக ஆக ஆசைப்படுகிறான். அவன் கொள்கை, தலைவன் என்று சொல்வது எல்லாம் அகந்தையால், அல்லது அச்சத்தல். அகந்தையை அச்சத்தை கடந்த கண்ணன் தனிப்பெரும் தலைவனாக இருக்க நினைப்பற்கு இடையூறாக இருக்கும் சததன்வாவை கண்ணன் கொல்லவில்லை. மாறாக சததன்வா பாமாவின் தந்தையை கொன்று சியமந்தகமணியை அபகரித்ததால் பாமா பழிவாங்க முனைகிறாள். அறம்மீறியவனை அறம் தண்டிக்கின்றது என்பதுதான் சததன்வாவின் முடிவு.


கம்சனை கண்ணன் கொன்றான் என்று ஒரு சொல்லில் அதை முடித்துவிடக்கூடாது. கண்ணனின் தந்தையும் தாயும் சிறை இருந்த அந்த தவத்தை நாம் வெறும் வாசகனாய் மட்டும் இருந்துப்பார்க்கக்கூடாது. கம்சன் விசயத்தில் கண்ணனின் பொறுமை அளவுக்கடந்தது. அவனுக்கு கொடுக்கப்பட்ட மரணம்கூட எளிதானது அழகானது. மரியாதையானது. சூதர்களின் புகழ்பாடலுக்கு உரியது. 


சததன்வா அகந்தை, அச்சம், சூது, திருட்டு என்று மானிட அறங்கள் அனைத்தையும் கைவிட்டவன் அவனை வாழவைத்தால் எப்படி இருக்கும்.  மகனை மகளையும் இருபுறமும் நிருத்திக்கொண்டு வீரவாள் வாங்கி ஜனநாயகம் பேசும் தலைவனின் வியபாரதந்திரம்தான் உலகுக்கு கிடைக்கும்.  குற்றவாளி மட்டும் குற்றவாளி அல்ல குற்றவாளிக்கு துணைபோகும் அனைவரும் குற்றவாளிதான்.
என்பி லதனை வெயில்போலக் காயுமே
அன்பி லதனை அறம்

அறம் இல்லாதவன் அன்பில்லாதவனாகிறான், அன்பு இல்லாதவன் அறம் இல்லாதவன் ஆகிறான் இப்படி ஆவதற்கு காம குரோத மோகம் காரணமாகிறது. இப்படிப்பட்ட சததன்வா ஆட்சியில் நாம் வாழ்ந்தால் நமக்கு என்ன இடம்? பேச்சு சுதந்திரமாவது இருக்குமா? சததன்வாவின் வாரிசுகள் மட்டும்தானே மனிதர்கள் தலைவர்கள் வியபாரிகள் அறிவாளிகள் கவிஞர்கள் கலைஞர்கள் தயாரிப்பாளர்கள் நடிகள் ரசிகர்கள்.  

ராமன் ஆண்டால் என்ன? ராவணன் ஆண்டால் என்ன? என்று ஒரு கேள்வி நம்மிடம் உண்டு. ராவணன் ஆண்டது சரியானதாக இருந்தால் அவன் தம்பி ஏன் இராமன் இடம் வருகின்றான். நாட்டை இழந்து காட்டுக்கு போனபோதுகூட ராமன் தம்பிகள் ஏன் ராமனைவிட்டு செல்லவிலை. இதற்கு பின்னாடி பாசம் மட்டும் காரணமாக இல்லை அறம் காரணமாக இருக்கிறது.   

இப்பெண்களை கலங்களுக்கு கொண்டு செல்லுங்கள்இங்கிருந்து நம் கலங்களுக்குள் புகுந்த அக்கணமே இவர்கள்துவாரகையின் குடிகள் ஆகின்றனர்அரசகுடியினர் முறைமையனைத்தையும் தக்கவைத்துக்கொள்கின்றனர்” என்றார். “ஆணை” என்று அவன் தலை வணங்கினான். “அவர்களில் துவாரகைக்கு வரவிழையாதவர்களை அவர்களின்குடிமூதாதையரின் ஊர்களுக்கு அனுப்புங்கள். படகில் ஏறியதுமே அதற்கேற்ப தனித்தனியாக பிரித்துவிடுங்கள்.”-ந்திரநீலம்-42-இந்த வரியில் கண்ணன் உள்ளத்தையும் அறத்தையும் உணரமுடியும். துவாரகைக்கு வரவிரும்பாதவர்களை குடிமூதாதையரின் ஊருக்கு அனுப்புங்கள் என்று சொல்லும் இடத்தில்  ராஜராஜசோழன் வெறும் அரசன் மட்டும் என்று காட்டிப்போகிறான் கண்ணன். இங்கு கண்ணன் அறத்தாயாக தெரியவி்ல்லையா? அந்த தாய்மைதான் தெய்வமாகவும் வந்து நிற்கிறது வெண்முரசில்.


சததன்வா கொல்லப்பட்டு அவன் நாடு அழிக்கப்பட்டு அக்ரூரர் மற்றும் கிருதவர்மா குலமன்றில் குற்றவாளிகளாக நிறுத்தப்படும்போது மனோகரர் சொல்லும் சொல் கவனிக்கப்படவேண்டியது.

அரச ஆணையை புறக்கணித்து எதிரியுடன் இணைந்துகொண்டதை இரண்டகம் என்று இந்த அரசவை வகுக்கிறது.வதைக்கொலை அதற்கான தண்டனைஇறப்புக்குப்பின் மண்ணில் சூதர்களின் வசை நீளவேண்டும்.விண்ணேகச்செய்யும் நீர்ச்சடங்குகள் செய்யப்படலாகாதுதீரா இருள்நரகு அமையவேண்டும்சௌமுத்ரா நீதி அதைவகுத்துரைக்கிறது” என்றார்.-இந்திநீலம்-45

சௌமுத்ராநீதி எதிரியுடன் இணைபவனுக்கே இத்தனை வன்வம் காட்டும் என்றால் எதிரியின்மீது எத்தனை வன்மம் கொண்டது. சததன்வாவை  எந்ததிசையில் திருப்பிப்பார்த்தாலும் அறம்மீறியவன்தான்.

சொந்த தொலைக்காட்சி அமைத்து தனக்குதானே பட்டம் கொடுத்கொண்டு தன்புகழ்பாடுவதெல்லாம் நாங்கள் அறம் மாறதவர்கள் என்பதைக்காட்டத்தானே. அவர்கள் புகழை காலம் வரலாற்றில் அறத்தோடு  வைக்கவேண்டும் என்பதற்காகத்தானே. 

அறம்மீறுபவன் உலகத்தின் விதையில்லை. புதைக்கப்பட்ட வெடிகள். அவைகளை கண்டு பிடித்து அழிக்கபப்படுவதே அறம். வெண்முரசு கண்ணனை முன்னிருத்தி அதைதான் சொல்கிறது.

விதையை புதைத்து அதன்மீது உட்கார்ந்தாலுதம் அது முளைத்து எழுந்து நிழலும் கனியும் தரும். அறம் என்பது விதை. அறத்தை வளர்ப்பதில் கண்ணன் ஒரு விவசாயி. விதை வளர்வதற்கு களை எடுக்கிறான். களைக்கு அவன் தீ. பயிருக்கு அவன் ரவி.  

நன்றி
அன்புடன்
ராமராஜன் மாணிக்கவேல்.  

சாப விமோசனம்:


    நம் புராணங்களில் முனிவர்களை, அவர்கள் கொடுத்த சாபங்களின் வாயிலாகத்தான் நாம்  பெரும்பாலும் நினைவு கூறுகிறோம். தவறிழைத்தவர்களுக்கு உடன் தண்டனைதான், மன்னிப்பதெல்லாம் அரிதினும் அரிது. அப்புறம் அந்த முனிவர்கள் அத்தனை தவம் செய்து என்ன பலன். அவர்களின் கடும் தவம் அவர்களை முன்கோபக்காரர்களாகவும், சிடு மூஞ்சிகளாகவும் மாற்றிவிடுகிறதா என்ன? கழுத்தில் செத்த பாம்பை போட்டவனுக்கு பாம்பு கடித்து  செத்துப்போ என்ற சாபம் முதல் தேர்க்காலால் இடறப்பட்டதற்கு கந்தர்வ உலகத்திலிருந்து நாடு கடத்தப்படும் சாபம் வரை வெண்முரசிலேயே பலவற்றை பார்த்திருக்கிறோம்.
    
முனிவர்கள் சாபம் அளிப்பது எவ்வகையில் சரியாகும்?


     சாபம் என்பது தவறு செய்தவனுக்கான தண்டனை. தண்டிப்பதற்கான தகுதியும் திறனும் உள்ள  ஒருவர் கண்ணெதிரே ஒருவன் தவறு செய்யும்போது தண்டிக்காமல் விடுவது ஒருவகையில் தன் கடமையை ஆற்றாததாகும்.


    அக்கால சமூகத்தில் நீதி வழங்குதல் அரசனிடம் இருக்கிறது, அரசன் எட்டாத இடத்தில் இருக்கும்போது அருகிருக்கும் திறன் மிக்கவர்கள், பெரு வீரர்கள் போன்றோரிடம் இருந்திருக்கும். ஆனால் இவர்களே தவறு செய்தால், யார் கேட்பது? தட்டிக்கேட்க ஆளில்லாதவனுக்கான பொறுப்பு மிக அதிகம். அந்த பொறுப்பை அவன் தவறவிடும்போது அதற்கான விலையை, மற்றவர்களைவிட அதிகமாக அவன் கொடுக்க வேண்டும். ஒரு முனிவர் யாருக்கு சாபம் வழங்குகிறார் எனப் பாருங்கள்? தவறிழைத்தவன், அதற்காக வேறொருவரால், தண்டிக்கப்பட முடியாத நிலையில் இருப்பவன். ஒன்று அவன் அரசன் அல்லது பெரு வீரனாக இருப்பான் அல்லது அந்த குற்றம் வேறு யாரும் காணாத நிலையில் நடப்பதாக இருக்கலாம். 



இத்தகைய தருணத்தில் அங்கிருக்கும், தண்டிக்கும் திறனிருக்கும்  ஒருவர் அவன் குற்றத்தை காணாததைப்போலச் சென்றாலோ அல்லது மௌனமாக சகித்துக்கொண்டு போனாலோ அவர் சமூகத்திற்கும், அந்த குற்றம் புரிந்தவனுக்கும் கூட கேடு செய்தவராக  ஆகிறார்.  ஒருவருக்கு தண்டிக்கும்  சக்தி நல்லூழாலோ அல்லது கடும் தவத்தாலோ வாய்த்திருக்கும்போது அதை பயன்படுத்தவேண்டிய சமயத்தில் பயன் படுத்தவேண்டிய பொறுப்பும் அவருக்கு இருக்கிறது. ஆக்வே ஒரு முனிவர் ஒருவன் செய்யும் குற்றத்திற்கு சாபமிடுதல் அவர் பொறுப்பாகிறது. இல்லையென்றால் ஏன் அந்த சக்தி அவரிடம் கொடுக்கப்பட்டிருக்கிறது? ஆகவே முனிவராய் இருந்து ஒருவர் சாபமிடக்கூடாது எனச் சொல்ல முடியாது. 


   ஆனால் முனிவர் ஒருவனால் தனக்கு ஏற்பட்ட துன்பத்திற்கு அவனை மன்னித்து விடலாம் அல்லவா?  அவர் தண்டிப்பது வெறும் பழிவாங்குதல் என ஆகிவிடாதா?


       ஒரு குற்றம் நடக்கும்போது மூன்று இடங்களில் அதன் பாதிப்பு நேர்கிறது. ஒன்று அதனால் நேரிடையாக துன்பத்திற்கும் உள்ளாகும் நபர் அல்லது நபர்கள். இரண்டாவது  அவ்விடத்தின் சமூக சூழல் பாதிப்படைகிறது. சமூகத்திற்கு ஒரு தவறான செயல் நடத்திக் காட்டப்படுவதன்மூலம் சமூகத்தின் நல்லியல்பு களங்கப்படுத்தப்படுகிறது. மேலும் சிலர் அந்த செயலை செய்வதற்கான முன்னுதாரணமாகிறது. மூன்றாவது அந்த குற்றம் செய்தவன் உள்ளம் மற்றும் அவன் ஆளுமை  சீர்கேடடைகிறது.   ஆகவே ஒருவனுக்கு அளிக்கும் தண்டனை இந்த மூன்று காரணங்களுக்காக ஆகும். ஒரு முனிவர் ஒருவன் குற்றத்தினால் தன்க்கு ஏற்பட்ட துன்பத்தை சகித்துக்கொள்ளலாம். ஆனால் மற்ற இரண்டு பாதிப்புகளுக்காக அவர் தண்டனை கொடுக்க வேண்டிய பொறுப்பில் உள்ளார்.


    சாப விமோசனம் தேவையா? தண்டிக்கும் ஒருவருக்கு தண்டனையை எப்போது முடிக்க வேண்டும் என்பதும் அறிந்திருக்க வேண்டும். மீளா நரகம் அல்லது இனி அவனுக்கு விடிவே இல்லை என தீர்மாணிக்க எவருக்கும் அதிகாரம் இல்லை. குற்றத்தால் பாதிக்கப்பட்டவர் அத்தவறுக்கு தண்டனை கொடுக்கப்பட்டது என்பதில் நிவாரணம் பெறுகிறார். சமூகம் அவனுக்கு அளிக்கப்பட்ட தண்டனையின் மூலம் அக் குற்றம் தன்னால் ஒத்துக்கொள்ளமுடியாதது என தெரியப்படுத்திகொள்கிறது அதன் மூலம் தன் சூழலை காத்துக்கொள்கிறது. ஆனால் குற்றம் புரிந்தவன் அடைந்த பாதிப்பு அவன் தன் தவறை உண்மையில் உணர்ந்துகொள்ளும்ரை அவனுக்கு தொடர்ந்திருக்கிறது. கொடுக்கும் தண்டனை அக்குற்றத்தை அவன் உணர்ந்துகொள்ளும் வண்ணம் இருக்க வேண்டும்.


முனிவர்கள் அளிக்கும் சாபத்தை பாருங்கள், அந்த குற்றம் சம்பந்தப்பட்டதாகவே அந்த தண்டனையும் இருக்கும். அதன் மூலம் அவன் தன் குற்றத்தை உணர்ந்துகொள்ள வழிவகுப்பதாக இருக்கும்.
  சித்ரரதனின் சாபமும்  விமோசனமும்:  சித்ரரதன் சிற்றுயிர்களுக்கு அவ்வளவு முக்கியம் அளிக்கத்தேவை இல்லை என இருந்தவன். அவனை சிற்றுயிராக போகும்படி சபிக்கப்படுகிறான்.  ஆனாலும் அவன் செய்த குற்றத்தை உணரமலேயே இருக்கிறான். அவனை பார்த்தன் தோற்கடிக்கப்படும்போதுதான் தன் நிலை உணர்ந்து இப்படியான தன் வீழ்ச்சிக்கு தான் செய்த குற்றமென்ன என யோசிக்க முற்படுகிறான். அர்ச்சுனன் உயிர்களை கொல்லக்கூடிய  வீரன் என்பதாலேயே, உயிர்களை கொல்லாமம்  துன்பப்படுத்தாமலும் இருப்பதன் மேன்மையை கற்பிக்கப்பட்டு அறிந்திருப்பவன். அவனால் சித்ரரதனுக்கு அவன்  குற்றத்தை சரியாக உணரவைக்க முடிகிறது. குற்றத்தை உணர்ந்த சித்ரரதன் சாபவிமோசனம் பெறுகிறான்.

தண்டபாணி துரைவேல்

பட்டிமன்றம்



அறம் என்றால் என்ன என்று அர்ஜுனன் சித்ரரதனுக்கு தெரிவித்துவிட்டான்.
”அறத்தின் பொருட்டு வில்லேந்துபவனுக்கு மட்டுமே கொல்லும் உரிமையுள்ளது. அறத்தின் பொருட்டன்றி சிந்தப்படும் ஒவ்வொரு துளிக் குருதியும் பழி சூழ்ந்ததே. அன்று நீர் சென்று கொண்டிருந்தது உமது உவகைக்காக மட்டுமே. ஆணவத்திற்காகவும் அகமகிழ்வுக்காகவும் இலக்குகொள்பவன் பழி சுமந்தாக வேண்டும்.”-காண்டீபம்-8

அறம் என்றால் என்ன என்று தெரியாமலா அறம் மீறுகின்றோம், அறம் என்றால் என்னவென்று தெரிந்துக்கொண்டுதான் அறம் மீறுகின்றோம். அறம் என்னவென்று தெரியாமல் அறம்மீறினால், அறம் மீறப்பட்டதற்காக உள்ளும் புறமும் வருந்தி அந்த கணத்திலேயே அறத்தில் வந்து நிற்கின்றோம். அறம் என்னவென்று தெரிந்து, அறம் மீறும் போதுதான் அறம்மீறவில்லை என்று வாதாடுகின்றோம். வாதாடுவதோடு புதிய அறம் ஒன்றை நிலை நிறுத்த முனைகின்றோம். அறம்மீறிய ஒரு குற்றத்தோடு, அறத்திற்கு எதிராக ஒரு அறத்தை உருவாக்கிய குற்றத்தையும் செய்கின்றோம்.

ஏன் அறம் மறக்கப்படுகிறது,மறைக்கப்படுகிறது? மறக்கப்பட்ட மறைக்கப்பட் அறத்தை தவிர்த்து ஏன் புதிய அறம் முன்வைக்கப்படுகிறது?

ஆணவத்தால், அகமகிழ்வால், பயத்தால் அறம்மீறப்படுகிறது. ஆணவம் ஆசை பயம் அறம்மீறியதை ஓத்துக்கொள்ளாமல் மீண்டும் தனக்கு சாதகமாக புதிய ஒன்றை உருவாக்குகிறறோம் அதையே அறம் என்று பட்டி மன்றம் நடத்துகின்றோம்.

சித்ரரதன் தேர், புரவி வில்.அம்பு கதாயுதம்,பாசக்கயிறு, அங்குசம் அனைத்தும் வைத்து உள்ளான் அதனால் அவனுக்கு ஆணவம் இருக்கிறது. உலகம் சுற்ற சித்திரரதமும், இன்பம் துய்க்க ஏழுகன்னியரும் இருக்கிறார்கள் அதனால் அவன் குன்றா அகமகிழ்வால் நிறைந்து இருக்கிறான். பீதம்பரம் மலருக்குள் இருக்கையில் சிற்றுயில் என்று நினைத்தவன். அவன் கந்தர்வபுரியை கணையாழி என அணியும் பேருரு கொண்டு வருகையில், பூவுக்குள் இருக்கும் சிற்றுயிர் உடலோடு அவனை சிந்திக்க சொல்லி பயத்தில் நிறைகிறான். ஆணவம், அகமகிழ்சி, பயம் என்று மூன்றும்கூடும் இடத்தில் நின்று அறம்மறந்து அறம்மீறியதை அறியாமல் புதிய அறம் ஒன்றை வகுக்கிறான். அரசியல்வாதிகள் எளிதாக அறம்மீறுவதற்கு காரணம் அவர்களுக்கு எளிதாக அனைத்தும் கிடைத்துவிடுவதால்தான் என்று சித்ரரதன் பாத்திரம் உணர்த்துகிறது.

சித்ரரதன்  வகுக்கும் புதிய அறம் என்ன? “நான் தேர்வலன். இலக்கு நோக்கும் வீரன். இச்சிற்றுயிர்களை அழிப்பது எனக்கு பிழையல்ல, அறமேஎன்றான் சித்ரரதன்.-காண்டீபம்-7

அறம் படித்தவன்தான் புதிய அறம் என்ற ஒன்றை, தனக்கான சுயநல அறம் ஒன்றைப்படைக்கிறான். தனது ஆணவத்திற்காக, தனது அகமகிழ்விற்காக, தனது சுயநலத்திற்காக, ஒரு புதிய கொள்கையைப்படைத்து அதை அறம் என்கிறான். அறம் என்பது எவர்வேண்டும் என்றாலும் கூர்சீவும்  முளைக்குச்சியா? தேய்க்க தேய்க்க கூர்மையாகவும், மறைக்க மறைக்க ஒளியாகவும் எழுக்கூடியது.

சித்ரரதன் தனது அறம்மீறிய செயலை மறைக்க இங்கு வைக்கும் வாதம் அவன் அறம்மீறவில்லை என்பதை எத்தனை அழகாக காட்டுகின்றது. அனைத்து உயிருக்கும் ஆன்மா ஒன்று உடல்வேறு, யானைகள் போகும்போது சிற்றுயில் அழிவது இயற்கை, பெரியமீன் சிறியமீனை உண்பது இயற்கை, வேட்டையாடி விலங்கை உண்பவன் அதன் உடலில் உள்ள பல்லாயிரம் உயிரை என்னுவதில்லை என்று சொல்லும் இடத்தில் அவன் அறம்மீறவில்லையே என்று நாமும் மயங்கித்தான்விடுகின்றோம். இதைத்தான் பாரதி இப்படிச்சொல்கிறான்.
படித்தவன் சூதும் வாதும் செய்தால் போவான் போவான் ஐயோ என்று போவான். அறம் படித்தவன்தான் அறத்தை வளைக்கிறான். சித்ரரதன் விழுந்ததுபோல் குப்புற விழுகிறான்.

கந்தர்வபுரியில் இருந்து மண்ணில் விழுவதற்கு முன்பு சித்ரரதனுக்கு மாப்பளிக்கப்படவில்லையா? கந்தர்வ கணத்தில் தனது சைத்ரிகம் காட்டுக்கள் நுழையும் அர்ஜுனன் இடம் சித்ரரதன் எதிர்ப்பார்பது ஒரு பணிவை, கந்தர்வர் கணத்தை மறந்துவிட்டேன் அல்லது அறியவில்லை என்று மன்னிப்பை வேண்டுதலை.  இதே மன்னிப்பை அன்று பீதம்பரனிடம் சித்தரரதன் கேட்டு இருந்தால் இந்த இழிநிலை வந்திருக்குமா? அறம் மீறப்படும்போது அறம் எதிர்ப்பது பணிவையும். தவறை உணர்வதையும்தான். பணிவும், தவறை உணரும் கணம் வந்துவிட்டால் ஆணவம் அழிந்துவிடுகிறது. அழியும் ஆணவம் நாம்மீறிய அறத்தை நாமே கைக்கொள்ளும்படி கைக்கு எட்டிவிடுகிறது. .

அறம் மீறப்படும் முன்னே அறம் வாய்மூடிக்கொண்டு ஊமையாக இருக்கிறதா? கண்மூடிக்கொண்டு நமக்கென்ன என்று துயில்கிறதா? இல்லை அறம் யார் மூலமாவது நமக்கு ஒரு எச்சரிக்கை விடுகிறது. தனது சித்ரரத்தில் பறக்கும் சித்ரரதன் இடம் வழியல் கிடக்கும் மலரை கும்பீநசி சுட்டிக்காட்டி   “அதோ அழகிய மலர், தேரை ஒதுக்கு” என்கிறாள். சித்ரரதனோ அது வாடிய மலர் என்கிறான். கும்பீநசிக்கு அழகிய மலரெனத்தெரிவது சித்ரரதனுக்கு வாடிய மலரெனத்தெரிவது ஏன்? கும்பீநசி கந்தர்வ  இதயத்தோடுப்பார்க்கிறாள், சித்ரரதன் மானிட இதயத்தோடு பார்க்கிறான். கந்தர்வபுரியில் இருந்துக்கொண்டு மண்ணின் மானிடர் மனம்கொள்வதுதான் பெரும் அறம்மீறல். ஆட்சிக்கட்டிலில் மன்னராக, காவலராக, இருப்பவர்கள் எளிதில் பிச்சைகாரர்களிலும் பிச்சைகாரர்கள்போல் ஆகி எளியவர்களை வதைப்பதுபோல் இது பெரும் குற்றம். மறைமுகமாக அறம் தனது இருப்பை சுட்டும்போதுகூட அறம்மீறுபவன் அதை பொருட்படுத்தாமல் கவனம் இன்மையால் வழிக்கிவிடுகிறான். சொல்பவள் பெண் என்ற இளக்காரம் எங்கெல்லாம் ஆணிடம் எழுகின்றதோ அங்கெல்லாம் அறத்தின் எச்சரிக்கை மீறப்படுகிறது.

அறம் எச்சரிக்கை விட்டுக்கொண்டே இருக்கிறது, அறம் பணிவனை மீண்டும் தழுவுகிறது. அறத்தை மறந்து தனக்கு சாதகமாய் ஒரு அறத்தை புனைபவனை அதளபாதளத்தில் தள்ளுகிறது. அவன் இருந்த உயரத்தை மறந்துவிட வைக்கிறது. அவன் பெரும்பயண வாகதனத்தை சிதைத்து குறும்காட்டில் சிறைவைத்துவிடுகிறது, எத்தனை மலர்க்காட்டில் இருந்தாலும் தனக்கான மலர்த்தேரை தானே செய்துக்ககொள்ள முடியாமல் செய்கிறது. தனக்கு நிகர் இல்லா எதிரியுடன் யுத்தம்செய்யவைத்து அடிபணிய வைக்கிறது. அனைத்தையும் இழக்கவைக்கிறது. ஆனாலும் அறம் கடைசி வாய்ப்பொன்றை அளிக்கிறது. ஒரு (நீலன்)நீலச்சுடர் தரிசனத்தை வழங்கி விழியில் விளக்கேற்றுகிறது. அந்த வெளிச்சத்தில் தப்பித்துக்கொண்டு,  இடம் பொருள் காலம், வண்ணம் வடிவம் எதையும் பார்க்காமல் ஒருவனுக்கு சீடனாகச்சொல்கிறது. அப்படி அவன் சீடனானால் அந்த குருவால் மீண்டும் விண்ணேற வைக்கிறது. சீடன் ஆவதன்மூலமாகவே குருவாகவும் வைக்கிறது.

அன்புள்ள ஜெ காண்டீபம்-7ம் காண்டீபம்-8ம் அறம் நடத்தும் பட்டிமன்றம். பட்டி மன்றம் எல்லா திசையையும் ஆராய்ந்து எல்லா திசையும் சரியான திசைதான் என்று சொன்னாலும், மையத்தைவிட்டு விளகி திசையில் பயணிக்காமல், திசைகளை இணைக்கும் மையத்தின ஓளியாகிய ஞானத்தில் கூடவைக்கிறது. கனவுதிரை அறங்களின் திசையை மையத்தில் குவிய வைத்து அறமாய் ஒளிர்கிறது. “அறிவிழி ” அர்ஜுனனுக்கு மட்டும் இல்லை வாசகருக்கும் கிடைக்கிறது.  
  
நன்றி
அன்புடன்
ராமராஜன் மாணிக்கவேல். 

சிறையிலிருந்து மேலும் சிறந்த சிறைக்கு


   நாம் எல்லோரும் நம் உலகைவிட சிறந்த வசதிகள் உடைய இன்னொரு உலகை கனவு காண்கிறோம். சொர்க்கம் அதுபோல ஒரு கனவுதான்.  இங்கிருக்கும் சங்கடமெல்லாம் இல்லாத ஒரு உலகம். ஆனால் அவை சில சம்யம் உண்மையாக இருப்பதும் உண்டு.    கற்பனை செய்த உலகங்கள்  கண்ணெதிரே உண்மையாய் ஆவதை  இவ்வுலகம் எத்தனை  முறை கண்டிருக்கிறது.  நூறு நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன் முன்னூறு மைல்களை சிலமணி நேரத்தில் கடப்பது என்பதும், எங்கோ இருக்கும் ஒருவருடன் இங்கிருந்தே பேச இயலும் என்பதும், எங்கோ நிகழும் நிகழ்வுகளை அக்கணமே இங்கிருந்து காண முடியும் என்பதும், பெருங்கடல்களை, கண்டங்களை விண்ணிலேறி தாவ முடியும் என்பதும் வெறும் கற்பனைகள் மற்றும் அந்தக் கால மனிதர்களின் கனவுகள் அல்லவா?  கொடு நோய்கள் குறைந்திருத்தல், காமத்திற்கான பெருந்தடையாக இருந்த கருவுருவாதலை தவிர்க்க இயல்வது, பெண்கள் அச்சமின்றி இந்த அளவிற்கு சமூகத்தில் வலம் வருதல்,  ஊர் மக்களை கூட்டம் கூட்டமாக அழிக்கும் போர்கள் பெருமளவு குறைந்திருத்தல், நீதி, சாதியின் பேரால், சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கு ஏற்ப, மாற்றங்கொள்ளாமல் அனைவருக்கும் பொதுவானதாக இருப்பது, ஓர் அரசின் அதிகாரபூர்வ உறுப்பாக ஒவ்வொரு குடிமகனும் ஆவது போன்றவை அந்தக்கால மனிதன் கனவுகண்ட சுவர்க்கம் அல்லவா?  சிந்தித்து பாருங்கள் கால இயந்திரத்தில் ஒருவன் அங்கிருந்து வருவானென்றால் இதை ஒரளவுக்கு சுவர்க்கம் என்று கருதமாட்டானா?    ஆனால் நமக்கு இவ்வுலகம் சுவர்க்கமாகத் தெரியவில்லை. நம்முள் இதைவிட்ட மேம்பட்ட  ஒரு சுவர்க்கத்தைப்பற்றிய கனவொன்று இருக்கிறது.

     இதையெல்லாம் தாண்டி இன்னும் ஒரு பெருங்கனவு ஆதி நாள்தொட்டு மனிதர்களுக்கு இருந்துவருகிறது. நாம் ஐம்பூதங்களால், ஆக்கப்பட்டு, காக்கப்பட்டு இருந்தாலும், அதே ஐம்பூதங்களால் சிறையிடப்பட்டும் இருக்கிறோம். நம்மைத் தாங்கும் இந்தப் பூமி, நம்மை விண்ணிலெழாமல் நம் கால்களை ஈர்ப்பு சக்தி என்ற சங்கிலியால் கட்டிவைத்திருக்கிறது. காற்றும் நீரும், நாம் உயிர் வாழ உதவும் அதே நேரத்தில் அவை கிடைக்காவிடில் இறந்துவிடுவோம் என்ற சுருக்கு கயிறை கழுத்தில் மாட்டி நம்மை கண்காணிக்கிறது. நெருப்பு,  நாம் தாங்கும் அதிக குறைந்த வெப்பநிலைகளை ஒரு கட்டுக்குள் வைத்து அதை தாண்டவிடாமல்  அந்த எல்லைக்குள் பூட்டி வைத்திருக்கிறது. ஆகாயம் நம்மை புவியென்ற சிமிழில் அடைத்துவைத்திருக்கிறது.

         இந்த ஐம்பூத சிறையிலிருந்து விடுதலையாகும் கனவை கந்தர்வர் உலகம் எனச் சொல்லலாம். கந்தவர்கள் இந்த ஐம்பூதங்களால் கட்டப்படாமல் இருக்கிறார்கள். அந்த உலகை வெண்முரசு ஒரு பொன்னோவியமாக தீட்டுகிறது. ஒருவேளை அந்த உலகம் நமக்கு போதுமானதாக இருக்குமா. அது கிடைத்தால் இது போதும் என  நாம் அமைதிகொண்டுவிடுவோமா?

     ஒரு சமயம் இரமணரிடம் பிரம்மலோகம் என்று இருக்கிறதாமே, இந்தந்த தவங்கள் செய்தால் அதை அடையலாம் எனச் சொல்கிறார்களே அதைப்பற்றி என்ன சொல்கிறீர்கள் எனக் கேட்கப்பட்டது. அதற்கு அவர், இருந்தாலென்ன, அங்கும்  என்னைப்போல் ஒருவர்  உட்கார்ந்திருப்பார், அவரை இன்னொரு லோகத்தைப்பற்றி சொல்லி எவ்வாறு போவது என  யாராவது ஒருவர் கேட்டுக்கொண்டிருப்பார். என்ன பெரிய வேறுபாடு இருந்துவிடப் போகிறது எனக் கூறியிருப்பார். (மன்னிக்கவும் எனக்கு சரியான வாக்கியம் நினைவில் இல்லை.)

   எந்த உலகம் சென்றாலும் நான் என்ற அகங்காரமும், எனது என்ற மமகாரமும் நம்மை அடைத்து வைத்திருக்கும் இந்த மனச்சிறையிலிருந்து நாம் விடுபட உதவுவதில்லை.  இப்பூவுலகு ஒரு சிறை என்றால் கந்தர்வ உலகம் இதைவிடச் சிறந்த சிறை. அவ்வளவுதான்.  சித்ரரதன் மனம் என்ற சிறையை உடைக்காதவரை கந்தர்வ உலகில் வாழ்ந்த வாழ்க்கைக்கும், அவன் இப்பூவுலகில் சிறு பூச்சியாக வாழும் வாழ்க்கைக்கும் பெரிதாக ஒரு வேறுபாடும் இருக்கப்போவதில்லை.  

தண்டபாணி துரைவேல்