Wednesday, September 23, 2015

சிறையிலிருந்து மேலும் சிறந்த சிறைக்கு


   நாம் எல்லோரும் நம் உலகைவிட சிறந்த வசதிகள் உடைய இன்னொரு உலகை கனவு காண்கிறோம். சொர்க்கம் அதுபோல ஒரு கனவுதான்.  இங்கிருக்கும் சங்கடமெல்லாம் இல்லாத ஒரு உலகம். ஆனால் அவை சில சம்யம் உண்மையாக இருப்பதும் உண்டு.    கற்பனை செய்த உலகங்கள்  கண்ணெதிரே உண்மையாய் ஆவதை  இவ்வுலகம் எத்தனை  முறை கண்டிருக்கிறது.  நூறு நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன் முன்னூறு மைல்களை சிலமணி நேரத்தில் கடப்பது என்பதும், எங்கோ இருக்கும் ஒருவருடன் இங்கிருந்தே பேச இயலும் என்பதும், எங்கோ நிகழும் நிகழ்வுகளை அக்கணமே இங்கிருந்து காண முடியும் என்பதும், பெருங்கடல்களை, கண்டங்களை விண்ணிலேறி தாவ முடியும் என்பதும் வெறும் கற்பனைகள் மற்றும் அந்தக் கால மனிதர்களின் கனவுகள் அல்லவா?  கொடு நோய்கள் குறைந்திருத்தல், காமத்திற்கான பெருந்தடையாக இருந்த கருவுருவாதலை தவிர்க்க இயல்வது, பெண்கள் அச்சமின்றி இந்த அளவிற்கு சமூகத்தில் வலம் வருதல்,  ஊர் மக்களை கூட்டம் கூட்டமாக அழிக்கும் போர்கள் பெருமளவு குறைந்திருத்தல், நீதி, சாதியின் பேரால், சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கு ஏற்ப, மாற்றங்கொள்ளாமல் அனைவருக்கும் பொதுவானதாக இருப்பது, ஓர் அரசின் அதிகாரபூர்வ உறுப்பாக ஒவ்வொரு குடிமகனும் ஆவது போன்றவை அந்தக்கால மனிதன் கனவுகண்ட சுவர்க்கம் அல்லவா?  சிந்தித்து பாருங்கள் கால இயந்திரத்தில் ஒருவன் அங்கிருந்து வருவானென்றால் இதை ஒரளவுக்கு சுவர்க்கம் என்று கருதமாட்டானா?    ஆனால் நமக்கு இவ்வுலகம் சுவர்க்கமாகத் தெரியவில்லை. நம்முள் இதைவிட்ட மேம்பட்ட  ஒரு சுவர்க்கத்தைப்பற்றிய கனவொன்று இருக்கிறது.

     இதையெல்லாம் தாண்டி இன்னும் ஒரு பெருங்கனவு ஆதி நாள்தொட்டு மனிதர்களுக்கு இருந்துவருகிறது. நாம் ஐம்பூதங்களால், ஆக்கப்பட்டு, காக்கப்பட்டு இருந்தாலும், அதே ஐம்பூதங்களால் சிறையிடப்பட்டும் இருக்கிறோம். நம்மைத் தாங்கும் இந்தப் பூமி, நம்மை விண்ணிலெழாமல் நம் கால்களை ஈர்ப்பு சக்தி என்ற சங்கிலியால் கட்டிவைத்திருக்கிறது. காற்றும் நீரும், நாம் உயிர் வாழ உதவும் அதே நேரத்தில் அவை கிடைக்காவிடில் இறந்துவிடுவோம் என்ற சுருக்கு கயிறை கழுத்தில் மாட்டி நம்மை கண்காணிக்கிறது. நெருப்பு,  நாம் தாங்கும் அதிக குறைந்த வெப்பநிலைகளை ஒரு கட்டுக்குள் வைத்து அதை தாண்டவிடாமல்  அந்த எல்லைக்குள் பூட்டி வைத்திருக்கிறது. ஆகாயம் நம்மை புவியென்ற சிமிழில் அடைத்துவைத்திருக்கிறது.

         இந்த ஐம்பூத சிறையிலிருந்து விடுதலையாகும் கனவை கந்தர்வர் உலகம் எனச் சொல்லலாம். கந்தவர்கள் இந்த ஐம்பூதங்களால் கட்டப்படாமல் இருக்கிறார்கள். அந்த உலகை வெண்முரசு ஒரு பொன்னோவியமாக தீட்டுகிறது. ஒருவேளை அந்த உலகம் நமக்கு போதுமானதாக இருக்குமா. அது கிடைத்தால் இது போதும் என  நாம் அமைதிகொண்டுவிடுவோமா?

     ஒரு சமயம் இரமணரிடம் பிரம்மலோகம் என்று இருக்கிறதாமே, இந்தந்த தவங்கள் செய்தால் அதை அடையலாம் எனச் சொல்கிறார்களே அதைப்பற்றி என்ன சொல்கிறீர்கள் எனக் கேட்கப்பட்டது. அதற்கு அவர், இருந்தாலென்ன, அங்கும்  என்னைப்போல் ஒருவர்  உட்கார்ந்திருப்பார், அவரை இன்னொரு லோகத்தைப்பற்றி சொல்லி எவ்வாறு போவது என  யாராவது ஒருவர் கேட்டுக்கொண்டிருப்பார். என்ன பெரிய வேறுபாடு இருந்துவிடப் போகிறது எனக் கூறியிருப்பார். (மன்னிக்கவும் எனக்கு சரியான வாக்கியம் நினைவில் இல்லை.)

   எந்த உலகம் சென்றாலும் நான் என்ற அகங்காரமும், எனது என்ற மமகாரமும் நம்மை அடைத்து வைத்திருக்கும் இந்த மனச்சிறையிலிருந்து நாம் விடுபட உதவுவதில்லை.  இப்பூவுலகு ஒரு சிறை என்றால் கந்தர்வ உலகம் இதைவிடச் சிறந்த சிறை. அவ்வளவுதான்.  சித்ரரதன் மனம் என்ற சிறையை உடைக்காதவரை கந்தர்வ உலகில் வாழ்ந்த வாழ்க்கைக்கும், அவன் இப்பூவுலகில் சிறு பூச்சியாக வாழும் வாழ்க்கைக்கும் பெரிதாக ஒரு வேறுபாடும் இருக்கப்போவதில்லை.  

தண்டபாணி துரைவேல்