Wednesday, June 28, 2017

மாயை






வெண்முரசு நீர்க்கோலத்தில் அடுமனையில் நிகழும் காட்சிகள் அதிர்ச்சியூட்டின. எதிரபாராதது ஏதோ ஒன்று நடக்கப்போகிறதென்று தோன்றிக்கொண்டே இருந்தது. ஆகவேதான் அந்த நடைமுறைகளை எல்லாம் ஒருவகையான பதற்றத்துடனேயே வாசித்துக்கொண்டிருந்தேன். ஆனால் அது நடந்தபோது அதிர்ச்சி அடைந்தேன்

அசட்டுத்தனமான விஷயங்களும் சில்லறை விஷயங்களும் இணைந்து மிகப்பெரிய விஷயங்களை நோக்கி நம்மைக் கொண்டுசெல்கின்றன. வாழ்க்கையில் இதைப்பார்த்துக்கொண்டே இருக்கிறோம். இதைத்தான் ஊழ் என்றும் மாயை என்றும் சொல்கிறோம்

செல்வக்குமார்

அடுமனைக்கூட நிகழ்வுகள்



பெருமதிப்பிற்குரிய ஜெமோ. அவர்களுக்கு,

வணக்கம்.

இன்றைய வெண்முரசில் -நீர்க்கோலம்’ – 34- அடுமனைக்கூட நிகழ்வுகள்  எவரும்  எதிர்பார்க்க முடியாத திருப்பமாக உள்ளது.வழக்கமாக 'பந்தி சண்டை'தான்,சாமான்ய உறவுகளின் நிரந்தர பிரிவுக்கு முதற் சுழி போடுவது.இருந்தபோதிலும் இது எளிதில் யாராலுமே ஏற்க இயலாதது.அதுவும் நளனால் ஒருபோதும் தாங்கி கொள்ள முடியாது .அதனால்தான்  அன்னத்தை  பழிப்பது அன்னையை பழிப்பதைவிட மேல் என உணர்ந்து  இக் கொடும் தண்டனையை உடன் அளித்தான்.''நள பாகத்தின்"மற்றொரு சுவையை அனைவரும் அறிய நேர்ந்தது.உங்களின் கற்பனைத்திறன் எனும்
 
 "நள பாகத்திற்கும்"   ஈடு இணையில்லை!.

அன்புடன்,

அ .சேஷகிரி .

வெண்முரசு கூடுகை




பிாிய நண்பா்களுக்கு,
 
                                      இந்த மாதம் வெண்முரசு (சென்னை) கூடுகையில் முதல் முறையாக கலந்துக்கொண்டது மிக்க மகிழ்ச்சியையும்,நிறைவையும் அளித்துள்ளது.  சொல்புதிது குழுமத்தில் மட்டுமே அறிந்தவா்களை நோில் சந்தித்தது மகிழ்ச்சியுட்டுவதாக இருந்தது.  நாம் படித்த விருப்பமான புத்தகங்களை பற்றி பேசுவதற்கும் விவாதிப்பதற்கும் சாியான நபா்கள் அமைவது, மணவாழ்வின் துணை அமைவதற்கு சமம்.  ஏனென்றால் சாியாக அமையாவிட்டால் மேற்கொண்டு நாம் அதில் பயணம் செய்ய இயலாமல் போய்விடும்.  மாமலரின் போக்கும் சாரமும் அதன் மையமான பீமனின் தேடலும் மெய்மையும் விரிவாகவே பேசப்பட்டது.  இன்னும் மாமலரை வாசிக்காத எனக்கு ஆா்வத்தையும் உத்வேகத்தையும் அளித்துள்ளது.  பொதுவாகவே கதைகளை பற்றி பேசுவதற்கு ஆா்வமாகவே இருந்துள்ளேன். ஆனால் அது மிக நெருங்கியவா்களுடன் மட்டுமே. மற்றவர்களிடம் பேசுவதற்கு சொற்கள் கூடாது. ஏனென்றால் கதைகள் அந்தரங்கமானவை என்று எண்ணுபவள் நான். கதையின் மையம் என்றும் ஓன்றுதான், ஆனால் வாசிப்பவனின் மனம் அதில் தனக்கான ஓன்றை அடையும் அது அவனை வெகு ஆழத்திற்கு இட்டு செல்லும்.  முதல்முறையாக ஒரு கதையை வாசிக்கமாலேயே அதைபற்றிய ஒரு உரையாடல் வழியாக நான் எனக்கானவற்றை அடைந்துள்ளதாக உணா்கிறேன். உரையாடிய அனைவா்க்கும், அன்புடன் திண்பண்டங்களை பகிா்ந்து பாிமாறி, செவிக்கு மட்டுமல்ல வயிற்றுக்கும் ஈய்த அன்பு உள்ளங்களுக்கும் மிக்க பிாியமுடன் கூடிய நன்றிகள்.  அடுத்த வெண்முரசு கூடுகைக்காக இப்போது இருந்தே ஆவலுடன் காத்திருக்கிறன்... நன்றி.

தேவி. க
ஆவடி.

பீம பாகம்



லோகமாதேவி,

பீம பாகம் என்பது பெரிய அளவில் சமைப்பதைக் குறிக்கும். பீம என்றால் பெரிய என்ற பொருள். எனவே தான் விருகோதரன் பீமன் என்றும் அழைக்கப்படுகிறான். பிரயாகையில் கடோதகஜனை (பானை மண்டையன்) குந்தி (அவள் மட்டும் தான்) 'பைமி' என்று அழைப்பதின் இன்னொரு அர்த்தம் அளவில் பெரியவன் என்பதே.

அருணாச்சலம் மகராஜன்

நளபாகம் பீம பாகம்



பீமன் அன்னம் உண்பதும், அடுமனையில்  சமைப்பதும்  வாசிக்க  அத்தனை அருமை. அதிலும் அந்த  இளங்காற்று வந்து சுழன்று செல்வதும்  நெருப்பு இதழ் இதழாக மேல் எழுவதும்,குரங்குகள் முதலில் சாப்பிடுவதும் அழகு.அந்த சமயத்தில் பீமனை ஒரே ஒருவர் அடையாளாம் கண்டு கொள்வதும் அருமை
.. 
 
சிறிய அளவில் சமைப்பதற்கும் அதே பொருளை அதிக அளவில் சமைப்பதற்கும் இருக்கும் வேறுபாடு ஆச்சரயமளித்தது  ஆனால் நளபாகம் பீம பாகம் என்று சொல்கிறரே, இப்போது வந்திருப்பது பீமன் என கண்டு கொள்ள மாட்டார்களா இப்படி சொல்கையில்? . குருதியை ஏன் நளன் உண்விலிருந்து ஏன் விலக்கினார் என்பதற்கும் ஆச்சர்யம் அளிக்கும் விளக்கம்.
பலராமர், துரியோதனர், பீமன் இவர்கள் மூவரையும் அங்க நாட்டரசர் கர்ணர் வெல்லலாம் என பீமன் சொலவதை வாசிக்கையில் உடல் மெய்ப்பு கண்டது.பீமனுக்கு கர்ணன் மேல் எத்தனை வெறுப்பு இருந்தாலும் அவன் பிறப்பு குறித்த சந்தேகம் இருந்தாலும் அவன் வீரத்தில் என்றும் நல்ல மரியாதை இருக்கிறது அதை மதிக்கத்தெரிந்த வீரன் பீமன்.
 
 
இளைய யாதவனின் வீரம் பற்றி சொல்கையில் குழந்தைகளின் விளையாட்டை உதாரணமாக்கி அவனை தீராத விளையாட்டு பிள்ளை என்றும் அவன் கைகளின் விரைவையும் அழகாக சொல்லுகிறார். இந்த மாற்றுருக்கொள்வதை சொல்லும் சில அத்தியாயங்களிலேயே சமையல் மற்போர் நடனம் குதிரைகள், சகதேவனின் கணித்தல், இருபாலினம் என பல விஷயஙகளை ஆழமாக அழகாக சொல்லி இருக்கிறார்

 லோகமாதேவி,

Tuesday, June 27, 2017

மற்றுரு



ஜெ,

நீர்க்கோலம் 3ல் வரும் மற்றுருக்களைக் கண்டடையும் இடம் மிகவும் நுட்பமானது.

நாம் அன்பு செய்வோர் மீது நாம் கொள்ளும் வெறுப்பு நாமே அஞ்சக் கூடியது. அது அவர்கள் மீது நாம் அன்பு கொள்வதனால் அவர்களுக்காக நாம் எதையும் செய்யத் துணிவதனால், நம்மால் நிகர் வைக்கப்படுவது.அது வெளிப்படும் போது அதன் வீச்சும் அளப்பரியது.

சகாதேவனை வெறும் கணியன் என்றழைத்து குருதியினைக் குடிக்கத் துவங்குகிறாள் திரௌபதி. முதலிரவின் அறையிலேயே இருவரும் நிமித்த நூல்களைப் பற்றி, அஜபாகனைப் பற்றித் தான் பேசினர். அவன் இயல்பிலேயே பெருங்கணியன் என்றுணர்ந்து பேச்சை எளிதாக்கும் பொருட்டுத் துவங்கிய உரையாடல் இருவருக்கும் அதிலிருந்த விருப்பு காரணமாகத் தொடர்ந்து வளர்ந்தது. அவனை வெறும் ஒரு கணியன் என்று திரௌபதி கூறுகிறாள். சிறு தயக்கத்திற்கு அப்பால் அவனுக்கும் அதில் பெரிய குறையொன்றும் இல்லை. தருமனைப் பார்த்து அறிஞன் ஆனவன் அவன். ஒரு வகையில் தருமனின் நிழல். ஒரு வகையில் இது அவனுக்கு மகிழ்ச்சி தரக் கூடியது தான்.
நகுலனுக்கு பீமன் குதிரைச் சூதன் வேடத்தைத் தருகிறான். சாணியள்ளிக் கொட்டிச் சவுக்கை உயர்த்தும் முன்பே உடல் குறுக்கும் எளியவன். கர்ணனை வெகுளச் செய்ய பீமன் சொன்ன கடும் சொற்கள் தான் இவை. ஆனால் இது கர்ணனின் குணம் அல்ல. ஒருபோதும் சவுக்குக்கு முன்பு குறுகும் தோள்கள் அல்ல அவனுடையது. அதிரதனிடமும் அவன் கூறுவது அதுவே. என்னதான் அவன் புரவிச் சூதனாய் இருந்தாலும் அவன் வெறுக்கும் குணம் இது. சிறுவயதில் கர்ணன் குந்தியால் நகுல சகாதேவன்களுக்கு காப்பாய் நியமிக்கப் பட்டபோது நகுலன் கர்ணன் மீது கொண்ட மதிப்பை அழித்த சொற்கள் இவையென்பதால் தான் சினம் கொள்கிறானா நகுலன்? பின் உடனே பழிதீர்ப்பதற்கு பீமனைக் கீழ்மை செய்கிறான்.

துரியோதனை பீமன் கடப்பதே குரங்குத் தன்மையினால் தான். ஒரு காட்டாளனாய் கட்டற்றுத் தன்னை முன் வைக்கும் போதே விடுதலை கொள்கிறான் பீமன். அவன் வஞ்சம் கொண்டு செய்யும் பெரும் பிழைகளையும் காட்டாளன் என்னும் வேடம் கொண்டு தான் கடக்கிறான். ஜெயத்ரதனை அவன் மாமலரில் சிறுமை செய்தபின் காட்டாளனும் செய்யாத கீழமையென அவன் புலம்புவது அதனால் தான். அனால் துரியோதனன் செம்மையே உருவானவன். இயல்பிலேயே கீழ்க்களியாட்டங்களில் ஈடுபடாதவன். பெண்கள் முன்பு நாணிழந்து ஆடை கழற்றி வெற்றுடல் காட்டி மகிழும் கீழோன் என்பதே அவனை துரியோதனனை விட கீழிறக்குறது. அதனாலேயே அவன் சினக்கிறான். பின் அதில் உள்ள உண்மையை அறிந்து அமைதியாகிறான். வஞ்சத்தைச் சுவைத்து குருதி குடிக்க கிடைக்கவிருந்த மெய்மையைத் துறந்து வந்தவன் தானே அவன். எதிர்பாராத இடத்தில் இருந்து வரும் நகுலனின் வஞ்சத்தையும் சுவைக்கட்டும்.

திரௌபதியும் தர்மனும் ஆடும் ஆடல் இன்னும் சுவாரசியமானது. திரௌபதியை தர்மன் வெறும் வேலைக்காரி என்கிறார். பிறந்தது முதல் பாரதவர்ஷத்தின் பேரரசியென வாழ்ந்தவளை பணிப்பெண்ணாக ஆக்குவதும் ஒருவகையில் இதுவரை அவளை தர்மரால் வெல்ல முடியாததால் தான். கோபம் கொப்பளித்தாலும் அதை அடக்கும் திரௌபதி, அதை விட பல மடங்கு வேடத்தில் திருப்பி அடிக்கிறாள். பிறந்தது முதலே ஒரு பேரரசனின் தலைமீது கால் வைத்து வாழ்ந்தவர் தர்மர். ஒவ்வொரு சொல்லும் செயலும் நெறியின் படி மட்டுமே செய்ய முடிந்தவர். அவர் விழைவது அறச்செல்வன் என்னும் பெருமையை. அந்த பெருமையைக் குலைக்கும் எதையும் கனவிலும் செய்ய இயலாதவர். ஆனால் அவர் ஆழுள்ளம் விழைவது உலகம் அவருக்கு அளித்த, அவர் விருப்புடன் அனுபவிக்கும் அந்தச் சட்டகத்தை மீறுவதாகத் தானே இருக்க முடியும்?

இந்த உரையாடலின் சிகரம் அர்ஜுனன் தன் மாற்றுருவை ஏற்றுக் கொள்வதுதான். அர்ஜுனனின் உருவைத் தேர்வு செய்யும் வாய்ப்பு முதலில் தர்மருக்குத் தான் வருகிறது. ஆனால் தருமர் அவனை பேடியாகச் சொல்லுவதற்கு  அஞ்சுகிறார். அவரும் அஞ்சும் நினைவல்லவா பாண்டு ஒரு பேடி என்பது. பின் திரௌபதி தருமர் மறுத்த வாய்ப்பினை உவகையுடன் ஏற்றுக்கொள்கிறாள். மணந்த நாள் முதல் அர்ஜுனனை வெல்ல முடியாததை மாற்றும் நோக்கத்துடன், அவனைக் கடுஞ்சினம் கொள்ள வைக்க முயன்று தான் ஆணிலி வேடம் கொள்ளுமாறு கூறுகிறாள். கிருஷ்ணன் இதைச் சொன்னதற்குத் தான் நாற்றிசையையும் வென்று பாசுபதத்தையும் பெற்று வந்தான் அர்ஜுனன். ஆனால் கிருஷ்ணை சொன்னதற்கு புன்சிரிப்புடன் ஆம் என்கிறான், அவளை இன்னுமொரு முறை தோற்கடித்து. தன் மாற்றுருவை மகிழ்வுடன் ஏற்கும் ஒரே பாத்திரம் அர்ஜுனன் தான். எல்லாரும் மாற்றுருவை ஒரு சுமையென ஒரு கீழமையென சூடுகின்றனர். ஆனால் அதுவும் தானே என்றுணர்ந்து அதுவாகவே ஆகிறான் அர்ஜுனன். அவன் பெற்ற பாசுபதம் தானே அம்மனநிலை.

ஐயமே இல்லாமல் இந்தப் பகுதி வெண்முரசின் சிகரங்களுள் ஒன்று. பாதி அத்தியாயத்தில் இதுவரை நடந்த அனைத்திற்கும் நியாயம் செய்யப் படுகிறது.
மாறா பிரமிப்புடன்,

செந்தில்நாதன். 
.