Friday, February 23, 2018

நாகம்



ஜெ

கர்ணனிடம் பேசும் துரியோதனனின் நுட்பமான வார்த்தைவிளையாட்டு வியப்பு அளித்தது. துரியோதனனிடம் இத்தகைய நஞ்சுப்பேச்செல்லாம் இருந்ததே இல்லை. அவன் முன் கணிகரும் சகுனியும் கூட சின்னவர்களாக ஆகிவிட்டார்கள். அவன் பாண்டவர்களின் நலனை குந்தி கைவிட்டதைப்பற்றித்தான் மேல்பார்வைக்குப் பேசுகிறான். ஆனால் குந்தி கர்ணனை கைவிட்டதைப்பற்றித்தான் குறிப்பிடுகிறான். பேசப்படாத அந்தப்பேச்சை எதிர்கொள்ள கர்ணனால் முடியவில்லை. பொருள் கொள்லவேகூட அவன் மூளைக்கு ஆற்றல் இல்லை. உடைந்து விழுந்து குடித்து ஓய்ந்துபோகத்தான் முடிகிறது துரியோதனன் வாலை ஆட்டிக்காட்டிக்கொண்டே தலையால் கொத்தும் பாம்பு போல இருக்கிறான்


மகேஷ்

கர்ணனின் நிலை


ஜெ

கர்ணன் அவன் உள்ளத்தால் மிகத்தளர்ந்த நிலையில் இருக்கிறான். கோர்வையாகச் சிந்திக்கவும் முடியவில்லை. இயல்பாகவே அவனுக்கு சூழ்ச்சித்திறனும் இல்லை. துரியோதனனோ எல்லா தீய ஆற்றல்களையும் உச்சத்தில் கொண்டவனாக இருக்கிறான். கணிகரும் சகுனியும் உடனிருக்கிறார்கள். அவனை சூழ்ந்துகொண்டு வீழ்த்திவிடுவார்கள் என்றுதான் நான் நினைத்தேன். ஆனால் அவனை அவர்கள் வீழ்த்தும் விதம் பரிதாபமாக இருந்தது. அவனால் ஒன்றுமே செய்யமுடியவில்லை. தன் கோபத்தைக் கொட்டியதுமே தடுமாறிவிடுகிறான்.  கர்ணனை இத்தனை பரிதாபமாக இதற்கு முன்பு பார்த்ததே இல்லை என நினைக்கிறேன்


ராஜ் 

ஆகுதி



அன்பு ஜெ,

    
அவிரதனின் தந்தை பல மன உளைச்சலுக்குப் பிறகு , தன் மகனை அதர்வவேள்விக்கு ,அர்ப்பணிக்க முடிவெடுத்து , உக்ரருடன் உடனனுப்ப சம்மதித்து ,அவனுடன் உசாவி , வேத அர்ப்பணிப்பின் அர்த்தத்தை உணர்ந்தாயா ! என்று விளம்ப , ஆம் ,தெரியுமென்றே கூறி புறப்படுகிறான்.

         
அதன் பிறகு தன் சக மாணவனான பௌர்வனனிடம்  உரையாடிய போதும் , அவனுடைய அஞ்சாமை இவனுக்கு முதலில் ஆச்சர்யத்தையும் , பிறகு அவன் மனம்கிளர்ந்து யெழுந்திருப்பதே  அதன் காரணம் என்பதை ,அவன் யூகித்தறிவதை திறன் பட ,வேறுபாட்டுடன்  உரையிட்டுள்ளீர்கள்.தானும் பயப்படாமைக்கு ,மனக்கிளர்வே காரணமாக அமையயிருப்பதை , அவன் உணர்வதையும் சுட்டி யுள்ளீர்கள்.

         
எல்லோருக்கும் மரணபயம் என்பது அசைந்து க்கொடுக்கும் உணர்வே ஆகும். எனினும்  , ஆகுதித் தேர்ந்தெடுப்பின் போது ,அதைப் பற்றி முன் கூட்டியே தெரியாததுப் போன்ற ,அவிரதனின் மனப்பான்மையானது,சற்றே முரனுறுவதுப்போல் தோன்றுகிறது.

          
எல்லாவற்றுக்கும் மேலாக அங்கீரசரின் குலக்காப்பு என்ற அந்த நுண்சொல்லும் நினைவுறுத்துக்கிறது.வேள்வி யின், அவி ,தேவர்களால் ஏற்றுக்கொளப்படாவிடின் ,நேரப்போகும் எதிர்வினைகளாக ,வரப்போகும் ,குருதிச்சாரலின் வீச்சு ,வெண்முரசையே அதிரவைக்கபோவது உறுதி.

அன்புடன்,
செல்வி அழகானந்தன்
கடலூர்.

சிறிய கதாபாத்திரங்கள்



ஜெ

சில சிறிய கதாபாத்திரங்கள் மிக எளிமையாக முடிந்துபோவது அவ்வப்போது ஒர் அதிர்ச்சியை அளிப்பது. உதாரணம் சரபை. அவள் வெய்யொனில் வரும் கதாபாத்திரம். அவளுக்கு சண்முகவேல் ஒரு நல்ல படம் வரைந்திருந்தார். அவளைத்தான் சுஜாதன் அதட்டி மிரட்டினான். அந்தச்சம்பவத்திற்குப்பின் என்ன நடந்தது என்பது இந்நாவலில்தான் வருகிறது.

அந்த ஆழ்குகைக்குள் கிடக்கும் பெண் யார்? அது சரபை என்றும் தோன்றியது. சுப்ரியையேதான் என்றும் தோன்றியது. அதிலிருந்து அவள் விடுபட்டு மேலெழுந்துவிடுவதுதானே இப்போது வந்துகொண்டிருப்பது

இப்போதுள்ள சபரி மிக மெட்டீரியலிஸ்டிக் ஆன ஒரு சாதாரணமான பெண். ஒன்றுமே புரிவதில்லை. ஒவ்வொரு சேடியும் ஒவ்வொரு மாதிரி இருக்கிறார்கள். எதிர்மறையானவர்கள். நுட்பமானவர்கள். குத்திக்கிழிப்பவர்கள். என்ன ஏது என்றே புரியாத சபரி மாதிரியான பெண்கள். ஒவ்வொருவரும் ஏன் அந்த அரசியரால் தேர்வுசெய்யப்படுகிறார்கள் என்பதுதான் முக்கியம் என நினைக்கிரேன்


மகாதேவன்

அணிச்சேவகர்கள், ஆணிலிகள்



ஜெ

வெண்முரசின் நீராட்டறைச் சேவகர்கள், அணிச்சேவகர்கள், ஆணிலிகள் ஆகியோரைப்பற்றித் தனியாக எழுதவேண்டும். அந்த வரிசையில் முக்கியமானவர் அர்ஜுனனுக்குக் காமத்தை உபதேசம் செய்பவர், மழைப்பாடல் நாவலில்.


அவர்களில் சூக்‌ஷ்மை முக்கியமான இடத்தை வகிக்கிறாள். அவளுடைய நுட்பமும் ஞானமும் ஆச்சரியப்படவைக்கின்றன. அவள் கவிதையிலிருந்து பெற்றுக்கொள்ளும் பித்தும் வேதம்பற்றிச் சொல்லும் இடமும் அபாரமானவை. வேதம் முழுமையாக பிரம்மத்தைச் சொல்லமுடியாத இடைவெளியில் வேதாங்கங்களைப்போட்டு நிரப்புகிறது, அப்பொதும் அந்த இடைவெளி அங்கேயே உள்ளது என்பது ஓர் அற்புதமான சொற்றொடர். அவள் சொல்லும் ஒவ்வொரு வரியும் அதேபோல. கவிதையை யானைவிழி என்கிறாள். மொழியை விட மனித உடல் நுட்பமாகப் பேசுகிறது என்கிறாள்.அந்த உரையாடலே அழகியது

ஆனால் வெண்முரசு நீராட்டறைக்காரர்களை மட்டுமே இப்படி நுட்பமானவர்களாகக் காட்டுகிறது. அவர்களெல்லாருமே படித்திருக்கிறார்கள். அடுமனைக்காரர்கள் பெரும்பாலும் அறிவில்லாத மோட்டா ஆட்கள். காவலர்கள் எதுவுமே புரியாமல் பேசுபவர்கள். இன்றுவரை ஒரு புத்திசாலிக்காவலன் கூட இந்த நாவல்வரிசையிலே வரவில்லை.எவருக்குக் கல்வி அளிக்கவேண்டும், எவருக்கு அளிக்கக்கூடாது என்ற கணக்கு அவ்வாறு இருந்ததா என்ன?


மகாலிங்கம்

Thursday, February 22, 2018

அலைகளில் திரள்வது -சத்ரியர் நிலை



இனிய ஜெயம் 

இத்தனை பிரும்மாண்டமான நாவல் எத்தனை நேர்த்தியான ஒழுங்குடன் ,அதன் ஒவ்வொரு அலகும் பிறிதொரு அலகுடன் முழுமையாக இணைந்து முயங்கி ,இந்த பெரும் புனைவின் தரிசன ஆழத்துக்கு வளம் சேர்க்கின்றது என்பதை ஒவ்வொரு முறையும் அறிய நேர்கையில் ,ஒரு கணம் உள்ளே உருவாகும் சிலிர்ப்பு ,எந்த இலக்கிய வாசிப்பு அளிக்கும் உவகையை விடவும் மேலான ஒன்றாக இருக்கிறது .

இதோ மழைப்பாடல் துவக்கத்தில் சூதர் பாடலில் வரும் சித்திரம் . துரியன் பேருருவமாக உயர்ந்து அறம் கொல்லும் சத்ரிய சபை  இதுதானே . 

//
பரசுராமன் சென்றடைந்த இடம் அஸ்ருபிந்துபதம் என்றழைக்கப்பட்ட நிலம். அங்கே பளிங்குத்துளிகளே மணலாக மாறி சூரியனின் ஒளியில் கண்கூச மின்னுவதை அவன் கண்டான். அந்நிலம் வெம்மையானது என்று எண்ணி அவன் பாதங்களை எடுத்து வைத்தபோது அவை குளிர்ந்து பனிபோலிருப்பதை உணர்ந்தான்.
அவற்றில் ஒன்றை எடுத்து தன் நெஞ்சோடு சேர்த்து ‘பளிங்குமணிகளே, நீங்கள் எவர் என’ அவன் வினவியபோது அது விம்மியழுதபடி ‘நாங்களெல்லாம் அழியாத கண்ணீர்த்துளிகள்…. மண்ணில் ஷத்ரியர்களின் அநீதியால் வதைக்கப்பட்டவர்களால் உதிர்க்கப்பட்டவர்கள். அவர்களின் அகம் அணையாமல் எங்களுக்கு மீட்பில்லை’ என்றன.
சினத்தால் விரிந்த கண்கள் செவ்வரி ஓட ‘அறத்தைக் காக்கும் ஷத்ரியன் என எவரும் இல்லையா?’ என்றான் பரசுராமன். ‘உத்தமரே, அறம்காக்கும் மன்னர்களெல்லாம் அழிந்துவிட்டனர். மன்னனின் மீட்பென்பது அறத்தால். அறம் திகழவே மக்கள். மக்கள் வாழவே மண். மண் காக்கவே அரசு. அரசை முதன்மையாகக் கொள்ளும் ஷத்ரியன் அறத்தை இழக்கிறான். அறம் மறந்த மன்னனின் அருகமரும் மன்னனும் அறத்தை இழக்கிறான். ஷத்ரியகுலமே பாற்கடல் திரிந்ததுபோல் ஆயிற்று’ என்றது கண்ணீர்த்துளி.//
பெண்களை கவர்ந்து வரும் சத்ரிய கடமை முடித்து ,பெண் சாபம் பெற்று ,சூதர் வசம் இந்த கதைகள் எல்லாம் கேட்டு விட்டே பீஷ்மர் பாரத யாத்திரை கிளம்புகிறார் .
கேட்ட கதை அவர் கண் முன்னால் நிகழ்ந்து அந்த சபையில் அவர் வாளாவிருக்கிறார் .
பரசுராமன் சொன்னது 
// அழியாத துயரே, ஒன்று தெரிந்துகொள். ஆற்றாது அழுத கண்ணீர் யுகயுகங்களை தன்னந்தனியாகக் கடந்துசெல்லும். தனக்கான வாளையும் வஞ்சினத்தையும் அது கண்டடையும்.//

ஆம் அந்த சபையில் துரியன் உள்ளிட்டு அவன் சொல் பின்னால் அமைதி காத்த அத்தனை உலுத்தர்களும் உடல் கிழிந்து ,குருதி சிதறி மடிய வேண்டிவர்களே .  விதி அல்ல .அது நியதி .தெரிந்து தொட்டாலும் தெரியாமல் தொட்டாலும் நெருப்பு சுடும் .இது விதி அல்ல .இயற்க்கையின் நியதி .  அறமும் நெருப்பே .

கடலூர் சீனு