Monday, February 18, 2019

கருபுகுதல்-3


அன்புள்ள ஜெ

ஜெயத்ரதனின் கருபுகுதல் பற்றி சொல்லப்பட்டிருப்பவை சரியான வாசிப்பு என்றே நானும் நினைக்கிறேன். நாக உலகம் ஆழ்ந்திருக்கிறது. மண்ணுக்குள் இருக்கிறது. மண்ணுக்குள் வேர்வடிவில் தாவரங்கள் இருப்பதுபோல மனிதர்கள் கருவுலகில் இருக்கிறார்கள். எண்ணங்கள் ஆழ்மனதில் இருக்கின்றன. ஆகவே கருவுலகம் நாக உலகமாகக் காட்டப்பட்டுள்ளது

கருவுலகிலிருந்து ஜெயத்ரதன் காணும் காட்சிகளும் முக்கியமானவை. அங்கே ஒரு தெய்வம் இருக்கிறது. அதன்பெயர் உபப்பிராணன், அது முக்கியமான ஒரு க்ளூ என நினைக்கிறேன்

கே. ராதாகிருஷ்ணன்

விகர்ணனின் இறப்பு




அன்புள்ள ஜெ

விகர்ணனின் இறப்பு ஓர் அதிர்ச்சி. அதை வகுத்துக்கொள்ளவே முடியவில்லை. அவன் செத்தாகவேண்டும். இல்லாவிட்டால் அவன் சொன்னதெல்லாம் உயிர் தப்புவதற்காகச் சொன்னது என்றுதான் கருதப்படும். அவன் சபையில் துரியோதனனை கண்டித்த ஒரேகாரணத்தாலேயே மூத்தவன் தரப்பில் நின்று போராடி உயிர்விட்டிருக்கவேண்டும். அதை அவன் செய்கிறான். ஆனால் அவனை பீமன் கொல்வது பெரும்பிழை. ஆனால் அவனாலும் கொல்லாமலிருக்க முடியாது. ஏனென்றால் நூற்றுவரையும் கொல்வேன் என அவன் சபதம்பூண்டிருக்கிறான். அந்தச் சபதத்தை எடுக்கையில் அவன் விகர்ணன் பற்றி நினைத்தானா? ஆனால் அவன் கையால் விகர்ணன் சாகிறான். விதியின் தருணம் இது. மனிதர்கள் கையறுநிலையை அடையும் இடம். இந்தவகையான நுண்மையான இக்கட்டுகளை நாம் கிளாஸிக்குகளில்தான் பார்க்கமுடிகிறது

ராம்


தர்மக்ஷேத்திரம்


ஜெ

புராண உபன்னியாசங்களில் பகவத்கீதையின் முதல்வரியான தர்மக்ஷேத்ரே குருக்ஷேத்ரே என்னும் வரியை பலவாறாக விளக்குவார்கள். குருக்ஷேத்திரம் ஒரு போர்க்களம். அது எப்படி என்றவரியைத் தொடர்ந்துஆகமுடியும்? அங்கே தர்மம் ஜெயித்ததனால் அது தர்மக்ஷேத்திரம் என்று சொல்வார்கள். பொதுவாக அதுதான் அனைவரும் அளிக்கும் விளக்கம்

வெண்முரசு குருக்ஷேத்திரத்தை ஒருவகையான வேள்விச்சாலையாக ஆரம்பம் முதலே சொல்லிக்கொண்டிருக்கிறது. அங்கே இறப்பவர்கள் ஆகுதியாகிறார்கள். அங்கே வாழ்பவர்கள் நாள்தோறும் தூய்மையாகிக்கொண்டே செல்கிறார்கள். எல்லாவகையான மயக்கங்களும் அழிந்து மனிதர்கள் அப்பட்டமாக நின்றிருக்கும் இடம் அது

குருக்ஷேத்ரம் பல்லாயிரம் ஆத்மாக்களை விடுவிக்கும் மாபெரும் தவச்சாலையென ஆகியிருக்கிறது.என்றவரியைத் தொடர்ந்து அங்கே என்ன நிகழ்ந்தது என்று சொல்லப்பட்டுள்ளது

அவர்களின் உள்ளம் எல்லைகளை அழித்துக்கொண்டு கலந்தது. கலமே தான் என எண்ணும் மாயையை உதறிய நீர் வானமெங்கும் பரவியது. கொல்லப்படுபவன் கொல்பவனும் தானே என ஆனான். வீழ்ந்தவனில் இருந்து எழுந்து கொன்றவனில் குடியேறி இறங்கினான். நேற்று இன்றுகள், இங்கு அங்குகள், இது அதுக்கள் இயல்பழிந்தன. எங்கும் நிகழும் ஒன்றே அனைத்தும் என நின்றது என்றும் நிகழும் அது.

அப்படி அங்கே பிரம்மம் எழுந்ததனால்தான் அது தர்மக்ஷேத்திரமாக ஆகியிருக்கிறது

சுவாமி

குருதிமணம்



ஜெ

சாத்யகி துரோணருடன் போரிட்டுவிட்டு திரும்பி வரும்போது தன்னுடைய ரத்தத்தின் மணத்தைத்தான் உணர்கிறான். அது அறிமுகமான மணமாக இருக்கிறது. ஒரு கணத்தில் அது அவனுக்குத் தன் மகன்களின் மணமாகத் தெரிகிறது. அதிலிருந்து அவன் வெறிகொண்டு எழுகிறான். உக்கிரமான ஒரு கவிதைப்போலிருந்தது இந்த இடம். தன் ரத்த மணத்தில் தன் பிள்ளைகளின் மணத்தை ஒருவன் நினைவுறுதல் என்பதை நினைத்து நினைத்து ஆச்சரியப்பட்டுக்கொண்டிருக்கிறேன். வெண்முரசின் உச்சமான நுட்பங்களில் இந்த இடமும் உண்டு

ராஜேந்திரன் எம்

களம்



அன்புள்ள ஆசிரியருக்கு,

ஒரு மனிதனின் மரணத் தருவாயில் அவன் வாழ்க்கை மொத்தமும் அவன் கண் முன் ஓடும் என்பார்கள். 

இந்தப் போர்க்களத்தில் நாம் ஓரளவு அறிந்தவர்களின் மரணங்கள், நாம் அறிந்த அளவுக்கு அவர்களது வாழ்வை நினைவூட்டுகிறது. அப்படிப் பார்க்கையில் நாமும் ஒவ்வொரு முறையும் இறந்து இறந்து பிறக்கிறோம். அத்தனை இறப்பிலும் நாமும் பங்கு பெறுகிறோம். உத்தரனில் துவங்கியது அது.

அந்த குரூரமான வலியைத் தாள இயலாமல் தான் ஜெமோ பயணங்கள் சென்று தன்னை நிலைப்படுத்திக் கொண்டு வந்தார்.

இன்றைய சலனின் மரணத்தில், அவன் பூரிசிரவஸிடம் பால்ஹிக நாடு வளர வேண்டிய அவசியத்தையும் அதற்காக வகுக்கும் திருமண வியூகங்களும் நினைவுக்கு வந்தன. ஆனால் இன்று ஏன் இவர்களது போரில் மலைமக்களான தாம் பங்கேற்க வேண்டும் என்ற மனநிலைக்கு வந்து விட்டான். 

இரு காரணங்கள். ஒன்று, அவன் அன்றிருந்த இளையவன் இல்லை. முதியவன் ஆகி விட்டான். எனவே இயல்பாக 'இதெல்லாம் போதும்' என்ற மனநிலை. வயதானபிறகு இங்கு எதிலும் ஈடுபாடு இல்லாத போது மனம் மரணத்தைப் பற்றி சிந்திக்கத் துவங்குகிறது. மூத்தோர், முன்னோர் என்று கவலைகள் வருகின்றன. திருதராஷ்டிரரும் ஒருமுறை அதையே சொல்கிறார்.

இரண்டாவது, போர் செல்லும் பாதை. அவர்கள் எதிர்பார்த்தது போல் எளிதாக முடியவில்லை. வெற்றியும் தோல்வியும் மாறி மாறி ஆனால் இழப்புகளுடன் வருகின்றன. எளிய வெற்றி தான் என்று எண்ணியவர்கள் என்பதால் ஏற்படுகின்ற இழப்புகள், பேரிடிகளாக இவர்களுக்குத் தெரிகின்றன. எனவே முன்பு சத்ரியர்கள் நினைத்தது போல் 'போதும். வெளியேறி விடலாம்' என்று எண்ணுகிறான்.

மேலும் இழுத்துக் கொண்டே போகும் போரின் சலிப்பு. அந்த சலிப்பே இல்லாமல் இருப்பவன் அந்தப் போர்க்களத்திலேயே ஒருவன் தான். அவனோ போரில் பங்கேற்காத ஒருவன். 

வெற்றி தோல்வி என விளைவுகளின் கரணமாக செயல்கள் மாறுகின்றன. அவற்றைப் பற்றிக் கவலைப்படாவிட்டால் செயல் சிறப்பாக நடக்கிறது என்பதை பூரிசிரவஸ் காட்டுகிறான் இன்று. ஆம், கீதையின் சாரமே தான்.

கீதையைப் புரிந்து கொள்ள ரத்தம் வழிந்துப் பெருகியோடும் பெரும்போர் நடக்க வேண்டியிருக்கிறது. 

களத்திலோ, உளத்திலோ.

நன்றிகள்,

வசந்தகுமார்

Sunday, February 17, 2019

கருபுகுதல் 2



அன்புள்ள ஜெ

கருபுகுதல் என ஒரு வாசகர் எழுதிய கடிதத்தை வாசித்தேன். நானும் அந்தப்புரிதலை அடைந்திருந்தேன். ஆனால் அது சரிதானா என்ற சந்தேகம் எனக்கு இருந்தது. வாசியை பாம்பாகச் சொல்லும் வழக்கம் உண்டு. மூலாராதத்தில் குண்டலினியையும் பாம்பாகச் சொல்வார்கள்.

துளியெனச் சிறுத்து மேலும் மேலும் சுருங்கி அணுவென்றாகி ஆழத்தில் பெருகிக்கிடந்த இருளில் கரிய உருவங்களாக நிறைந்திருந்த மாநாகங்களில் ஒன்றின் செதில்மலையின் ஒரு சிறு இமைப்பொளியாக பதிந்தான். அங்கே அவன் தன்னை என்றுமிருப்பவனாக உணர்ந்தான்

என்ற வரி அதைத்தான் காட்டுகிறது என நினைத்தேன் அவன் அஞ்சிச் சுருங்கி கருவறைக்குள் செல்வதாகத் தோன்றியது. ஆனால் அதைவிடப்பொருத்தமானது அவன் தன் செயலின்மையை உணர்ந்து தன்னை திரும்பவும் கருவறைக்குள் இழுத்துக்கொள்கிறான் என்பது

அதை கனவாகவும் எடுத்துக்கொள்ளலாம். ஏனென்றால் கனவுக்குள் செல்வதை கருவுக்குள் செல்வது என நம் மரபு சொல்கிறது. சுஷுப்தி என்ற வார்த்தை இரண்டுக்கும் பொதுவாகப் பயன்படுத்தப்படுகிறது


மகேஷ்