Sunday, November 13, 2016

புலவரைப் போற்றாத புத்தேள் உலகு - 2 (நேற்றைய கடிதத்தின் தொடர்ச்சி)



பீமனின் கர்ணன் மீதான கோபம்:

வெண்முரசின் வண்ணக்கடலில் இருந்தே வரும் முக்கியமான வாசக இடைவெளி இது தான். இதன் காரணம் என்ன என்று பல கோணங்களில் கடிதங்கள் வந்துள்ளன. அதற்கு ஒரு காரணத்தை கிராதத்தின் தன் நெஞ்சுரைக்கும் சொல் விலக்கி அறம் உசாவி உளம் குழம்பி செயல்முனையில் நின்றுதவித்து வாழ்வந்தவர்களுக்குரிய சுசீமுகம் நரகத்தில் அவன் சந்திக்கும் ஒருவர் மூலமாக நாம் அறியலாம். அவன் யுதிஷ்டிரர் என எண்ணும் தேவாபியே அவர். முதற்கனலின் இந்த அத்தியாயம் தேவாபி, பால்ஹிஹன் மற்றும் சந்துனு பற்றிய விரிவான ஒன்று. இதில் வரும் தேவாபியைப் போன்ற தருமனைத் தூக்கிச் சுமக்கும் பீமன், தன் மூத்தவரின் அரியணைக்கான வாய்ப்பை அறத்தின் வழியே இல்லாமல் ஆக்கும் சாத்தியம் கொண்ட கர்ணன் மீது காட்டும் வெறுப்பு, சந்துனு மீது தீச்சொல்லிட்ட பால்ஹிஹன் கொண்ட அதே வெறுப்பு. இயல்பு தான்!!!

கௌதமர், சரத்வான்:

அர்ச்சுனன் இந்த நரகத்தில் சந்திப்பவர்களில் சில ஆச்சரியங்கள் உள்ளன. முக்கியமாக கௌதம முனிவர். இவர் லாலாபக்ஷம் என்னும் காமம் அணையாது உயிர்நீத்தவர்களின் இடத்தில் இருக்கிறார். அர்ச்சுனனை நோக்கி, “விரைந்தகல்க! ஒருகணம் ஒருபெண்ணில் உன் காமம் எழுந்தாலும் நீ இப்பாதையை கடக்கவியலாதென்றறிக!” என கூவுகிறார். ஆம், தருமனின் குருதித் தந்தை அல்லவா. ஏக, துவித, திரத கௌதமர்களைப் பெற்ற பிறகும், குந்தியிடம் உணரும் காமத்தின் கனி அல்லவா தருமன். இவர் இப்படியென்றால் இறுதியில் வரும் இடமான சூசிமுகத்தில் சரத்வான் இருக்கிறார். அவரும் தன்னை, தன் விழைவை அறிய குந்தி ஒரு வாயிலாக இருந்திருக்கிறாள் (கெய்ஷா போல..:-)).

இப்பகுதியில் அர்ச்சுனனை உருக வைக்கும் அந்த 'மைந்தா...' என்னும் குரல். பாண்டுவினுடையது அல்லவா. அவன் குருதியில் ஓடும் தவிப்பு பாண்டு தந்தது அல்லவா. எனவே தான் செண்பகப் பூ இன்னும் அவனை கலக்கமடையச் செய்கிறது.

தேவயானி:

வண்டுகள் துளைக்கும் வஞ்சகர்கள் உலகத்தில் இருக்கிறாள் அவள். கச்சனால் ஏமாற்றப்பட்ட அவள் உள்ளம் நிறையும் வஞ்சமே அவளை இங்கே கொண்டு வந்து தள்ளியிருக்கிறது. அவளின் அசைவு அவனுக்கு நினைவூட்டுவது யாரை? என்றைக்குமே அவன் குந்தியை தேவயானி இடத்தில் தான் வைத்து பார்த்திருக்கிறான்.

அருணாச்சலம் மகராஜன்