Saturday, November 19, 2016

மெய்மை




அன்புள்ள ஜெ. வணக்கம். 

விமானம் செய்ய தெரிந்தவனுக்கு விமானம் ஓட்ட தெரிந்து இருக்கவேண்டிய அவசியம் இல்லை. விமானம் ஓட்டத்தெரிந்தவனுக்கு விமானம் செய்ய தெரிந்திருக்கவேண்டிய அவசியம் இல்லை. விமானம் செய்யவும் விமானம் ஓட்டவும் தெரிந்திருக்கும் சிலர் இருக்கிறார்கள். சிலர் வாழ்க்கையை சொல்லாகப்பார்க்கிறார்கள். சிலர் சொல்லை வாழ்க்கையாக பார்க்கிறார்கள்.   சொல்லும் வாழ்க்கையும் கலந்து சிலர் உருவெடுக்கிறார்கள் அவர்களையே மெய்ஞானிகளாகிய விஞ்ஞானிகள் என்கிறோம். 

மானிட வாழ்க்கை இப்படி இருக்கவேண்டும் என்ற எந்த எல்லையிலும் நிற்பதில்லை. ஆனால் எல்லைகளை கடந்து பயணிக்கும் ஆற்றல் சிலர் வாழ்க்கையில் இருக்கிறது. மெய்ஞானியாகவும் விஞ்ஞானியாகவும் இருப்பவர்கள் அந்த எல்லையைக் கடந்துக்கொண்டே இருக்கிறார்கள்.  மனிதன் மெய்ஞானி விஞ்ஞானி என்ற மூன்றுநிலைகளையும் கொண்ட ஒரு ஜீவன் அதன் எல்லைகள் ஒன்றில் இருந்து ஒன்று கூடியதாக இருப்பதை ஒன்றின்மீது ஒன்றாக படிந்து இருப்பதை ஒன்று அல்ல என்பதை ஒரு கணத்தில் அறியும்போது ஒன்றின் எல்லையில் அமரமுடியாமல் போகின்றது. அவன் கண்ட தூரங்கள் அவனை பயணிக்கவைத்துக்கொண்டே இருக்கிறது. 

கிராதம் ஏன் எழுதப்படுகிறது? ஏன் இப்படி எழுதப்படுகிறது? என்றால் பஞ்சபாண்டவர்களில் ஒருவனாக வீரனாக இருக்கும் அர்ஜுனன் உடலின் இருவிழிகளைத்தாண்டி குருவருளால் உடலே விழியாகப்பார்க்கும் தன்மை உடையவனாக இருக்கிறான். இருட்டிலும் அதாவது விழிமூடிய நிலையிலும் பார்க்கும் எல்லை கடந்தவனாக இருக்கிறான். உயர்ந்த புகழ்நிறைந்த மனிதனாக வாழ அவன் வில்வீரம் போதும். வாழ்தல் என்பது உடலுக்கானதா? மனதிற்கு ஆனதா? அறிவிற்கு ஆனதா? என்று எண்ணம் எழும்போது அதையும் தாண்டி என்று மெய்மை அழைக்கிறது. அந்த எண்ணம் ஏன் தோன்றுகின்றது என்பது வேறு ஒரு கேள்வியாக இருக்கிறது. அந்த எண்ணம் தோன்றியவன் தோன்றாதவன் என்று மானிடம் இரண்டாக பிரியும்போது எண்ணம் தோன்றாதவன் இங்கு என இருந்துவிடுகிறான். எண்ணம் தோன்றியவன் இங்கு இல்லை என்று கிளம்பிவிடுகின்றான். 

இங்கு என இருப்பவன் புலன்களை மனதை அறிவை ஒரு எல்லையாக கொண்டு அந்த எல்லைக்குள் ஆடுகின்றான். இங்கு இல்லை என்பவன் புலன்கள் மனம் அறிவு அனைத்தும் எல்லைகள் சுவர்கள் அதை உடைக்கவேண்டும் என்று நினைத்து கடக்கின்றான். கடக்க கடக்க தனக்கு எல்லையாக இருந்தவை அனைத்தும் தடைகள் என்று உணர்கின்றான். இந்த உணர்தல் ஒரு சொல்லாக முதலில் உள்ளத்தில் இருக்கிறது. அந்த சொல் பயணத்தில் வாழ்வாக வந்து அமைகிறது. பயணம் என்பது கால்போகும் தூரம் என்பது இங்குள்ளவன் அறிவது. பயணம் என்பது எண்ணம்போகும் தூரம் என்பது இங்கு அமையாதவன் அறிவது. எண்ணம் போகும் தூரத்திரல் கவிஞன் கலைஞன் பயணிக்கிறான். கவிஞன் கலைஞன் பயணம் மெய்ஞானியாக்குகிறது.   எண்ணம்போகும் தூரத்தில் வீரன் பயணித்தால் அவன் விஞ்ஞானி ஆகுகின்றான். விஞ்ஞானியாகவும் மெய்ஞானியாகவும் ஆக பயணிக்கும் அர்ஜுனன் கிராதத்தை களமாகக்கொள்கிறான். கிராதம் ஒரு கதை அல்ல எண்ணங்களின் கனிதல்.  அது நடைமுறை வாழ்க்கையில் மட்டும் பூத்துக்காய்க்கும் என்று எண்ணியிருக்கும்வேலையில் அது சொல்வளர்க்காட்டிலும் சுற்றிப்படர்ந்து தனது உயரத்தை தொட்டு மலர்கிறது. சொல்லை வாழ்க்கை ஆக்குவது, வாழ்க்கையை சொல்லாக்குவது என கிளைவிரித்து் ஒளிர்கிறது. 

//ஒவ்வொரு திசைக்கும் ஒரு மெய்மை” என்றான் அர்ஜுனன். “இருண்ட ஆழத்தின் மெய்மை யமனிடம். ஒளிரும் துயரங்களின் மெய்மை குபேரனிடம். நெளியும் உண்மை வருணனிடம். உடையாத வைரத்தின் உண்மை இந்திரனிடம். மெய்மை என்பது இந்நான்கும் கலந்த ஐந்தாவது ஒன்றாகவே இருக்க முடியும். நான்கையும் கடக்காது ஐந்தாவதற்கு செல்ல முடியாது என்று தோன்றுகிறது.”//

அர்ஜுனன் தன்னை வருணனை தேடிக்செல்லும்போது வந்து சேரும் வணிகக்கூட்டம் இங்கு என தனது எல்லைக்குள் ஆடும்போது அர்ஜுனன் இங்கு இல்லை என்று இருக்கிறான். வாழ்வியல் மனிதருக்கும் மெய்யியல் மனிதருக்கும் உள்ள உளப்பாங்கை காட்டி அழகாக கிராதம் செல்கிறது. வாழ்வியல் மனிதருக்கு மெய்யியல் மனிதர்கள் ஒரு நகைப்புக்கு உரியவர்கள் மட்டும்தான், மெய்யியல் மனிதர்களுக்கு வாழ்வியல் மனிதர்கள் இன்னும் விழித்துக்கொள்ளதவர்கள் மட்டும்தான். 

//“நான் இங்குள்ளதே முழுமை என எண்ணிக் களியாடினேன். அக்களியாட்டு முடிந்ததுமே அவ்வாறல்ல என்று உணர்ந்து கிளம்பினேன். இங்குளதில் முழுதமைந்திருப்பவன் அங்கு என்னும் சொல்லையே அறிந்திராதவன். அங்குளதை உணர்ந்தபின் இங்கமைபவன் இயல்பானவன் அல்ல. அவன் அதைச் சொல்லிச் சொல்லி தன்னுள் நிலைநாட்டிக்கொண்டே இருக்கவேண்டும்” என்றான் அர்ஜுனன்.// 

கிராதம் விழித்தொடாதத்தூரத்திற்கான குறியை குறியாக அடித்தல். நன்றி ஜெ.

ராமராஜன்மாணிக்கவேல்