Saturday, November 5, 2016

மலைகள்



ருமன் சென்றது கந்தமாதனமலை, அர்ஜுனன் சென்றது இந்திரகீலமலை. அது உடலை வேகவைக்கும் அனல்கொண்டது, இது உள்ளே அனல்கொண்டு அவிப்பது. தருமன் உடலை வளர்க்கும் அன்னத்தை அறிகின்றான். அர்ஜுனன் உள்ளத்தை வளர்க்கும் விழைவை அறிகின்றான். 

வாழ்க்கை என்பது மீள மீள அகத்திற்குள் நுழையும் வித்தையைக்கற்றுக்கொள்வதுதான். அந்த வித்தையைக்கற்றுக்கொள்வதன் மூலம் மனிதன் தன்னை அறிகின்றான். தன்னை அறிந்தவன் எல்லாம் எல்லாருக்கும் ஒன்றென அறிந்தவன் இல்லை. தன்னை அறிந்தவன், அடுத்தவனுக்கு உரியது என்ன என்பதை அறிந்தவனாக இருக்கிறான்.  எல்லாருக்கும் ஒன்றென இருப்பது அவரவர் விழைவது மட்டும். அவரவர் விழைவதன் வழியாக தேடி அடைவது மண்ணா விண்ணா என்பது அவரவர் முடிவு. 

நண்பனென அமைந்த கண்ணன் ஒரு கணத்தில் தன்னை வெல்லும் கணத்தில் தன்னை இரண்டாம் இடம் என உணரும் அர்ஜுனன் எதை அடைந்தால் அந்த முதல் இடத்தை அடையமுடியும் என்று வெளியேப்பயணப்படுகின்றான். 

வெளிப்பயணம் என்பது வாழ்க்கையில் நாம் உள்ளே நமக்கு உள்ளெ செல்லும் பயணம்தான். உள்ளே செல்லும் பயணத்தில் அர்ஜுனன் ஆறு ஆதாரங்களையும் கடந்து சகஸ்ராரததிற்கு பயணிக்கின்றான். ஏழாவது மலையாக அர்ஜுனன் அடையும் இந்திரகீலம் விழைவுகள் அனைத்தும் அற்ற இடம், இரண்டு  என்பது இல்லாத இடம். இரண்டு இன்மையால் வெற்றி தோல்வி இல்லாத இடம். அந்த இடத்தையும் கடந்து நேமிநாதராக அர்ஜுனன் செல்லும் ஒரு கணத்தில், விழைவில்லா இடத்தில் விழைவின் கடவுளாகி வந்து நிற்கும் இந்திரன்மகனாகி விழைவைப்பற்றிக்கொண்டு, நட்பென்னும் விழைவைப்பற்றிக்கொண்டு மண்ணுக்கு திரும்புகின்றான்.

விண்ணில் இருந்துப்பார்த்தால் மண் பொருள் அற்றது. மண்ணில் இருந்துப்பார்த்தால் விண் பொருள் அற்றது. விண்வரைச்சென்ற அர்ஜுனன் ஒரு கணப்பார்வையில் மண்ணை பொருள் அற்றது என்று உணரவிரும்பாமல் திரும்பும் இடம் அர்ஜுனன் தன்னை அறிகின்ற தருணம். அர்ஜுனன் தன் வாழ்வில் இவ்வளவுத்தூரம் அலைந்து திரிந்து இதுவல்ல இதுவல்ல என்று சென்று உடலை மனதை சொல்லை எண்ணத்தை சித்தத்தை துறந்தது எல்லாம் தான் நேமிநாதர் அவதற்காக இல்லை கண்டீபனாக கண்ணனின் நண்பனாக இருப்பதற்காகத்தான் என்பதை அறிவதற்காகத்தான். இதை அறியும்போதுதான் நான் அதுவல்ல இது மட்டும்தான் என்பது தெளிவாக புரிகின்றது. கற்பது கேட்பது எல்லாம் வேலைக்கு ஆவதில்லை மாறாக அனுஸ்டானம் மட்டும்தான் வேலைக்கு ஆகும். இந்த தெளிவுக்கு முன்பு அர்ஜுனன் இருந்த மண்ணும் இப்போது அர்ஜுனன் இருக்கும் மண்ணும் ஒன்று அல்ல. 
//“மானுடரே, கேளுங்கள். உண்ணுங்கள், குடியுங்கள், புணருங்கள், கொல்லுங்கள், வென்று மேற்செல்லுங்கள். வாழ்வதற்கு அப்பால் வாழும் தெய்வமில்லை. இருப்பதற்கு அப்பால் இருப்பென்று ஒன்றுமில்லை. மகிழ்வதன்றி எய்துவது ஏதுமில்லை. இது தெய்வங்களின் ஆணை. இன்பம் ஒன்றே விழுப்பொருள். இதுவே நீலமலைகளின் செய்தி.” //

இது வார்த்தை அல்ல அனுஸ்டானம். வாழ்க்கையை சொற்களாக்கமல் அனுஸ்டானம் ஆக்கிய முனிவனுக்கு முனியாக போகின்றவனைப்பார்க்கையில் நகைப்பு வருகின்றது. காரணம் முனிந்தவன் அறிகின்றான் தன்னிடம் உள்ள சொற்களை அர்த்தப்படுத்த செல்பவன்  அனைவரும் அந்த சொல் அர்த்தம் இழந்து நின்று அனுஸ்டி என்றுமட்டும் காட்டுகின்றது என்பதை. நகைக்காமல் என்ன செய்ய? முனிவனும் முனியாக போகின்றவனும் ஒருவன்தான். முனியாகப்போகின்றவன் முனிவனுக்கு முன்னால் இருந்து முனிவன்தான். தன்னைத்தானே பார்த்து  சிரிக்கிறான், தன்னைப்போன்றவனைப்பார்த்த தான் அவன் என்று சிரிக்கிறான். 

பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர் “படிவழியாக மாடிக்கு செல்லவேண்டும், படி எந்த கல் மண்ணால் ஆனதோ மாடியும் அதனால்தான் ஆனது என்பதை தெரிந்துக்கொண்டு தரைக்குவந்துவிடவேண்டியதுதான், எவ்வளவு நேரம் மடியிலேயே இருப்பது“ என்கிறார். 

முனிவன் மாடியில் இருந்து இறங்கிவந்தவன். இளம்முனி மாடியில் ஏற செல்பவன். ஏறுபவனும் இறங்குபவனும் நிற்கப்போவது ஒரே இடத்தில்தான். மனநிலையில்தான் எத்தனை மாற்றம். முனிவன் உணர்ந்து சிரிக்கிறான். இளம்முனி பைத்தியம் என்று நினைப்பான். நாளை இவனும் அதே சிரிப்பைத்தான் சிரிப்பான்.
//“ஏழு மலைகள், உத்தமரே. ஏழாவது மலைமேல் உள்ளது மாற்றில்லாத மெய்மை. மாற்றில்லாத மெய்மையால் மெய்மையை அறியமுடியாதென்பதனால் அதுவே முழுமை என்றறிக!” முனிவனின் கால் சற்று தடுக்கியது போல் தெரிந்தது. வெடித்துச் சிரித்தபடி அர்ஜுனன் அங்கேயே நின்று கையாட்டி “வென்று வருக, முனிவரே!//

நேமிநாதர் கண்ணனைக்காரணம் காட்டி மண்ணிற்கு சென்றால் அனைத்தையும் இழப்பாய் என்கிறார். வானுக்கு செல்ல அனைத்தையும் இழக்காமல் முடியாது என்பதும் அதில் உள்ளது என்பதை  அர்ஜுனன் அறிகின்றான். மண்ணிற்கு வந்தால் கண்ணனது நட்பாவது இருக்கும் என்பதை அர்ஜுனன் அறிவது தான் உண்மையான தன்னை அறிதல். அர்ஜுனனை நட்பெனும் அச்சில் அசையாமல் நிறுத்த பெரும் ஊழகப்பயணம் செய்கின்றீர்கள்



ராம்மராஜன் மாணிக்கவேல்