அன்புள்ள ஜெ,
வழக்கமாக நான் இரவு சாப்பிட செல்லும் வழியில் குடியிருப்புகளுக்கு நடுவேஅமைந்த சிறு வயல்பரப்புகள் உண்டு. பெரும்பாலும் தரிசாக விடப்பட்டிருக்கும்.சென்ற ஞாயிறன்று பெய்த இப்பருவத்தின் முதல் மழையால் சில இடங்கள்தற்காலிக சதுப்பாக மாறிவிட்டிருந்தன.
நேற்று இரவு நான் அந்த சாலை திருப்பத்தில் நுழையும்போதே அந்த புதிய ஒலிமெலிதாக கேட்டது. சதுப்பை நெருங்கும்தோறும் ஒலி வலுத்துக் கொண்டே வந்தது.மழைப்பாடல்! தவிர்க்க முடியாத அளவுக்கு அதன் மன்றாட்டு பெருகியது.பதற்றத்தில் உடல்நடுங்க நின்றுவிட்டேன்.
விண்ணைநோக்கி இறைஞ்சும் ஆயிரம் குரல்கள்!
மழை! மழை! மழை!... முழுசொல் கூட அல்ல, ஒற்றை ஒலியே தீவிர மந்திரமாகும்விந்தை.
சொல்லாக திரளாத ஒலியை போல் வேதத்திற்கு உகந்த வடிவம் வேறேதும் உண்டா?
எதன்பொருட்டு இந்த மன்றாடல்.. இந்த இறைச்சல்..
யாரை நோக்கி..? எவரென்றில்லாமல் மன்றாடும் உயிரைபோல இப்புவியில்கைவிடப்பட்டவை எவை?
எத்தனை ஆற்றல் கொண்ட வேள்வி! எது செலுத்துகிறது இந்ததவளைகளை.. உயிர்குலம் மீது கொண்ட அளவிலா கருணையா?
ஒற்றைபெருங்குரலில் ஒலிக்கும் இந்தத் தவளைகள் அறிந்திருக்குமா, அவை ஆற்றும்வேள்வி எதன் பொருட்டென்று?
வேள்வி நோக்கத்தை குறியாக கொண்ட எவரும் இயற்றிட இயலுமா இத்தனைஉக்கிரமான வேள்வியை? அறியேன்... ஆனால் ஒன்று சொல்வேன். இது மனிதனால்இயல்வதல்ல என்று. அத்தனை தளைகளையும் கடந்து மனிதனால் இப்படி இறைஞ்சமுடியுமென்று தோன்றவில்லை.
அங்கு நின்றிருக்கவும் முடியாமல், கடந்து செல்லவும் முடியாமல் சிறிதுநேரம்திகைத்து நின்று நிலைமீண்டு வீடடைந்தேன். மழைப்பாடலில் தேடி இதைக்கண்டடைந்தேன்,
வேள்வித்தலைவர்களான இந்தத் தவளைகள்
தேவர்கள் விதித்த அறங்களைப் பேணுகிறார்கள்!ஆண்டின் உரிய பருவத்தை
அவர்கள் தவறவிடுவதில்லை.வருடம் சுழன்று மீள்கிறது.மழை மீண்டும் வருகிறது.
தேவர்கள் விதித்த அறங்களைப் பேணுகிறார்கள்!ஆண்டின் உரிய பருவத்தை
அவர்கள் தவறவிடுவதில்லை.வருடம் சுழன்று மீள்கிறது.மழை மீண்டும் வருகிறது.
(‘மழைப்பாடல்’ – 92)
இதோ பருவமழை தொடங்கிவிட்டது. ஆம், தவளைகள் உரைத்தது மன்றாட்டோஇறைஞ்சலோ அல்ல. அது தெய்வங்களாலும் மீறமுடியா ஆணை.
அன்பின் ஜெ, வாழ்வின் அன்றாட தருணங்களுக்கு வெண்முரசு அளிக்கும் அர்த்தம்அபாரமானது. எங்கள் உலகை கனவால் நிறைத்தமைக்கு நன்றி.
மண் மீண்டும் புதியதாகப் பிறந்தெழட்டும். உயிர்கள் மீண்டும் புதுநம்பிக்கைகொள்ளட்டும். ஓம் ! ஓம்! ஓம்! :)
அன்புடன்,
தே.அ.பாரி