Tuesday, August 28, 2018

கிராதம்



அன்புள்ள  ஜெ , 

  நலம் தானே ? .  நீண்ட  நாட்களுக்கு  பிறகு ஒரு கடிதம் . 
 இப்போது தான் கிராதம்  வாசித்து முடித்தேன்.  நான் வாசித்த  வெண்முரசு  நாவல்களில்  அதிக நாட்கள்  எடுத்துக்கொண்டதும் , அதிக  உழைப்பை  குடுத்ததும்   நீலத்திற்கு பிறகு கிராதத்திற்கே. 

    என்னை  மிகவும்  அழைக்களித்த  நாவலும்  கூட  விஜயனின்  ஒவ்வொரு  பயணமும்  , அவன் சென்று அடைந்த  மெய்மையும் , நாவலை இன்னும்  பல முறை  மீள்வாசிப்பு செய்ய    கோரி நிற்கிறது. 
   
  தொல்வேத காலம்  முதல்  நாராயண வேதம்   எழுந்து வரும்   சித்திரத்தை  அளிக்கிறது  நாவல்.  வருணனை முதல்  தேவனாக  தொடங்கி , இந்திரனை  தெய்வமாக  கொண்ட காலம் பின்  எழுந்து  வரும் நாராயணன் வேதம்   இங்கு  பல கனவுகளாகவும் , உருவங்களாகவும் , படிமங்களாகவும்  காண்பித்திருந்தீர்கள் அவற்றில் சிலவற்றை   உணர்ந்தும்  சில உணராமலும்  நாவலை   படித்து முடித்தேன். இன்னும் பல முறை படித்தாலும்  புதிதாக  படிப்பது  போலவே  இருக்கும் .

    அவன்  திசை  தேவர்களை  வென்று  கடக்கும்  பகுதிகள்  கற்பனையை  வேறு ஒரு எல்லைக்கு  கொண்டு  செல்கிறது.  அதில்  எனக்கு  மிகவும்  பிடித்த  பகுதி  தெற்குக்கின் இறைவனான  யமனை அவன் வெல்வதும் ,  இந்திரனை  அவன்  வெல்வதுமே.  யமனை அவன்  வெல்லும் இடம்  தத்துவார்த்தமான இடம்  , இந்திரனை அவன்  வெல்லும்  பகுதி  மிகவும்  கவித்துவமான  இடம். ஊர்வசி அர்ஜுனன்  இடையில் நடக்கும்  புசல்  அவன்  அடையும்  நிலை , அதை  கொண்டு  அவன்  இந்திரனை  கடந்து  முன் செல்வது   அந்த  தருணத்தை  மிக அழகாக  அமைத்திருந்தீர்கள்  என்னை மிகவும்  கவர்ந்த  பகுதியும்  கூட . 

    பின்  வேதமுதல்வனிடன்  பாசுபதவேதத்தை   அவன்  அடையும் இடத்தில்   நாவல் ஒரு உச்ச நிலையில்  இருக்கிறது . அந்த  அறிவாக  அவன் ஆகி நிற்கிறான்.  மொத்த நாவலின் தரிசணத்தையும்   அந்த  இடத்தில் இருந்து  நான்  பெற்றுக்கொள்கிறேன். 

  நன்றி ,

சுகதேவ்

மேட்டூர்.