Sunday, August 26, 2018

எழுதழல்



அன்புள்ள ஜெ,

இன்று மதியம் பதிப்பகத்தில் இருந்து எழுதழல் செம்பதிப்பு கூரியரில் அனுப்பப்பட்டுவிட்டதாக மின்னஞ்சல் வந்தது. இன்னும் 5-7 நாட்களில் கிடைக்கும் என்று குறிப்பிட்டிருந்தார்கள். இரவு வீட்டிற்கு வரும்போது பழுப்பு நிற உறையில் எழுதழல் செம்பதிப்பு உங்கள் கையெழுத்துடன் காத்திருந்தது. செம்பதிப்பில் உங்கள் கையெழுத்தைக் கேட்டுச் சிரமம் தருகிறேனோ என்ற குற்ற உணர்வுடனே நூலைப் பிரித்தேன். 

முதல் பத்தியில் பிச்சாண்டவரைப் பார்த்ததும் ஆச்சரியமாக இருந்தது. கிராதத்தின் முதல் பத்தி எழுதழலின் முதல் பத்தியாக மாறி வந்துள்ளது. ஆனால் இதுவும் ஒருவகையில் கிராதத்தையும்  எழுதழலையும், பிச்சாண்டவரையும் அன்னைப்பூசகரான நிருதரையும் கொண்டு இணைத்துகொள்ளும் வழி என்று நினைக்கிறேன்.

குந்தி அம்பையின் ஆலயத்தில் நடத்தும் பூசெய்கைக்குப் பிறகு ஆலயம் பற்றியெரிவதில் ஆரம்பிக்கும் நாவல்,   அவள் கரு நிலவில் குருதிபலி கொடுத்து மீளும் மாயைக் காண்பதுடன் முடிகிறது.  போருக்கு முந்தைய நிகழ்வுகள், அரசியல் முயற்சிகளாகவும் சூழ்ச்சிகளாகவும் இளவரசர்களின் பார்வையில் விவரிக்கப் பட்டுள்ளன.  இளமைந்தர்கள் என்பதனால் நிகழ்வுகள் வேடிக்கையும் வேகமுமாக இருந்தாலும், இவர்கள் அனைவரும் அழிந்துவிடுவார்கள் என்ற துயரமும் இருந்துகொண்டே இருக்கிறது. மீள்வாசிப்பின்போது,  இனிவரவிருக்கும் இறுதி யுத்தக்காட்சிகளும் உடன் எழுவது தவிர்க்கமுடியாது என்று நினக்கிறேன். 

நன்றி.

அன்புடன்,
S பாலகிருஷ்ணன், சென்னை

அன்புள்ள பாலகிருஷ்ணன்

உண்மையில் அந்தக் கையெழுத்துபோடும் நாள் மிக இனிமையானது. வெண்முரசு ஓரு தனிமைத்தவம். இத்தகைய பெருமுயற்சிகளுக்கு எந்தச் சமூகத்திலும் சில்லறைக்கொசுக்கடிகளே பெரும்பாலான எதிர்வினையாக இருக்கும். தமிழில் எவரேனும் வாசிக்கிறார்களா என்ற ஐயம் இல்லாத எழுத்தாளர்கள் இல்லை. செம்பதிப்புக்குக் கையெழுத்திடுகையில் நான் என்னுடன் வந்துகொண்டே இருக்கும் வாசகர்களை அருகே உணர்கிறேன். வேறு எவரைவிடவும் இந்த வாசகர்களுக்கு நான் கடன்பட்டவன்

ஜெ