Saturday, August 18, 2018

நூறு நூறு சித்திரங்கள் .




நினைக்கவே மலைப்பாக இருக்கிறது .அரவான் தற்பலி துவங்கி இன்றைய அரவான் பதுமை முகத்தின் சிரிப்பு வரை எத்தனை நூறு நூறு சித்திரங்கள் .

ஒரு பார்வையில் வாசகனின் அகத்தை  முற்ற முழுதாக சங்கனுக்குள் செலுத்தி ,வாசகனை சங்கனாகவே அணு அணுவாக உணரவைத்து களத்துக்குள் உலவ வைக்கிறது இந்த சித்தரிப்புகளும் மொழியும் .

மறு பார்வையில் அதே மொழி சித்தரிப்பு சஞ்சயன் நோக்கில் வாசக அகத்தை மாற்றி , முற்ற முழுதாக ஒரு மலைக்கழுகாக மாறி போரின் மீது பறந்து சென்ற படியே பார்க்க வைக்கிறது .

மொத்த வென்முரசு வாசிப்பிலும் இந்த நாட்களில்தான் நான் முற்றிலும் எனக்கே எனக்கான பகல் கனவு உலகுக்குள் கிடக்கிறேன் . பீமனாக மாறி தலைகளை உடைக்கிறேன் .பீஷ்மராக மாறி வெண் தாடி முனையில் குருதி சொட்ட அர்ஜுனனை எதிர்கொள்கிறேன் .  ஈட்டிக்குத்து வாங்கிய குதிரையாக விழுந்து காலுதைக்கிறேன் .   திருதா முகம் கொள்ளும் அத்தனை மெய்ப்பாடுகளையும்  நான் அறியாமல் என் முகத்தில் தேக்கி திரிகிறேன் .

ஆம் இது எனது போர் . வெளியே யார் என்ன சொன்னால் என்ன ? இனி நான் இவ்வாறுதான் இருக்கப்போகிறேன்  :)

கடலூர் சீனு