[1]
இம்மாபெரும் உயிர்
வெளியின் ஆதி விசைகள் பசி, தாகம், பெருக்கத்தின் விழைவு என இம்மூன்றுமே. இவற்றில்
இருந்து மானுடத்தை வேறுபடுத்திய உணர்வு எது? அல்லது முதல் மானுடன் தான் ஒரு
மானுடன் என எப்படி உணர்ந்திருப்பான்? அதை எப்படி தன்னையொத்த மானுடர்களுக்குக்
கடத்தி மானுடம் என்பதைச் சமைத்திருப்பான்? அந்த ஆதி தன்னறிதல் எங்ஙனம்
முகிழ்த்திருக்கும்? அதை மானுடத்துக்கு அறிவித்ததும் ஒரு உணர்வாகத் தானே
இருந்திருக்க முடியும். அந்த உணர்வைத் தொடர்ந்த மானுடம் தன்னையறிந்து விரித்து
விரித்து உருவாக்கியதே இன்றும் நாம் என நம்மை உணரும் இப்பெரு மானுடத்திரளும், அவை
உருவாக்கி நமக்கு அளித்துள்ள இம்மாபெரும் உலகும். அந்த உணர்வைப் பகிர, அந்த உணர்வை
கடத்த கண்டடையப்பட்டதாகத் தானே இருந்திருக்க வேண்டும் இன்று உலகெங்கும் பேசப்படும்
மொழிகள். அந்த ஆதி உணர்வு, அது ஆதியில் தோன்றியது என்பதாலேயே இன்று வரை மானுடத்தின்
ஆழத்தில் இருந்து கொண்டே இருந்திருக்கும். அது என்ன? மானுடத்தைத் தன் அடிப்படைத் தேவைகள் அமைந்த பிறகு அடுத்தது
அடுத்தது எனத் தேடித் தேடி ஓட வைத்துக் கொண்டே இருக்கும் அந்த ஆதி உணர்வு எது? அது
ஒரு சிலரிடம் மட்டுமே இருப்பதா இல்லை அனைவரிடமும் இருப்பதா?
அதை உணர்வு என்ற நிலையில்
சாகசம் என்றும், நிகழ்தல் என்னும் நிலையில் தன்னைக் கடத்தல் என்றும், அறிதல்
என்னும் நிலையில் ஆன்மீகத் தேடல் என்றும் கூறலாம். இன்றளவும் நம்மை முதலில், எளிதில்
கவர்வது மானுடத்தின் சாகசக் கதைகளே. இன்றும் நமது கதாநாயகர்கள் அதிமானுடர்களே.
மானுடர் எல்லையை பகுத்தறிந்த சமூகம், கற்பனையில் அதிமானுடர்கள் என்ற வகைமையை
உருவாக்கி அனுபவிப்பதை இன்றும் நாம் காண்கிறோம். நமது புராணங்கள் துவங்கி
உலகெங்கும் உள்ள பழமையான நாகரீகச் சமூகங்களின் கதைகள் அனைத்திலும் முன்னிற்பது
இந்த சாகச அம்சம் தான். இன்றும் மேற்கும், கிழக்கும் ஒன்றிணையும் புள்ளிகளில் சாகச
விளையாட்டுகளும், சாகச விளையாட்டு மையங்களும், மெய்நிகர் சாகச அரங்குகளும் முன்னணி
வகிக்கின்றன என்பதில் இருந்தே இவ்வுணர்வின் அநாதி கால வயதை அறிந்து கொள்ளலாம். ஒரு
வகையில் இந்த சாகச உணர்வின் ஆதியைத் தேடிச்செல்வது என்பது மானுட வரலாற்றை அறிந்து
கொள்வதே. அதே சமயம் இந்த சாகசங்களைப் பின்தொடர்வது என்பது மானுடம் என்பதைக்
குறித்த அறிதலைத் தருவது.
மானுடச் சாகசங்களில்
உச்சம் என எதைக் கூறலாம்? ஐந்து தலை நாகத்துடன் போரிடுவதோ, நெருப்புமிழும் மலை
ஏறிச் சென்று காற்று அரக்கனிடம் சமரிட்டு வெல்வதோ அல்ல. மாறாகத் தன்னுள் தான்
ஆழ்ந்து, ஊழ்கத்தில் கனிந்து, தன்னை அறிந்து, படைப்பை அறிந்து, பிரம்மத்தை அறிந்து,
அதுவாக ஆகும் வழியறிந்து மீள்வதே சாகசங்களின் உச்சம் எனலாம். ஆம், அதுவே உச்சம்.
அது பல படிகள் கொண்ட பயணம். அகமும், புறமும் இணைந்து மேற்கொள்ளும் பயணம். புறம்
அதன் எல்லை உணர்ந்து நின்று விடுகையில், அகம் தொடர்ந்து முன்செல்ல அசாத்தியமான மன
உறுதி வேண்டும். அப்படி முன்செள்கையில் தன் முன் வரும் தடைகளை உடைப்பதும், தனது
ஆழ்மன விழைவுகளின் நிறைவேறும் தருணங்கள், அத்தருணங்கள் உருவாக்கி அளிக்கும் ஒரு
பொன்னுலகு போன்ற மயக்கங்களைக் கடப்பதுமே மானுடம் கொள்ளச்சாத்தியமான உச்சபட்ச
சாகசங்கள். அது முற்றிருள் சூழ்ந்த வெளியில் தன்னுணர்வு என்னும் சுடரேந்தி,
குருவருள் என்னும் நிலவுத் துணையோடு செய்ய வேண்டிய பயணம். அதை வார்த்தைகளாக்கினால்
வெறும் பித்து தான் எஞ்சும். எனவே தான் அதைச் சொல்லும் கதைகளில் மண்ணில் இல்லாத
உருவுகளும், இடங்களும், சொர்க்க, நரக லோகங்களும் பயின்று வருகின்றன. புராணங்களின்
முக்கியமான அம்சம் இதுவே. இவற்றை மீண்டும் தொகுத்து அகப் பயணமாக ஆக்கிப் பார்க்க
முடிந்தால் நம்மைப் பற்றிய அறிதலில் சில அடிகள் நாம் முன்னேறக் கூடும். இது இத்தகைய
குழந்தை சாகசக் கதைகளை நெருங்கி அறிய ஒரு கருவி. கிரேக்க வீரன் யுலிசிசின்
சாகசங்கள் இப்போது சாகசம் என்பதைத் தாண்டி தன்னையறிதல் என்னும் தளத்தில் வாசிக்கப்படுகின்றன.
அப்படி நமது புராணங்களை மறு வாசிப்பு செய்ய இயலுமா?
அங்ஙனம்
மறுவாசிப்புக்குட்படுத்த அவை முதலில் மறு ஆக்கம் செய்யப்பட வேண்டியது அவசியம்.
இத்தகைய மறுஆக்கங்கள் உலகெங்கும் இயல்பானவையே. சிறந்த உதாரணம் யுலிசிஸ் தான்.
ஷேக்ஸ்பியரின் நாடகங்கள் துவங்கி சிண்டெரல்லா குழந்தைக் கதை வரை மறுஆக்கம் செய்யப்பட்டவை
மேற்கில் அதிகம். பழமையை, பழகியவற்றை மறுஆக்கம் செய்வது என்பது அப்பழங்காலத்தை
கண்ணோடு கண் நோக்குவது போன்றதே. இந்திய அளவில் அத்தகைய மறு ஆக்கங்கள் பல
நடைபெற்றுள்ளன. ஆயினும் ஒப்பு நோக்க பல மடிப்புகள் கொண்ட விரிவான மறுஆக்கங்கள்
குறைவே. இத்தனைக்கும் இந்திய மரபு இத்தகைய புராணங்களின் காடு. இவற்றை மறு ஆக்கம்
செய்ய நமது வரலாறு, நில அமைப்புகள், பண்பாடு, பழக்க வழக்கங்கள், சடங்குகள்,
முறைகள், நெறிகள், வழிபாடுகள், தொன்மங்கள், தரிசனங்கள், இலக்கியங்கள், தத்துவங்கள்
என மிக மிக விரிவான அனுபவமும், பின்புலமும் தேவை. இவற்றை ஒன்றிணைத்து, தொகுத்து
தனக்கென ஒரு அறிதலை ஏற்படுத்திக் கொண்ட பிறகே அவற்றை கருத்துரைகளாக, புனைவுகளாக
மறு ஆக்கம் செய்ய இயலும்.
அத்தகைய முதல் சிந்தனையை அடைந்த ஒருவரே மிக மிக விரிவான இந்திய தத்துவ புலத்தை, அதை பிரதிநிதித்துவப்படுத்தும் புராண கதைகைளை தொகுக்கவும், பகுக்கவும், புனைவாக ஆக்கவும் இயலும். அப்படிப்பட்ட ஒருவராலேயே வேதங்களை நால்வேதமாக வேதப் பெருங்காட்டில் இருந்து உருத்திரட்டி, பசுவாக்கி, நம் மானுட முற்றத்தில் கட்ட இயன்றது. இங்ஙனம் வியாசம் செய்ததாலேயே அவர் வியாசர். என்றென்றும் இவை ஒருங்கமைந்த ஒருவர் தன்னை அந்த மாபெரும் வியாசர்களின் நீட்சியாக உணர்ந்தாக வேண்டும். அத்தகையதோர் மாபெரும் தொகுக்கும் பணியைத் தான் வாழும் காலத்துக்காகவும், வருங்காலத்தின் களஞ்சியமாக்கவும் செய்தாக வேண்டும். அப்படித் தொகுத்து இந்திய பண்பாட்டின் மையத் தரிசனம் ஒன்றை உருவாக்கிய பெருங்காவியம் என தொல்வியாசர் ஆக்கிய மகாபாரதத்தைச் சொல்லலாம். அது கதைகளின் கடல். இப்பெரும் நிலத்தின் ஒவ்வொரு அறிதலும், ஒவ்வொரு தத்துவமும் அக்கடலின் ஒரு துளியாகத் தம்மை இணைத்துக் கொண்டவையே. படைப்பாளியை மீறிய படைப்பு அது என்பதாலேயே அது குறைவற்றது. வளர்ந்து கொண்டே இருப்பது.
அத்தகைய முதல் சிந்தனையை அடைந்த ஒருவரே மிக மிக விரிவான இந்திய தத்துவ புலத்தை, அதை பிரதிநிதித்துவப்படுத்தும் புராண கதைகைளை தொகுக்கவும், பகுக்கவும், புனைவாக ஆக்கவும் இயலும். அப்படிப்பட்ட ஒருவராலேயே வேதங்களை நால்வேதமாக வேதப் பெருங்காட்டில் இருந்து உருத்திரட்டி, பசுவாக்கி, நம் மானுட முற்றத்தில் கட்ட இயன்றது. இங்ஙனம் வியாசம் செய்ததாலேயே அவர் வியாசர். என்றென்றும் இவை ஒருங்கமைந்த ஒருவர் தன்னை அந்த மாபெரும் வியாசர்களின் நீட்சியாக உணர்ந்தாக வேண்டும். அத்தகையதோர் மாபெரும் தொகுக்கும் பணியைத் தான் வாழும் காலத்துக்காகவும், வருங்காலத்தின் களஞ்சியமாக்கவும் செய்தாக வேண்டும். அப்படித் தொகுத்து இந்திய பண்பாட்டின் மையத் தரிசனம் ஒன்றை உருவாக்கிய பெருங்காவியம் என தொல்வியாசர் ஆக்கிய மகாபாரதத்தைச் சொல்லலாம். அது கதைகளின் கடல். இப்பெரும் நிலத்தின் ஒவ்வொரு அறிதலும், ஒவ்வொரு தத்துவமும் அக்கடலின் ஒரு துளியாகத் தம்மை இணைத்துக் கொண்டவையே. படைப்பாளியை மீறிய படைப்பு அது என்பதாலேயே அது குறைவற்றது. வளர்ந்து கொண்டே இருப்பது.
இதையே
ஜெயமோகன், “படைப்பின் குறை என்பது படைப்பாளியின்
எல்லை. தன்னைத்தான் உருவாக்கும் படைப்பு படைப்பவனிடமிருந்து
விடுதலைகொண்டுவிடுகிறது. அனைத்து வடிவங்களும் தங்கள் முழுமையை சென்றடையும் உள்விருப்பாலேயே
செயலூக்கம் கொள்கின்றன. முழுமை முழுமை எனத்துடிக்கும் வடிவங்களையே நாம் கலை
எனக்கொள்கிறோம்.” எனக் கிராதத்தில் சொல்கிறார்.
காலந்தோறும் வளரும், முழுமை நோக்கிச் செல்லத்துடிக்கும்
ஒரு படைப்பான பாரதம் தன்னைக் கொண்டு செல்லும் தேரைத் தேடிக் கொண்டே இருக்கிறது.
ஒவ்வொரு காலத்திலும் இப்பாரத நிலத்தில் ஒவ்வொருவர் மீதேறி அது பயணித்துக் கொண்டு
தான் இருக்கிறது. கன்னடத்தில் குமார பாரதம், தமிழில் பெருந்தேவனார் பாரதம், வில்லி
பாரதம் என முழுமையாகவும், சாகுந்தலம் துவங்கி பல பகுதிகளின் விரிவாக்கமாகவும் அது பரவிக்
கொண்டுதான் இருக்கிறது. நவீன காலத்திலும் பாரத மறு ஆக்கங்களுக்கு குறைவில்லை. பைரப்பா
(பர்வா - கன்னடம்), பி. கே. பாலகிருஷ்ணன் (இனி ஞான் உறங்கட்டே - மலையாளம்),
எம்.டி.வாசுதேவன் நாயர்(ரெண்டாமூழம் - மலையாளம்), ஐராவதி கார்வே (யுகாந்தா –
மராத்தி), வி.எஸ்.காண்டேகர் (யயாதி – மராத்தி), தாகூர் (சித்ராங்கதா – வங்காளம்), நரேந்திர கோலி (மகாசமர் 9 பகுதிகள் - ஹிந்தி) எனப் பலர் மீதும் அது ஏறி
பயணித்திருக்கிறது.
‘The Karna’s wife: The outcast’s Queen’, ‘The Fisher Queen’s Dynasty’, ‘Ajaya’, ‘Rise of Kali’ என நீளும் வணிக நாவல்கள் இவ்வகைப்பாட்டில் அடங்காதவை. அவற்றில் வாழ்க்கை இல்லை, வெறும் சாகச உணர்வே எஞ்சும் நிகழ்வுகள் கொண்டவை. ஒரு மாற்றுப் பார்வை என்பதற்கு மேல் அறிந்து கொள்ள ஒன்றும் இல்லாதவை. வலிந்து ஏற்படுத்திக் கொண்ட ஒரு தர்க்க ஒழுங்கில் தம்மைக் கோர்த்துக் கொண்டவை. இங்கு கொடுக்கப்பட்ட உதாரணங்களிலும் பல அடுக்குகளாக விரிந்து சென்று, பல தளங்களில் அக்கதைகளை விரித்து நோக்கும் படைப்புகள் குறைவே. உதாரணத்திற்கு கிருஷ்ணா கிருஷ்ணாவில் கிருஷ்ணன் என அமைந்த ஆளுமைப் பண்புகளை விரிவாக ஆராய்கிறார் இந்திரா பார்த்தசாரதி. பர்வா, ரெண்டாமூழம், இனி ஞான் உறங்கட்டே போன்றவை பாரத நிகழ்வுகளை நடமாடும் மானுடர்களின் தர்க்க ஒழுங்கில் ஒரு கதாபாத்திரத்தின் பார்வையில் கோர்த்துப் பார்த்த முயற்சிகள். இவற்றின் ஊடாக ஒரு முழுமையான மானுட, வரலாற்று, ஆன்மீகத் தரிசனங்கள் எழுந்து வருவதில்லை.
‘The Karna’s wife: The outcast’s Queen’, ‘The Fisher Queen’s Dynasty’, ‘Ajaya’, ‘Rise of Kali’ என நீளும் வணிக நாவல்கள் இவ்வகைப்பாட்டில் அடங்காதவை. அவற்றில் வாழ்க்கை இல்லை, வெறும் சாகச உணர்வே எஞ்சும் நிகழ்வுகள் கொண்டவை. ஒரு மாற்றுப் பார்வை என்பதற்கு மேல் அறிந்து கொள்ள ஒன்றும் இல்லாதவை. வலிந்து ஏற்படுத்திக் கொண்ட ஒரு தர்க்க ஒழுங்கில் தம்மைக் கோர்த்துக் கொண்டவை. இங்கு கொடுக்கப்பட்ட உதாரணங்களிலும் பல அடுக்குகளாக விரிந்து சென்று, பல தளங்களில் அக்கதைகளை விரித்து நோக்கும் படைப்புகள் குறைவே. உதாரணத்திற்கு கிருஷ்ணா கிருஷ்ணாவில் கிருஷ்ணன் என அமைந்த ஆளுமைப் பண்புகளை விரிவாக ஆராய்கிறார் இந்திரா பார்த்தசாரதி. பர்வா, ரெண்டாமூழம், இனி ஞான் உறங்கட்டே போன்றவை பாரத நிகழ்வுகளை நடமாடும் மானுடர்களின் தர்க்க ஒழுங்கில் ஒரு கதாபாத்திரத்தின் பார்வையில் கோர்த்துப் பார்த்த முயற்சிகள். இவற்றின் ஊடாக ஒரு முழுமையான மானுட, வரலாற்று, ஆன்மீகத் தரிசனங்கள் எழுந்து வருவதில்லை.
[2]
நமது புராணங்கள் என்பவை
என்ன? அவை வாய்மொழி வரலாறுகள். மானுடத்தின் ஆழமன உணர்வுகளை, ஆதி உணர்வுகளை நன்கு அறிந்த
நமது முன்னோர்கள் தமது காலத்தை, வரலாற்றை, அறிதல்களை நமக்குக் கடத்த கண்டடைந்த
பெரும் வடிவம் என்றே புராணங்களைச் சொல்லலாம். உதாரணத்திற்கு தமிழகத்தில் வயலில்
இடையாடை மட்டும் அணிந்து உழுதவனின் தோற்றமே காந்தி தனது முற்றாடையைத் துறக்கச்
செய்தது என்பதும், அதன் பிறகு அவர் எளிய கதராடை மட்டுமே அணியத்துவங்கினார் என்பதும்
வரலாறு. இது இணையத்தில் செய்தியாக வாழும். பொ.யு. 3030 லும் தேடினால் கிடைக்கும். காந்தியின்
வாழ்க்கை வரலாற்றில் இருக்கும். மாறாக தமிழகத்துக்கு வந்த காந்தி இத்தேச
நன்மைக்காக வேண்டி மதுரை கள்ளளகரை நோக்கித் தவமிருக்க, அவர் முன் எளிய விவசாயியாக வெறும்
இடையாடையுடன் தோன்றிய அழகர் அவர் கோரிய வரம் அளிக்க, அதன் விளைவாக அவர் தனது
முற்றாடையத் துறந்து வேட்டி மட்டும் அணிந்து கொண்டார் என்றும், அவர் துறந்த அந்த
ஆடைகள் அனைத்தும் இத்தேசத்தவர் அனைவருக்கும் சென்று சேர்ந்தன என்றும், எந்த நாளில்
கடைக் கோடி இந்தியனும் முழுமரியாதையுடன் அந்த முற்றாடையை அணிகிறானோ அன்று தான்
நிறைவுடன் அவர் வைகுந்தம் எய்துவார் எனவும் புராணமாக்கினால் காந்தி நமது
குழந்தைகளிடம் வாழ்வார். ஆயினும் அவர்கள் வளர்கையில் இந்த உண்மை வரலாற்றுக்கு
வரவேண்டிய வழிகள் திறந்தே வைக்கப்பட்டிருக்க வேண்டும்.
உண்மையில் நமது
புராணங்கள் என்பவை பெரும் வரலாற்றுச் சுரங்கங்கள். அவற்றில் இருந்து வெட்டி
எடுக்கப்படும் தாதுக்களில் இருந்து பொன்னையும், தாமிரத்தையும், இரும்பையும் உருக்கி,
வாற்றி எடுப்பதற்கான உருக்கு முறை இன்னும் முழுமையாகக் கண்டடையப்படவில்லை என்றே சொல்லலாம்.
இந்திய புராண மறுஆக்கங்கள் என்பவை இவற்றையே தமது இலக்காகக் கொண்டிருக்க வேண்டும்.
துரதிர்ஷ்டவசமாக
அத்தகையதோர் முயற்சி இங்கு நிகழவில்லை. புராணங்களின் வாயிலாக தெளிந்து வரச்
சாத்தியமான ஒரு சமூகப் பொருளாதார பார்வையை, மார்க்சிய முரணியக்க இயங்கியல் முறையில்
முன்வைத்த டி டி கோசாம்பி, பாரத கதைமாந்தரை தனிமனித, சமூக வர்ண அடுக்குகளின் அமைவுகள்
என மானுடவியல் நோக்கில் தொட்டுக் காட்டிய ஐராவதி
கார்வே எனக் குறிப்பிட்ட சில முன்னோடி முயற்சிகள் நிகழ்ந்துள்ளன. எனினும்
1)
ஒட்டுமொத்த இந்திய ஞான மரபு
2)
அது ஆழ்ந்தறிந்த
தத்துவங்கள்
3)
அது கண்டடைந்த தரிசனங்கள்
4)
அதை தலைமுறைகள் தோறும் கடத்திய
வேதங்கள், வேதாந்தம், உபநிடதங்கள்
5)
அவை இப்பெருநிலத்தின்
வாழ்வியலில் செலுத்திய பாதிப்புகள்
6)
இம்மாநிலத்தின் மக்கள்
சமூகங்கள், தேசங்கள் போன்றவற்றின் தோற்றம், வளர்ச்சி, வீழ்ச்சிகளில் அதன் பங்களிப்புகள்
7)
இப்பாரத வர்ஷத்தின்
மானுடத் தொகை ஒன்றிணைந்து, தங்கி வாழ உருவாகி, நிலைபெற்ற மானுடவியல் தொடர்பான வர்ணமுறை,
சாதியடுக்குகள், பொருளாதார நிலைகள் ஆகியவற்றின் உருவாக்கத்தில் அதன் தாக்கங்கள்
8) ‘வடா அது பனிபடு நெடுவரை வடக்கும்
தெனா அது உருகெழு குமரியின்
தெற்கும்
குணா அது கரைபொரு தொடுகடற்
குணக்கும்
குடா அது தொன்று முதிர்
பௌவத்தின் குடக்கும்’
என மொழி திருந்தா தொல்காலத்திலேயே எல்லை வகுக்கப்பட்டு விரிந்த
இப்பாரத நிலம் முழுமையும் இருந்த பல்வேறு மக்களும், அவர்தம் அறிதல்களும்,
ஞானங்களும் அதன் மீது செலுத்திய அழுத்தங்கள், ஏற்படுத்திய மாற்றங்கள்
9)
அதன் பரிணாம வளர்ச்சிகள்
10)
அனைத்துக்கும் மேலாக இந்நிலத்தில்
ஆதியில் சிந்தனை என ஒன்றை அடைந்த முதல் மானிடன் முதல் இன்று வரையிலான நாம் வரை
அனைவரையும் ஒரே இழையில் இணைத்து வைத்திருக்கும் அதன் முக்கியத்துவம், அதை அது
அடைந்த விதம்
என்ற விரிவான பார்வையில்
ஒரு முழுமையான மறுஆக்கம் நிகழவேயில்லை எனலாம். இத்தகைய விரிவான பார்வை என்பதைத்
தன்னகத்தே கொண்ட ஒரு படைப்பே இத்தகைய மறுஆக்கத்துக்கு உகந்த ஒன்றாக இருக்கும்.
மகாபாரதத்தை விட வேறெந்த படைப்பு இவ்வளவு விரிவையும் தாங்க இயலும். நம் மரபின்
அத்தனை அறிதல்களும் கனிகள் எனில், அது விளைந்த பெருமரம் இப்பெருங்காவியம். முன்பே
கூறியது போல காலந்தோறும், யுகம் தோறும் அப்பெருங்காவியம் தனக்கான தேரைத் தேடிக்
கொண்டே இருக்கும். யுகங்களுக்கு ஒருமுறையே அதற்கு வியாசர் வசப்படுவார். நாம்
வாழும் காலத்தில் அதற்கு அப்படி ஒருவர் கிடைத்திருப்பது நம் நல்லூழ்.
மேற்கூறியவையும்,
அதையொட்டிய விரிவான பார்வையையும் முன்வைக்கும் பெரும் ஆக்கமாக நம்முன் விரிந்து
வளர்கிறது வெண்முரசு. இந்தத் திசையின் மாபெரும் முன் முயற்சியாக, முன்னோடி
முயற்சியாக மட்டுமின்றி, இனி வருங்காலங்களில் ஒரு மறுஆக்கம் எவ்வாறு இருக்க
வேண்டும் என்பதற்கு சட்டகம் அமைத்துக் கொடுப்பது போல நிகழ்ந்து கொண்டிருக்கும் ஒரு
பெரும் சாதனை வெண்முரசு. பெரும் உழைப்பையும், அர்ப்பணிப்பையும், தளரா ஊக்கத்தையும்,
நேரத்தையும் கோரக்கூடிய இப்பணியை தனது பிறவி நோக்கமாகக் கண்டடைந்து செய்து
வருகிறார் எழுத்தாளர் ஜெயமோகன். பக்க அளவிலும், பேசுபடு பொருள் அளவிலும் செவ்வியல்
தன்மையும், களஞ்சியத் தன்மையும் கொண்ட இந்த நாவல் வரிசை அவரது தளத்தில் நாளுக்கொரு
அத்தியாயம் என்ற வகையில் 2014 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் துவங்கி வெளிவந்து கொண்டிருக்கிறது.
இதுவரை (ஆகஸ்ட், 2018) பதினேழு நாவல்கள்
எழுதிமுடிக்கப்பட்டு விட்டன. பதினான்கு நாவல்கள் புத்தகங்களாக வெளிவந்து விட்டன. பிற
நாவல்கள் பதிப்பின் வெவ்வேறு நிலைகளில் உள்ளன.
[3]
மகாபாரதத்திலேயே மிகப்
பெரிய பருவம் என வனபர்வத்தைச் சொல்லலாம். சூதாட்டம் முடிந்த பிறகு பாண்டவர்களின்
பன்னிரு வருட கானேகலைச் சொல்லும் பருவம் இது. இதன் முதன்மையான சம்பவங்கள் என்றால்
அது அர்ஜுனன் பாசுபதாஸ்திரம் பெறுவதும், பீமன் சௌகந்திக மலரைக் கொண்டுவருவதும்
தான். மிகச் சிறிய ஒரு சம்பவமாக தருமர் அட்சய பாத்திரம் பெறும் நிகழ்வு வரும். இவை
தவிர அதில் வருவன எல்லாம் கதைகள், அற உசாவல்கள். பாரதவர்ஷத்தின் ஒவ்வொரு முனிவரும்
வந்து கதை சொல்கிறார் அதில். ஆனால் இவையே மகாபாரதம் என்னும் காவியத்தை நம்
பண்பாடோடு பிணைத்தவை. இப்பெருநிலத்தின் ஒவ்வொரு அறிதலும், குலக்கதைகளும்,
புராணங்களும் சென்று முயங்கிய வெளி. எனவே இதை எளிதாகக் கடந்து செல்லுதல் இயலாது. பாரத
மறுஆக்கம் என்பதன் முழுவிரிவும் வெளிப்பட வேண்டிய இடம் இந்த வன பருவமே. மிகச்
சரியாக அதை மூன்று நாவல்களாக ஆக்கி அப்பருவத்தின் விரிவும், செறிவும் குன்றாது,
குறையாது வழங்கியிருக்கிறார் ஜெ.
உயிர்களின் ஆதி விசைகளில்
முதன்மையானது பசி. ஜடரன் என புராணங்கள் கூறும் அதை, உயிர்கள் எங்கிலும் என்றும்
எரியும் அனலை, எரி வந்தறையும் கந்தமாதன மலையுச்சியில் நேரில் கண்டு, தன்னை அதற்கு
அவியாக்கி, தான் அறம் எனக் கொண்ட அனைத்து குழப்பங்களையும், அறிதல்களையும் தனது
மெய்மையாக அறிந்து, அறம் எனப் புடவியை ஆளும் அன்னம் அள்ள அள்ளக் குறையாமல் பெருகும்
கலமாகத் தன்னை அறிந்து மீளும் தருமனின் கதையாக விரிகிறது சொல்வளர்காடு என்னும்
முதல் நாவல். பசி என்னும் ஆதி உணர்வில் இருந்து அறம் என உன்னதத்தைக் கண்டடைந்த
மானுடத் தரிசனம் அந்நாவல்.
இரண்டாவதாக வருவது தாகம்.
முதல் உயிர்த் துளி உருவான இடத்தில் நீரும் இருந்தது என்பதே அறிவியல் கூறும் உண்மை.
நம் மரபும் இப்புடவியின் ஆதியில் கடலில் தன் காலைத் தானே சுவைத்துக் கொண்டிருந்த
ஆலிலை குழந்தையைத் தானே காட்டுகிறது. மானுடம் இத்தாகம் என்பதை பல தளங்களுக்கு
விரித்துச் சென்று விட்டிருக்கிறது. நீர் விடாய் துவங்கி வாழும் விடாயாக,
அறிதலுக்கான தாகமாக அதை பதங்கமாக்கியிருக்கிறது. நாம் முன்பே கூறிய மானுடத்தை
பிறவற்றிலிருந்து வேறுபடுத்திய சாகசம் என்னும் உணர்வின் ஆதி வடிவம் என தாகத்தைச்
சொல்லலாம். தாகம் என்பது தேடலே. அத்தகைய ஒரு தேடலின் சாகசமாக, அர்ஜுனனின் திசைப்
பயணங்களை விவரிப்பது கிராதம்.
மூன்றாவதான பெருகும்
விழைவின் ஊற்றான காமம், அதன் ஊடு பாவுகள், என்றென்றைக்குமான ஆண், பெண்
இருவருக்குமான உறவுநிலைகளில் காமம் செலுத்தும் ஆதிக்கம், அது காதலென்றும்,
தாய்மைஎன்றும் கனிந்து உருகும் தருணங்கள், அவற்றின் மீதேறி இம்மானுடம் அடைந்த ஏற்றங்கள்,
அதன் உச்சமாக ஒரு மனதின் மலர் மணத்தை பிறிதோர் இணைமணம் முகர்ந்து அம்மலரைக்
கண்டடைந்து பெரும் மெய்மை என விரிவாக ஆராய்கிறது மூன்றாவது நாவலான மாமலர். மூன்று
ஆதி உணர்வுகள் வாயிலாகவும் மானுடம் அடைந்த மெய்மைத் தரிசனங்களே இந்நாவல்களின்
மையம்.
[4]
பாரதத்தில் அர்ஜுனன் பாசுபதாஸ்திரம்
பெற்ற நிகழ்வு ஒரு கதை மட்டுமே. தங்களை எதிர்க்கும் கௌரவர்களை வெல்ல அஸ்திரங்களின்
உச்சமான பாசுபதாஸ்திரத்தை சிவனாரிடம் இருந்து பெற வேண்டும் என கிர்ஷ்ணனால்
அறிவுறுத்தப்பட்டு உடன்பிறந்தவர்களை விட்டு கிளம்பிச் செல்கிறான் பார்த்தன். சிவனை
நோக்கித் தவமிருக்கும் அர்ஜுனனிடம் கிராத ரூபனாக வந்த சிவன் ஒரு பன்றி வேட்டையை
முன்வைத்து ஒரு துவந்த யுத்தத்திற்கு அழைத்து, அவனது ஆணவத்தை அழித்து, அவனது
வீரத்தை மெச்சி இந்த அஸ்திரத்தை அளிக்கிறார். அதன் பிறகு இந்திரன், வருணன்,
குபேரன் மற்றும் யமன் தத்தமது உயர் அஸ்திரங்களான வஜ்ராஸ்திரம், வருணாஸ்திரம்
(பாசாஸ்திரம்), அந்தர்தனாஸ்திரம் மற்றும் தண்டாஸ்திரம் ஆகியவற்றை அளிக்கிறார்கள்.
அவற்றைப் பெற்றுக் கொண்டு அவன் மீள்கிறான். அனைத்து பாடபேதங்களிலும் சிற்சில
மாறுபாடுகளுடன் இதே கதை தான் மீண்டும் மீண்டும் பேசப்பட்டிருக்கின்றன.
அர்ஜுனனுக்கும் கிராதனுக்குமான யுத்தம் மட்டுமே இதில் சற்றேனும் விரித்து
பேசப்பட்டிருக்கின்றன. கிராதார்ஜுனியம் இவ்வகையில் ஒரு செவ்வியல் ஆக்கம்.
ஆயினும் இதில் சில
கேள்விகள் தொக்கி நிற்கின்றன. அர்ஜுனன் இவ்வளவு கஷ்டப்பட்டு தவமியற்றி பெற்ற எந்த
ஒரு அஸ்திரத்தையும் அவன் போரில் பயன்படுத்தவில்லை. ஏன்? அப்படி பயன்படுத்தப்படாத அஸ்திரங்களால்
அவனுக்கு என்ன பயன்? அப்படியென்றால் அந்த அஸ்திரங்கள் என்பவை தான் என்ன?
அவற்றுக்கு என்ன பொருள்? போரில் பயன்படாத அஸ்திரங்களைத் தேடிச் செல்ல கிருஷ்ணன்
என் அர்ஜுனனைத் தூண்டினான்? பாண்டவர்கள் காட்டிலிருந்த பன்னிரு வருடங்களிலும்
கிருஷ்ணன் என்ன செய்து கொண்டிருந்தான்? இந்திய ஞான மரபின் மூவறிவிப்புகள் என்றான
பிரஸ்தானதிரயங்களுள் ஒன்றான கீதை என்னும் மாபெரும் தத்துவ நூலை கிருஷ்ணன் எவ்வாறு
கண்டடைந்தான்? அந்த நூல் ஏன் மாபெரும் அறத்தோனான தருமனுக்கு உரைக்கப்படாமல்
அர்ஜுனனுக்கு உரைக்கப்பட்டது?
கேள்விகள்...இப்படி
கேட்கப் புகுந்தால் மகாபாரதத்தை நோக்கி பல்லாயிரம் கேள்விகளை நாம் தொடுக்க இயலும்.
மகாபாரத மறுஆக்கம் என்பது இந்த கேள்விகளுக்கான விடைகளை அதில் தேடிக் கண்டடைவதாக இருக்க
வேண்டும். வியாசர் எழுதிய ‘ஜய’ என்னும் மூல பாரதமே அவர் தன் குருதி தன்னெதிரில்
போரிட்டு வீழ்ந்ததில் அவருக்கெழுந்த வினாக்களின் விடையே. அக்கேள்விகள் அவ்வியாசர்
வாழ்ந்த அக்காலத்தின் பரப்பில் இருந்து எழுந்தவை. அவை கால ஒழுக்கில்
மாறியிருக்கும். மேற்கூறியவை இக்காலத்தில், பாரதத்தை வாசிக்கும் ஒருவருக்கு எழுபவை.
இவற்றுக்கான பதில் மீண்டும் இக்காலத்தில் அதை மறுஆக்கம் செய்தே கண்டடையப்பட
வேண்டும். ஜெ கூறுவது போல இன்னும் இருநூறு ஆண்டுகள் கழித்து செவ்வாய் கிரகத்தில்
குடியேறிய நமது வருங்காலத்தலைமுறைக்கு அவர்களுக்குரித்தான புதிய வினாக்கள்
எழுகையில் அவர்களுக்கேற்ற வகையில் மீண்டும் மறுஆக்கம் செய்து கண்டடைவார்கள்.
முன்பே கூறியது போல மகாபாரதம் தனக்கான வியாசர்களைத் தேடிக் கொண்டே இருக்கத்தான்
போகிறது. அவர்களும் காலத்துளியில் உருவாகி தொகுத்து மானுட அறிதலை முன்னெடுத்துக்
கொண்டே தான் சென்றுகொண்டிருக்கப் போகிறார்கள்.
மேற்கூறிய கேளிவிகளை
பாரதத்தில் ஒரு பாரதனாகக் கேட்டு அதன் பதில்களை ஒரு படைப்பாளியாக ஜெ எழுதிக்
கண்டடைந்த நாவலே கிராதம் எனலாம். முதல் கேள்வி, இந்த அஸ்திரங்கள் என்பவை என்ன? அவை
ஒவ்வொன்றும் ஒரு அறிதல். மெய்மையை நோக்கிய பயணத்தில் ஒரு மைல்கல். “அம்பு
என்பது ஒரு சொல் மட்டுமே. இப்புடவி கொண்டுள்ள ஆழ்மெய்மை ஒன்றே அம்பென உருக்கொண்டு
என்னை வந்தடைகிறது.” என்றே அர்ஜுனன் சொல்கிறான்.
அப்படியெனில் அவன் ஏன் இந்த அஸ்திரங்களைத் தேடிச் செல்ல வேண்டும்? இவை அறிதல்கள்
எனில் அவற்றை அறிந்து கொண்டாக வேண்டும் என ஒரு வீரனைத் தூண்டிய நிகழ்வு எது?
எத்தாகம் அவன் அறிநாவை விடாய் கொண்டு நீர் தேடச் சொன்னது? இவை முக்கியமான
கேள்விகள். இவற்றுக்கான பதில் பொதுவாக நாமறிந்த பாரதத்தில் இல்லை. கௌரவர்களுடனான
போருக்காகத் தான் என்றால் அவன் சென்றிருக்க வேண்டியது மீண்டும் சரத்வானிடம் தான்.
இந்த மெய்மைகளை நோக்கி அல்ல.
அண்ணல் அம்பேத்கார்
கூறியது போன்று ‘மகாபாரதத்தில் ஒரு இடத்தில் கேள்விகள் வந்தால் பதிலை பாரதத்தில்
தேடுங்கள். எங்காவது அதன் பதில் இருக்கும்.’ அதைத் தான் ஜெ வெண்முரசு முழுவதிலும்
செய்திருக்கிறார். அவர் கொண்டு வந்து இணைக்கும் புராணக் கதைகள், குல வரலாறுகள்,
நாட்டாரியல் கூத்துகள் அனைத்தும் அவர் எழுப்பிக் கொண்ட கேள்விகளுக்கு இப்பெருநிலம்
அளித்த பதில்களே. அப்படி அவர் மேற்கூறிய கேள்விக்கு கண்டடைந்த பதில் தான்
கிருஷ்ணார்ஜுன யுத்தம். இது மூல பாரதத்தில் உள்ளதல்ல. ஆந்திரப் பெருநிலத்தின்
நாட்டாரியல் கூத்தில் இருந்து வந்த ஒன்று. ஜெ அந்த யுத்தத்தை கனவிலும், நனவிலும்
நிகழ்த்துகிறார். கிராதம் இந்த இடத்தில் இருந்து தான் மகாபாரதத்திற்குள் நுழைகிறது.
இந்த யுத்தத்தை புரிந்து கொள்ளும் விதம் என்பது கிராதம் என்னும் நாவலின் வடிவையும்,
அதை அணுகும் முறையையும் ஒரு வாசகர் வகுத்துக் கொள்ள உதவும் ஒன்று.
[5]
காலவர் என்னும்
விஸ்வாமித்திர குலத்தைச் சார்ந்த முனிவர் ஒருவர், கட்டற்றுப் பெருகிச்செல்லும்
காமத்தில் திளைத்திருந்த கந்தருவன் ஒருவனின் செயல் ஒன்றால் அவமானப்படுத்தப்பட்டதாக
வஞ்சம் கொண்டு கிருஷ்ணனை அக்கந்தர்வனைக் கொல்ல துணைக்கழைக்கிறார். கிருஷ்ணனும்
அவனைக் கொல்வதாக வஞ்சினம் உரைக்கிறார். அக்கந்தர்வனின் மனைவி அர்ஜுனனிடம்
அடைக்கலம் புக, அவன் வஞ்சினம் உரைத்தவர் எவரென்றே அறியாமல் அடைக்கலம் அளிக்கிறான்.
அதனால் கிருஷ்ணனுடன் போரிட வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்படுகிறான். அதில்
கிட்டத்தட்ட கிருஷ்ணனால் கொல்லப்படும் நிலைக்குத் தள்ளப்படுகிறான். இது
கிருஷ்ணார்ஜுன யுத்தத்தைப் பற்றிய பொதுவான கதை. அந்த முனிவர், கந்தர்வன் போன்ற
பெயர்கள் மாறிய பாடபேதங்கள் இதற்கு உண்டு. எனினும் இக்கதையின் பொதுவான வடிவம் இது
தான். இதை மறுஆக்கம் செய்த விதத்தில் தான் எழுத்தாளர் ஜெயமோகனின் இத்தனைவருட
உழைப்பும், அவருள் இன்றும் படைப்பூக்கத்துடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் படைப்பாளியின்
வீச்சும், அவரது தனித்துவமான பார்வையும் பிரமிப்பூட்டுகிறது.
இக்கதையைக் கேட்கையிலேயே அதிலிருக்கும்
மானுட எதார்த்தத்தை மீறிய ஒரு தன்மை நம்மை வந்தடையும். ஒரு மானுடனுக்கும்,
கந்தர்வனுக்குமான பிரச்சனை. இதில் நாரதர் முதல் அக்னிதேவன் வரையிலான தேவர்கள் வேறு
வருவார்கள். இது ஒரு நடக்கச் சாத்தியமான கதையாக இருக்க இயலாது. ஆனால் முன்பே கூறிய
படி ஓர் புராண கதை என்பது இத்தனை கால அடுக்குகளைத் தாண்டியும் நம்முன் வந்து
நிற்கிறது என்பதாலேயே அதை புறங்கையால் தள்ளிச் செல்லுதல் கூடாது. ஜெ இவற்றை மானுட
அகத்தின் போராட்டமாகப் பார்க்கிறார். இது ஒரு தனித்துவமான பார்வை. அதாவது கதைகள் நிகழ்வுகளாகவும்,
உருவகங்களாகவும் உள்ளன. கதையின் நிகழ்வுகள் உருவாக வெளிக்குள் செல்கையில் அவற்றை
புறவுலகில் இருந்து அகவுலகிற்கு வாசகரும் கொண்டு சென்று விடவேண்டும்.
இங்கே இந்த கதையை அக
உலகிற்கு எவ்வாறு கொண்டு செல்கிறார் ஜெ என்பது ஆர்வமூட்டுமொன்று. இந்த கந்தர்வன்,
முனிவர் பிரச்சனை நிகழும் முன்பாக கிராதம் கிருஷ்ணனின் நிலையை நமக்கு விரிவாகக்
காட்டுகிறது. கூடவே பாண்டவர்களின் வனவாசத்தின் போது கிருஷ்ணன் என்ன செய்து
கொண்டிருந்தார் என்பதற்கான ஒரு விடையையும் நல்குகிறது. யாதவர்களை ஒரு குலமாகத்
திரட்ட ஷத்ரிய முறைகளையும், அதை விடத் தொன்மையான ஆசுரத்தையும் கையாண்ட இளைய
யாதவரின் வழிமுறைகள் மூத்த யாதவரான பலராமரை அவரிடம் இருந்து விலகச் செய்கின்றன. வாழ்வில்
திடீரென்று அனைத்திலிருந்தும் ஏற்படும் ஒரு விலக்கம் போல தன்னுயிரனைய தம்பியிடம்
இருந்து முழுமையாக விலகுகிறார் பலராமர். அத்தகைய ஓர் உளவிலக்கத்தைத் தாங்க
இயலாதவராக, தருமரிடம் சொல்லாடிவிட்டு சாந்தீபனி குருநிலையில் இருந்து கிளம்பிய,
தளர்ந்த இளைய யாதவரை இங்கே காண்கிறோம். அகத்தில் சோர்ந்திருப்பவரிடம் ஜேஷ்டா தேவி
வருகிறாள். இத்தேவயின் தோற்றம் பற்றிய ஒரு விரிவான அறிமுகத்தை கிராதம் தருகிறது.
நம் மரபில் பாற்கடலைக் கடைவது மிக முக்கியமான
தொன்மம். கிராதத்தில் ஜெ இத்தொன்மத்தை அபாரமாக விரிவாக்கியிருகிறார். பாற்கடல் என்பது நமது உள்ளமே. நனவுள்ளம்,
கனவுள்ளம் மற்றும் ஆழுள்ளம் என அடுக்குகளாகப் பிரிந்து இருக்கும் உள்ளத்தைக் கடையும்
போது கிடைப்பவையே பாற்கடல் கடைகையிலும் வருகின்றன. கடைபவர்கள் தேவர்களும்
அசுரர்களும். தேவ அசுர என்பதை நம் மனதின் ஒளி பொருந்திய மற்றும் இருள் மண்டிய
பகுதிகள் எனவும், நீளமான வாசுகி நமது எண்ணப் பெருக்கு என்றும், மந்தர மலையை நாம்
செய்யும் ஊழகம் எனவும் கொண்டால் இத்தொன்மம் மேலும் பொருள் கொண்டதாக ஆகிறது.
பொதுவான தொன்மத்தின் படி முதலில் வருவது ஜேஷ்டை
என்னும் அக்கா, பிறகு சீதேவி என்னும் தங்கை. வெண்முரசு இந்த கடையும் நிகழ்வை இன்னும்
செறிவாக்குகிறது. அந்த மலை கடையும் ஆழுள்ளத்தில் தெய்வங்கள் ஓவியங்களாகவும்,
எழுத்துக்களாகவும் இருக்கின்றன. இவையே நாம் சொல்லும் எந்திரங்கள் மற்றும் பீஜ
மந்திரங்கள். எனவே தான் அவை உச்சரிக்கப்படுகையில் மிக எளிதாக நம் உள்ளத்தின்
எட்டாப் பகுதியை சுலபமாக எட்டி ஒரு மாற்றத்தை உணர வைக்க இயல்கிறது.
அவ்வாறு அடி ஆழத்தில் இருந்து வரும் முதல்
தேவியர் முதுகொட்டி வரும் அக்கா, தங்கையர். அவர்கள் சுழன்று சுழன்று எழுந்து
வருகின்றனர். இந்த இணைந்த உருவமே நமது அகம் அல்லது பிரக்ஞை. பிரக்ஞை தெளிகையிலேயே
நம்முள் சொற்கள் முளைக்கின்றன. நம் மனம் எப்போதுமே ஒளி பொருந்திய பக்கத்தையே
விரும்புகிறது. எல்லைக்குட்பட்ட, வரையறுக்கப்பட்ட விழைவுகள். இவையே நம்மால்
ஏற்றுக் கொள்ளத்தக்கவை. கட்டற்ற விழைவுகளின் இருள் பக்கங்களை நாம் தவிர்க்கவே
விரும்புகிறோம். ஒளி பொருந்திய சீதேவியைத்
தன் துணைவியாக விண்ணளந்தோன் ஏற்க, இருள் தேவியை புடவிக்கிறைவன் தன் மகளாக
ஏற்கிறார்.
இந்த இருள் தேவியை ஏற்றருளும் நீறணிந்தவன்
சொல்வது இன்னும் முக்கியமானது – “உண்மையென்பது உன்
வடிவும் ஆகுக!”. ஆம், மெய்மை என்பது இவ்விருளும் சேர்ந்தது தான். அதை
உணர்ந்து, அதைக் கிழித்து, அதையே போர்த்திக் கொண்ட பிறகும் செம்பொன் மேனியனாகச்
சுடர்பவனே பெரும் யோகி. அவன் அவ்விருளைக் கடக்கவில்லை, வெல்லவில்லை. அவ்விருளையும்
அறிந்து ஒளியேற்றிக் கொள்கிறான். அக்கரியைப் பிளந்து எழுகிறான். சாதாரணர்கள் இந்த
இருவருக்கும் இடையே தெளிவான வேறுபாட்டை அளித்து சமநிலையில் நிற்க போராடுகிற வேளையில்
இருவரும் இணைந்ததே மெய்மை என உணரும் முனிவர் தங்கள் பிரக்ஞையை வெல்கின்றனர்.
முழு மெய்மை என்பது
இருளையும் முற்றறிகையிலேயே வசப்படும். அந்த இருளையே கிருஷ்ணர் விரும்பி போர்த்திக்
கொள்கிறார். அந்த இருளின் பலத்தில் தான் கொண்ட அத்தனை எல்லைகளையும் கடக்கிறார்.
தான் என்றாகி இருந்த அனைத்தையும் துறக்கிறார். தனக்கென்று இருந்து ஐயம்,
அருவருப்பு, விலக்கம் என தன்னைத் தடுக்கும் அத்தனை அகழிகளையும் தடுக்கிறார். தன்னை
மீறி பேருருவம் கொள்கிறார். கிராதம் எனும் நாவல் மிகச் சரியாக இந்த யோகியர்
அறியும் இருளில் இருந்து தான் துவங்குகிறது.
[6]
வெண்முரசு நாவல்களின் முதல் வரிகள் பல
வகையிலும் முக்கியமானவை. பெரும்பாலான வரிகளை நாவல் வளர வளர பேருருக் கொண்டு
எழுந்து நாவல் முடிகையில் ஒட்டுமொத்த நாவலையே குறிப்பவையாக முடிபவை. அனைவருக்கும்
தெரிந்தது பிரயாகையின் துவக்கம். ‘விளக்கமுடியாத விருப்புகளாலும் புரிந்துகொள்ளவே
முடியாத வெறுப்புகளாலும் நெய்யப்பட்டிருக்கிறது வாழ்க்கை.’மற்றொரு மிகச்சிறந்த துவக்க வரி வெய்யோனுடையது – ‘செங்கதிர் மைந்தா, தன் நிழலால் துரத்தப்படுபவனுக்கு
இருளன்றி ஒளிவிடம் ஏது? விழிமுனைகளன்றி
பகையேது? ஆடியன்றி
கூற்றமேது?’ ஆம், கர்ணன்
என்னும் செங்கதிர் மைந்தன் இறுதியில் இருளில் தான் ஒளிகிறான். இந்திர நீலத்தின் முதல்
வரியும் அபாரமான ஒன்றே – “தனிமை ஆயிரம் பல்லாயிரம்
சுவர்களை எழுப்பிக்கொண்டு தலைவாயிலைத் திறந்திட்டு காத்திருக்கிறது.” இதை
ஞானியின், குருவின் தனிமை என வாசித்தால் மொத்த நாவலுமே நம் முன் விரிவதைக் காணலாம்.
மாறாக மிக இயல்பாகத் துவங்கும் நாவல்களும் உள்ளன. அப்படிப்பட்டவை அவற்றின் முதல்
அத்தியாயத்தில் நாவலைக் கொண்டிருக்கும். மழைப்பாடல், சொல்வளர்காடு போன்றவை இதற்கு
மிகச் சிறந்த உதாரணங்கள்.
அப்படிப் பார்க்கையில் கிராதம் எவ்வாறு
துவங்கியிருக்கிறது? “நீர் நிறைந்த மண்கலத்தின் கரிய
பரப்பு பனித்து துளித்து திரள்வதுபோல காட்டை மூடியிருந்த இருளிலிருந்து
எழுந்துவந்த பிச்சாண்டவர் ஒவ்வொரு அடிக்கும் தன் உருத்திரட்டி அணுகினார்.” –
மீண்டும் ஒரு புதுமையான படிமத்தோடு துவங்கியிருக்கிறது. மண்பானையின் பரப்பு நீர்
ஊறுவது உடனே நிகழும் ஒன்று அல்ல. உள்ளே நிரம்பிய நீர் பானையின் நுண்துளைகள் வழியாக
ஊடுருவி பானையின் வெளிப்புறம் முழுவதும் பரந்த பிறகே பானையின் நிறம் கருமை
கொள்ளும். நன்றாக ஊறிய பானையின் நீர் ஏற்கும் தேக்கப்புள்ளியில் மேலும் மேலும்
ஊடுருவும் நீர் துளிர்க்கத் துவங்கும். நுண்துளிகள் ஒன்றிணைந்து திரள்கையில் நம்
கண்ணுக்குத் தெரியும் சொட்டு வரும். இந்த படிமத்தின் விளக்கம் கிரதத்தின் இரண்டாம்
அத்தியாயத்தின் இறுதியில் வருகிறது.
“அக்காட்டுக்குள்
செல்பவனுக்கு கண்களில் வாழும் வானம் உதவாது. கால்களில் குடிகொள்ளும் திசைகளும்
உதவாது. உடலறிந்த ஒன்றும் உடன்வராது. கருவறைப் புகுவதற்கு முன் கொண்ட கருத்து
ஒன்றே கூடவரும். விலக்கி விலக்கி முன்செல்வதே காட்டைக் கடக்கும் ஒரே வழி. அங்கு
அவனை வழிமறிப்பவை அவன் அஞ்சுவன அனைத்தும்தான். அச்சம் அழிந்து அவன்
நின்றிருக்கையில்தான் மூவிழியும் வெண்நீறும் புலியுரியும் பிறைநிலவும்
உடுக்கும் சடையும் கொண்டு கொலைதேர் கொடுஞ்சினக் காட்டாளன் ஒருவன் அவனை எதிர்கொள்கிறான்.”
தான் அறிந்த அனைத்தும் அளிக்கும் அச்சத்தில் இருந்து விடுபடும் ஒருவனை அவனுக்கும்
தெரியாமல் கட்டியிருக்கும் ஒரு விழியறியா தளையொன்றை எரித்து நீறாக்கும்
கொடுஞ்சினத்தொடு அவனுள் இருக்கும் காட்டில் இருந்து உருத்திரட்டி வரும்
உருத்திரனைப் பற்றிய சித்திரமே கிராதத்தின் முதல் வரி. அப்படிப்பட்ட ஒருவனைச்
சந்தித்து மீள்வது என்பது மரணமடைந்து புத்துயிர்ப்பது போன்றதே!! இவ்வாறு அச்சத்தை
அறுத்து, தளைப்பனவற்றை எல்லாம் விலக்கி, விலக்கி தன் முன் வரும் உருத்திரனைச்
சந்திந்து பாசுபதத்தை பெற்று மீளும் அர்ச்சுனன் பற்றியது தான் இந்நாவல் என்பது
அவ்வரிகளின் கனத்தை மேலும் மேலும் அதிகரிக்கிறது.
கிராதம் நாவலின் மிகப்
பெரிய சிறப்பே ஜெ புராணங்களை அவற்றின் அதிமானுட சாகசங்களில் இருந்து விடுவித்து
சாமானிய தளத்திற்கு இழுக்கவில்லை என்பதே. மாறாக அந்த அதிமானுட நிகழ்வுகளை அறிதலின்
சாத்தியங்களாக, அவற்றின் படிநிலைகளாக, ஆழமன உருவெளித் தோற்றங்களாக மாற்றித்
தருகிறார். இது முற்றிலும் புதிய ஒரு எழுத்து முறை. இதை மாய யதார்த்தம் என்ற
வகைமையில் அடக்குவது தகாது. ‘பின்நவீனத்துவ புராண யதார்த்தவாதம்’ என வேண்டுமானால்
சொல்லலாம். நாவலின் மையம் என்பது அர்ஜுனனின் திசைப் பயணங்கள், அவற்றில் அவன் செய்த
சாகசங்கள், அவனது தேடல்கள், அவனது அறிதல்கள், இறுதியாக பாசுபதத்தைப் பெற்றது ஆகியவையே.
இதை நாவலாக, நடந்த ஒன்றாகக் கூறுவது என்பது அப்பயணத்தின் வீச்சை பெருமளவிற்குக்
குறைப்பதே. எனவே அர்ஜுனன் பார்வையிலோ அல்லது அவனது கூட இருக்கும் ஒருவர்
பார்வையிலோ இக்கதை நகர இயலாது. மாறாக இத்தேடல்கள் அவனைப் போன்றே மெய்மையை, அதைத்
தரும் ஆசிரியனைத் தேடியவர்களிடம் அவர்கள் தேடலால் உணர்ந்து கொள்ளக்கூடிய ஒன்றாக, கதையாக
விவரிப்பது என்பது வாசகரிடமும் நேரடியாகக் கதை கூறுவது போன்றதே. அதற்கு முதலில் அந்த
தேடலை விரிவாக அறிமுகம் செய்ய வேண்டும். அதைத்தான் நாவலின் முதல் பகுதியான ‘கரி
பிளந்தெழல்’ செய்கிறது. மெய்மையின் பாதை இருள் நிறைந்தது. இருளை போர்த்தி
நின்றாடும் ஒரு யோகியே இதற்கு திசைச் சுடரென வழிகாட்ட இயலும். சிவத்தை விடச்
சிறந்த யோகி யார்? எனவே அங்கே துவங்குகிறது நாவல்.
நாவலின் நிகழ்வுகள் என்று
பார்த்தால் விதை புதைந்த மண் எனத் தாங்களிருந்த குருநிலைகளை உணர்ந்து, கீறி
எழுந்து வானோக்கி பேருருக் கொள்ள வேத நிலைகளை விட்டு வெளிப்போந்து மெய்யாசிரியரைத்
தேடும் வைசம்பாயனன், பைலன், ஜைமினி, சுமந்து என்னும் அந்தணச் சிறுவர்கள், சண்டன்
என்னும் காளாமுகச் சூதருடன் தெற்கு நோக்கி மேற்கொள்ளும் பயணம். அப்பயணத்தினூடாக
அவர்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்வதும், அர்ஜுனனை மேலும் நெருங்கி புரிந்து
கொள்வதும், இப்பெரும் நிலத்தின் வேதங்களைத் தாண்டிய அறிதல்களை அடைந்து கொள்வதும்
நாவலின் நிகழ்வுகளாக வருகின்றன. இதன் இறுதியில் அவர்களிடம் வந்து சேரும் ஒரு
அறிவுச் சுடர், உக்கிர சிரவஸ் சௌதி, அவர்களை அவர்களது ஆசிரியரிடம் இட்டுச்
செல்வதாக முடிகிறது இந்நாவல். இவர்கள் ஐவருக்கும் ஆசிரியராக அமைந்தவர் யார்? வேறு
யார், வேத வியாசர் தான்.
நாவல் யோகியர் அறியும்
இருளில் இருந்து துவங்குகிறது. அவ்விருளில் இரு நிலவுகள் என்பது நமது மரபு. “விழியறியும் இருள் சிறுதிரை.
உணர்வறியும் இருள் பெருந்திரை. எண்ணம் அறியும் இருள் இயலாத்திரை. இருளுக்கு இருளாவது யோகம்
அறியும் இருள்” என்கிறார் பிச்சாண்டவர். நம் மனமும்
மூவடுக்குக் கொண்டதே. நனவுள்ளம், கனவுள்ளம், ஆழுள்ளம் – ஜாக்ரத், ஸ்வப்னம்,
சுஷுப்தி. நனவுள்ளம் அறியும் இருள் விழியறிவது. அவ்விருளில் வழி தேற, தொலைந்தால்
மீண்டு வர வேதங்கள் துவங்கி பல விளக்குக்கள் உள்ளன.
கனவுள்ளம் அறியும் இருள் உணர்வறிவது. உணர்வால்
அறிந்த இருளில் தொலையாமல் வர கனவுகளைத் தொடர்ந்து செல்லும், அவ்வாறு செல்லும் போதே
அது கனவு என்பதை உணர்ந்து கொள்ளும் ஒரு தன்னுணர்வே துணை. இந்த தன்னுணர்வும் ஒரு
தேர்ந்த குருவின் வழிகாட்டலால் மட்டுமே வழித்துனையாகத் தொடர்ந்து வரும்.
இல்லாவிட்டால் அவ்வப்போது வந்து வந்து செல்லும். அது மிகப் பெரிய துயர்,
கனவிற்கும் நிஜத்திற்கும் ஊடாடும் போராட்டம், பிறழ்வு நிலையில் தான் சென்று
முடியும். மிகச் சரியாக அன்னை தன் புடவை மறைப்பில் இருந்து அவ்வப்போது எடுத்துக்
காட்டும் பொம்மை எனச் சொல்கிறது கிராதம். அந்த தன்னுணர்வே அவ்விருளில் இருந்து மீண்டு வர உதவும் நிலவு.
ஆழுள்ளம் அறியும் இருள் எண்ணத்தால் அறிவது.
எண்ணம் ஓர் மனதில் எவ்வாறு தோன்றுகிறது என்பதை அறிய இயலாது. நம் எண்ணங்கள்
நம்மிடம் வந்து சேர்ந்தவை, அவை குவிந்திருக்கும் ஓர் கூட்டுப் பெருமனமொன்றில்
இருந்து தோன்றுபவை. எனவே விளக்க இயலாதவை. ஆனால் தொடர்ந்து சென்றால் நம்மை நமக்கே
காட்டும் தன்மை கொண்டவை. அந்த ஆழ்மனம் அறியும் எண்ணங்களின் இருளில் தொலைந்தால் மீள
இயலாது. அங்கேயும் தொலையாது வழியறிய இதே தேர்ந்த ஞான குருவின் தொடர்ச்சியான
வழிகாட்டலுடன் கூடிய தன்னுணர்வே துணை. ஒரு வகையில் இந்த மூன்றாம் அடுக்கு வரை
தொடர்ந்து வரும் தன்னுணர்வே ஒருவரின் தனி அடையாளம் எனலாம். இதுவே தான் யார் என்ற
அறிதல். இதன் ஒரு பிரதிபலிப்பே இரண்டாம் அடுக்கின் தன்னுணர்வு. அவ்வடுக்கின்
பிரமாதமான நிறப்பிரிகையே முதலடுக்கான நனவுள்ளம் அறியும் ‘நான்’ என்ற உணர்வு.
இருளில் ஒளி தருவது நிலவு தானே. எனவே தான் எண்ணங்கள் அறியும் ஆழுள்ளத்தின் இருளில்
வழிகாட்டும் தன்னுணர்வை ஒரு நிலவாகவும், உணர்வுகள் அறியும் இரண்டாம் அடுக்கான
கனவுள்ளம் அறியும் இருளில் வழிகாட்டும் அதன் பிரதிபலிப்பான நீர்ப்பாவையை இரண்டாம்
நிலவாகவும் யோகியர் அறிகிறார்கள். இந்த இரண்டாம் நிலவு வானில் எழ அந்த இருளுக்குச்
சென்று சேரும் ஒரு அச்சமின்மை இருக்க வேண்டும். அந்த இருளையும் கண்டடைந்தவர்களே
முழுமையை, மெய்மையை உணர்ந்தவர்கள்.
வெண்முரசு நாவல் வரிசையின் முதல் நாவலான முதற்கனலில் வியாசர் தன்னுள் நிறைந்த
சொற்களால் காவியம் எழுதப் புகுகையில் ஒரு மத வேழம் வந்து அவர் இருந்த கல்லால
மரத்தில் முட்டி தன் ஒன்றைத் தந்தத்தை இழக்கிறது. ஆம், அவரும் ஒற்றைத் தந்தம்
கொண்ட யானையைத் தான் காண்கிறார். உண்மையில் வியாசர் இரு நிலவுகளையும் காணக்
கூடியவர் தான். அதனால் தான் தென்திசைத் தெய்வமாகிய அறிவின் மூர்த்தியான் அமர்ந்து
நால்வருக்கு மெய்மை அருளிய கல்லால மரத்தில் உறிக்குடில் கட்டி வாழ்கிறார். இருள்
முதல்வன் அவருக்கும் யோகியர் அறியும் இருளை முற்றாகக் காட்டியிருப்பான்.
இருப்பினும் அந்த இரு நிலவுகளில் ஒரு நிலவு தானாகவே அழிந்து அவரை ஒற்றை நிலவில்
விழி திறக்கச் செய்கிறது. அவ்வாறாக அவர் யோகத்தை அறிந்து காவியத்தைப் படைக்கிறார்.
எனவே தான் அவரால் அந்த ஆழுள்ளத்தின் இருளைக் கூட எழுத இயன்றது, மகாபாரத வடிவில். கிராதம்
அவரின் ஐந்து மாணவர்களும் தங்களின் ஆசிரியரைத் தேடிச் சென்று
கண்டடையும் பயணமாக விரிகிறது.
ஒரு
வகையில் பாரதம் வியாசர் சொல்லச் சொல்ல விநாயகர் எழுதியது என்பதே ஒரு மாபெரும்
படிமம் தானே. எண்ணங்கள் அறியும் இருளே வந்து தன்னை உணர்வால் விரித்து விரித்து
எழுதிக் கொண்ட ஒரு காவியம் என்றே மகாபாரதத்தைச் சொல்லலாம். அவ்வாறு அவ்விருளை
அதைக் கொண்டே எழுதியவன் உணர்வு அறியும் இருளில் கனவில் ஆடி, கற்பனையால் விரித்து
தொகுத்து தொகுத்து மெய்மையை அறிந்த மாமுனி. முதற்கனல் அபாரமாக காவியத்தை முடித்த
பிறகு அவர் அறிந்த மெய்மையை விளக்குகிறது. கிராதம் அதையே “அனைத்தையும் ஒன்றெனக் கலந்தால் இருளன்றி வேறேது வரும்? மேலே அவ்வீண்மீன்களை தன் மடியில் பரப்பி
அமர்ந்திருக்கும் இருள்.”
என்று பிச்சாண்டவர் வார்த்தைகளாகச் சொல்கிறது. ஆம், வெண்முரசு
இப்பெருங்காவியத்தின் ஒளி பொருந்திய நாயகர்களை அவர்கள் சென்று அடைந்த, அவர்கள்
கொண்ட இருளையும் சேர்த்து அவர்களை இருளின் மடியில் ஒளிரும் விண்மீன்களாகக்
காட்டுகிறது. கிராதம் கூடவே மானுடம் அறிந்த அறிதல்களின் பரிணாம
வளர்ச்சியை, வேதம் செழித்த இந்நிலத்தில் வேதங்களின் வரலாற்றை, அவ்வரலாற்றை நமக்கு
இன்றும் பறைசாற்றிக் கொண்டிருக்கும் புராணக் கதைகளை விரிவாகப் பேசுகிறது.
இவையனைத்தையும் சலிப்பூட்டும் கருத்துக் கோவைகளாக விளக்காமல் நாவலின் கதையோடு
இணைத்து புனைவாகவே வழங்கியிருப்பதில் பெருஞ்சாதனையையே செய்திருக்கிறது.
[7]
இருளில் இருக்கும் கிருஷ்ணர் தான் சென்று சேர்ந்த இருளுக்கு
அர்ஜுனனையும் இழுக்கிறார். இருவரும் ஒருவருள் மற்றொருவர் நுழைந்து சமரிடுகின்றனர்.
ஒருவரை ஒருவர் கொன்று கிழித்தாடுகின்றனர். இறுதியாக ஒரு கணுவிடைவெளி அவகாசத்தில்
பார்த்தன் மீது ஏறி அமர்ந்து கீழடக்குகிறார் இளைய யாதவர். ஆயினும் அவரால் அவனைக்
கொல்ல இயலவில்லை. இருவரும் பிரிந்து செல்கின்றனர். அவர் பார்த்தனை வெல்கிறார்,
எனினும் அவனைக் கொன்று கடந்து செல்ல அவரால் இயலவில்லை. அது அவனைச் சிறுமை
செய்கிறது. ஏன் தான் இளையவரிடம் தோற்றோம் என்றே எண்ணுகிறான் பார்த்தன். இருவரும்
ஒருவருள் மற்றொருவர் புகுந்தாடிய போது அவர்களை மீறிஎழுந்த வேறு ஏதோ இரு சக்திகள்
மோதிக் கொண்டதாகவே அவன் உணர்கிறான். தன்னில் எழுந்தமையால் அது தன்னுள் இருந்து
தான் எழுந்திருக்க வேண்டும். அவை என்ன? அதை அறியவே அவன் இப்பயணத்தை
நிகழ்த்துகிறான்.
விழைவுகளை வேட்க வேள்விகளை முன்வைக்கும் வேதம் தன்னையறிய
ஊழ்கத்தையே பயிலச் சொல்கிறது. ஊழ்கத்தில் அவன் ஏறி ஏறிச் செல்வது ஏழு மலைகளை.
மூலாதாரம் துவங்கி சகஸ்ராரத்தில் முடியும் ஏழு சக்கரங்களும் நாவலில் வெவ்வேறு
இடங்களில் வருகின்றன. ஊழ்கத்தில் ஏழு மலைகளாக ஓங்கி உயரும் இவை, வருணனைச்
சந்திக்கச் செல்கையில் ஏழு பாலைகளாக விரிகின்றன. ஊழ்கத்தின் உச்சியாக இறுதியான
இந்திர கீல மலையில் ஏறும் அர்ஜுனன் அங்கேயே பல்லாண்டு காலம் ஒரு வெண்சுண்ணக்
குகையில் வாழ்கிறான். அது கருணை, நன்று, அறம், அன்பு ஆதல் என இப்புடவியை நெய்த இருமைகளில் ஒன்று மட்டுமே
இருக்கும் அத்வைதகம் என்னும் உச்சத்தை அடைகிறான். ஆயினும் அது இயல்பல்ல என்பதை
உணர்ந்து மீண்டும் பூமிக்கே திரும்புவது என முடிவெடுக்கிறான். அத்தருணத்தில்
அவனுக்கு நான்கு திசைகளிலும் சென்று தனக்குரிய மெய்மையை அடைய வேண்டும் என்ற அறிதல்
கிடைக்கிறது. எனவே அவன் தன் திசைப் பயணத்தைத் தொடர்கிறான்.
இப்பயணம் கூடவே வேதங்களின் பரிமாண வளர்ச்சியாகவும், வேத
முதன்மைக்கான கடவுளர்களின் போர்களாகவும் மலர்கிறது. மற்றொரு கோணத்தில் இப்பாரத புண்ணிய
நிலத்தில் மானுடம் வளர்ந்த கதையும் கூட. கிராதம் இந்திய மெய்யியலுக்கு ஆற்றிய
பெரும்பங்கு என்றே இதைச் சொல்லலாம். அவன் முதலில் செல்வது தெற்கிற்கு.
தென்புலத்தாரின் திசை, எமனின் திசை. அதன் பிறகு குபேரனின் வடதிசை. பிறகு
நெறியாளும் வருணனின் மேற்குத் திசை. விழைவுக்கரசனான இந்திரனின் கீழ்த்திசை.
இவற்றில் உள்ள வரிசை மிக முக்கியமானது. கிராதம் வேதம் என்பது மானுடம் தங்கி
வாழத்துவங்கிய தொல்காலத்தில் இருந்தே உருவாகி வந்த அறிதல்களின் தொகுப்பு என்ற
பார்வையை முன்வைக்கிறது. எனவே இன்று வேதங்கள் என நாம் அறிபவை மொழி திருந்தா
தொல்காலத்தில் இருந்தே இருந்தவற்றின் நீட்சி என்பதே அதன் பார்வை. கூடவே
அவ்வேதங்கள் எப்படியெல்லாம் உருமாறின என்பதையும் ஆராய்கிறது.
வெண்முரசு
முழுவதிலும் வரும் ஒரு முக்கியமான சரடு பாரதம் என்றும், பாரத பண்பாடு என்றும்
நாமழைக்கும் ஒன்றின் உருவாக்கம் பற்றிய ஒரு சித்திரம். மழைப்பாடல் துவங்கி இச்சரடு
வந்துகொண்டிருக்கிறது. வெண்முரசு இந்த உருவாக்கத்தைக் குறித்த சித்திரங்களை மூன்று
தளங்களில் நிகழ்த்தி வருகிறது.
1.
சமூக,
பொருளாதார தளம்
2.
மத,
புராண தளம்
3.
தத்துவ,
கருத்தியல் தளம்
கிராதம்
நம் பாரத பண்பாடு குறித்த ஒரு முக்கியமான ஒரு பார்வையை, வேதங்களின் பரிமாண
வளர்ச்சி என்ற அடுக்கில் ஒரு முக்கிய ஒரு அவதானிப்பை நிகழ்த்தியிருக்கிறது.
வண்ணக்கடலில் இளநாகனின் பயணங்களின் ஊடாகவும், ஏகலவ்யனின் கதையிலும் மிக விரிவாக
அசுர குல வரலாறு வெண்முரசில் வந்துள்ளது. அது ஒரு வகையாக சமூகவியல் பார்வையாக
இருந்தது. சுருக்கமாக மலைகளிலும், காடுகளிலும் சிந்தனையை நோக்கி வந்த, ஒன்று கூடி
வாழத்துவங்கிய பழங்குடிகள் குடிகளாக, குலங்களாக, குமுகங்களாக தொகுத்துக் கொண்ட
காலகட்டத்தில் ஒவ்வொரு குடிகளும் அந்த பெரும் தொகுக்கும் செயல்பாட்டின் வெவ்வேறு
புள்ளிகளில் இருக்கின்றனர். மிக மிக பின்தங்கி ஒரே ஒரு குடியைச் சாரந்தவர் மட்டும்
கொண்ட, வேறு எவருடனும் தொடர்பு கொள்ளாத, தொடர்பு கொள்ள விரும்பாத, அயலவர் எவரையும்
விரோதிகள் என்று பார்க்கும் ஆதி மனித குடிகள் அரக்கர்கள் என்றும், அவர்களிடம்
இருந்து சற்றே முன்னேறி சில குடிகளைத் தொகுத்து தமக்கென ஒரு குல அடையாளத்தைக்
கொண்டு, ஒரு சிறு அரசாகத் திரண்டு பிற குலத்தவரொடு ஒரு எல்லைக்குட்பட்ட உறவைக்
கொண்டிருந்த மக்கள் தொகுப்பு அசுரர் எனவும் அழைக்கப்பட்டனர். இவ்விருவரும் வாழும்
நிலங்கள் அவரவர் குணத்திற்கேற்ப மானுடர் புழங்குவதற்குக் கடினமான இடங்களாகவே
இருப்பதைக் கண்டோம். அசுரர் இடங்கள் சற்றே பரவாயில்லை ரகம். அரக்கர் இடங்களை
அடைவது எளிதல்ல. அவர்கள் வாழும் இடங்கள், அவை கொண்டுள்ள அபாயங்கள் போன்றவற்றால்
அவர்கள் இயல்பாகவே வலுவுள்ளவர்களாக, இடர்களைத் தாங்கி வாழும் தகவமைப்பு
உள்ளவர்களாக இருந்தனர். சூழலும், அதற்கேற்ப அமைந்த உடலும் அவர்களை தங்கி
வாழந்தேயாக வேண்டும் எனத் தூண்டிச் செல்லும் குன்றா விழைவு உள்ளவர்களாக
ஆக்கியிருந்தன.
இவ்விருவரையும்
தவிர சிந்து துவங்கி கங்கை வரை நதிகளின் கரைகளில் வாழ்ந்தவர்கள் படிப்படியாக
வேளாண்மை, வியாபாரம் என சிந்தனை மற்றும் தங்கி வாழ்தல் என்ற மானுட பரிணாமப்
படிகளில் சற்று முன்னேறிய மக்களாகத் தொகுத்துக் கொள்ளத்துவங்கியிருந்தனர்.
இக்குலங்களை இணைத்து அவர்களை சரி, தவறு என வழிநடத்தி தண்டம் வழங்குபவனாக ஒரு
தலைவன் உருவாகி இருந்தான். இவர்கள் குடிகளாக, குலங்களாக தொகுத்துக் கொண்ட பொழுது
அவர்களிடம் இயல்பாகச் சேர்ந்த உபரி அவர்களை நோக்கி பிறரை இழுக்கத் துவங்கியிருந்தது.
எனவே தங்களைக் காத்துக் கொள்ள அவர்கள் வேளாண்மை, வணிகம் செய்வதைத் தவிர போர்த்
தொழில் மட்டுமே செய்யும் ஒரு புதிய குலத்திற்கான தேவை வந்திருந்தது. இவர்கள்
தங்களை ஷத்ரியர்கள் என்றனர். கொண்டு, நதியை ஒட்டி வியாபாரம் செய்து அரசுகளாகத்
தம்மை நிலை நிறுத்திக் கொண்ட பெருங்குலங்கள் உருவாகிக் கொண்டிருந்தன. இவர்களை
எதிரிகளிடம் இருந்து காப்பவனாக அவர்களின் அரசன் இருந்தான். இவர்கள் இயல்பாகவே
அசுரர் மற்றும் அரக்கரை அஞ்சினர். முக்கிய காரணம் அவர்களின் உடல் பலம் மற்றும்
அவர்களின் கட்டற்ற விழைவு. இவர்கள் அசாதாரணம் என எண்ணியவற்றை அவர்கள்
விழைந்ததாலேயே அடைந்தனர். இந்த சமூகப் பார்வையே இம்மக்களால் உருவாக்கப்பட்ட
வேதங்கள், புராணங்களில் தேவர்கள், அசுரர்கள் என பிரதிபலிக்கப்பட்டது. இதில் அசுரர்கள், அரக்கர்கள் போன்றோர் வாழ்ந்தவர்கள். மட்டுறுத்தவியலா விழைவு
கொண்டோர். தேவர்கள் என்பது ஒரு மானுட உணர்நிலை மட்டுமே. அறமென, நெறியென
வகுக்கப்பட்டவற்றுக்குள் நிற்கும் விழைவுகளின் உச்சகட்ட சாத்தியங்களை அடைந்தவர்கள்.
முழுக்க முழுக்க ஒருவகை அகப் படிமம்.
வேதம் என்பது இம்மக்கள் தொகையின் அறிதல்களின் தொகை. அசுரர்,
நாகர், மானுடர் என ஒவ்வொருவரும் அவரவர்க்கான வேதங்களைக் கொண்டிருப்பவர்கள் தாம்.
ஒவ்வொரு வேதமும் அதற்கு முன் இருந்த வேதத்தின் கூறுகளைத் தன்னுள் கொண்டிருப்பது
தான். ஒன்று இன்றேல் பிறிது முழுமை கொள்ளாது. முழுமையான வேதம் என்பது அசுர
வேதத்தையும் கற்றறிந்த பிரஹஸ்பதி, திரிசரஸ் போன்றவர்களிடமே இருந்தது என்பதே நமது
புராணம். இந்த வேதத்தின் முதன்மைத் தெய்வம் என்பது காலந்தோறும் மாறிக் கொண்டே
வருவது. வேதம் விளைத்த ஆதி மானுடர் அறிந்த முதல் தெய்வம் காலமும் இறப்பும் நோயும்
மீட்புமெனத் தோன்றி அருளும் தென்புலத்தோன். அவர்களின் மூதாதையரை அழைத்துச்சென்றவன், அவர்கள்
வாழும் தென்னுலகை ஆள்பவன். அனைத்துக்கும் பொருள் அளிக்கும் முழுமையில்
குடிகொள்பவன். அதன் பிறகு தங்கி வாழ்ந்து பொருள் சேர்கையில் செல்வத்தின்
இறைவன் சற்றே முன்னுக்கு வந்தான். இவையெல்லாம் தனித்தனியான குழுக்களாக வாழ்ந்த
வரைக்கும். குமுகங்கள் அரசாகத் தொகுக்கப்பட அவர்களுக்கு நெறிகள் தேவையாயின.
மானுடர்கள் இணைந்து வாழ ஒரு ஒத்திசைவு வேண்டியிருந்தது. அந்த ஒத்திசைவை ஏற்றவை பெருங்குடிகளாக,
சமூகங்களாக, அரசுகளாக மலர்ந்தன. அந்த ருதத்தை அவர்களின் அரசன் ஆண்டான். இத்தகைய நெறிகளின்
தேவைகளை முதலில் உணர்ந்தவர்கள் கூடியிருப்பதால் மட்டுமே தங்கி வாழ இயலும் எனக்
கண்டு கொண்ட பெரும் பாலை நில மக்களே. அடிப்படை நீர்த்தாகம் தீர்க்க வான் நோக்கி
இறைஞ்சி நிற்கும் அவர்களுக்கு அதைப் பகிர்ந்து அளித்து தங்கி வாழ நெறியாளும் ஒரு
கொடுஞ்சின மன்னன் தேவைப் பட்டான். நீரை ஆள்பவன், நெறியை நிலைநாட்டுபவன், ருதத்தைப்
பேணுபவன், அவனே வருணன். மானுடத்தால் தொகுக்கப்பட்ட முதல் தொல்வேதம் தன் தலைவன்
எனக் கொண்டாடியது வருணனையே. ஆசுரத்தில் இருந்து மானுடமாக பரிணமிக்கையில் அசுரனான
வருணன் பின்தள்ளப்பட்டான்.
இதை அறிய அர்ஜுனன் ஏழு பெரும்பாலைகளைக் கடந்து செல்கிறான்.
அவ்வாறு சென்று அவன் கண்டடையும் வருணன் இன்றைய சாக்கடலில் வாழ்வதாகக் கற்பனை
செய்கிறது கிராதம். அபாரமான கற்பனை. அங்கும் மூன்று வருணன்கள் இருக்கிறார்கள்.
அசுரனான குல மூதாதைகள் சூழ அமர்ந்திருக்கும் தொல்வருணன், அரசர்கள் சூழ
அமர்ந்திருக்கும் அரசனான வருணன், காசியப பிரஜாபதிக்கு அதிதியில் தோன்றிய ஆதித்யர்களில்
ஒருவனான வருணன். இவற்றில் ஆதித்ய வருணனே
மிகவும் இளையவன். இம்மூன்று வருணன்களும் கடவுள் என்னும் உருவகத்தின் பரிணாம
நிலைகளே. மக்களைத் தொகுத்து ஆண்ட குல மூதாதை, அரசன் அதன் பிறகு தெய்வம். இதில்
காசியப பிரஜாபதி உருவாக்கிய ஆதித்யர்கள், தைதியர்கள், தானவர்கள் என ஒவ்வொருவரும்
அவர் நாகரான தட்ச்சரின் மகள்களைப் புணர்ந்து பெற்றவர்களே. அசுரவேதம், நால்வேதம்
இவைகளுக்கு இணையாகவே வரும் பிறிதோர் வேதம் நாக வேதம். அதை அழிக்க இயலாது. மானுடமே
நாகர்களில் இருந்து தான் பரிணமித்து வந்திருக்கும். ஊர்வனவற்றில் இருந்து
பரிணமிப்பதும் ஒரு சாத்தியம் தானே.
வருணனை சாக்கடலுக்கு கொண்டு சென்றதில் இருக்கிறது ஜெ வின்
அபாரமான வாசிப்பும், தொகுத்தறியும் திறனும். அப்பயணத்தில் அர்ஜுனன் சந்திக்கும்
ஜேஷ்டா தேவி சர்வலங்கார பூஷிதை. மிக அழகானவள். அர்ஜுனனே வியக்கிறான். அவள் இருள்
கொண்ட, மூதாட்டியாக அல்லவா இங்கு வழிபடப்படுகிறாள். தான் அப்படி அங்கு அமைவதாக
ஜேஷ்டா தேவி சொல்கிறாள். இது சற்றே விவாதத்துக்குரிய இடம். சிந்துவுக்கும் மேற்கே
இருந்தவர்கள், அவர்களின் தேவைகளுக்காக வான் நோக்கிச் செய்த மன்றாட்டுகளின்
தொகுப்பே வேதத்தின் அடிப்படை என்கிறது கிராதம். இன்றளவும் இதை உறுதிச் செய்யும்
வகையில் வருணன், இந்திரன், மித்ரன் போன்ற ரிக்வேத தெய்வங்கள் பைசாந்திய பேரரசு
காலத்திலும், தொன்மையான இரானிய சமூகத்திலும் இருந்திருப்பதற்கான சான்றுகள் உள்ளன.
இன்றும் கூட ISIS தீவிரவாதிகளின் முதல் இலக்கான யேசிதிகளின் தெய்வங்களுக்கு
இந்திய தெய்வங்களின் சாயல் உள்ளன. அனைத்துக்கும் மேலாக அசைக்க முடியாத ஒன்று உண்டு.
அது சாரதூஷ்டிர மதத்தின் மூல நூலான அவெஸ்தா. அதன் தெய்வங்களும் நமது வேதங்களின்
தெய்வங்களும் ஒரே பெயர்கள் கொண்டவையே. ஒரு சிறு தலைகீழ் மாற்றம் மட்டும் உண்டு.
அது அவர்களின் முதல் தெய்வம் அசுரன். ஆம் அஹூர மஸ்தா என்ற முதல் தெய்வம் அசுரனே.
அவர்களுக்கு தேவர்கள் கெட்டவர்கள், அஹூரர்கள் அல்லது அசுரர்கள் நல்லவர்கள்.
இந்திரன் அவெஸ்தாவில் கிட்டத்தட்ட வில்லனே. இப்பெரிய தெய்வப் பரப்பை நம்முன்
நிகழ்த்திக் காட்டிய வகையில் கிராதம் தனிச்சிறப்பான ஒரு நாவல் தான்.
வருணனைத் தலைவனாகக் கொண்ட மகாவாருணம் இந்திய நிலத்தின்
அசுரவேதத்தொடு கலந்து முதல் வேதமாக இம்மண்ணில் நிலைகொண்டது என்பது அசுரர்களாயிருந்த
மக்கள் சமநிலத்தில் தங்கி வேளாண்மை செய்து பெரிய அரசுகளைத் தோற்றுவித்து பெருகத்
துவங்கியிருந்தனர் என்பதன் வெளிப்பாடு. அசுரர்கள், அரக்கர்கள் என நால்வருணத்துக்குட்படாதோர்
அரசர்களால் வேட்டையாடப்பட்டு தோற்கடிக்கப்பட்டார்கள். அவர்களை நம்பிய மக்களை
தங்களுடன் இணைத்துக் கொள்ள அவர்களின் வேதங்களை அழித்து தமது வேதத்தை அரசர்கள்
முன்வைத்தார்கள். அரசுகள் நிலைபெற நிலைபெற அசுரர்கள் காடுகளுக்கும், அரக்கர்கள்
மேலும் உள்காடுகளுக்கும் துரத்தப்பட்டனர். இது வேதத்திலும் வெளிப்பட்டது.
மகாவாருணத்தின்
தலைவனாக அசுர வருணன் இருந்தாலும், அவ்வேதத்தின் அசுர கூறுகள் வெளித்தள்ளப்பட்டுக்
கொண்டிருந்தன. வருணனிடம் இருந்த இரவு, பகல் இரண்டையும் ஆளும் பொறுப்பை இரண்டாக
மாற்றி வருணனுக்கு இரவையும், மித்ரனுக்கு பகலையும் அளித்தனர். அதைப் போன்றே மழையை,
இடியை, மின்னலை ஆளும் பொறுப்பையும் அவனிடம் இருந்து இந்திரனுக்குக் கொடுத்து
விட்டு வெறும் கடலை மட்டும் ஆளும் ஒருவனாக அவனைச் சுருக்கினர். இரவை ஆள்வதால்
அவனுக்கு மேற்கு திசை அளிக்கப்பட்டது. மெதுவாக சூரியனிடமிருந்த கிழக்கை இந்திரன்
பெற்றுக் கொண்டான். இதையே தேவர்கள் அவி கொண்டு வளர்ந்து கொண்டிருந்தார்கள் என புராணங்கள்
கூறுகின்றன. தேவர்கள் வர வர அவர்களின் தலைவனான தேவேந்திரன் முதன்மை பெறத்
துவங்கினான். அப்படித்தான் மகாவாருணம் என்னும் நெறிகளை முதன்மைப்படுத்திய வேதம்,
விழைவுகளை முதன்மைப்படுத்திய மானுடரின் மாகேந்திரமாகியது.
அன்றிலிருந்து தூய்மையான அசுர வேதமும், இவ்வாறு
தொகுக்கப்பட்ட வேதமும் இம்மண்ணில் அவ்வப்போது முதன்மைக்காக மோதிக்
கொண்டிருந்திருக்கின்றன என்பதையே வெவ்வேறு அசுரர்களின் எழுச்சிகளும், அவர்களின்
வீழ்ச்சிகளும் காட்டுகின்றன என்கிறது கிராதம். ஹிரண்யகசிபுவும், ஹிரண்யாக்ஷனும்
விண்ணளந்தோனால் வெல்லப்பட்டார்கள் என்பது இதையே சுட்டுகிறது. உண்மையில்
ஹிரண்யகசிபு மாகேந்திரத்தைத் தோற்கடித்தான். மற்றொரு வகையில் தூய அசுர வேதம்,
சற்றே ஆசுரம் கலந்திருந்த மாகேந்திரத்தைத் தோற்கடித்தது. ஆயினும் சற்றும்
எதிர்பாராத வகையில் (அப்படித்தான் சொல்ல வேண்டியிருக்கிறது, கிராதத்தின் கதைப்
போக்கு அப்படித்தான் சொல்ல வைக்கிறது!!!) ஹிரண்யகசிபுவின் மகனான பிரஹலாதன்
ஹிரண்யவேதத்தில் இருந்தே மேலும் தூய மகாநாராயண வேதத்தைக் கண்டடைகிறான். அவன் வேதமுதன்மை
கொள்ள, மாகேந்திரம் மேலும் சிறுக்கிறது.
எனினும் ஆசுரத்தின் எழுச்சியைத் தடுக்க
அனைத்துத் திசைத் தேவர்களையும் ஒருங்கிணைத்து மகாவஜ்ராமாகி தேவேந்திரன் மகாநாராயணத்தை
வெல்கிறான். (நடைமுறையில் பேரரசனாக இருந்த அசுர பிரஹலாதனை நாற்றிசை அரசர்களும்
இணைந்து தேர்ந்தெடுத்த ஒரு அரசன் அவரது சீடனாக வந்து ஏமாற்றி அரசை வாங்கியிருக்கலாம்!!)
மீண்டும் வேதமுதன்மை கொள்கிறான்.
எனவே தான் காசியப பிரஜாபதியே வேண்டி தன் குலத்தில்
விருத்திராசுரனை உருவாக்குகிறார். விருத்திராசுரனை வென்ற அரசன் அவனிடம் மைந்தனாகத்
தன்னை அடைக்கலமாக்கி வென்றிருக்க வேண்டும். எனவே தான் விருத்திராசுரனை வென்ற
இந்திரன் தந்தை பழி கொண்டவனாகக் கருதப்படுகிறான். விருத்திரன் என்னும் அசுரனை
வெல்ல இந்திரன் வருணன் என்னும் அசுரனைத் துணைக் கொள்கிறான். அதன் வாயிலாக அவி பெறும்
வருணன் தேவனாக மாறுகிறான். தந்தை பழி கொண்டாகிலும் விழைவு முதன்மை கொண்டு வென்று
சென்றதாலும், பிரஹலாதனிடம் சீடனாகச் சென்று அவன் கொண்ட முழுமையைத் தான் வாங்கிக்
கொண்டதாலும் இந்திரன் மாகேந்திரத்தை மகாவஜ்ராமாக்கிக் கொண்டான். வென்று
செல்பவர்களின் வேதம்.
இவ்வாறாக வேத முழு முதன்மை கொண்ட நால்வேதமான மகாவஜ்ரம் அதற்குப் பிறகு போர் புரிந்தது மகாநாராயணத்தோடு தான். எனவே தான் இராமன் இந்திரன்
மகனான வாலியை மறைந்திருந்தாகிலும் கொல்கிறான். அப்பழி தன்னைத் துரத்தவே இப்போது
கிருஷ்ணன் இந்திரன் மகனான அர்ஜுனனைக் கொல்லாமல் விடுகிறான். ஏனென்றால் கொன்றாலும்
அவன் கொண்ட வேத முதன்மை மக்களால் ஏற்றுக் கொள்ளப்படமாட்டது.
இந்த விரிவான பின்னணியில் தான் கிருஷ்ணார்ஜுன யுத்தத்தை
நாம் பார்க்க வேண்டும் எனக் கோருகிறது கிராதம். கிருஷ்ணன் கண்டடைந்த வேத முடிபு
என்பது கிட்டத்தட்ட மகாநாராயணம் போன்றதே. ஆனால் மகாநாராயண வேதம் பிரஹலாதனால் தூய
அசுர வேதமான ஹிரண்யவேதத்தில் இருந்து எடுக்கப்பட்டது. விலங்குகளும் அதைக் கேட்டு
அறிந்து கொள்ளும் தன்மையிலானது என்றாலும் அது பெரும்பான்மை மக்களால்
கைக்கொள்ளப்பட்ட நால்வேதத்தால் வெல்லப்பட்டது.
எனவே மீண்டும் அதை மீண்டும் கொண்டு
வந்து நிலை நாட்டுவதை விட அதற்கிணையான வேதத்தை நால்வேதத்திலேயே தேடிக் கண்டடைவதே
முறை. நால்வேதமும் ஆசுரம் கொண்டது தானே. தூய ஆசுரத்தில் இருந்து வந்தது
இதிலிருந்தும் வரக் கூடும் அல்லவா. எனவே கிருஷ்ணன் வேதங்களைக் கடைந்து வேத முடிபை
அடைகிறான். அவ்வேதம் நிலை பெற வேண்டுமெனில் அவனுக்கு இந்திரன் சொல் வேண்டும்.
இந்திரன் மகன் அவனுடன் இருந்தாக வேண்டும். இருவரும் இணைந்த ஒன்றாக அது மக்களுக்கு
வழங்கப்பட வேண்டும். அப்போதே அது நிலை கொள்ளும். இந்திரனையும், அவன் மூத்த மகன்
பாலியையும் மீறி அர்ஜுனன் எப்படி தன் தந்தையின் எதிரியான மகாநாராயணத்திற்கு
வலுவூட்ட இயலும். ஒரு மைந்தன் எந்நிலையிலும் தந்தைஎன்றே எஞ்சுவான். ஆனால் மகளோ
தனக்கென்று ஒரு குலத்தையே தோற்றுவிப்பவள். தன் கொழுநன் தன் தந்தையை வென்றாக வேண்டும்
என விரும்பாத பெண்டிர் எவர்? ஊர்வசியின் சாபத்தால் பெண்ணாக ஆகும் அர்ஜுனன், தன் பெண்ணியல்பாலேயே
தந்தையிடம் இருந்து விடைபெற்று கிருஷ்ணனிடம் வந்து சேர்கிறான் என மிகக்
கவித்துவமாக கிராதம் இந்த இணைவைச் சொல்கிறது. புராண மறுஆக்கத்தின் உச்சம் என்றே
இதைக் கூறலாம்.
[8]
நான்கு திசைத் தேவர்களையும் அறிந்து அவர்கள் மெய்மைகளை
அறிந்து வந்தும் அர்ஜுனனால் கிருஷ்ணனை வெல்ல இயலவில்லை. இமையமலை உச்சியில் கனவுகளையும்
பிறிதொருவருக்கு அடிமையாக்கிக் கொண்ட கின்னரஜன்யர்கள் என்னும் இனத்தவருக்காக
கின்னரர்களுடன் போரிடும் அர்ஜுனன் மீண்டும் மகாநாராயணவேதம் கொண்ட அவர்களால்
தோற்கடிக்கப் படுகிறான். அப்போது தான் அவனுக்கு தான் அடைந்தாக வேண்டிய இறுதி
அறிதல் ஒன்று இருப்பது புலப்படுகிறது. அது இந்த வேதங்கள் உருவான ஒரு தொல்லறிதல். ஆதி
காலத்தில் அடிமுடி காணாது ஓங்கிஎரிந்த ஒரு அனல் தூணின் முடியைக் காணச் சென்ற
பிரம்மனின் வாயிலிருந்து எழுந்த வேத நிரைகளான அசுர, நாக, நால்வேதங்களும், ஆழ்ந்து
சென்று ஒரு சொல்லில் துவங்கிய நாராயணமும் தோன்றிய அம்முதல் அறிதல். அதையே பாசுபதம்
என்கின்றனர். அதைத் தேடிச் செல்கிறான் பார்த்தன். இங்கே கதையின் வடிவில் ஒரு
முக்கியமான மாற்றத்தைச் செய்கிறார் ஜெ. அது திசைத் தேவர்களை நோக்கிய பயணத்தில்
அர்ஜுனன் புறவயமாக ஒரு இடம் வரையும் அதற்குப் பிறகு அவனது அகப் பயணமாக அந்த புராண
உலகும் விரியும். அவனது அறிதலும் அவனது அக அறிதலாக வந்தமையும். ‘அறிதலெல்லாம் நினைவுகூர்தல் மட்டுமே’ என கிராதம் இதைச் சொல்கிறது.
மாறாக பாசுபதம் பெறும் பகுதி
நனவில் நடைபெறும் நிகழ்வாக, அவன் உணர்ந்து ஆகும் ஒன்றாக எழுதப்பட்டுள்ளது. ஆதி
அறிதல்கள் என்பவை ஒருவகையில் பொருள் என்ற ஒன்று வந்து சேர்ந்திருக்காத ஒலிக்கோர்வைகளாகத்
தானே இருக்க இயலும். வேதங்கள் மானுடர் எரிக்கு உரைப்பவை. மொழி திருந்திய பின்
உருவானவை. மொழியென்று ஒன்று உருவாகும் முன்னிருந்த ஒன்றே என்றுமிருந்த ஒன்றாக
இருக்க இயலும். அந்த மொழி எரி மானுடனுக்கு உரைத்ததாக இருக்க வேண்டும். ஏனென்றால்
மானுடம் கண்டடைந்த முதல் அறிதல் எரியைத் தன் வசமாக்கியதே. முதல் சொல்லும்
அங்கிருந்து தானே துவங்கியிருக்க வேண்டும்.
பார்த்தனின்
பாசுபதமாக அவன் கையில் வந்து சேர்வது ஒரு கூழாங்கல். இது முக்கியமான ஒரு குறியீடு.
முன்பு காண்டீபத்திலும் இதே போன்றதொரு கூழாங்கல் வந்தது. அன்று அது நேமியின் கையிலிருந்தது.
துறவிலிருந்து கடிமணம் நோக்கிக் கிளம்பிய அவர் தான் சென்றுகொண்டிருந்த வழியின் தடமாகத்
தன் கையோடு கொண்டு சென்றதும் ஓர் கூழாங்கல் தான். ஒரு கல் கூழாங்கல்லாக மாற அதன் மீது
காலம் ஓடியிருக்க வேண்டும். காலத்தின் அனைத்து ஆயுதங்களாலும் தாக்குண்டு தாக்குண்டு
அக்கல் அதன் கூழாங்கல் வடிவை அடைந்திருக்க வேண்டும். அதன் மீது ஆதியின் எச்சமும், காலத்தின்
எடையும் சேர்ந்தே இருக்கும். காலத்தின் எடையைப் பிரித்தெடுத்தால் எஞ்சும் ஆதியே முழு
ஞானம்.
மொழி இறக்கை விரித்துப்
பரந்த இடமென்று இதில் காளனாக வரும் சிவன் ஆடும் தாண்டவத்தைக் கூறலாம். அவனிடம்
இருந்து ஒலிக்கும் பீஜ மந்திரங்கள், அவனுடல் ஆடும் ஆட்டம், அது வாசகரிடமும் கூடும்
மாயம் நிகழ்ந்தது எனக்கு. பாசுபதம் என்பது இருமையழிந்து ஆகும் நிலை. அங்கு அறிதல்
இல்லை, ஆதல் மட்டுமே. ஆதலின்
கணம் வாய்த்த அபூர்வ தருணம் அது.
மீண்டும்
கருவுக்குள் சென்று, கருவாகும்
முன்னமே இருந்த பார்த்திவமாக ஆகும் நிலை. அந்நிலையிலே உள்நுழைந்த
ஆணவத்தை அகற்றிய நிலை. இருப்பென்றே ஆன நிலை. இருப்பே இன்மையும் ஆகும் நிலை. அதையே காளன்
தன் தாண்டவத்தின் மூலம் நிறுவுகிறான். அதை அம்மக்களின் அசைவோடு அசைந்து, அசைவாகி, அந்நடனமும்
ஆகி, அதுவும்
இல்லாதொழியும் அனுபவமே
அர்ஜுனன் பெற்ற பாசுபதம். காளனின் உடல் வேறு உள்ளம் வேறு அல்ல. அவன்
உள்ளம் நினைத்து உடல் செயலாற்றவில்லை. எனவே தான் ஊர்த்துவ தாண்டவமாடி சுழல்கையில் அவன்
விழியினின்றும் மறைகிறான். அங்கே காலம் இல்லை. அவனும் காலத்தில் இல்லை. அவனுடன் இணைந்து
நடனமிடும் அர்ஜுனனும், அக்குலத்தவரும்
அகாலத்தில் அசைகிறார்கள். இக்காலமின்மையே பாசுபதம். அடிமுடியின்றி ஆழத்தையும், அகலத்தையும்
சூடி நிற்கும் நிலையே பாசுபதம். அதை வார்த்தைகளால் அன்றி ஆதலாக உணர வைத்த கிராதமும்
பாசுபதம் தான்!!!
பாசுபதம் பெற்ற அர்ஜுனன் மீண்டும் கிருஷ்ணனை கின்னரர்களின் குகையில்
சந்திக்கிறான். விருத்திரன் நிழலைக் கொண்ட அவரிடம் முப்பிரி வேலுடன் வேகம்
கெடுத்தாண்ட, மாயப் பிறப்பறுக்கும் பிஞ்ஞகன் நிழலுடன் வந்த அர்ஜுனன் பொருதுகிறான்.
முடிவிலாப் போர் என கிருஷ்ணன் அவனை அணைத்துக் கொள்கிறார். அர்ஜுனன் இப்போது
அவருக்கு இணையானவன். இணையானவர்களுக்கிடையேயே நட்பு இருக்க இயலும். இந்திரனும், நாராயணனும்
இணைய உருத்திரன் வந்தாக வேண்டும். ஏனெனில் ஊழிப்பெருக்கை உண்பவன் அவன். அவன்
அருளின்றி மானுடம் தங்கி வாழ இயலாது. இதன் பிறகே நால்வேதத்தின் கனியென வேத
முடிபைக் கண்டடைந்த கிருஷ்ணர் அதை அர்ஜுனனுக்கு உரைத்து இந்திரனும், நாராயணனும்
இணைந்த வேதமாக இம்மண்ணில் நிலைநிறுத்துகிறார்.
பாசுபதமெனப் பெற்ற கூழாங்கல்லை மீண்டும் அது இருந்த
இடத்திலேயே தூக்கி எறிந்த அர்ஜுனனின் செய்கை போல இவ்வேதங்களின் ஆதியான முடியடி
இல்லாத அந்த பாசுபதம் ஒளியும், இருளும் இணைந்த மெய்மையை அறியும் அச்சமற்ற
வீரர்களுக்காக அங்கேயே காத்திருப்பதாக முடிகிறது கிராதம்.
[9]
வேதம் என்பதை கிராதம் எவ்வாறு வரையறுக்கிறது? இக்கேள்வியில்
இருந்து மேலே கொடுக்கப்பட்ட கண்டடைதலுக்கான பாதை என கிராதம் எனும் நாவலை
வாசிக்கலாம். இனி கிராதத்தின் வரிகளில், ‘இங்கு வந்த உயிர்களில் நெறிநின்றவை வாழ்ந்தன. தங்களை மேலேற்றிக்கொண்டவை
வென்றன. வென்றதனால் வேதம் உருவானது. மீண்டும் வெற்றிக்கு அது நெறியென்றாகியது.
வேதம் மாபெரும் அடர்களம் ஒன்றின் வெற்றிமுரசு. ஆம், அது குருதிபடிந்ததே. வேதமுரசு குருதிச்செந்நிறம் கொண்டது.
தாதையர் குருதியா? ஆம். தனயரின்
குருதியென்றாலும் ஆம். அயலவரின் குருதியென்று நீங்கள் சொல்லலாம். அதேயளவே
நம்மவரின் குருதியும் ஆகும். ஆனால் இப்புவியில் அறமென ஒன்றை நிறுத்தி வாழ்வை
வளர்ப்பதனாலேயே அது தேவர்களுக்கு இனியதாகிறது. ஓசைகளில் தூயதும் சொற்களில் அரியதும் எண்ணங்களில்
முழுமைகொண்டதும் என்றும் அழியாததும் ஆகிறது. அது வாழ்க!’. மானுடம்
குழுவாக
இணைந்து
வாழ்தல் என்னும் பரிணாமச் சங்கிலியின் உச்சத்தை எட்டியதைக் கொட்டும் முரசாக உருவகிக்கிறது கிராதம்.
வெண்முரசு
நாவலாகத் துவங்குகையில் ஜெ இம்முயற்சியைப் பற்றி “நாவல்வரிசைக்கான
பொதுத்தலைப்பு ‘வெண்முரசு’. ஏன் இந்தத் தலைப்பு என சொல்லத்தெரியவில்லை, தலைப்பு
தோன்றியது, அவ்வளவுதான்.
அறத்தின் வெண்முரசு. எட்டு சுவைகளும் இணைந்து ஒன்றாகும் சாந்தத்தின் நிறம்கொண்ட
முரசு. ”,
என்று கூறினார். இதன்
நாவல்களிலும் முரசின் விம்மல்களும், அது எழுப்பும் கார்வைகளும் நாவலில்
வந்திருக்கின்றனவே அன்றி, இந்நாவல் தொடரின் பொது தலைப்பிற்கு நியாயம் செய்யும்
வகையில், இத்தொடரின் மையத் தரிசனத்தை இப்பெயர் எவ்வாறு சுட்டுகிறது என்பதை அறியும்
வகையில் எதுவும் வரவில்லை. முதன்முறையாக கிராதத்தில் இதன் பெயர்க் காரணத்தை ஜெ
அறியத் தருகிறார்.
அதுவும் சண்டன் என்னும் சூதனின் கூற்றாக, “அந்தணரே, வேதமுரசு குறித்து நீங்கள் சொன்னது உண்மை.
அன்றும் இன்றும் அது குருதியொழுகும் செம்முரசே. ஆனால் சொல்சென்று தொடும் அறியாத்
தொலைவெளி ஒன்றில் தூயவெண்முரசு ஒலிப்பதை நான்
கேட்கிறேன்”.
வெண்முரசு
அந்த குருதிச் செம்மை படிந்த வெற்றிமுரசு, எவ்வாறு இந்த ஒட்டுமொத்த பாரத
நிலத்தையும் ஒரு பண்பாட்டுச் சரடால் இணைத்து மேலும் குருதி விழாத சத்வ வேதாந்தமான
கீதையாக எழுவதைப் பற்றிய புனைவாக மலர்ந்து கொண்டிருக்கிறது. ஆம், கீதை குருதிக்
களத்தில் தான் மலர்ந்தது. ஆயினும் அதற்குப் பிறகு இம்மண்ணில் ஒட்டுமொத்த பாரதமும்
தம்முள் அடித்து, மடிந்த ஒரு பெரும் போர் நிகழவில்லை. ராச்சியங்களுக்கு இடையே
நிகழ்ந்தன. ஆனால் மக்கள் கூட்டமே விரும்பி இணைந்து நிகழ்ந்த கடைசிப் போர் பாரதப்
போராகத்தான் இருக்கும் என எண்ணுகிறேன். இதன் பிறகு
வேதமுதன்மைக்காக ஒரு பெரும்போர் இங்கு நிகழவில்லை.
வெண்முரசு நாவல் வரிசை
இந்தியா எங்கும் மக்களை ஒன்றிணைத்த பண்பாடு எவ்வாறு உருவாகி வளர்ந்தது, அதற்கு
வேதங்கள், வேதாந்தம், கீதை, உபநிஷத் என்னும் பிரஸ்தானத்ரயம், சமணம், சைவம், சாக்தம்
போன்ற மதங்கள், இப்பெருநிலத்தின் ஆறு தரிசனங்கள் போன்றவை எவ்வாறு பங்களித்தன, இப்பண்பாடாக
இது உருமாற மகாபாரதம் எப்படி ஒரு நிகழ்கருவியாக இருந்தது, அதை இத்திசை நோக்கித்
திருப்ப கிருஷ்ணன் என்னவெல்லாம் செய்தான் என்பதை ஒரு புனைவாகத் தருகிறது. வெண்முரசு
பொருத்தமான பெயர் தான்.
வெண்முரசு நாவல் வரிசையில் கிராதம் தனித்துவம் வாய்ந்த
இடத்தைப் பெற அது கைக்கொண்ட இந்த புராணங்களை மாற்றுப் பார்வை பார்க்கும் நோக்கு
முக்கியமான காரணம். உண்மையில் இது மார்க்சிய முரணியக்க இயங்கியல் மாதிரியான ஒரு
சட்டகம். நமது புராணங்களை வேதங்களின் போராக, தேவ அசுர யுத்தங்களை அகப் போராட்டமாக,
மெய்மை நோக்கிய பயணத்தின் படியாகக் காண உதவும் ஒரு பெரும் கருவி. புனைவெழுத்தின்
உச்சம் என்பது இதுவாகத் தான் இருக்க இயலும். குருவணக்கம் உரித்தாகுக இதன் ஆசிரியருக்கு,
என் ஆசிரியருக்கு.