Wednesday, February 27, 2019

பால்ஹிகர்



அன்புள்ள ஜெயமோகன் சார்,


கார்கடலின் 64ம் அத்தியாத்தில் பீமனால் தலை உடைக்கபட்டு சாகும் பால்ஹிகரின் மரணம் அப்படிதான் முடியும் என நினைத்திருந்தேன். எனக்கு காந்தியின் மரணமும் கூடவே ஞாபகம் வந்தது. முதற்கனல்  8ம் அத்தியாத்தில் "சஞ்சலமேயற்ற பெரிய விழிகளும், அகன்ற மார்பும், பொன்னிற நாகங்கள் போன்ற கைகளும் கொண்ட சிறுவன் தன் தந்தையைவிட உயரமானவனாக இருந்தான். ஒவ்வொரு சொல்லுக்குப்பின்னும் அதுவரை அறிந்த ஞானம் அனைத்தையும் கொண்டுவந்து நிறுத்தும் பேச்சுடையவனாக இருந்தான். ஒரு கணமேனும் தன்னைப்பற்றி நினையாதவர்களுக்கு மட்டுமே உரிய கருணை நிறைந்த புன்னகை கொண்டிருந்தான். அவனைக் கண்டபின் அஸ்தினபுரியின் மக்கள் தங்கள் கனவுகளில் கண்ட அத்தனை பிதாமகர்களுக்கும் அவனது முகமே இருந்தது" என்று கூறப்பட்ட ஒரு மூதாதை அம்புகளில் படுத்து கொண்டிருக்கிறார். ஒருவர் தலை உடைபட்டு சாகிறார். அங்காரகனின் மரணமும் எதோ நமது கூடவே விளையாடிய நாய்க்குட்டி இறந்து போன உணர்வை கொடுத்தது. 

ஆனால் இவ்வளவு எளிமையாகவா? என தோன்றியது. பீமன் குலாந்தகன் என அழைக்கபடுவது சரிதான். சிபிநாட்டில் மணல் அறைகளுக்குள் மனநலம் குன்றிய பால்ஹிகராகவும் ,யானையின் மீது இருந்த ஒரு வெள்ளை யானையாகவுமே  பால்ஹிகரை நான் மனதுக்குள் வைத்திருந்தேன். " வணங்கானில்" அதன் மைய பாத்திரம் யானையில் எழுந்து செல்லும் காட்சியும்  சேர்ந்து எப்போதும் இரண்டையும் ஒன்றையொன்று இடை மறிக்கும். குரு வம்சத்தில் ஓடும் பால்ஹிக குருதியின் ஒரு வடிவம் பீமன். இன்னொரு வடிவம் துரியோதனன். இருவரும் கதை போர்களில் வல்லவர்கள். 


அங்காரகன் யார்?  "ஆதுரசாலையில் வளர்ந்த தேவாபியா? இல்லை அண்ணனை தானும் சுமக்க எண்ணிய சந்தனுவா? ஏனென்றால்  தேவாபிக்கு இளவரசன் பட்டம் சூட முற்பட்டபோது ‘பகல் ஒளியை அறியமுடியாதவன் மன்னனாக முடியுமா?’ என அமைச்சர்கள் எதிர்த்தனர் என முதற்கனல் அத்தியாயம் 19ல் வருகிறது. இன்று இருட்டுக்குள் பால்ஹிகர் போர்புரிய முடியாமல்  குருட்டு யானைபோல் தலை கொடுத்து சாகிறார். ஒருவேளை அன்று தேவாபியை தூக்கி சுமக்கும்போது  கொஞ்சம் கசப்பும் அவரின் உள்ளில் இருந்திருக்குமோ?

ஸ்டீபன் ராஜ் குலசேகரன்