Monday, February 4, 2019

தனிமை



அன்புள்ள ஜெயமோகன் சார்,

கார்கடலின்  36ம் அத்தியாயத்தில் வரும்   "துரியோதனன் களத்தில் தனித்து நின்றான்"  என்ற இந்த வரி மனதை கொந்தளிக்க செய்தது. ஏனென்றால் இதை நான் எதிர்பார்த்தது கர்ணனின் மரணத்திற்கு பிறகு .ஆனால் கர்ணனே கைவிட்டு அவன் தனியாய் நிற்பதை எண்ணிப்பார்க்கவே முடியவில்லை. இரண்டு நாள் இதையே மனம் சுற்றி சுற்றி வருகிறது.


துரியோதனன் பிறக்கும்போதே பல்லுடன் பிறந்தான் ,தீய சகுனங்கள் அது இது என கூறி அவனை காட்டுக்கு அனுப்ப முடிவெடுக்கும் போது“விதுரா, இந்த நகரும் நாடும் உலகும் ஒன்றுசேர்ந்து வெறுக்கும்படி என் மைந்தன் செய்த பிழை என்ன? ஒருவன் பிறக்கும்போதே வெறுக்கப்படுகிறான் என்றால் அவனைவிட எளியவன் யார்? அவனுக்கு அவனைப்பெற்ற தந்தையின் அன்பும் இல்லையென்றால் அதை தெய்வங்கள் பொறுக்குமா? யார் என்ன சொன்னாலும் சரி நான் என் மைந்தனை கைவிடப்போவதில்லை” என்றான்.“அரசே” என விதுரன் தொடங்க “அழியட்டும். இந்நகரும் இந்நாடும் அழியட்டும். இவ்வுலகே அழியட்டும். நான் அந்தப்பழியை ஏற்றுக்கொள்கிறேன். என்னை அதற்காக மூதாதையர் பழிக்கட்டும். தெய்வங்கள் என்னை தண்டிக்கட்டும். என் மைந்தனை மார்போடணைத்துக்கொண்டு விண்ணிலிருக்கும் தெய்வங்களிடம் சொல்கிறேன். ஆம், நாங்கள் பழிகொண்டவர்கள். நாங்கள் வெறுக்கப்பட்டவர்கள். ஆகவே தன்னந்தனிமையில் நிற்பவர்கள். எங்களுக்கு வேறு எவரும் இல்லை. தெய்வங்கள்கூட இல்லை” என்றான் திருதராஷ்டிரன்.அவன் உதடுகள் துடித்தன. சிவந்த கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது. “அவனுக்கு இவ்வுலகில் நானன்றி வேறு எவருமில்லை. அவனை என்னால் வெறுக்கமுடியாது. அவனை என்னால் ஒரு கணம்கூட விலக்கமுடியாது.” என திருதாஷ்டிரர் அப்போது கூறுகிறார். இதை இப்போது படிக்கும் போது மனது கனக்கிறது. ஏனென்றால் துரியோதனன் தனது தந்தை இறந்து விட்டார் என கூறி மொட்டை அடித்து உடம்பிலுள்ள முடிகளை எல்லாம் மழித்து எருமை ரத்தத்தில் குளித்து கலிதேவனால் ஆட்கொள்ளபட்டவனாக இருக்கிறான். ஆனால் இன்னும் திருதாஷ்டிரர் அவனை விடாமல் போர்க்களத்தில் வந்து அமர்ந்து பார்த்துகொண்டு இருக்கிறார். பிறகு முதுநாகினி காந்தாரியிடம் பீமன் பிறப்பையும் அவன் துரியோதனனை கொல்ல பிறந்திருக்கிறான் என கூற அவள் பதறி கத்த சத்யசேனை “அக்கா…என்ன? என்ன ஆயிற்று?” என்று கூவியபடி ஓடிவந்தாள். “எங்கே? எங்கே பிறர்? அத்தனைபேரையும் அழைத்துக்கொண்டுவாருங்கள். என் மைந்தனுக்கு தம்பியர் வேண்டும். ஒருவர் இருவரல்ல. நூறுபேர் அவனைச்சூழ்ந்திருக்கவேண்டும். அவன் தொடைகளைக் காக்கும் இரு நூறு கைகள் அவனுக்குத்தேவை…” என்று காந்தாரி கூவினாள்.அவர்கள் திகைத்து நிற்க அவள் கைகளை விரித்தபடி “இவனை எவரும் வெல்லலாகாது. இவன் படைக்கலங்கள் எங்கும் தாழக்கூடாது. ஆகவே இவன் இனி சுயோதனன் அல்ல, துரியோதனன். வெல்வாரற்றவன்…” என்றாள். அவளுடைய முகம் சிவந்திருந்தது. மூச்சிரைத்தபடி தன் மைந்தனை எடுத்து மார்போடு அணைத்துக்கொண்டாள். அவனது  தாய்கள் அவன் தனிமையில் இருக்க கூடாது ,வெல்லப்படக்கூடாது என்பதற்காகவே நூறுபேரை பெற்றெடுக்கிறார்கள். 
துரியோதனை எப்போதும் அவனது தம்பியர் தொடர்வது ஒரு பாதாள நாகம் போல் இருக்கிறது என வெண்முரசு கூறுகிறது. அவனை எங்கும் அவர்கள் தவறவிட்டதில்லை. பீமனால் கரடியிடம் இருந்து காப்பாற்றபட்டதினால்  வெறுத்து அவன்தான் தனியாய் காட்டில் அலைகிறான். ஆனால் அனைவரும் பதறி அலைகிறார்கள். பல சந்தர்ப்பங்களில் திருதாஷ்டிரரால் கைவிடப்படுகிறான் ஆனால் அவன் தனியாய் இல்லை.  இன்னொரு நாகம் போல் கர்ணன் வந்து சேர்கிறான். பிறகு திருமணம் ஆட்சி,அதிகாரம்  என அவனே நினைத்தாலும் தனியாய் இருந்திருக்க முடியாது. ஆனால் போர்க்களத்தில், தனது நண்பனால் ,நம்பியவனால் கைவிடபட்டதாய் உணர்ந்து தனிமையில் நிற்பது கொடுமை.

வண்ணகடலிலே பாண்டு கூறுகிறான்"பிரம்மனிடம் என் தேவனாகிய சுப்ரமணியன் சொல்வான். உன்னுடைய படைப்பின் குறை அவன் உடலை முளைக்காத விதையாக ஆக்கியது. கேள் மூடா, மானுடர் உடலால் வாழ்வதில்லை. மண்ணில்வாழ்வது ஆன்மாதான்" என.பாண்டுவின் தெய்வம் ஆறுமுகம். கர்ணன், தர்மர், பீமன், அர்ஜுனன், நகுலன்,சகதேவன்  என்ற தனது ஆறுமுகங்களை பாண்டு உணர்ந்திருப்பான் போல.  ஏனென்றால் குந்தி எப்போதும் பாண்டுவையே பணயப்பொருளாய் வைப்பாள். அப்போது எல்லாம் அவளின் ஆசைக்குத்தான் அவனை பயன்படுத்துகிறாள் என்றுதான் தோன்றும். அது கொஞ்சம் இருக்கலாம்.ஆனால் இன்று உண்மையிலே அவள் பாண்டுவை நன்றாய் புரிந்தவள், நேசித்தவள் என தோன்றுகிறது.ஆதலால் தான் துரியோதனனை தனியனாய் நிறுத்தமுடிந்திருக்கிறது.

ஸ்டீபன்ராஜ் குலசேகரன்