Friday, February 1, 2019

குந்தியின் முகங்கள்






அன்புள்ள ஜெயமோகன்

குந்தி –கர்ணன் சந்திப்பின் பல தளங்களை நிறைய பேசிப்பேசித்தான் புரிந்துகொள்ளவேண்டியிருக்கிறது. அவளுக்கு பலமுகங்கள். துக்கமான பாசமான அன்னை. மைந்தனைக் கைவிட்டதனால் கையறுநிலையில் இருக்கிறாள். இது ஒரு முகம். இப்படித்தான் வருகிறாள். 

அவன் அவளை பொருட்படுத்தாதபோது உண்மையான அன்னையாக ஆகி அவனை ஆழமாக அறியமுயல்கிறாள். ஒரு ராஜதந்திரியாகப் பேசுகிறாள். அதன்பின் அவனுக்கு உண்மையான தோழியாக மாறி அவனையே அவனுக்குக் காட்டிக்கொடுக்கிறாள். அவனுடன் அவள் விளையாடுகிறாள். அவனுக்கு சிறந்த களித்தோழியாக மாறிவிடுகிறாள். அதன்பின் பிரிந்துசெல்கிறாள்.

நான் வாசிக்கும்போது குந்தியின் வயது குறைந்தபடியே செல்வதுபோல எண்ணினேன். கிழவியான குந்தி இளமையான் அரசியாக மாறி சிறிய பெண்ணாக மாறுகிறாள். அந்த எல்லா படிகளிலும் நின்று அவள் கர்ணனை ஆழமாக புரிந்துகொள்ள முயல்கிறாள். கடைசியில் அவனை முழுமையாக ஜெயித்தபின் திரும்பிச்செல்கிறாள். 

குந்தியின் வெற்றி ஒரு பெண் ஆணை எப்படியெல்லாம் முற்றுகையிடமுடியும் என்பதைக் காட்டுகிறது. அன்னை, அரசி, தோழி என எல்லா நிலைகளிலும் பலபல முகங்கள்கொண்டு அவள் அவனை சுற்றி வளைத்துக் கைப்பற்றிவிடுகிறாள். வெண்முரசின் மிக நுட்பமான மிகநாடகீயமான அழகான அத்தியாயம் குந்தி கர்ணன் சந்திப்பு

சுவாமி