Friday, February 8, 2019

யுக சந்தி



ஜெ கீதை உரையில் கிருஷ்ணார்ஜுன தேர் யுக சந்தியில் வந்து நிற்கிறது. எப்போதெல்லாம் ஒரு யுக நெறி ஒழிந்து புது யுகத்துக்கான நெறி உதித்து வருமோ அப்போதெல்லாம் அத்தேர் அங்கு சென்று நிற்கும் என்கிறார். யுக சந்தி என்பது என்னஅதை எப்படி உணர்ந்து கொள்வதுமுறையாக மறு சொல்லின்றி ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு அறம்நெறியை வரும் தலைமுறையின் வித்து ஒன்று கேள்விக்குள்ளாக்குகையில்அக்கேள்வியின் தேவையும்நியாயமும் புரிகையில்அக்கேள்வி அதன் தன்மையாலேயே அதுவரை நின்றிருந்தவற்றை எத்தி தள்ள இயல்கையில் யுக சந்தி இருக்கிறது. எப்போதும் போலவே சந்தி என்பது குறுங்காலம். அதன் ஒரு முனையில் நேற்றைய நெறியும்மறுமுனையில் நாளைய நெறியும் நிலைகொள்ளும். சந்தி முடிக்கையில் நாளைய நெறி நிலைகொள்ளும். நேற்றைய நெறியில் நின்றவர் ஒழிவர் அல்லது கானேகுவர்.


இதற்கு மிகச் சிறந்த உதாரணம் ஆருணி மற்றும் ஸ்வேதகேதுவின் கதை. பெண் என்பவள் பிறப்பை அளிப்பவள் என்பதால் அவள் கருப்பையை இரந்து பெற மானிடருக்கு உரிமை உண்டு என்ற கடந்த யுக நெறியைஅப்பெண்ணின் விருப்பமும் அதில் இணைந்தாக வேண்டும் என கேள்விக்குட்படுத்திய ஸ்வேதகேது புது யுக நெறியை சமைத்தளிக்கிறார். அதை ஏற்ற அக்கினியைக் கண்டு ஆருணி கானேகுகிறார்.

மக்களைக் காக்கும் மன்னவன் தன் கோலை முன்வைத்து செய்யும் எந்த அநீதியும் அவன் மக்களின் பாதுகாப்பு,நீள்வாழ்வுசெல்வ பெருக்குநலன் போன்றவற்றை முன்வைத்து நியாயப்படுத்தி விடவும்காணாது கடந்து செல்லவும் முடியும் என்ற நால்வேத நெறியை முதன்முதலாகக் கேள்விக்குள்ளாக்குகிறாள் அம்பை. எவருமே அதை செவி கொள்ளவில்லை. ஆயினும் அக்கேள்வி அதன் தன்மையாலேயே கனன்று கனன்று சரியான விறகிற்காகக் காத்திருந்தது. அதே கேள்வியை குழவியர் கொலையாட்டை முன்வைத்து எழுப்புகிறார் இளைய யாதவர். அப்போதும் யாரும் செவி கொள்ளவில்லை. அம்பை போல இளைய யாதவர் தன்னை அழித்துக் கொள்ளவில்லை. ஏனெனில் அவரது இக்கேள்வி அவரின் பாதிப்பில் இருந்து எழுந்ததன்று. மாறாக சமூகத்தின் ஒரு அங்கமாக நின்று எழுப்பிக் கொள்கிறார். எனவே தான்  இளைய யாதவர் அதை நியாயப்படுத்திய நால்வேதத்தின் வேர்களைத் தேடித் செல்கிறார். சென்று அதைக் கடந்து செல்ல உகந்த வழியையும் அவ்வேதங்களின் முடிபாகக் கண்டடைகிறார். இருப்பினும் அக்கேள்வி யாரையும் சென்றடையாத காரணத்தால் பதிலை முறையாக முன்வைக்க இயலாதவராக இருக்கிறார்.

அம்பையில் தோன்றிய முதற்கனல் விசிறப்பட்டநெய்யூற்றப்பட்ட வேள்வி தீ என மாறியது பன்னிரு படைக்களத்தில்,பாஞ்சாலியின் குரலாக யாதவாஎழுக ஒவ்வொருவருக்கான உன் வேதம்ஒலித்த போது. அன்று அந்த அவையில் மன்னனின் நடத்தையை கேள்வி கேட்பது என்பது அவன் கோல் அதிகாரத்தைக் கேள்விக்குள்ளாக்குவது என வாளாவிருந்த அத்தனை மாமகிடர்களுக்கும் அன்றும் புரியவில்லை இந்த கேள்வி. ஆனால் அன்னையருக்கும்,கன்னியருக்கும், பெண்கள் அனைவருக்கும் புரிந்த ஒன்றாக அன்று மாறியது. சொல்லாகவோபொருளாகவோ அல்ல. சொல்லென்றாகா ஓர் ஆழுணர்வாக அக்கேள்வியும்அதற்கான பதிலும் அவர்களிடம் சென்று சேர்ந்தன. எனவே தான் அன்னை காந்தாரி ஏழு மகிடங்களை பலியிட்டு கொற்றவை பூசனை செய்தாள். மைந்தன் போருக்குச் செல்கையில் அறம் வெல்க என்றே உரைத்தாள்.

இன்று அபிமன்யுவின் மரணத்திற்குப் பிறகு அக்கேள்வி கௌரவ அதிரதர்கள் துவங்கி ஒவ்வொருவருக்கும் புரிகிறது. கண்ணெதிரே நிகழ்ந்தது போரல்லஅறம் மீறிய கொலை என்பதில் யாருக்கும் மாற்றுக்  கருத்தில்லை. ஆயினும் போரில் இவை இயல்பே என்ற நியாயமும் கூடவே வருவதையும் உணர்கிறார்கள். அந்த நியாயத்தின் அபத்தத்தைஅதன் போதாமையை உணர்கிறார்கள். அதற்கான மாற்றின் தேவையை உணர்கிறார்கள். ஆயினும் இவ்வுணர்வுகள் சொல்லாவதில்லை. நனவுள்ளத்திற்குப் பொருளாகவும் ஆவதில்லை. ஆயினும் அவர்களுக்குள் அந்த மரணம் அத்தகையதோர் மாற்றத்தைச் செய்கிறது. அதையே பிருஹத்காயர் பிழையுணர்ச்சி என்கிறார். ஆம்அது ஒரு வகையில் உண்மையே. ஆழுள்ள உணர்வுகள் இப்படித்தான் தெரிந்த ஏதேனும் ஒரு உணர்வாக எழுந்து வர இயலும். ஒரு வகையில் பாரதப் போரின் முடிவே இந்த ஒரு மரணத்தில் தான் துவங்குகிறது எனலாம். கௌரவத்தரப்பு போர் புரிவதற்கான தார்மீக அறிவு தளத்தின் விரிசலை முழுமையாகவே கண்டு விட்டிருக்கின்றனர்எனவே இதன் பிறகு நடப்பவை வெறும் வஞ்சமும்குலப்பெருமையும் இணைந்து நடத்தும் ஒன்றே!!! எனவே தான் கௌரவர்கள் தோற்கின்றனர். கிருஷ்ணனின் தேர் புது யுகத்தை நோக்கிச் செல்கிறது.

அன்புடன்,
அருணாச்சலம் மகராஜன்